Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
282
Reaction score
301
Points
63
அத்தியாயம் - 16

"ஏம்மா இந்த ரகு பொண்டாட்டி என்ன அவளும் வாய தொறந்து பேச மாட்டேங்குறா, நாமளா ஏதாவது பேசினாலும் ஏதோ புரியாத பாஷைய கேட்டுட்ட மாறி சிலுப்பிட்டு போறா..

என்னவாம் அவளுக்கு.." பூண்டு தோளை உரித்தபடியே தாயிடம் புலம்பலை தொடங்கினாள் நிலா.

"ம்ம்.. திடுதிப்புனு தாலி கட்டி கூட்டியாந்த புள்ள, உடனே மனசு மாறி கலகலன்னு பேசி சிரிக்குமாக்கும்.. அதுவே பாவம் ரகுகிட்ட மாட்டிட்டு முழிச்சி கெடக்கு, நீ வேற உன் பங்குக்கு வம்பு பண்ணிட்டு" மகளிடம் அலுத்துக்கொண்ட மது, பேரன் பேத்தியை மடியில் போட்டு தட்டிக்கொடுத்து உறங்க வைத்தாள் இதமாக.

"அதானே மருமக வந்ததும் மக பவுசு கொறஞ்சி போச்சி பாத்தியா.." முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட நிலா,

"மதியத்துல இருந்து பச்ச தண்ணி கூட பல்லுல படாம அப்டி என்ன படிப்பு வேண்டி கெடக்கு.. அவளுக்காக சுட்டு கொண்டாந்த சீடையும் முறுக்கும் அப்டியே இருக்கு, உன் மருமகள கூப்டு ரெண்டு சாப்ட்டு போயி தெம்பா படிக்கட்டும்" எங்கோ பார்த்து சொன்ன மகளை புன்சிரிப்புடன் பார்த்தாள் மது.

"மிதுஊ.." என்ன அதிசயமோ, மதுவின் ஒற்றை குரலுக்கு அலட்டாமல் வெளியே வந்திருந்தாள் அவள்.

"இந்தா கண்ணு, முறுக்கு சாப்டு.. நிலா உனக்காக சுட்டு கொண்டாந்தா.." மது நீட்டிய தட்டை மலைப்பாக கண்ட மிது,

"அந்த காண்டாமிருகத்துக்கிட்ட பத்து நாளா என்ன பலிக்கு விட்டு போயிட்டு, இப்ப ஒன்னுமே தெரியாத மாதிரி முறுக்கு குடுக்குறத பாரு.." மனதில் பொறிந்தவளாக,

"எனக்கு இது போதும்" தட்டு நிறைய இருந்ததில் ஒரு முறுக்கை மட்டும் கையில் எடுத்துகொண்டு மீண்டும் அறைக்குள் செல்லப் போனவளை விடுவாளா நிலா.

"இந்தா புள்ள நில்லு, இம்புட்டு இருக்குதுல்ல அதென்ன காக்காய்க்கு வைக்கிறது போல ஒன்னே ஒன்னு எடுத்துட்டு போற.. இதெல்லாம் காலி பண்ணாம இங்கிருந்து நகர கூடாது, இந்தா புடி உக்காந்து சாப்டு.." தட்டை வாங்கி அவள் மடியில் வைத்த நிலாவை, தொண்டைக் குழி ஏற இறங்க பார்த்தாள் மிது.

"என்ன லுக்கு" நிலா புருவம் தூக்க,

"நத்திங்.." என சலிப்பாக தலையாட்டி முறுக்கை கடித்தவளை கண்டு சிரிப்பாக வந்தது நிலாக்கு.

"ம்மா.. ரகு எங்க ஆளையே காணல" மிதுவை ஓரக்கண்ணால் பார்த்தபடி நிலா கேட்டிட, இரண்டு நாட்களாக காணாத கணவனை பற்றி அறிந்துகொள்ள செவியை கூர் தீட்டி காத்திருந்தாள் மிதுஷா.

"உனக்கு தெரியாததா நிலா, அவன் எப்போ எங்கே போவான் எந்த நேரத்துல வீட்டுக்கு வருவான் ஒன்னும் தெரியாது.. நானும் கேட்டு கேட்டு பாத்து சலிச்சி போய்ட்டேன்.. வீட்டு நியாபகம் வந்து அவனா வந்தாதான் உண்டு" மது கவலையாக சொல்ல, புஸ்ஸென போனது ஒருத்திக்கு.

"யாருக்கும் சொல்லாம அப்டி எங்கே போயி தொலைஞ்சான் இவன்.. இத்தனைக்கும் வேலை வெட்டிக்கும் போற பழக்கமில்ல, சரியான முரடன்.. ஒரு வேளைக்கே வயிறு நிறைய சாப்பிடுவானே, இப்ப சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான்"

ஆகாத கணவன் என்றாலும், கணவன் தானே! உண்டானோ இல்லையோ என்ற சிந்தனையில், முகம் மாறி விட்டது.

"எனக்கு என்னவோ இந்த ரகு பைய ஏதோ கேடித்தனம் பண்றானோனு தோணிட்டே ம்மா.. முன்னாடிலாம் உன்னைய விட்டு பள்ளிக்கூடத்துக்கு கூட போகமாட்டேன்னு அப்டி அடம் பண்ணுவான், இப்பபாரு ஆளு அப்டியே மாறி போய்ட்டான்.. கொஞ்ச நேரம் கூட வீட்ல இருக்குறது இல்ல..

அப்பா கூட அவனோட சேர்ந்துகிட்டு, அடிக்கடி என்னவோ போல யோசனைல இருக்காரு.. எல்லாம் இந்த காவியா அக்கா போனதுல இருந்து தான் இப்டி"

நிலா பழைய நியாபங்களை மனதில் வைத்து சொல்ல, கணவனை பற்றிய பேச்சினை உன்னிப்பாக உள்வாங்கிய மிது, "காவ்யா யாரு?" என்ற யோசனையில் அவர்கள் பேசுவதை கேட்கலானாள்.

"என்னவோ போ நிலா, உன் அப்பா அவங்கூட இருக்கார்ன்ற நம்பிக்கைல தான் நானே கொஞ்சம் தெம்பா இருக்கேன்.. காவ்யா எங்கே இருந்தாலும் சந்தோசமா இருந்தா அதுவே எனக்கு போதும்.. இருந்தாலும் ஒரு எட்டு வந்து இந்த அம்மாவ பாக்க கூட அவளுக்கு தோணலையே நிலா, அந்த அளவுக்கா காதல் அவ கண்ண மறச்சிடுச்சி.."

மூத்த மகள் காவ்யாவின் நினைவில் கண்ணீரில் மூழ்கிய மது, தன் வேதனையை தொண்டைக்குள் விழுங்கினாள்.

"ப்ச்.. ம்மா.. இதுக்கு தான் உங்கிட்ட அக்காவ பத்தின பேச்சையே எடுக்குறது இல்ல.. பேசாம கண்ண தொடை.. அவளை நினைச்சி நீ அழறது தெரிஞ்சா அப்பாக்கும் வருத்தமாகி போகும்.." தாயின் கண்ணீரை துடைத்து விட்ட நிலா,

"கவலை படாத ம்மா, என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பா அக்கா நம்மளயெல்லாம் பாக்க வருவா.." என்றாள் ஆறுதலாக.

"நெசமா வந்திடுவால்ல நிலா.." மகளை பார்க்க வேண்டும் என்ற ஆவலில், அவசரமாக கண்ணீரை துடைத்தாள் மது.

"ம்ம்.. வருவா ம்மா.." கண்மூடி திறந்த நிலா மனதிலும் ஏதோ ஒரு அர்த்தம் புரியா கலக்கம் சூழ்ந்திட, அதனை தாயிடம் சொல்ல முடியாது பரிதவித்தவள் அப்போது உணராது போனாளே! காவ்யா திரும்பி வருவது சாத்தியமில்லாத ஒன்று என்று.

"ஆமா யாரு அந்த காவ்யா? இப்ப அவங்க எங்க இருக்காங்க?" தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கேட்ட மிது, இருவரின் முகமும் சோகத்தில் ஆழ்ந்திருப்பதை உணர்ந்தவளாக,

"சாரி எதுவும் பேமிலி பர்சனல்னா சொல்ல வேண்டாம்" மீண்டும் அவர்களை சங்கடப்படுத்த நினைக்காது அங்கிருந்து செல்ல முயல,

"நீயும் நம்ம குடும்பத்துல ஒருத்தி தான் மிது.. உங்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்றது, காவ்யா எங்க அக்கா தான்..

வெறும் அக்கா மட்டுமல்ல எனக்கும் ரகுக்கும் இன்னொரு அம்மா அவ.. அவ்வளவு ஏன் அம்மாக்கே அவதான் நிறைய விஷயங்கள சொல்லி தந்து தைரியபடுத்துவான்னா பாத்துக்கோ..

அவளை பாக்க எங்க பெரியம்மா கலைநிலாவையே உறிச்சி வச்சிருக்கானு எங்க அப்பா அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க.. எங்க எல்லார்மேலயும் அம்புட்டு பாசமா இருப்பா..

அவ படிப்ப முடிச்ச கொஞ்ச நாளுல, அப்பா அவளுக்காக நல்ல மாப்பிளையா தேடி புடிச்சி கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடும் பண்ணுப்புட்டாக.. ஒரு வாரத்துல கல்யாணம்ன்ற நிலைல,

'என் காதலனோட இந்த ஊரை விட்டே போறேன், என்ன யாரும் தேட வேண்டான்னு' ஒரு லெட்டர எழுதி வச்சுட்டு போனவ தான்.. பத்து வருஷமாச்சு நாங்களும் தேடாத இடமில்ல, அவளும் இதுவரைக்கும் எங்கள யாரையும் பாக்க வரல.."

காவ்யா பிறந்ததில் இருந்து, அவள் வளர்ந்தது வரை ஒன்று விடாமல் சொல்லி முடிக்க, மிதுக்கு வியக்காமல் இருக்க முடியவில்லை.

"ரியலி கிரேட்.. நீங்க சொல்றத பாத்தா ஆண்டி அங்கிள் மட்டுமில்ல, அவங்களும் இவங்க மேல அதிக லவ் வச்சிருக்க மாதிரி தான் தோணுது.. ஆனா ஏன் திடீர்னு இப்டி ஒரு முடிவ எடுத்தாங்க? அங்கிள் அவங்க லவ்க்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா என்ன?" என்றாள் குழப்பமாக.

"அட அப்டிலாம் இல்ல மிதுமா.. உன் மாமா பாக்க தான் முரட்டாளா தெரிவார், ஆனா அவரை போல பாசத்தாலே பிள்ளைகள வழி நடத்த யாராலும் முடியாது..

காவ்யா ஒருத்தன விரும்புறான்னு தெரிஞ்சிருந்தா, அந்த பையன பத்தின முழு விபரத்தையும் அலசி ஆராஞ்சி அவன் நல்லவனா இருக்கும் பட்சத்தில, அவரே முன்ன நின்னு சந்தோசமா அவளுக்கு கட்டி வச்சிருப்பாருமா..

ஆனா இவ விரும்புன விசயமே எங்களுக்கு தெரியாது.. அந்த லெட்டர படிச்சதும் என் புருசன் இடிஞ்சி போய் உக்காந்தது மட்டும் தான் தெரியும்.."

வேதனையாக சொன்ன மது, "அப்ப கூட எங்க பொண்ணு தப்பு பண்ணிருப்பான்னு எங்களுக்கு தோணவே இல்ல மிது.. அவளோட விருப்பு வெறுப்புகள தைரியமா சொல்லி தான் அவளுக்கு பழக்கமே தவிர, மனசுல எதையும் மூடி வச்சிக்க தெரியாது.

அப்பேர்ப்பட்ட பொண்ணு இந்த விசயத்தை மறச்சது, சாதாரணமாவே எல்லா பொண்ணுங்களும் பதட்டம் பயத்துல எடுக்குற முடிவு மாதிரி தோணினாலும், இவ அப்டி இல்ல..

என் பொண்ணு ஏதோ ஆபத்துல சிக்கித் தவிக்கிறது போல என் உள்ளுணர்வு பரிதவிச்சிக்கிட்டே இருக்கு"

காலனியை வாயிலில் விட்டு உள்ளே வர்ற எத்தனித்த வீர்ப்புத்திரன், மனைவியின் கண்ணீர் குரல் கலங்கி வந்ததை கேட்டு ஆணி அடித்தது போல நின்றவனின் இரும்பு நெஞ்சமும் ரணமாய் வலிக்க, உள்ளே செல்ல மனம் வராது நிலைகுலைந்து போனவனாக, திண்ணையிலேயே அமர்ந்து விட்டான்.

மனைவியிடம் எதையும் மறைத்து பழக்கமில்லாத வீர், மிக பெரிய விடயத்தை தனக்குள் மறைத்து வைத்து, ஒவ்வொரு நாளும் உயிர் துடிக்க மௌனமாக ரத்தக்கண்ணீர் வடிக்கும் துயரத்தை அவன் மட்டும் தானே அறிவான்.

"இன்னும் எம்புட்டு வருசத்துக்கு டா, காவ்யாவ பத்தின விசயத்த மதுகிட்ட சொல்லாம மறச்சி வச்சிருப்ப.." மனசாட்சி ஒவ்வொரு முறையும் கேள்வி எழுப்பி இதயத்தை குடைந்து சீழ் பிடிக்க வைத்து விடும்.

"சொன்னா என் மதூ தாங்க மாட்டாளே.." மனைவிக்கும் சேர்த்து இவன் துயரத்தை அனுபவிக்கிறான் வருடக்கணக்காக.

உள்ளே கேட்ட காவ்யாவை பற்றின பேச்சி மெல்ல மெல்ல ட்ராக் மாறி, நிலா பக்கம் சென்று அவள் வாழ்க்கை வரலாற்றை பேசி முடித்து, ரகுவை வந்தடைந்தது.

"சின்னதுல உன் புருசன் என்னென்ன பண்ணான் தெரியுமா.." நிலா தொடங்க,

மகனை பற்றிய பேச்சினை வெளியே இருந்தபடியே வீர் சுவாரிசமாக கேட்டுக்கொண்டிருக்க, உள்ளே மிதுவும் கணவனை பற்றி பேசுகையில் வேண்டா வெறுப்பாக முகத்தை வைத்திருந்தாலும், தன்னையும் அறியாமல் உள்ளுக்குள் குளுகுளுத்து சாரல் வீசிய உணர்வில் கேட்டுகொண்டிருந்தாள்.

13 இயர்ஸ் பேக்..

"டேய்.. டேய்.. நில்லு டா என்னைய ஓட வைக்காத, தலைய துவட்டிட்டு வந்து சாப்ட்டு ஸ்கூலுக்கு கிளம்பு ரகு" மதுவின் குரல் அவ்வீட்டையெங்கும் நிறைக்க,

"முடியாது போ ம்மா.." என கத்தியபடி ஒன்பதாம் வகுப்பு பயிலும் வீரேந்திர ரகுபதி அடங்காமல் அன்னைக்கு போக்குக்காட்டி சுற்றி வந்தான்.

படிப்பு என்றால் அப்படி ஒரு அலர்ஜி. ஆசிரியர்கள் தான் முதல் எதிரி. புத்தகத்தை பார்த்தால் தலைதெறிக்க ஓடும் மகனை சமாளிக்க முடியாமல் அல்லோல் படுவது மதுவை விட அதிகமாக அவனது அக்காமார்கள் தான்.

"அம்மா எங்களால முடியல.. (a + b)2 = a2 + 2ab + b2 சொன்னா, ஒக்காமக்கா அப்பீட்டுனு எங்க தலையில கொட்டிட்டு ஓடறான்.. நீயாவது அவனாவது எங்களுக்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது இனிமே எங்களால அவங்கிட்ட மல்லுகட்ட முடியாது.. நீயே அவனுக்கு சொல்லி குடு இல்லாட்டி டியூஷன் அனுப்பு"
பெரிய மனுஷி காவ்யா திட்டவட்டமாக தன் முடிவை கூறிட,

"ஆமா ஆமா இனிமே அந்த அடங்காதவனுக்கு எங்களால சொல்லிக் கொடுக்க முடியாது நீயே பாத்துக்கோ" அக்காளுக்கு இணையாக கை விரித்தாள் வெண்ணிலா.

"ரொம்பத்தான் போங்க டி அங்குட்டு.. அவனை அன்பா உக்கார வச்சி புரியிர மாறி சொல்லித் தர்ற தெரியல, பேச வந்துட்டாளுங்க ரெண்டு பேரும்" மகள்களிடம் முறுக்கிக் கொண்ட மது, அடுத்து வந்த நாட்களில் ரகுவிடம் மல்லுகட்டி நொந்து நூடுல் ஆனதை கண்டு, இரு சகோதரிகளும் வாய் மூடி சிரித்துக் கொண்டாலும் பாவமாகவும் இருக்கும்.

அப்போது காவ்யா கல்லூரி கடைசி வருட மாணவி, நிலா பதினோராம் வகுப்பு வெதும்பை. அக்கா தங்கை இருவரும் நன்கு ஒற்றுமை தான், ஆனால் இந்த வாலு வீர் தான் அடங்காத பயல். காவ்யா என்றால் தனி பாசம், ஒரு இடத்தில் அடங்கி அமைதியாக இருக்க மட்டான். விளையாட்டுத்தனம் எவ்வளவு உள்ளதோ அதை விட இருமடங்கு கோவமும் முரட்டுத்தனமும் அப்போதே அதிகம் இருக்கும் ரகுவிடம்.

"டேய், கண்ணா செல்லோ.. அம்மா சொல்றத கேளுப்பா.. ஒழுங்கா யூனிஃபாம போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கு கிளம்பு ராசா.. நல்லா படிச்சா தான் பெரிய உத்தியோகத்துக்கு போக முடியும்.. உன் அக்காளுங்க ரெண்டு பேத்தையும் பாக்குறேல்ல எப்டி போட்டி போட்டு படிக்கிறாளுங்கனு, நீ மட்டும் ஏன் டா படிப்ப கண்டாலே புளியங்காவா பாக்குற"

கிளிப்பிள்ளைக்கு எடுத்து சொல்வதை போல தினந்தோறும் அவள் பெற்ற சீமதுறைக்கு எடுத்து சொல்லியும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

"எனக்கு படிக்க புடிக்கல ம்மா.. உங்கூடவே இருக்கேன், சும்மா சும்மா ஸ்கூலுக்கு போவ சொல்லி தொந்தரவு பண்ணாத" தினமும் அடம் பண்ணும் மகனை படிக்க வைக்க முடியாமல் விழி பிதுங்கி போவாள் மது.

"என் மவனுக்கு படிக்க புடிக்கலைனா விட்டு தொலையேன் டி.. என்னத்துக்கு அவன போட்டு தெனமும் படி படின்னு படுத்தி எடுக்குற.." மகனுக்கு சப்போர்ட் செய்து வந்த வீரை ஒன்றும் சொல்ல முடியாது பரிதவித்து நிற்கும் நிலையில் முகம் வாடியவள், இரவு கணவனுக்கு பாலை எடுத்து செல்லுகையில் வியப்பில் ஆழ்ந்து விட்டன மது விழிகள்.

"இந்த வரிய அப்பாக்கு படிச்சி சொல்லுபா" வீரின் பேச்சி சத்தம் கேட்டு அதே இடத்தில் நின்றபடி இருவரையும் பார்க்கலானாள் மது.

"ஏன் ப்பா ஒனக்கு படிக்க தெரியாதா.. எங்கிட்ட கேக்குற.." 14 வயதிலேயே அர்ஜுன் தாஸ் குரல் போல சத்தமாக ஒலித்தது, ரகுபதி குரல்.

"எழாங்கிளாஸ் கூட அப்பா தாண்டல கண்ணா, தமிழ எழுத்து கூட்டி படிக்கவே எனக்கு நாக்கு தள்ளிப்புடும்.. இதுல எங்கிருந்து இங்கிலீஸ படிக்க..

ஆனா நீ அப்டியா ஒம்போதாம் கிளாஸு படிக்கிற, அப்பா படிச்சத விட பெரிய படிப்பு.. உன் அம்மா வேற சொன்னா இங்கிலீஸு எல்லாம் நீ அருமையா எழுத்து கூட்டி படிப்பியாமே! அதேன் இந்த இங்கிலீஸு செய்தித்தாள அப்பாக்கு வாசிச்சி சொல்லுவேன்னு ஆசையா வாங்கியாந்தேன்.."

ஆங்கில செய்தித்தாளை காட்டி ஆர்வமாக சொன்ன தகப்பனையும், செய்தித்தாளையும் மாறி மாறி பார்த்த ரகு,

"அம்மா உங்கிட்ட பொய் சொல்லிடுச்சு ப்பா, எனக்கு இங்கிலிஷ் படிக்க சுத்தமா வரல.. கணக்கு பாடம்னா கொஞ்சம் வருது, மத்தபடி எனக்கு படிக்கவே புடிக்கல.." முகத்தை சுளித்து அலட்சியமாக உரைத்த விதத்தில், மற்ற தந்தையாக இருந்தால் அடித்து மிதித்து தோலை உரித்தருக்க கூடும்.

ஆனால் வீர் மாறுபட்டவனாற்றே!

"சரி கண்ணா புடிக்கலைனா பரவால்ல விட்டுதள்ளு.. ஒனக்கு இங்கிலீஸு தானே வரல, கணக்கு போட வருது தானே.. அப்போ கணக்கு பாடத்த மட்டும் கத்துக்க பள்ளிக்கூடத்துக்கு போ.. கணக்க நல்லா போட்டு பழகு.." என்ற தந்தையை கண்கள் சுருக்கி முறைப்பு பார்வை பார்த்தான் ரகு.

"என்னடா அப்பாவும் நம்மள பள்ளிக்கூடம் போக சொல்றேனேன்னு பாக்குறியா.. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்னு ஒரு பழமொழி இருக்கு, அதோட அர்த்தம் என்ன தெரியுமா..

சித்திரம் வரைய கை பயிற்சி வேணும், அதே போல செந்தமிழ் பேசவும் நாக்கு பயிற்சி வேணும். வேற எந்த திறமைக்கும் பயிற்சி மட்டுந்தேன் ஒரே ஒரு அவசியமான தேவை. அப்ப நீ கணக்கு கத்துக்கவும் பயிற்சி வேணும் தானே!

கணக்கு ஒன்னுத்துக்குதேன் நம்ம வாழ்க்கையோட கணக்கையே மாத்தி அமைகிற வல்லுமை இருக்கு.. அப்பேர்ப்பட்ட தனித்துவமான வல்லுமை ஒனக்கு வருதுன்னா மொதல்ல அதை கத்துக்க டா.. மத்ததை எல்லாம் நீயே தானா கத்துப்ப"

அன்று மனைவிக்கு அச்சுருத்தும் வாழ்க்கை பக்கத்தை கணவன் பாணியில் அடாவடியாக கற்பித்த வீர், இன்று மகனுக்கு புரியும்படி அவனுக்கு பிடித்தது போல எப்படி சொன்னால் புரியுமோ, அப்படி அவன் தோளில் கைப்போட்டு அழகாக கற்றுக்கொடுத்தவனை நெட்டி முறித்து கொஞ்சிக்கொண்டாள் மது.

அன்றிலிருந்து கணக்கு பயிலவே பள்ளிக்கு சென்றான் ரகு. எப்படியோ திக்கி திணறி பண்ணிரண்டாம் வகுப்பு முடித்ததோடு சரி.

"என்ன வெறும் 12த் தான் உங்க மகன் படிச்சிருக்காரா.." மிது பாதியில் எழுந்து கடுப்பாக கத்த,

"ஆமா அதுக்கு என்னெங்குற.." ரகுவின் அதிர வைக்கும் திமிர் குரலில், மிதுவின் திறந்த வாய் லபக்கென மூடிக்கொண்டது.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 16
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top