• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
163
Reaction score
138
Points
43
அத்தியாயம் - 18

கோவிலின் வெளிப்புறம் மொத்தமும் ரத்தக்கிளறியில் கதிகலங்கி இருக்க,

"ஐயோ குழலிமா.." பார்த்தசாரதி பதறிப் போய் மயங்கிப் போன மகளின் கன்னத்தை தட்டிக் கொண்டிருப்பதை கண்டு அங்கிருந்த கூட்டத்தில் சிலர் ஓடி வந்து தண்ணீர் தெளித்து குழலியின் மயக்கத்தை தெளிய வைக்க முயன்றனர்.

கண் விழித்த குழலி, வேக மூச்செடுத்து பார்வையை பதட்டமாக சுழல விட, கூட்டம் கலைந்து பீஸ் போட்ட பாடியெல்லாம் குப்பை போல் அள்ளிப் போட்டுக் கொண்டு எப்போதோ ருத்ரன் க்ரூப் காலியாகி இருந்தது. அந்த இடமும் சற்று நேரத்தில் எல்லாம் சுத்தப்படுத்தி பழைய இடம் போல் காட்சி தர, கொலை நடந்த இடம் போல் அல்லாமல் மக்களும் சாதாரணமாய் நடமாடத் தொடங்கியதில் குழப்பமாகிப் போனாள்.

"குழலிமா இப்ப நோக்கு பரவால்லையோனோ.." தோளில் இருந்த துண்டை எடுத்து அவள் முகத்தில் இருந்த நீரை ஒற்றி எடுத்தார்.

"நன்னாருக்கேன் ப்பா.. வாங்கோ ஆத்துக்கு போலாம்" தந்தைக்காக இயல்பாக பேசி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய, அவரும் மேற்கொண்டு எதையும் பேசாமல் அமைதியாக அவள் பின்னே அமர்ந்து கொண்டார்.

அடிக்கடி இப்படி தான் அந்த கோவிலை சுற்றியும் பாடி பீஸ் போடும் வேலை நடக்குமாம். "இது புனித ஸ்தலம் இங்கே ஏன் இப்டி செய்றேள்" என்ற கேள்வியை பல அர்ச்சகர்கள் நிர்வாகிகள் காவலர்கள் என ருத்ரனிடம் கேட்டு உயிர் பயத்தில் உசலாடிய நிலையில் ஊரை விட்டே ஓடி ஒளிந்தவர்கள் ஏராளம்.

பார்த்தசாரதி வந்த புதிதில் பலரும் இங்கு நிலைப்பீரா என்று கேட்ட ஊடகப் பேச்செல்லாம், மெல்ல மெல்ல தற்போது தான் புரியத் தொடங்கியது. அதிலும் தன் வீட்டு எதிரில் இருப்பவன் தான் இத்தனை கலவரங்களுக்கும் சொந்தக்கார கொலைகரான் என்று நேரடியாக கண்ணால் பார்த்தே அறிந்துகொண்ட பிறகு நெஞ்சமெல்லாம் படபடத்துப் போனது.

"இதை வெங்கட்டிடம் சொல்லாமா?" என்ற யோசனையை உடனே புறந்தள்ளினார். "பொண்ணுக்கு கண்ணாலம் வச்சிருக்க நேரத்துல எதுக்கு தேவைஇல்லாத பிரச்சனை. பாவம் புள்ளையே இப்ப தான் டியூட்டில ஜாயின் பண்ணி இருக்கான் இந்த விஷயத்தை கேள்விப்பட்டா திரும்ப என்கவுண்டர் சஸ்பென்ட்னு போகும். முதல்ல குழலிக்கு கண்ணாலம் நல்லபடியா முடியனும் அதன்பிறகு வெங்கட்கிட்ட இதை பத்தி பேசி அந்த பாவக்காரனுக்கு சரியான தண்டனை வாங்கித் தரணும்" மனதில் எண்ணிக் கொண்டார்.

வீட்டுக்கு வந்த கணவரின் முகமும் மகளின் முகமும் சரியில்லை என்பதை உணர்ந்து கொண்ட பரிமளத்தின் வாய் வேறு மூடவே இல்லை.

"ஏண்ணா என்னண்ணா ஆச்சி உங்களுக்கு? ஏன் டி நோக்கு என்ன டி ஆச்சி? எதுக்காக ரெண்டு பேரும் முகத்தை பேயறைச மாறி வச்சிட்ருக்கேள்? இவ்ளோ தூரம் கேட்டுட்ருக்கேனே எங்கயாவது மதிச்சு பதில் சொல்றேளா! சொன்னா சொல்லுங்கோ இல்லாட்டி ஆளை விடுங்கோ. இனிமே நான் கேட்டுக்குற மாதிரி இல்லை."

முறுக்கிக் கொண்டு போன பரிமளம் மீண்டும் நிமிடம் கடப்பதற்குள் முதலில் இருந்து பல்லவியை தொடங்கி விட்டார்.

அந்த சத்தத்தில் குழலி சென்று அவள் அறையில் அடைந்து கொள்ள, அதுவரை அமைதியாக இருந்த பார்த்தசாரதி ஆத்துக்காரியை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டதும், "என்னண்ணா பொண்ணு இங்கிருந்து போனதும் என்ன பக்கத்துல உக்கார வச்சிக்கிட்டேள், போங்கோ இன்னும் உங்களுக்கு இளமை ஊஞ்சலாடுற நினைப்பு போல"

இந்த வயதிலும் அழகாக வெட்கப்பட்டு முகத்தை மூடி சிணுங்கிய பரிமளத்தைக் கண்டு உஃப் என உதடு குவித்து ஊதி டென்ஷனை குறைக்க முயன்றார் பார்த்தசாரதி.

"இங்க பாரு பரிமளோ செத்த நான் என்ன சொல்ல வரேன்றத காது கொடுத்து கேளு, அதுக்கப்பறமும் இதே மாதிரி இருந்தேன்னா வெக்கபடு என்னத்த வேணாலும் படு" கடுப்பாக சொன்னதும் "ம்க்கும்.. சொல்லுங்கோ"என்று அலுத்துக் கொண்டு அமைதியாக செவிசாய்த்தாள்.

"இனிமே எதிர்த்த ஆத்து பயலோட சங்காத்தமே வச்சுக்காத. நீ நினைக்கிற மாதிரி அவன் நல்லவன் இல்ல" என்றதும் நம்பாத பார்வை பார்த்தாள் பரிமளம்.

"ஏண்ணா அந்த அம்பிய அப்டி சொல்றேள். நல்ல மரியாதையான புள்ளையாண்டான் தானே" என்றாள் குழப்பமாக.

"ஆமா ஆமா மரியாதை தெரிஞ்ச புள்ளையாண்டான். அவன் ஒரு கொலைகாரனு சொன்னா உடனே இந்தாத்தவுட்டு காலிப் பண்ணனும்னு ஒத்தக்காலுல குதிப்பா, விஷயம் வெங்கட் காதுக்கு போகும் பிரச்சனை பெருசாகும் இவளை எப்டி சமாளிக்கறது" குழப்பமானவர்,

"இங்க பாரு பரிமளோ, நான் எது சொன்னாலும் ஒரு அர்த்தம் இருக்கும்னு நம்புறதா இருந்தா, இனிமே அன்று பயலோட பேச்சி வார்த்த வச்சிக்காத இப்போதைக்கு இவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்." கட் அண்ட் ரைட்டாக சொன்ன பின்னும் கணவனின் பேச்சை மீறி நடக்கும் சக்தி பரிமளத்திற்கு இல்லையே!

சரி என தலையாட்டிக் கொண்டவர், "இருந்த ஒரு என்டர்டைன்மென்டும் அவுட். இனிமே யாரு நான் பேசிறத பொறுமையா நின்னு கேப்பா" தனக்கு தன் பிரச்சனை என்ற குழப்பத்தோடு மற்ற வேலையை பார்த்தாள்.

** ** **

"அண்ணையா.. இன்னைக்கு நம்ம இடத்தை மாத்தி சம்பவம் பண்ணிருக்கலாம்" என்றபடி காரை ஓடிட்ய மதனை அழுத்தமாய் பார்த்தான் ருத்ரன்.

"வதினா வேற உன்ன பாத்து மயக்கம் போட்டுடுச்சி, பாவம் ரொம்ப பயந்துடுச்சி போல" குழலிக்காக வருத்தம் கொண்டான் அவன்.

"அதுக்காக நான் என்ன ரகசியமாவா என் தொழிலை செய்ய முடியும். என்னைக்கா இருந்தாலும் அவ இதெல்லாம் பழகி தானே ஆகணும். அந்த நாள் இனிய நாளாக தொடங்கட்டும்" சாலையில் பார்த்துகொண்டே பதிலளித்தான் அதிசயமாக.

"ஆனாலும் அண்ணையா இதெல்லாம் வதினாக்கு பிடிக்காதோனு தோணுது"

"அவளுக்கு புடிச்சா என்ன புடிக்காட்டி என்ன டா.. என் விருப்பப்படி நான் சொல்றதை கேட்டு தான் குயிலு வாழ்ந்தாகனும். மீறி அடம் பண்ணா எனக்கேத்த மாதிரி அவளை மாத்திப்பேன்" ருத்ரன் தீவிரமாக சொல்ல,

"ரெண்டும் ஒன்னுதா அண்ணையா" பட்டென உண்மையை சொல்லி வாயைப் பொத்தி மிரண்டவன் மண்டை கொழுக்கட்டைப் போட்டுக் கொண்டது.

அதன் பிறகும் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பாத மதன் வீடு வந்த பின்னும் வாய் திறக்கவே இல்லை.

ருத்ரன் அவன் அறையில் தஞ்சம் புகும் வரை நல்லப்பிள்ளை போல் இருந்தவன், காவேரியை தேடி வீட்டை தாண்டும் முன் xஒரு நிமிசோ" பின்னிருந்து கேட்ட அதே பெண்ணின் குரலில் வேகமாக திரும்பினான். உள்ளே சமையல் கட்டில் இருந்து துணிமூட்டையை நெஞ்சில் இறுக்கிக் கொண்டு அவசரமாக ஓடி வந்தாள்.

"ஏ அம்மாயி நீ என்ன உள்ளருந்து வர, உன் மச்சான் உன்ன கூட்டிட்டு இல்ல இல்ல தூக்கிட்டுப் போனானே என்னாச்சி" என்றான் யோசனையாக.

"அவைய கூட போவ எனக்கு விருப்பம் இல்ல, அதே நீயி சொன்னியே எங்கேயோ கூட்டிட்டு தங்க வைக்கிறேன்னு, அதுக்குதே நீயி வர வரைக்கும் இங்கனவே காத்திருந்திதே" பட்டும் படாமலும் வாடிய முகத்துடன் விரக்தியாக சொன்னவளை சீரான பார்வை பார்த்தவன், மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளாமல் அவன் பாட்டி வீட்டில் காவேரியை விடுவதற்காக இருவருமாக காரில் புறப்பட்டனர்.

போகும் வழியெங்கும் பலத்த சிக்னல், ஆந்திரா எம்பிக்கு பிறந்தநாள் போலும் வழியெங்கும் பந்தோபஸ்திற்காக பல காவலர்கள் நிற்க வைக்கப்பட்டிருக்க, காவல் படையை மேம்படுத்தும் பணியில் வெங்கட் சரியாக பார்த்துக் கொண்டிருந்த சமையம் சரியாக அவனது காந்த்க்கண்ணில் பட்டு ஈர்த்து விட்டாள் காவேரி.

சிக்னலில் நின்றிருந்த காரினுள் மதனோடு சிரித்துப் பேசியபடி லேசாக தூரிக் கொண்டிருந்த மழை துளியை கார் சன்னல் வழியே கையில்ப் பிடித்து அதை மதன் முகத்தில் ஏதோ சொல்லி விளையாட்டாக தெளித்து சிரித்தவளையும் பதிலுக்கு அவனும் மழைதுளியை பிடித்து அவள் முகத்தில் தெளிப்பதை கண்டு சினம் கூடிப் போனது.

"கட்டச்சிக்கு திமிர் கூடிப் போச்சி, என்கிட்ட ஊருக்கு போறேன்னு சொன்னவ இன்னும் போகாம, இவங்கூடயே சுத்திட்டு இருக்கா எவ்ளோ தைரியம். என்கிட்ட ஒருநாளாவது இப்டி சிரிச்சி இருக்காளா, இப்ப எப்டி சிரிக்கிறா பாரு 32 பல்லையும் ஈ..னு காட்டி" ஆத்திரத்தில் பற்களைக் கடித்தான்.

"உன்கிட்ட சிரிச்சி பேசுற அளவுக்கு சார் அப்டியே அவளுக்கு இடம் கொடுத்தீங்க பாரு. எப்பப்பாரு அவளை கண்டாலே எரிஞ்சி விழுந்து வெறுப்பை மட்டும் தானே அவகிட்ட காட்டியிருக்க" பதில் கவுண்டர் கொடுத்தது மனசாட்சி.

"நான் சிரிச்சிப் பேசலன்றதுக்காக கண்டவன் கூடயும் சிரிச்சிப் பேசுவாளா.."

"அதுல என்ன தப்பிருக்கு.. என்ன அவளை சந்தேகப்படறீயா?"

"ச்ச.. ச்ச.. அவ நெருப்பு அப்டி அனாவசியமா எல்லாம் யாரும் அவளை ஈசியா நெருங்கிட முடியாது. ஆனா கூட இருக்கவனை எல்லாம் நம்பிட முடியுமா! எல்லார் கண்ணும் ஒரே மாதிரி இருக்காது. இவளுக்கு வேற சூதுவாது தெரியாது தாவணி லேசா விலகி இருந்தா கூட சரியா கவனிக்க மாட்டா பைத்தியம். முதல்ல இவளை இங்கிருந்து அனுப்பி விட்டு இவனை பாத்துக்குறேன்"

மனதினில் வெறியாக நினைத்தவன், பந்தோபஸ்தை மறந்தவனாய் பைக்கை முறுக்கிக் கொண்டு சிக்னலில் இருந்து மெல்ல நகர்ந்த மகிழுந்தை பின் தொடர்ந்தவன் ஒருக்கட்டத்தில் வாகன நெரிசலில், காவேரி சென்ற கார் அவன் கண்ணை விட்டே மறைந்து போனதில் கடுப்பாக தொடையில் குத்திக் கொண்டு பைக்கில் சீறிப் பறந்தான் காவேரியை தேடி.

** ** **

"பரிமளோ என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் சரியா தனித்தனியா எடுத்து வச்சுடு. அப்புறம் ஊருக்கு போனதும் அதை மறந்துட்டேன் இதை மறந்துட்டேன்னு அலப்பறை பண்ணக் கூடாது" என்ற பார்த்தசாரதியும் அவளுக்கு உதவியாக தேவையான துணிமணிகளை அடுக்கி வைத்தார்.

வார்த்தைக்கு வார்த்தை துடுப்பாக பேசும் பரிமளம் "சரிண்ணா.." என ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்ளவும் கண்கள் இடுங்கப் பார்த்தார்.

"என்னாச்சி நோக்கு.. உடம்பு எதுவும் பண்ணுதா" ஆத்துக்காரியின் அமைதி என்னவோ செய்தது.

"அதெல்லாம் இல்லைண்ணா. ஆனா வெங்கட்டை நினச்சாதா மனசுக்கு சரியாப் படல."

"என்ன சொல்ற"

"ஆமாண்ணா.. அன்னைக்கு அந்த பொண்ணு வந்ததுல இருந்து ஆளே சரி இல்லை. முன்ன மாதிரி என்கூட சரியா பேசலை அதுகூட பரவால்ல, ஆத்துல சாப்ட்டு எத்தனையோ நாளாச்சி. போன் பண்ணாலும் வேலை இருக்கு, கேஸ் விஷயமா வெளிய வந்திருக்கேன்னு உடனே போனை கட் பண்றான். இதெல்லாம் பாக்கும் போது என்னை அவாய்ட் பண்ற மாதிரி தோன்றது"

வருத்தமாக சொல்லிட அமைதியாக தான் பார்த்தார் அவரும்.

"இந்த மாதிரி நேரத்துல இவனை எப்டிண்ணா நம்ம தனியா விட்டு ஊருக்கு போறது, நம்ம இல்லாத நேரத்துல அந்த பொண்ணு திரும்ப வந்து நம்ம புள்ள மனச கலச்சிட்டா என்ன பண்றது"

மகன் மீதும் கவலை உண்டு அதேசமயம் அடுத்த குலப்பெண்ணையும் தன் மகன் விரும்பக் கூடாது என்றதில் உறுதியாக இருந்தனர் இருவரும்.

"அதுக்காக நம்ம பொண்ணுக்கு கண்ணாலம் வச்சுண்டு நாம
ரெண்டு பேரும் அவனுக்கு இங்கேயே உக்காந்து காவல்காத்து இருக்க முடியுமா பரிமளோ. அவன்தா தெளிவா சொல்லிட்டேனோயில்லியோ அர்ஜென்ட் கேஸ் விஷயமா ஆந்திரா பாடர்க்கு போறதா, அப்போ அங்கிருந்து தான் ஊருக்கும் புறப்பட்டு வருவான்.

எதை நினைச்சும் கவலைப்படாம வா, கல்யாண வேலை தலைக்கு மேல நாம போய்தா அங்க எல்லா வேலையும் பாத்து வைக்கணும்."

தற்போதைக்கு பரிமளத்தின் கவலையைப் போக்கியவர், மதியம் போல் மனைவி மகளை அழைத்துக் கொண்டு தஞ்சை செல்லும் ட்ரைனில் ஏறினார்.

** ** **

இங்கு மனமே இல்லாமல் காவல் நிலையத்தில் இருந்து நேரடியாக ஆந்திரா பாடருக்கு செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்த வெங்கட், சற்றும் எதிர்பாராத வகையில் கேஸ் மற்றொரு அதிகாரியிடம் கைமாறப்பட்டதில், பெருமூச்சு விட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தவனின் எண்ணமெல்லாம் காவேரியே ஆட்கொண்டாள்.

"கட்டச்சி எங்கே டி போன" ஆழ்மனதில் பேசிக் கொண்டு மெத்தையில் புறண்டவன் நினைவு, காவேரியின் ஊரில் குடிசையில் தங்கி இருந்த போது அவள் செய்த அட்டகாசத்தை எண்ணி சிரித்தது.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 18
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top