• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
323
Reaction score
243
Points
63
இதழ்- 74


கார் இருள் சூழ்ந்த அடர்ந்த காட்டுக்குள் “ஊஊ...! என நரிகள் ஊளை இடும் சத்தம் அந்த காட்டையே அதிர வைத்து அச்சுருத்திக் கொண்டு இருக்க, கூடவே ஆந்தைகள், தரைவாழ் நுன்னுயிரிகளின் சத்தமும் சேர்ந்து அதிபயங்கரமான பயத்தை உண்டு பண்ண கூடியதாக இருந்தது.

நீர் வீழ்ச்சியின் சத்தம் ஆர்பாட்டமிட்டு சலசலத்து, வட்ட நிலவொளியின் விம்பம் ஜலத்தில் பட்டு அநியாயமாக சிதைந்துக் கொண்டு இருந்தது.

அடியாட்கள் எல்லாம் அர்ஜூன் மகியை துரத்தி வருகையில் திடீரென அவன் மகியோடு காணாமல் போக, இரவு நேரமானதால் எங்கே சென்று இருப்பான் இங்கு தான் எங்காவது பதுங்கி மறைந்து இருப்பான் என நடு நேரமாகியும் விடாமல் காட்டை சுற்றிலும் எங்கெங்கோ தேடி அலைந்துக் கொண்டு இருக்கின்றனர்.


தலை முழுக்க பாரமாக கனத்து வின்வின்னென்று வலியில் தெறிக்க, மயக்கம் கலைந்து கண்களை கடினப்பட்டு திறந்த மகி, கடும் இருட்டைக் கண்டு திடுக்கிட்டு அரண்டு போனவளின் கை கால் உடல் மொத்தமும் பயத்தில் நடுநடுங்கி முகத்தை மூடி அலறியவள், மெது மெதுவாக தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவளாக, விரல்கள் இடுக்கில் லேசாக கண் திறந்து பார்த்து இருட்டை பழகியதும், நிலவொளி வெளிச்சம் சற்று சுற்றி இருப்பதை தெளிவாக காட்டிய நொடி கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தது.

அவள் அருகில் அசைவின்றிக் கிடைக்கும் அர்ஜூனை கண்டு,
“அத்தான்..” என பதறி கத்தியவள் கண்களுக்கு தற்போது அவன் காயங்கள் தெரியாமல் போக, "இங்கே எப்படி வந்தோம் ஏன் இப்படி உயிர்ப்பில்லாமல் படுத்துக் கிடக்கிறான்" என்ற சந்தேகம் கொண்டதும் சட்டென மின்னல் வெட்டியதை போல், சண்டையிட்டு அவன் தோளில் குண்டடி பட்டது எல்லாம் நினைவுக்கு வந்தது.

பயத்தில் அதிவேகமாக துடிக்கும் இதய ஓசையோடு நடுங்கிய கரத்தால் “அத்தான்..” என அவனை தொட்டு உளுக்க, எந்த விதமான அசைவும் அவனிடம் இல்லை.

உயிர் பிரியும் வலியோடு, உடல் உதர கண்களில் இருந்து வற்றாத கண்ணீர் நீருற்றுக்கு இணையாக பெருக்கெடுத்து, இருதயம் நின்று விடுவதை போல் மூச்சு விட சிரமமாகி போக, ஆழ்ந்த மூச்செடுத்து கண்களை மூடி திறந்தும் படபடப்பு தீரவில்லை.

ஈரம் காயாத ரத்தம் அவன் தோளில் வழிந்து அவன் அணிந்து இருந்த சட்டை பேண்ட் முழுக்க நனைந்து, இயற்கை காற்றில் கலந்து ரத்த வாடையும் சேர்ந்து வருவதை வைத்தே ஏதோ விபரீதம் உணர்ந்த மகி, மனதுக்குள்ளே இருக்கும் அனைத்து கடவுளையும் நினைத்து,

"என் அத்தானுக்கு எதுவும் ஆகக் கூடாது கடவுளே..!" நிமிடத்திற்கு ஓராயிரம் முறை ப்ராத்தித்துக் கொண்டே அவன் அணிந்து இருந்த சட்டையை கழட்டி, இப்போது தெளிவாக தெரிந்த காயத்தை கண்டு வாய்ப் பொத்திக் கதறினாள்.

இந்த இருட்டில் தெரியாதக் காட்டில் உயிருக்கு போராடும் கணவனை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று நினைத்து நேரம் செல்ல செல்ல வாய் விட்டே கதறி விட்டாள் மகி.

“அத்தான் கண்ண தொறந்து பாருங்க அத்தான் உங்க ஏஞ்சல் கூப்பிடுறேன்ல. தயவு செஞ்சி என்னைய பாருங்க. என்னால தாங்க முடியல அத்தான். தெரியாம உங்கள விட்டு போயி தப்பு பண்ணிட்டேன். இனி எப்பவுமே உங்கள விட்டு பிரியணும்னு நினைக்கக் கூட மாட்டேன். அத்தான், இந்த ஒருமுறை என்னைய மன்னிக்கக் கூடாதா. கண்ண தொறந்து என்னைய பாருங்கத்தான்..”

இந்த கும்மிருட்டில் என்ன செய்வது என அறியாத நிலையில் அவன் தலையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு கதறிப் புலம்பிக் கொண்டு இருக்க, அவனிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவே அவன் மார்பில் கவிழ்ந்து இதய ஓசை கேக்க அது லேசான துடிப்பை தான் காட்டியது.

அதில் மேலும் பயந்து போனவளுக்கு திக்கு தெரியாத காட்டில் உயிருக்கு போராடும் கணவனை வைத்துக் கொண்டு என்ன செய்வது எப்படி காப்பாற்றுவது என்ற குழப்பதோடு நீர் தேங்கிய கண்களால் சுற்றி முற்றிலும் பார்க்க, சுற்றிலும் பேய் போன்ற மரங்கள் சூழ்ந்து, அவர்கள் இருந்த பாறைக்கு அருகே வெள்ளி நிலா வெளிச்சத்தில் கொட்டிய நீர்வீழ்ச்சியை கண்டு ஏதோ சிறு தெம்பு வந்தது போல், மடியில் இருந்தவனை பாறையில் கிடத்தி விட்டு வேகமாக எழுந்து கொட்டும் நீருக்கு அருகில் செல்ல, அதன் சாரல் துளிகள் குளுமையாக அவள் மேல் வீசி உடலை சிலிர்த்து உதர வைத்தது.

அதை எல்லாம் பொருட்படுத்தாமல், இருளில் தட்டுத் தடுமாறி ஆறாக பெருக்கெடுத்து ஓடும் அருவியில் முழங்கால் வரை நீர்உள்ள இடத்தில் இறங்கி நடந்து, கரை போல் இருந்த இடத்தில் எல்லாம் பல வகையான செடி கொடிகள் வளர்ந்து இருப்பதை கண்டு, அதனை ஒவ்வொன்றாக பறித்து நுகர்ந்து பார்த்த மகி, அதில் மூலிகை வாசம் வரும் தழைகளை மட்டும் பறித்து முந்தானையில் சேமித்து வைத்து, கையோடு கொண்டு வந்த அவன் சட்டையை ஓடும் நீரில் அலசி பிழிந்து எடுத்துக் கொண்டு அர்ஜூனிடம் ஓடி வந்தாள்.

சிறு வயதில் இருந்தே வள்ளிபாட்டி மூலிகையின் மகத்துவங்களை பற்றி அவளுக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறார். அவளுக்கும் மருத்துவத்தில் ஆர்வம் அதிகம் என்பதால், வள்ளிப்பாட்டி பிரசவம் பார்க்க போகும் இடத்துக்கு அவருடன் சென்று, அவர் கற்று தரும் நேக்கு போக்கு எல்லாம் பதினைந்து வயதிலேயே கற்று பக்குவப் பட்டும் இருந்தாள் மகி.

அதன் அடிப்படையில் தான் குழந்தைபேரு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டு மருத்துவ படிப்பை தேர்வு செய்தும் படித்தாள்.

அவன் அருகில் அமர்ந்து ஈரம் பிழிந்த சட்டையால் காயத்தை சுற்றி உள்ள ரத்தக்கரைகளை எல்லாம் துடைத்து சுத்தம் செய்தவள். பறித்து வந்த தழைகளை பாறை மேல் போட்டு கையோடு எடுத்து வந்த துண்டு பாறையால் நன்றாக இடித்து அரைத்து, அதனை எடுத்து அவன் காயம் பட்ட இடத்தில் இரண்டு கைகளாலும் கசக்கி பிழிந்து விட்டு, பெரிய மூலிகை இலையால் காயத்தை மூடி வைத்த மகி,

தான் கட்டி இருந்த சேலையை கழட்டி இரண்டாக மடித்து குளிருக்கு இதமாக அவன் மேல் போர்த்தி விட்டவள், மீண்டும் அவன் தலையை தூக்கி தனது மடிமேல் வைத்துகொண்டவளாக, எப்படியாவது தன்னவன் கண் விழித்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் சொல்லிக் கொண்டே தவிப்பாக கணவன் முகத்தையே பார்த்தபடி அமர்ந்து இருந்தவளுக்கு அவள் தலையில் பட்ட அடி வேறு வலி எடுத்தது.

விடிய விடிய ரவுடிகள் காட்டை சுற்றிலும் தேடி அசந்து போயினர் என்றால், அதே நிலை தான் காவலர்களுக்கும். அதிலும் கதிர் கண் விழித்தால் என்ன சொல்வானோ என்ற பயத்தில் அவர்களால் முடிந்தவரை விடாமல் தேட தொடங்கினர்.

கதிருக்கு அழைத்து பேசி அவன் கோவமாக வைத்ததோடு சரி அதன்பிறகு அவனுக்கு அழைப்பும் போகவில்லை, அவனும் அழைக்கவில்லை. எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னிடமோ வேறு யாரிடமோ சட்டென மாமா கோவம் கொள்ள மாட்டாரே! அப்படி கோவம் கொண்டால் நிச்சயம் ஏதாவது பிரச்சனையாக தான் இருக்கக் கூடும் என்று கணவனை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தவளுக்கு, டிவியில் பிளாஷ் நியூஸாக ஜெகதீஷ் இறந்த செய்தி ஓடிக் கொண்டு இருப்பதை பார்த்ததும் புரிந்துக் கொண்டாள், அங்கு ஏதோ விபரீத பிரச்சனைகள் நடந்துக் கொண்டு இருக்கிறது.

அதனால் தான் மகி தனியாக சென்றதற்கு கோவம் கொண்டு இருப்பான் என உணர்ந்துக் கொண்ட காயு, அங்கு என்ன நடக்குதோ ஏது நடக்குதோ மகி கவனமாக அர்ஜூன் வீட்டிற்கு சென்றாளா? அவளுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து இருக்குமோ? என்று இன்னும் பலவாரு யோசித்து பயந்து போனவள், கதிர் அர்ஜூன் ரிஷி மகி என்று நால்வருக்கும் அழைத்தும் அழைப்பு ஏற்காது போனதால், பயந்து போனவள் நேராக ஓடியது குருவிடம் தான்.

அவளின் பயந்த முகத்தை கண்டு பதறியவன் “காயு என்னாச்சிடா?” ஏன் உன் மொகமெல்லா பயந்து போன மாறி இருக்கு..” பரிவாக அவள் தலை வருட,

“அண்ணா..” என்று அழுதபடி அனைத்தையும் சொல்லி முடிக்க. யோசனையாக நெற்றி சுருக்கியவன்,

“சரி காயு நீயி எதையும் நெனச்சி வருத்தப்பட்டுட்டு இருக்காத. அங்க என்ன நடக்குது ந்நா போலீஸ் ஸ்டேஷன்க்கு போன் போட்டு விசாரிச்சி சொல்றேன். நீயி போயி பூவு கூட இரு” அவளுக்கு சமாதானம் கூறி அனுப்பி வைத்தவன், அடுத்து அழைத்தது பெங்களூரு காவல் நிலையத்துக்கு தான்.


நன்றாக விடிந்த நிலையில், நெல்லூர் காவல் நிலையத்தின் அருகில் உள்ள ஹோட்டல் அறையில் முதலில் கண் விழித்த கதிர் எழுந்துகொள்ளும் போதே உடல் மொத்தமும் பயங்கர வலி. வலது காலில் ஆழமாக பட்டிருந்த காயத்தால் காலை அசைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டான். ரிஷிக்கும் கிட்டத்தட்ட அதே நிலை தான் . இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருக்க, காவலர் ஒருவர் கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தவர் இருவருக்கும் அவர் கொண்டு வந்த டீயைக் கொடுக்க, நேற்றில் இருந்து சரியாக சாப்பிடததால் மறுப்பு கூறாமல் வாங்கிப் பருகினர்.

“அர்ஜூன் மகிய கண்டு பிடிச்சாச்சா?” தேநீர் பருகியபடியே கேள்வி வந்தது.

“இல்லை சார் நைட்ல இருந்து நாங்களும் ஒரு இடம் விடாம தேடிட்டு தான் இருக்கோம். ஆனா அவங்க எங்க போனாங்கனு கண்டு பிடிக்க முடியல சார்” அவர் பம்மியபடி சொல்ல. அவரை திட்டி என்ன ஆக போகிறது என்ற எண்ணத்தில் அர்ஜூன் நிச்சயம் பாதுகாப்பாக எங்கோ தான் இருப்பான் என்ற நம்பிக்கையில்,

“சீக்கிரம் தேடுங்க..” என்று மட்டும் கட்டளையாக உதிர்த்தான்.

“சரி சார்..” என வேகமாக சொல்லிய காவலர், பின் பெங்களூரு காவல் நிலையத்தில் இருந்து குரு அழைத்ததாக கூற,

“ஓ! சரி..” என்றவன் போனை எடுத்து பார்க்க அது சண்டை இட்டதில் உடைந்து போய் இருந்தது. ரிஷியின் போன் சார்ஜ் இல்லாமல் இருக்கவே அந்த காவலரிடமே போன் வாங்கி, குருக்கு அழைத்து சுருக்கமாக நடந்ததை சொல்லி அனைவரையும் பார்த்துக் கொள்ள சொன்னவன்,

அவன் லட்டுபெண்ணிடம் சிறிது நேரம் ஆறுதலாக பேசி விட்டு போனை அவரிடம் கொடுத்த கதிர், அர்ஜூனை தேடி செல்லலாம் என நினைத்தாலும், தான் அர்ஜூனை தேடி சென்றால் தன்னுடன் ரிஷியும் எப்படியும் வருவேன் என்று அடம் செய்வான் என நன்கு அறிந்தவன், அவன் உடல் நலத்தையும் கருதி காவலரிடம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என கூறிவிட்டு அப்படியே அமர்ந்து விட்டான்.

அவளை மீறி எப்படி கண்ணயர்ந்து போனாளோ! குளுமையை தாண்டிய சூரிய கதிர் அவள் கண்களை கூசச் செய்ய, மெதுவாக கண் திறந்தவளுக்கு அமர்ந்த வாக்கிலே உறங்கி இருந்ததால் நடு முதுகு விருவிருவென இழுக்க, அவள் மடியில் இன்னும் கண் விழிக்காமல் சிறு அசைவு இல்லாமல் அர்ஜூன் படுத்து இருந்ததால் கால்கள் அசைக்க முடியாதபடி மரத்து போய் இருந்தது.

முகம் சுளித்து உடலை வளைத்து அவன் முகத்தை வேதனையாக கண்டு “அத்தான்..” என முணுமுணுத்த மகி, அர்ஜூன் நெஞ்சில் காதை வைத்து அவன் இதயத் துடிப்பை கேட்க, இரவை விட சற்று சீரான வேகத்தில் தான் துடித்துக் கொண்டு இருந்தது. அதில் எப்படியும் இன்னும் சில மணி நேரங்களில் கண் விழித்து விடுவான் என எண்ணி சற்று நிம்மதியாக உணர்ந்த மகி, நன்றாக விடிந்து விட்டதால் இப்போது குளிர் இல்லாமல் போகவே மெல்ல அவனை பாறைமேல் படுக்க வைத்து எழுந்துக் கொண்டாள்.

அவன் மேல் இருந்த சேலையை எடுத்து கட்டிக் கொண்டு வெளிச்சத்தில் நன்றாக அவ்விடத்தை சுற்றியும் பார்த்த மகி, வெட்ட வெளியில் சுடும் வெயிலில் தன்னவன் படுத்து இருப்பதை வருத்தமாக கண்டு, வேறு இடம் எங்காவது நல்லதாக இருக்குமா என தேடியபடி சிறிது தூரம் நடக்க, அவள் இருந்த அந்த பெரிய பறைக்கு கீழே குகையினை கண்டாள்.

அந்த குகைகுள் ஒரு சிறிய நீருற்று கொட்டிட, அழகாக அந்த குகைக்கு நடுநடுவே மெத்தை போல் அழகழகான பாறைகள் ஒவ்வொரு வடிவில் இருக்க, பாறைகளின் இடுகளில், கொட்டும் நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீர் சிறு ஓடை போல் ஓடி பார்க்கும் கண்களுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை உண்டு செய்தது.

வேகமாக அதனுள் சென்று பார்த்த மகி, அங்கிருந்த அழகையும் தாண்டி, நீரிலும் நீருக்கு அருகிலும் தவளைகள், சிலந்தி வளை, சிறு சிறு புழுக்கள், நத்தை, அட்டைபூச்சி, மறவட்டைகள் என்று ஆங்காங்கே பாறைகள் இடுக்குகளில் இருப்பதை கண்கள் சுருக்கி பார்த்தாள். கிராமத்தில் வளர்ந்தவளுக்கு இதை எல்லாம் கண்டு பெரிதாக அருவருப்பு தெரியவில்லை என்றாலும், அர்ஜூனுக்கு இது போன்ற பூச்சிகளை பார்த்தால் ஓவ்வாமை ஏற்படுமே!

ஒருமுறை ஊரில் இருக்கும் போது அனைவரும் தோட்டத்தில் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கையில் அப்போது தான் அங்கு வந்த அர்ஜூன், மகியை பார்த்துக் கொண்டே நடந்ததில் கால் பாதம் அடியில் நச்சக் என்ற சத்தம். ஈர அடியில் மண் தரையில் மேய்ந்துக் கொண்டு வந்த மறவட்டையை மிதித்து விட்டு அருவருப்பில் அவன் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே!

அதை மிதித்ததும் கிளம்பிய நாற்றத்தில் அர்ஜுன் எடுத்த வாந்தியில் குடல் வெளியே வராத குறை தான். அவனை கண்டு பயந்து போன மகி அவனுக்கு மருந்து கொடுத்து படுக்க வைப்பதற்குள் ஒரு வழியாகி விட்டாள்.
அவற்றை இப்போது நினைத்து பார்த்த மகிக்கு கண்ணை கட்டி காட்டில் விட்ட சோதனையாகி போனது.

மேலே இருக்கும் பாறைமேலும் பூச்சிகளும் இருக்க, இப்போருக்கும் சூழ்நிலையில் கணவனை வேறு எங்கு அழைத்து செல்வது என்ற திகைப்பில், ,அங்கிருந்த வேப்பமரத்தில் கொத்தாக இலைகள் இருக்கும் கிளையினை உடைத்த மகி, அதனை எடுத்துக் கொண்டு குகைகுள் இறங்கி நடந்து சென்று, இருப்பதிலேயே பெரிதாக இருந்த பாறையை தேர்வு செய்து அந்த கிளையை வைத்து பாறையை சுத்தம் செய்தவளாக, மீண்டும் வெளியே வந்து மருத்துவ கேம்ப் மூலம் கற்றுக் கொண்ட சில விடயங்களை வைத்து, மூங்கில் ஒன்றை எடுத்து அதை கூர்மையான பாறையால் கத்தி போன்று சீவி அதை வைத்து இன்னும் பல மூங்கில் மரங்களை எல்லாம் மிகவும் கடினப்பட்டு வெட்டி வைத்தாள்.

கடினமான மரவேர்களை தேவையான வற்றை கூர்பாறை வைத்து இடித்து, நீளநீளமாக வெட்டி எடுத்து சென்று குகைகுள் அனைத்தையும் போட்டு, இருவர் படுத்தால் கனம் தாங்கும் அளவுக்கு, கட்டில் போன்ற அமைப்பில் ஆறு கால்கள் வைத்து நாலு பக்கமும் நீளமாக மூங்கில் வைத்து வேர்கள் கொண்டு இறுக்கமாக கட்டி இணைத்து, நீளவாக்கில் சிறு சிறு இடைவெளி விட்டு படுப்பதை போல் மூங்கில் உருலாதபடி போட்டு அதன் முனைகளில் வேர்களால் கட்டி, நிறைய வேப்பிலைகளை பறித்து வந்து மூங்கில்கள் முதுகில் குத்தாதவாரு மெத்தை போல் கொத்து கொத்தாக அழகாக அடுக்கி படர விட்டாள்.

மூச்சு வாங்க அர்ஜூனிடம் ஓடி வந்த மகி, அவனை தூக்க முடியாமல் காயம் படாத கையை அழுத்தி பிடித்து தூக்கி அவள் கழுத்தை சுற்றி அவன் கையை போட்டுக்கொண்டு, இடுப்பை கெட்டியாக பிடித்தபடி அந்த குகைக்குள் அழைத்து வந்தவள், அவள் தயாரித்த படுக்கையில் படுக்க வைப்பதற்குள் உடலில் உள்ள சத்துகள் எல்லாம் வற்றி அப்படியே பாறையில் படுத்து விட்டாள் சிறிது நேரம்.

தன்னவனை எந்த பூச்சிகளும் தீண்டவோ, அவன் கண் விழித்த பிறகு அவைகளை கண்டு திரும்பவும் ஒவ்வாமை ஏற்பட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில் கவலை கொண்டவளுக்கு, போதுமான எந்தஒரு கருவிகளுமின்றி அவள் எத்தனை தூரம் கடினப்பட்டு அந்த படுக்கையை தயாரிக்க உழைத்து இருக்கிறாள் என்றெல்லாம் அவள் சிந்திக்கும் நிலையில் இல்லை. அவளை பொறுத்த வரை ஏசி அறையில் பஞ்சி மெத்தையில் படுத்து பழகியவனை பூச்சிகள் ஊர்ந்தும் இடத்தில் படுக்க வைக்க விருப்பம் இல்லை அவ்வளவே!

சிறிது நேரம் மல்லாக்க படுத்து தன்னை சமன் செய்துக் கொண்டவளுக்கு, வயிறு பசித்தது. நேற்றில் இருந்து இப்போது மதியம் ஆகி விட்டது இன்னும் பச்சை தண்ணீர் கூட பல்லில் படாமல் இருக்கவே பசி மயக்கம் வருவதை போல் இருக்க, மெதுவாக தட்டுத்தடுமாறி எழுந்து சென்று முதலில் கத்தி போல் செய்து வைத்திருந்த மூங்கில் கழியை எடுத்து மூலிகை பறித்த இடத்தில் மேயும் மீன்களை பிடித்த மகி,
பெரிய பெரிய இலைகளை பறித்து, சுள்ளிகள் பொருக்கி குகைகுள் எடுத்து வந்தவள், இரு கற்கள் தீப்பொறி வர தேய்த்து நெருப்பு பற்ற வைத்தவளாக, மீதம் இருந்த மூங்கிலை நெருப்பு மேல் அடுக்கி வைத்து ஓடையில் கழுவி சுத்தம் செய்த மீன்களை அதன் மேல் வைத்து சுட வைத்து, சுட்ட மீனை எடுத்து இலையில் வைத்து இரண்டு உண்டாள்.

மீதம் இருந்த மீனை ஓட்டை இல்லாத மூங்கிலில் அடைத்து மேல் புறம் இலை சொருகி மூடி தன்னவனுக்காக பத்திரப்படுத்தி வைத்துவிட்டு, வெகு நேரமாக மயக்கத்திலே இருப்பதால் தொண்டை காய்ந்து விடுமே என்று சிறிது தண்ணீர் அவனுக்கு புகட்டி மீண்டும் சிறிது நேரம் அர்ஜூன் முகம் பார்த்தபடியே அமர்ந்து இருந்த மகி,
விரைவாக இருட்ட தொடங்கி விடும் என உணர்ந்து, வெளிச்சம் இருக்கும் போதே இரவு உண்ண ஏதாவது கிடைக்குமா என அந்த குகையை சுற்றி சென்று தேடிப் பார்த்தவளுக்கு மாங்கனி, கொய்யா கனிகள், கிழங்குகள் நிறைய கிடைக்க சிறு புன்னகையோடு எடுத்து வந்து வைத்தவள், மேலும் மூலிகைகளை பறித்து இடித்து மீண்டும் அவன் காயத்தில் பிழிந்து விட்டாள்.

சிறிது சிறிதாக இருட்ட தொடங்கி விட்டதால் பாறைக்குள்ளே கொட்டும் நீர்வீழ்ச்சி வேறு இருக்க, அதிக குளிர் எடுக்க தொடங்கியது.

மீண்டும் அவள் கட்டி இருந்த புடவையை கழட்டி இரண்டாக மடித்து அவன் மேல் போர்த்தி விட்டு, நெருப்பு அணையாமல் இருக்க சுள்ளிகள் நிறைய பொருக்கி வந்து சேமித்து வைத்த மகி, அணைய அணைய எரிய போட்டபடியே எப்போது கண் விழிப்பான் என்ற வேதனையும் அசதியும் அவளை வாட்ட பாறைமேல் சாய்ந்து உறங்கிப் போனாள்.

ஒரு இரவு ஒரு பகல் முழுதாக மயக்கத்தில் இருந்து விட்டு கண்களை திறக்க முடியாமல், தன்னவளை மிகுந்த பயத்தில் ஆழ்த்தி விட்டு கடினப்பட்டு மெல்ல கண் திறந்தான் அர்ஜூன்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 74
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top