Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
282
Reaction score
301
Points
63
அத்தியாயம் - 13

"ஆஆ.. காப்பாத்துங்க.." என அலறிக்கொண்டு ஓடி வந்த மிதுவை கண்ட கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் புரியாமல் பார்த்துக்கொள்ளும் போதே,

"ஏய் கடுகு ஓடாத நில்லு டி.." அவள் பின்னோடு விரட்டி வந்த ரகுவை பெருமூச்சு விட்டு பார்த்தனர்.

"எதுக்கு அந்த புள்ளைய துரத்திட்டு வர்ற ரகு" வீரின் கனீர் குரலில், வேகமெடுத்த ரகு கால்கள் தடைப்பட்டு நின்றன.

"இவளுக்கு வாய் கொழுப்பு ஓவரா இருக்கு ப்பா.. அதேன் நாலு சாத்து சாத்தி வாய கிழிக்க போறேன்.." ஆத்திரமாக பற்களை கடித்த மகனை பார்க்க அப்படியே தன் கணவனின் நகல் தான். ஆனால் பாவம் அவனுக்கு வாய்த்த மனைவி மது போல் அல்லாமல், அடங்காத மிது அல்லவா வந்து விட்டாள் என்று நினைக்கயிலே தன்னை மீறி சிரிப்பு வந்து விட்டது மதுவிற்கு.

"ம்மா, நானே இங்க ஆத்திரத்துல இருக்கேன்.. நீ எதுக்கு இப்ப கிளுக்கிட்டு நிக்கிற.." தந்தையிடம் இருந்து தாயிடம் சீற, கப்பென வாய் மூடிக்கொண்டாள் அவள்.

"டேய்.. இப்ப எதுக்கு என் பொண்டாட்டிகிட்ட காயிற, அவளே எப்பவாதுதே அத்திப்பூத்தது போல சிரிப்பா அது ஒனக்கு பொருக்காதா.." மனைவி சிரிப்பு தடைப்பட்டதும் பொசுக்கென வந்துவிட்டது.

"ஆமா, உன் பொண்டாட்டி சிரிப்ப நீ பாக்காதது போலதே, போ ப்பா அப்டி.." சிலுப்பிய ரகு, மாமியார் மாமனார் பின்னே பத்திரமாக பதுங்கிக்கொண்ட மனைவியின் தோள் வரை உள்ள வெட்டிய சிகையினை, எக்கிப்பிடித்தவனாக,

"எங்கே தகிரியம் இருந்தா இப்ப பேர் சொல்லு டி பாப்போம்.." வெண் பற்கள் அரைபட தன்னிடம் இழுக்கவும், "ஆஆஆ.. வலிக்குது விடு.." என வலியில் அலறிய மிதுக்கு, ரகுவிடம் வசமாக சிக்கியதும், முன்பு இருந்த தைரியம் மொத்தமும் வடிந்து விட்டது.

"என்ன டா பழக்கம் இது பொம்பள புள்ளைய சும்மா சும்மா அடிக்கிறது, விடு அவள" மருமகளுக்காக பரிந்து வந்த அன்னையை முறைத்த ரகு,

"இவ என்ன பண்ணானு தெரியாம, இவளுக்காக வக்காலத்து வாங்காத ம்மா.." என்றான் அடக்கப்பட்ட கோவத்துடன்.

"அப்டி என்ன பண்ணா?" அவன் கையில் சிக்கித் தவித்த மிதுவை கண்டு உள்ளம் பரிதவித்து போனது அத்தைக்கு.

"ந்நா இவளுக்கு புருசன் தானே, என்னைய மாமானு கூப்ட்டு பழகுடின்னா, அப்பா பேத்த சொல்லி கூப்ட்டு என்னைய வெறுப்பேத்துறா ம்மா.." சிறுவனாக அன்னையிடம் புகராளிக்க, வீர் உதட்டில் மெல்லிய குறுநகை பூத்தது.

"எம்புட்டு வளந்தாளும் என் புள்ளைக்கு இந்த சின்னபுள்ள புத்தி மட்டும் மாறவே இல்ல" அவன் மனதில் நினைத்தையே தான் மதுவும் நினைத்தபடி ரகுவை பார்த்தாள்.

"சபா.. இன்னும் இந்த கோவத்த நீ விடலையா ரகு.. மிது உன்னைய மனசார ஏத்துக்கிட தொடங்கினா தானா உன் விருப்பத்துக்கு வருவா கண்ணா.. இப்ப அவ உம்மேல கோவத்துல இருக்கா, அதை சரிப்பண்ணி அவளை சந்தோசமா பாத்துக்க பாரு.. அதைவிட்டு சும்மா சும்மா கோவப்பட்டு கைய நீட்டுனா எப்டிபா உன்னைய அவ புரிஞ்சி ஏத்துப்பா" தாயாக அவனுக்கு புத்தி சொல்ல, அதனை காதில் கேட்க தான் மிகவும் கடினமாக இருந்தது

"அப்டி ஒன்னும் புரிய வச்சி அவ என்னைய ஏத்துக்கிடவே வேணாங்குறேன்.. எனக்கு தேவை மரியாதை.. அத அவ சரியா குடுக்கனும்.. சொல்லி வை உன் மருமவகிட்ட" மிதுவை முறைத்தபடியே மதுவிடம் சொன்னவன்,

"தனியா மாட்டு டி உன் முட்ட கண்ண நோண்டிபுடுறேன்.." அவள் தலை முடியை உளுக்கி விட்ட ரகு, தனக்குள் கருவிக்கொண்டே அறைக்கு சென்று விட்டான்.

அவன் உளுகிய வேகத்தில் தலை வலி எடுக்க, 'ப்பாஆ.. சரியான முரட்டு ராஸ்கல்.." வாசைப்பில் முணுமுணுத்த மிது,

" பாத்திங்கள்ள நீங்க புள்ள வளத்து வச்சிருக்க லட்சணத்த, யாருக்கும் இவன் மரியாதை கொடுக்க மாட்டானான்.. ஆனா இவனுக்கு மட்டும் எல்லாரும் மரியாதைய கொட்டி கொட்டி தரணுமாம்.. என்ன நியாயம் இது..

இந்நேரம் நீங்க ரெண்டு பேரும் இங்க இல்லைனா என் நிலைமை என்னனு நினைச்சி பாத்தீங்களா! இப்படிப்பட்ட ஒரு அரக்கனோட எப்டி என்னால இருக்க முடியும்.. ப்ளீஸ் அங்கிள் உங்கள நான் கெஞ்சி கேட்டுக்குறேன், தயவுசெய்து என்ன இங்கிருந்து அனுப்பி விட்டுடுங்க..

எனக்கு அந்த காட்டுமிராண்டிய பாக்கவே பத்திகிட்டு வருது.." வெளிவந்த ஒரு சொட்டு கண்ணீரையும் புறங்கையால் துடைத்தபடி வீரிடம் கெஞ்ச, மகன் நடத்தும் குருதி ஆட்டம் பற்றி சரிவர அறியாதவன், மருமகளுக்கு பதில் சொல்ல முடியாது முதல் முறையாக கைக்கட்டி நின்றான் வீர்.

கணவனின் குழப்ப முகத்தை கண்ட மதுவின் மனதுக்குள் சுருக்கென முள் தைத்த உணர்வு. வீரின் இத்தனை பெரிய அமைதியே ஏதோ தவறாக உணர்த்த, கட்டியவன் முகத்தையே குறுகுறுவென பார்த்தவளை அவனும் கண்டுகொண்டான்.

"இந்தா பாரு கண்ணு, என் மவன் உன் விசயத்துல செய்றது தப்பா சரியானு எனக்கு நெசமா தெரியல. ஆனா ஒன்னு மட்டும் உறுதியா சொல்லுவேன், என் மகன் ரகுபதி ஒரு விசயத்தை பண்றான்னா அதுல ஆயிரம் காரணம் இருக்கும்..

அவன் தொட்ட காரியம் நிறைவேறுற வரைக்கும் கொஞ்ச நாள் பல்ல கடிச்சிட்டு பொறுத்துக்க, அதுக்கப்பறமும் ஒனக்கு அவனை பிடிக்கலைன்னா சொல்லு, நானே உன்னைய கொண்டுட்டு போயி உன் அப்பன் வீட்ல பத்திரமா விட்டு வர்றேன்.

அதுவரைக்கும் எங்களுக்காக கொஞ்சம் பொறுத்து போறியா..?" வீரின் முரட்டு குரல் மருமகளுக்காக பணிந்து வர்ற,

"இவ்வளவு தூரம் என் கஷ்டங்களை எடுத்து சொல்றேன், எதையுமே புரிஞ்சிக்காம. சுயநலமா இருக்காங்களே" பதிலின்றி தரையினை வெறித்தவளின் மனதில் இப்படியான எண்ணங்கள் தான் வேதனையில் நிறைந்திருந்தன.

மது செய்து வைத்த வகையான உணவுகளை, வேண்டுமென்றே மனைவியை நெருக்கமாக அருகில் நிறுத்தி பரிமாற சொன்னவன், அவள் இடை கிள்ளி, யாரும் அறியா கண வேகத்தில் முகத்தால் அவள் அங்கம் மோதி பலமாக சேட்டை செய்தவன் செயலில், திகைப்பில் தன் துர்விதி எண்ணி நொந்து போனது பெண்ணுள்ளம்.

உண்டு முடித்த ரகு அவசரமாக வெளியே செல்லும் நேரம், என்ன காரணமோ! "ஒரு நிமிஷம் நில்லுங்க" என்றவளை கூர் விழிகள் சுருக்கி பார்த்தவனாக,

"என்ன விசயம் வெரசா சொல்லு நேரமாச்சு.." சுவற்றில் மாட்டி இருந்த கடிகாரத்தை கண்டு அவசரப்படுத்த,

"ஆமா பெரிய கலெக்டர் வேலைக்கு போறான், கரெக்ட்டான நேரத்துக்கு போக.." செவ்விதழ் முணுமுணுப்பு ரகுவுக்கும் கேட்டிட, புருவம் உயர்த்தி அவளை உற்று நோக்கிய ரகு,

"இப்ப சொல்ல போறியா, போகவா.." காட்டுக்குரல் பெண் நெஞ்சை அதிர வைக்க, சொல்ல வந்த விடயமே மறந்து போன உணர்வு.

"என் ஸ்டடிஸ் எல்லாம் பாதியோட நிக்குது, நான் பெங்களூர் போகணும்" அவசரமாக உரைத்தவளை அமைதியாக ஏறிட்டான் ரகு.

"அ. அது.. நெக்ஸ்ட் மந்த்ல இருந்து சமஸ்டர் ஸ்டார்ட் ஆகுது இன்னும் ஒன்னுமே படிக்கல, என் புக்ஸ் எல்லாமே அங்க தான் இருக்கு.." அவனது அமைதியான பார்வையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்த, தன்னை போக விடுவானா மாட்டானா? என்ற கவலை தொற்றிக்கொண்டது.

"புக்க எடுக்கவா அம்புட்டு தூரம் பிரயாணம் பண்ணனும்.. உன் புஸ்தகத்தை பூரா இங்கன கொண்டார சொல்றேன், படி.. எக்ஸாம் அப்ப அங்கன கூட்டிட்டு போறேன்" என்ற ரகு விருவிருவென வாயில் கதவு நோக்கி நடக்க,

"ஏற்கனவே எனக்கு இங்க இருக்க பைத்தியம் பிடிக்குது, இதுல இங்கிருந்தபடியே எப்டி உங்க மூஞ்சியெல்லாம் பாத்து படிக்கிறது.." கோவத்தில் அவள் கத்தவும், ரகுவின் நடை தடைப்பட்டு திரும்பினான்.

"அதுக்காக எங்க மூஞ்சியெல்லாம் கடன் வாங்கியா மாத்திக்க முடியும்.. படிக்க விருப்பம் இருந்தா படி, இல்லாட்டி சோத்த செஞ்சி பழகி மாமாவ வகையா கவனிச்சிக்க.. அத்தவுட்டு சும்மா வீல் வீல்னு கத்திட்டு நிக்காத, ஒருநேரம் போல ஒருநேரம் இருக்க மாட்டேன்.." விறைப்பு மாறாமல் சொன்ன ரகு, முகம் கருத்து நின்ற மிதுவின் மிருதுவான இதழில் அவசர கடிமுத்தம் வைத்து மின்னலாக மறைந்திருந்தான்.

வீர் சொன்னது போலவே மாலை ஊருக்கு செல்ல துணிமணிகளை அடிக்கி தாயார் செய்துகொண்டிருந்த மாமியாரை கலக்கத்துடன் பார்த்திருந்தாள் மிது. என்னதான் மதுவை ஆகவில்லை என்றாலும், அவள் வீட்டில் இருப்பது சற்று தைரியம் தானே!

எங்கே அரக்கனிடம் தனியாக விட்டு சென்று விடுவார்களோ! என்ற அச்சத்தில் பல்லிடுக்கில் நகத்தை குத்திக்கொண்டிருந்த மருமகளின் எண்ணமும் மது உணவே செய்தாள்.

"மிதுமா, ராத்திரிக்கு உனக்கு சாப்பிட என்ன வேணும்னு சொன்னா, அத்தை ரெடி பண்ணி ஹாட்பாக்ஸ்ல மூடி வச்சுட்டு மாமா வந்ததும் பொறப்பட்டுடுவேன்.." நீண்ட நாட்களுக்கு பிறகு கணவனோடு தனியாக செல்லப்போகும் பரவசம் ஒருபுறம் இருந்தாலும், மகனிடம் மிதுவை தனியே விட்டுசெல்ல சிறிதும் மனம் இல்லை அவளுக்கு.

"எனக்கு வேண்டியத என்னால பண்ணிக்க முடியும், உங்க பையனுக்கு என்னவோ அதை மட்டும் செஞ்சி வச்சிட்டு போங்க.. இல்லாட்டி என் உயிர தான் வாங்குவான்" சலித்து சொன்ன மிது, ஓரக்கண்ணால் மதுவை பார்த்தாள்.

"சரி டா, அப்போ ரகுக்கு பிடிச்ச இடியப்பமும் தேங்காய் பாலும் பண்ணி வச்சிடறேன். அவன் வந்து கேட்டா பால்ல நாட்டு சக்கரை மட்டும் சேர்த்து கொடுத்திடு. கூடவே நீயும் சாப்பிட்று" என்ற மது ஏற்கனவே ஊரவைத்து வடிகட்டி லேசாக காயவைத்து எடுத்து பச்சரிசியை பக்குவமாக அரைக்க தொடங்கி விட்டாள்.

"அதென்ன அவனுக்கு பிடிச்ச ஐட்டத்த என்னையும் சாப்பிட சொல்றது.. இவங்க சொன்னா நான் சாப்பிடணுமா" கணவனுக்கு போட்டியாக வீஞ்சிக்கொண்ட மிது, மது வாள் பிடித்து அவளோடே சுற்றி வந்தாள்.

அடிக்கடி தாகம் எடுக்காமலே தண்ணீர் அருந்துவது போல் பாவ்லா காட்டி, மது செய்வதை எட்டிப்பார்க்க, அரைகுறையாக பார்ப்பது எதுவும் விளங்கவில்லை.

"என்ன மிதுமா, ஏதாவது வேணுமா?" ஈரத் துணி விரித்த தட்டில் வட்டமாக பிழிந்து விட்ட இடியப்பத்தை சூடான ஆவியில் மூடி வைத்தாள்.

"ஹான்.. நத்திங், த்.தண்ணி குடிக்க வந்தேன்" சமாளிப்பாக மிது சொன்னதும் சிரிப்பு வந்தது மதுக்கு. மணிக்கணக்கில் தண்ணீர் குடிக்கும் அழகை அவளும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறாள்.

"இடியப்பம் செய்றது ஒன்னும் அம்புட்டு கஸ்டம் இல்ல கண்ணு.." மது சொல்ல,

"நான் கேக்கவே இல்லையே" அலட்சியமாக பதில் தந்தாலும், மாமியார் சொல்லப் போகும் சமையல் குறிப்பை கேட்கப்போகும் ஆர்வம் மண்டிக்கிடந்தது அவள் முகத்தில்.

"சரி கேக்காத, ந்நா பாட்டுக்கு தனியா சொல்லிட்டு போறேன்" என்ற மது, மருமகளை பழக்க மெல்ல மெல்ல ஆரம்பித்து இருந்தாள் போலும்.

"பச்சரிசிய கழுவி காயவச்சி நல்ல நைசா அரைச்சி எடுத்த மாவுல, தேவைக்கு உப்பு கலந்து, கை பொறுக்குற சூட்டுக்கு சிறுக சிறுக தண்ணி விட்டு, நல்லா பஞ்சி போல மிருதுவா பிசைஞ்சி வச்சிக்கிடணும்.

கை அளவு மாவுருண்டைய எடுத்து அச்சுல போட்டு சுத்தி, இட்லி அவிக்கிறது போல இப்டி ஆவில மூடி வச்சி, அஞ்சி நிமிசம் கழிச்சி எடுத்தா, பூ போல இடியாப்பம் வெந்து வந்திடும்.

இதுகூட ஆட்டுக்குழம்பு, கோழி குழம்பு, சக்கர, தேங்காய் துருவல்னு ஒவ்வொருத்தருக்கு புடிச்சது போல சாப்பிடுவாங்க. ஆனா என் புள்ளைக்கு கெட்டியான தேங்காய் பாலை இடியாப்பத்துல ஊத்தி சாப்பிட தான் ரொம்ப பிடிக்கும்.."

மருமகளின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தபடியே மது சொல்ல சொல்ல, உன்னிப்பாக கேட்டுக்கொண்டவளுக்கு இவ்வளவு தானா என்ற எண்ணம் தோன்றினாலும், "இப்ப எதுக்கு அவனுக்கு பிடிச்ச டிஷ்ஷ இவ்வளவு ஆர்வமாக கேட்டுட்டு இருக்கேன்" என தன்னையே திட்டிக்கொண்டு அறைக்கு வந்து விட்டாள்.

"ம்ம்.. இந்த அளவுக்கு மருமக என் புள்ளைக்கு பிடிச்ச விசயத்துல ஆர்வம் காட்டுறான்னா, கூடிய சீக்கிரத்துல அவனை இவளுக்கு பிடிச்சிடும்னு தானே அர்த்தம்.. ஆறுபடை அப்பனே நீதான் ப்பா இவங்க ரெண்டு பேத்து மனசையும் மாத்தி சந்தோசமா வாழ வழி பண்ணனும்"

மிது போனதும் குதுகலமாக துள்ளி கடவுளிடம் அவசர வேண்டுதல் வைத்தவளாக, "மாமா சொன்னது போல பேசாம இவங்கள தனிமைல விட்டு போறது தான் சரி.. அப்பதேன் ஒருத்தரை ஒருத்தர் ஓரளவுக்காவது புரிஞ்சிக்க முடியும். ஆனா மிது ஏதாவது பேச போயி, ரகு கோவத்துல அவளை கைய நீட்டிப்புட்டா என்ன பண்றது" மகனை நினைத்து தான் கவலையாக இருந்தது மதுக்கு.

மாலை விளக்கு வைத்த நேரம் வீட்டிற்கு வந்த வீரே குளித்து முடித்து தயாராகி விட்டான். ஆனால் இடியாப்ப மாமியை மட்டும் கண்ணுல காணல.

"மதூஊ.. எம்புட்டு நேரந் டி நிக்க.. இன்னுமா கெளம்பிட்டு இருக்கவ.." வெள்ளை வேஷ்டி, சந்தன சட்டை, தோளில் துண்டு என வெள்ளி முடி மினுமினுக்க தோரணையாக இருந்தவன் கத்திய கத்தில் மது வந்தளோ இல்லையோ, மிது உள்ளிருந்து ஓடி வந்து விட்டாள்.

"இதோ மாமா, வந்திட்டேன்.." வான் நீல நிறத்தில் குங்கும நிற பாடர் வைத்த பருத்தி புடவையில், இருபது வயது குறைந்தது போல, உச்சி குங்குமம் ஜொலிக்க அம்சமாக வெளிவந்த மனைவியை உள்ளுக்குள் அடைந்த பரவசத்துடன் தலை சாய்த்து பச்சையாக சைட் அடித்தான் வீர்.

"நமக்குதே இம்புட்டு சீக்கிரத்துல வயசாகிபுடுச்சோ.." இடையில் ஒரு கை வைத்து, மறுக்கையால் தாடி நீவி யோசனையில் இருந்தவனை, மிது குரல் நினைவுக்கு கொண்டு வந்தது.

"காலைல நீங்க ரெண்டு பேரும் பேசினத வச்சே புரிஞ்சிக்கிட்டேன், என்னையும் உங்க புள்ளையும் தனியா விட்டு போக ஏதோ பிளான் பண்றீங்கனு..

நீங்க எப்டி பிளான் பண்ணாலும் என் மனசு மாற போறது இல்ல அங்கிள்.. இதுக்கு மேலையும் என்ன தனியா அந்த அரக்கன் கிட்ட விட்டு போகணும்னா போங்க.. ஆனா ஏதாவது அசம்பாவிதம் நடந்தா, அதுக்கு உங்க பையன் தான் பொறுப்பு.."

அழுத்தம் திருத்தமாக சொன்னவளை, மது கலக்கமாக பார்க்க, வீர் மெல்லிய புன்னகை வீசினான்.

"பாவல்ல கண்ணு, படிச்ச புள்ளைல அதே கப்புனு புரிஞ்சிகிட்ட.. ரெண்டு நாளுதே, பத்திரமா எங்க புள்ளைய பாத்துக்க.. அசம்பாவிதம் ஆகுற அளவுக்கு ரகு ஒன்னும் பண்ண மாட்டான். மீறி பண்ணா நாங்க வந்ததும் சொல்லு வகுந்துபுடலாம் அந்த படவா ராஸ்கல.

அதுவரைக்கும் பயப்படாம இரு கண்ணு, நானும் உன் அத்தையும் பக்கத்து ஊர்ல இருக்க நம்ம பண்ணவீட்டுல தங்கி, அப்டி இப்டி கொஞ்சம் ஜாலி பண்ணிட்டு வந்திடுறோம்" முரட்டு குரல் கேலி உரைக்க, அவன் வலது பக்கம் ஒரே இடி இடித்தாள் மது.

"மருமக முன்னாடி என்ன பேச்சி மாமா பேசுறீங்க.." கணவனின் பச்சை பார்வையில் ஏற்கனவே சிவந்து இருந்தவள், இப்போது அவன் மிதுவிடம் பேசியதில் சங்கட்டமாகி போனது.

"உள்ளத தானே சொன்னேன்.. ஏன் டி பண்ணவீட்டுக்கு போனா என்ன நடக்கும்னு ஒனக்கு தெரியாதா.." மனைவி கேக்க அவள் காதில் சொன்னதில், குப்பென வியர்த்து விட்டவளாக,

"ஸ்ப்பா.. நீங்க இருக்கீங்களே சரியான விவஸ்தை கெட்ட மனுஷன்.. விட்டா என் குறை மானத்தையும் வாங்கிடுவீங்க.. பேசாம வாங்க மாமா" வெட்கத்தில் அலறி கணவன் கையை இழுத்துக்கொண்டு ஓடியவளை, வீர் ரசிக்க,

"இந்த வயதிலும் இத்தனை அந்யோண்யமா!" உள்ளுக்குள் நினைத்தவளுக்கும் மெல்லிய புன்னகை அரும்பியது. கூடவே அரக்கனின் நினைவு வந்து கலக்கமானது பால்முகம்.

தொடரும்.

இனிமே முரண் ரெகுலரா வந்திடும் என்ற நம்பிக்கையில் ரைட்டர் 🫣🧘🏻‍♀️
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 13
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top