• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் - 16

அன்று வெங்கட்டிடம் முறுக்கிக் கொண்டு போவதை போல் போனவள் மீண்டும் அவனை சீண்டி வம்பு வளர்க்கத் துவங்கி விட்டாள் காவேரி.

மூன்று வேலையும் ருசியாக சமைத்து உணவை கொடுப்பதும் அவன் நிராகரிப்பதும், இவள் மச்சா என குழைவாக அழைத்து உரசுவதும், அவன் பதிலுக்கு தள்ளிவிட்டு எரிந்து விழுவதுமாகவே அந்த மூன்று மாதங்களும் கடந்து போய் இருந்தது.

வெங்கட் வந்த வேலை சிறப்பாக முடிந்து இருக்க, ஏறிக்குளத்தில் பதுங்கி இருந்த ஒவ்வொரு வழிப்பறி திருடர்களையும் கையும் காலுமாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைக்கும் போது தான் காவேரி மட்டுமில்லாமல் அவ்வூரே அறிந்தனர், வெங்கட் வாத்தி இல்லை தஞ்சை காவல் அதிகாரி என்று.

அதில் அவன் வீரசாகசங்களை எல்லாம் கேள்விப்பட்டு இன்னும் அவன் மேல் பைத்தியமாக காதல் கூடிப் போனது அந்த அப்பாவி பெண்ணுக்கு. வேலை முடிந்ததும் இரவோடு இரவாக யாரிடமும் சொல்லாமல் ஏறிக்குளத்தை வெங்கட் காலி செய்திருக்க, விடிந்ததும் அவனை எங்கும் காணாமல் மனம் வெம்பிஅழுதாள் காதல் கொண்ட பேதை.

அடுத்து வந்த மூன்று மாதத்திற்குள் பல இன்னல்கள் சந்தித்து அவள் வாழ்க்கையே திசை திரும்பி போனது. தாத்தாவின் மரணம், வயது பெண் தனியாக இருக்கிறாள் என்று தெரிந்துகொண்டு பல குடிகார போதை நாய்கள் குடிசையை வட்டமடிப்பதும், களைபிடுங்க செல்லும் போது வழி மரிப்பதும் தவறாக பேசுவதும் என்று போகும் இடமெல்லாம் தொல்லை செய்தனர்.

இதற்கு மேலும் அந்த ஊரில் தனியாக வாழ முடியாது எனும் இக்கட்டான சூழ்நிலையில் தான், வெங்கட் நண்பன் ஜெய்யை சந்தித்து தஞ்சை அட்ரஸை வாங்கி வந்தாள். ஆனால் அங்கிருந்தும் அவன் ஆந்திரா வந்து விட்டான் என்ற செய்தியில் நிலைகொள்ளாமல் தவித்தவள், துணிந்து வெங்கட் பணிபுரிந்த தஞ்சை காவல்நிலையம் சென்றாள்.

அவன் குடிசையில் தங்கி இருந்த போது அவனுக்கே தெரியாமல் சுட்ட அவன் புகைப்படம் காட்டி, ஏதேதோ வாய்க்கு வந்ததை உளறி ஆந்திரா விலாசத்தைப் பெற்று நம்பிக்கையாக வந்தவள், கடைசியில் வெங்கட்டின் அவபேச்சில் மனம் சிதைந்து இருந்த கொஞ்சநஞ்ச தைரியமும் அவளை விட்டு பறந்து போனது.

இதுவரை யாரும் அவளிடம் நட்பாக கூட பழகியதில்லை. அவளும் சென்று யாரிடமும் கெஞ்சியதில்லை. தனக்கு கிடைப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழும் அற்புத மானுட பிறவி. அவளாக ஆசை கொண்டது எல்லாம் அவளின் மச்சானை மட்டுமே.

கள்ளம் அறியாதவள், சிறிய வயதில் நிறைய பழைய படங்களை பார்த்து கணவன் என்னதான் மனைவியை பிடிக்காமல் சண்டை போட்டாலும் பிறகு மனைவியை தாங்கு தாங்கென்று தாங்குவான் என்பது போன்ற காட்சிகளை அதிகம் மனதில் புதைய வைத்துக் கொண்டு, வெங்கட்டின் நிராகரிப்பில் கூட தன்மீது காதல் உள்ளது போலும் என நம்பி மடத்தனமாய் காதல் வைத்து இவ்வளவு தூரம் அவனை தேடி வந்தது எத்தனை பெரிய தவறு என காலம் கடந்து உணர்ந்து கொண்ட பின்னும், இனியும் அங்கு இருக்க மனம் வருமா அந்த சிறு பெண்ணிற்கு!

வரும் போது இருந்த பொலிவு கண்ணீரில் மங்கி வீங்கி இருந்த முகத்தினை நீர் தெளித்து கழுவிக் கொண்டவளாக, கையோடு கொண்டு வந்த துணிப்பையை நெஞ்சோடு சேர்த்து இறுகி அனைத்தவளின் மனம் ருத்ரன் சொன்ன வார்த்தையை நினைவு கூர்ந்தது.

காலை பத்து மணிக்கு மேல் சம்பவம் செய்ய பரபரப்பாக கிளம்பியனை "ஏண்ணே செத்த நில்லு" என அழைத்து நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாள்.

"ஏய்.. தொழிலுக்கு கிளம்பும் போது கூப்பிடற அறிவில்ல. ஆமா நீ எதுக்கு இன்னும் இக்கட இருக்க, நான் போயிட்டு திரும்ப வரும் போது இடத்தை காலி செய்து இருக்கனும். இல்ல.." கண்கள் குரூரமாய் உருல ஒற்றை விரலை புருவம் இடையில் ஆட்டிப் பேசி சென்ற விதமே அவள் முதுகு தண்டை சில்லிட வைக்க, சரி இரவோடு இரவாக மச்சானிடம் பேசி அவனோடு சென்று விடலாம் என்று எண்ணி தான் வெங்கட் அறைக்கு தாவி சென்றது.

இரவு நெடுநேரம் ஆகியும் ருத்ரனும் வரவில்லை அவன் கூட்டாளிகளும் இல்லை என்ற தெம்பில், பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மெதுவாக வெளியே வர, சர்ரென ருத்ரனின் கார் அவன் வீட்டு முன்னால் நின்றதில் பயந்து போனாள் காவேரி.

பொதுவாகவே காவேரி தைரியமான பெண் தான் யாரையும் கண்டு அஞ்சி நடுங்கும் ரகம் இல்லை. ஆனால் இன்று வரிசையாக நடந்த சம்பவத்தில் மனம் உடைந்து இருந்தவள் கவனம் இல்லாமல் சத்தத்தில் திடுக்கிட்டு விட்டாள் அவ்வளவே!

"ஏய்.. இன்னும் போகலையா நீ. என்ன வீட்ல ஆளில்லனு தெரிஞ்சதும் கைக்கு கிடைச்சத திருடிட்டு போக காத்திருந்தியா" கடுமையாக கேட்ட வார்த்தையில் கோவம் புசுபுசுவென வந்து விட்டது.

"இங்க பாருண்ணே நீயி நெனைக்கிற மாறி ந்நா ஒன்னியும் திருடி கிடையாது, ஒரு வேல சோறா இருந்தாலும் மானத்தோட ஒழச்சி யாருகிட்டயும் கையேந்தாம திங்க சொல்லி என் தாத்தா எனக்கு கத்துக் குடுத்துட்டுதே செத்து போயிருக்கு. அதுக்காண்டியே ராத்திரி நேரோ ரவசுருட்டிக்க எடம் இருந்தா போதுன்னு இங்கன இருந்தேனே தவிர உன் வூட்டு சோத்துல ஒரு பருக்கைய கூட எடுத்து நாக்குல வைக்கல. எத்தனையோ அவமானத்தை சந்திச்சிட்டேன் அதுல இதுவும் ஒன்னா நெனச்சி கடந்து போறேன். நேத்திக்கு எனக்கு உதவி பண்ணதுக்கு ரொம்ப நன்றி, ந்நா போறேண்ணே"

கன்னம் தாண்டிய கண்ணீரை விரக்தியாக புறங்கைகொண்டு துடைத்தபடி ருத்ரனின் வீட்டை விட்டு வெளியேறி சென்றவளை தடுக்காமல் நின்றவன், கைமுஷ்டி கோவத்தில் புடைத்தது. இதுவரை யாரும் அவனிடம் இத்தனை நீண்ட நேரம் நேருக்கு நேராய் நின்று வாய் பேச்சி பேசியதே இல்லை. அப்படி இருக்க எங்கிருந்தோ வந்த ஒருத்தி தன்னை எதிர்த்து பேசிவிட்டு உயிரோடு செல்வதா, ஆத்திரத்தில் இடுப்பில் சொருகி இருந்த துப்பாக்கியை எடுத்து அவளின் பின்மண்டையை குறி வைக்க, "அண்ணையா.." என மீண்டும் பதறி வந்து தடுத்தது மதன் தான்.

"உன்னால தான் டா நேத்தே அவள போடாம விட்டேன் இப்பவும் தடுக்குற நீ, முதல்ல நீ போய் சேரு" ஆத்திரத்துல் இருந்தவன் நொடியில் ட்ரிகரை அழுத்தி இருந்தான்.

பீரிட்டு வெளியேறிய ரத்தம் கண்டு ருத்ரன் மர்மமாய் புன்னகைக்க, கண்கள் சொருகிய நிலையில் மெதுமெதுவாய் கண்ணைத் திறந்து பார்த்த மதன் அதிர்ந்து போனான். அவன் காலடியில் குருதி ஆறாக பாய ஒரே தாவில் தள்ளி நின்று கீழே பிணமாய் கிடந்தவனை பார்த்தான்.

"அண்ணையா இவன், போன வாரம் சம்பவம் பண்ண எஸ்டேட் ஓனரோட மச்சான் தானே. இவன் எதுக்கு இங்க வந்தான்" ஏற்கனவே பதட்டத்தில் இருந்தவன் யோசிக்க மறந்து கேள்வி கேட்ட மதன் பேச்சி ருத்ரன் பார்த்த பார்வையில் நின்று போனது.

"பணம் காய்ச்ச மரத்தை வெட்டி சாச்சதுக்கு, மரத்த வெட்டினவன பதுங்கி இருந்து வெட்ட வந்திருக்கான் தூக்கி ஓரம் போடு. இவன் வந்து நடுவுல பலியானதால நீ தப்பிச்ச" மதனை நக்கலாக கண்டு உள்ளே செல்ல, எச்சில் விழுங்கியவன் மற்றொரு ஆளை ஏவி விட்டு காவேரியை தேடி ஓடினான்.

"ஏ.. அம்மாயி கொஞ்சோ நில்லு.." காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு நாலு தெரு தாண்டி நடந்தவளின் முன்னால் மூச்சிறைக்க நின்ற மதனை கண்கள் சுருக்கிப் பார்த்தாள் அவள்.

"என்னய்யா, எதுக்கு எம்பின்னால வர. ஒங்க வூட்டல இருந்து ஒண்ணுத்தையும் தூக்கியாறல வேணுன்னா மூடைய கூட பிரிச்சிப் பாரு" தான் எதையாவது தூக்கி வந்துவிட்டேன் என்று தன்னை சோதனை செய்ய தான் வந்துருக்கிறானோ என்ற கோபத்தில் மூட்டையை அவசரமாகப் பிரிக்கப் போனவளை தடுத்திருந்தான்.

"இந்த நைட் நேரத்துல நீ எங்க போற அம்மாயி. போதா குறைக்கு அண்ணையாவ வேற எதிர்த்து பேசிட்டு வர. ஏதோ அது கொஞ்சோ நல்ல மூட்ல இருந்ததால தப்பிச்ச, சரி சரி பேச நேரோ இல்ல எங்கூட வா." எந்த பெண்ணிடமும் தோன்றாத முதல் ஈர்ப்பு அல்லவா அத்தனை எளிதில் எப்படியோ போகட்டும் என விட முடியாமல், தற்சமயம் அவளை பாதுகாக்க நினைக்கிறான் மதன்.

"இல்ல இல்ல ந்நா வரல. அப்டி ஒன்னியும் மானத்த உட்டுப்போட்டு திரும்ப அந்த வூட்டுக்கு வரணும்னு எனக்கு அவசியம் இல்ல. அப்டி ஒனக்கு ஏதாவது உதவி பண்ணனும்னு தோணுச்சுன்னா என்னைய என் ஊருக்கு போவ பஸ் ஏத்திவுடு, பூரா மொழியும் ஜாங்கிரியாட்டு சுத்தி சுத்தி இருக்கு ஒன்னியும் புரிய மாட்டுது."

புலம்பிக் கொண்டே வரும் போகும் பேருந்தை உற்று உற்றுப் பார்த்தவளைக் கண்டு பெருமூச்சு விட்டான்.

"இங்க பாரு அம்மாயி இப்டி நைட் நேரத்துல வயித்துல குழந்தையோட நீ எங்க போய் தனியா கஷ்டப்படுவ. சொல்றத கேளு இன்னைக்கு ஒரு நைட் எங்க அண்ணையா வீட்ல இரு உன் மச்சானும் அங்க தானே இருக்கான், அவங்க வீட்ல உன்ன ஏத்துக்குற வரைக்கும் நானே உனக்கு ஒரு நல்ல இடமா பாத்து தங்க வைக்கிறேன்"

மாற்றான் தோட்டத்து மல்லிகை என உணர்ந்தும் அவளின் நிலை அறிந்து இதுவரை யாரிடமும் தன்மையாக பேசி பழக்கம் இல்லாதவன் தன் இயல்பை மீறி அவளிடம் கனிந்து பேச,

"என் வயித்துல குழந்தையா!!" திருத்திருவென முழித்தவள் அது எதற்கும் விளக்கம் கொடுக்காமல் யோசனையாக நின்றாள். "எப்படியும் சொந்த ஊருக்கு சென்றால் எப்போது வேண்டுமானாலும் தன் பெண்மைக்கு பங்கம் ஏற்படலாம், வேறு ஊர் எதுவும் தெரியாது. மதனாவது வந்ததில் இருந்து தன்னிடம் தன்மையாக பேசுகிறான், இதோ தங்குவதற்கும் நல்ல இடமாக பார்த்து விடுகிறேன் என்கிறான். கையிலும் போதுமான அளவுக்கு மேல் பணம் இல்லை வேலையும் இல்லை. இங்கே இருந்தால் இவனிடம் கேட்டே பாதுகாப்பான வீடு ஏதாவது ஒன்றில் சமையல் வேலை பார்த்தாவது காலத்தை தள்ளி விடலாம். இன்று ஒரு இரவு தானே" என்று எண்ணியவள் அரைமனதாக ருத்ரன் வீட்டுக்கு வர சம்மதித்தாள்.

அதிகாலை நேரம், எப்போதும் போல் பெருமாள் பஜனையில் குழலியின் வீடு தெய்வீக கடாஷியத்தில் மிளிர, வழக்கமாக அவள் முகத்தில் குடிகொண்டிருக்கும் புன்னகை மறைந்து கடைமைக்கே வாசலைக் கூட்டிக் கொண்டு இருந்தவளை உன்னிப்பாக ஸ்கேன் செய்து விழுங்கிக் கொண்டிருந்தது ருத்ரவிழிகள்.

பளபளக்கும் எச்சில் இதழ்கள் எப்போதும் போல் அவன் கண்களை கவர, அவளின் முத்த சுவையில் நா ஊர தடித்த உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டவனாக, "சீக்கிரம் உன்ன மொத்தமா தூக்குறேன் குயிலு. தூக்கிட்டு வந்து வச்சி.." ஏதோ வில்லங்கமாக நினைத்தவன் கோணல் சிரிப்போடு அகன்றான்.

நன்றாக வெளிச்சம் பரவும் முன்பே தயாராகி வந்த காவேரி, மதன் முன்பு தான் நின்றாள். தன்னை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க சொல்லி.

இரவு அவளிடம் சொன்னது போலவே தற்சமயம் அவன் பாட்டி வீட்டில் தங்க வைக்கலாம் என்ற எண்ணத்தில் காவேரியை அழைத்துக் கொண்டு அவன் முன்னால் செல்ல, அவன் பின்னே தலை குனிந்தபடி செல்லும் காவேரியை, ஸ்டேஷன் செல்ல வெளிவந்த வெங்கட் பார்த்து குழம்பி நின்றான்.

"யாரு இவன்? அவன் பின்னாடி எதுக்கு இவ போறா. நானே இவளை பாக்கணும்னுதா அவசர அவரசமா கிளம்பி ஓடி வரேன் அதுக்குள்ள இவளுக்கு என்ன அவசரம். எதாவது செஞ்சி என் உயிர வாங்குறா கட்டச்சி"

உள்ளுக்குள் குமைந்தவன், பார்த்தசாரதி எப்போதோ ஆலயம் சென்றிருக்க, பரிமளம் வருகிறாரா இல்லையா என்று சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தவன், மதன் கார் கதவை திறந்து விட அதில் ஏறப் போன காவேரியின் வயிற்றில் மின்னல் வேகத்தில் கை கொடுத்து தூக்கி சுழற்றியவன் பைக்கின் பின்னே அமர வைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்விடம் விட்டு பறந்திருந்தான்.

நொடி பொழுதில் நடந்த செயலில் திகைத்துப் போன மதனின் மண்டை ருத்ரன் தூக்கி எறிந்த கனமான பெல்ட்ப்பட்டு புடைத்துப் போக, "இன்னும் அக்கட யாருக்கு டா விளக்கு புடிச்சிட்டு நிக்குற" ருத்ரங்கனின் கர்ஜனையில் தெறித்து ஓடினான் மதன்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 16
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top