• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் - 17

"குழலி உன்ன உன் தோப்பனார் எப்ப கோவிலுக்கு வர சொன்னார், இன்னும் பொறப்படாம என்ன பண்ணிட்ருக்க." என்றபடி பரிமளம் அவள் அறைக்கு வர, படுக்கையில் குப்பற படுத்துக் கிடந்தவள் அசையாமல் இருந்தாள்.

"என்ன டி பொம்பள புள்ள இந்நேரம் ஆகியும் படுத்துக் கிடக்குற, எந்திரிச்சி கோவிலுக்கு போ அங்க உன் தோப்பனார் மட்டும் தனியா லோல் பட்டுட்டுருப்பார்" படுக்கையில் இருந்த போர்வையை மடித்து வைத்தபடி அவளை எழுப்பிட, "நான் போகலம்மா. எனக்கு தலைவலிக்கிறது கொஞ்ச நாழி என்ன படுக்க விடு. இல்ல படுக்க கூட நேக்கு இந்த ஆத்துல உரிமை இல்லனா சொல்லிடுங்கோ, இங்கிருந்து போற வரைக்கும் நீங்க என்னென்ன சொல்றேளோ தட்டாம செஞ்சுட்றேன்"

அன்று தாய் தந்தை பேசிய தாக்கம் இன்னும் குறையாமல் நெஞ்சில் தகிக்க, அப்படியே தாயிடம் வெளிபடுத்தியவளை சற்றே கவலையாக நோக்கினார் பரிமளம்.

"ஏன்டி கழுத, இன்னும் நீ அதை மறக்கலையா. அந்த பொண்ணு திடீர்னு ஆத்துக்கு வந்து பண்ண கொளறுபடியால ஏதோ கோவத்துல பேசிட்டோம், அத மனசுல வச்சிண்டு கோவிச்சா அம்மாக்கு வருத்தமா இருக்காதா சொல்லு." அவள் தலையை எடுத்து மடியில் வைத்து கன்னம் பிடித்துக் கொஞ்ச அப்போதும் சமாதானம் ஆகவில்லை.

"அப்டி வருத்தப்படரவா, பேசுறதுக்கு முன்னாடியே யோசிச்சி பேசி இருக்கனும். ஏன் எனக்கு மட்டும் வருத்தமா இருக்காதா! என்ன இருந்தாலும் மனசுல உள்ளது தானே வார்த்தையா வெளிய வரும்."

குழலியின் வார்த்தையில் சுருக்கென உள்ளம் தைக்க,
"அச்சோ குழலிமா நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல டா. நேக்கும் உன் தோப்பனார்க்கும் உன்னையும் உன் அண்ணனையும் விட்டா வேற யார் இருக்கா சொல்லு. நீங்க ரெண்டு பேரும் வேற என்ன ஆசைப்பட்டாலும் நிறைஞ்ச மனசா இதுவரைக்கும் நாங்க ஏத்துக்கிட்டது இல்லையா! நம்ம குடும்ப ஆச்சாரம் கெட்டுடும்னு இந்த காதல் மாத்திரம் வேண்டாங்குறோம். இதுவே நம்ம கிருஷ்ணா மாப்பிளை போல ஒரே கோத்ரமா இருந்தா நாங்க என்ன வேண்டான்னா சொல்லப் போறோம்."

அப்போதும் குளம் கோத்திரம் என்றே பேசும் தாயை இனியும் உக்காந்து பேசி திருத்த முடியாது என்று நினைத்த குழலிக்கு, நேற்று இரவு தாகம் எடுக்கவே தண்ணீர் அருந்த வந்தபோது ஏதோ நிழல் உருவம் தெரியவே அதை பின் தொடந்தவளுக்கு உறுதியாக தெரிந்து விட்டது வெங்கட்டும் காவேரியை விரும்புவது.

அப்படி இருக்க, பெற்றவர்கள் இப்படி பிடிகொடுக்காமல் பேசுவது அண்ணனை நினைத்து மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும், எதையும் வெங்கட் சமாளித்து பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையோடு கோவிலுக்கு புறப்பட்டாள்.

பெருமாள் ஆலையம், மாத ஏகாதசி வழிபாடு சிறப்பாக நடந்துக் கொண்டிருக்க, சுவாமியை தரிசித்த பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டு பிரசாதம் வாங்க முட்டிமோதியது.

"லைன்ல ஒவ்வொருத்தரா இடிச்சிக்காம வாங்கோ. எல்லாருக்கும் வயிறு நிறைய பிரசாதம் உண்டு" குழலியின் யாழிசை குரல் அநியாயத்துக்கும் கொஞ்சினால் கூட்டம் அடங்குமா!

மேலும் முட்டிமோதிக் கொண்டு விழுந்தவர்களை சமாளிக்க கோவில் நிர்வாகிகள் வந்து ஒவ்வொருவராக வரிசையில் அனுப்பி விட்டனர். முதலில் கொடுக்கத் தொடங்கிய பெரிய சைஸ் அண்டா புளியோதரை காலி ஆனதும் வேறொரு நிர்வாகியை அடுத்த பிரசாதம் வழங்க நிறுத்தி விட்டு குழலி தன் தந்தைக்கு உதவியாக சென்று விட்டாள்.

"குழலிமா துளசி தீர்த்தம் காலியாகிடுத்து, முருகன் சன்னிதானத்துல ஒரு சொம்பு எடுத்து வச்சேன் போய் எடுத்துட்டு வா" பார்த்தசாரதி சொல்லிட, "சரிப்பா" என்றவளாக தாவணி காற்றில் ஆட ஓடியவள் லேசாக இருட்டி இருந்த சுவாமி சன்னிதானத்தில் தீர்த்தம் எங்குள்ளது என உன்னிப்பாக தேடிக் கொண்டிருந்த நேரம் காற்று வீசும் வேகத்தில் கதவடைத்து கொள்ள, வெளிய பக்தக்கூட்டத்தின் நடுவே திடீரென ஏற்பட்ட அலறல் சத்தம் எதுவும் அவளுக்கு கேட்காமல் போனது.

"ஏம்பா என்னாச்சி எதுக்காக எல்லாரும் இவ்ளோ கூச்சல் போட்டு அங்கஇங்க தெறிச்சி ஓட்றா." ஒன்றும் புரியாத பார்த்தசாரதி குழப்பமானார்.

"எதுவும் சொல்றதுக்கு நேரோ இல்ல ஐயரே, சீக்கிரம் எங்கயாவது போய் ஒளிஞ்சிக்கோங்க, அப்டி இல்லனா இங்க என்ன நடந்தாலும் கண்டுக்காம இருந்திடுங்க, மீறி ஏதாவது ரியாக்ட் பண்ணீங்க உங்களுக்கு தான் பிரச்சனை" என்றபடி ஒருவன் ஓடிவிட, மேலும் குழம்பி கோவிலின் வாசர்படிக்கு வெளியே வந்த பெருத்த அலறல் குரலில் வேகமாக சென்று அங்கு பார்த்த காட்சியில், கண்கள் தெறித்து விழுவதை போல் அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார் பார்த்தசாரதி.

"வாடா என் கெலுப்ப எனக்கே தண்ணி காட்டிட்டு தப்பிக்க பாக்குறியா.." ருத்ரனின் நடுங்க வைக்கும் ஆங்காரக் குரலில் அங்குள்ள மக்கள் கூட்டம் அஞ்சி நடுங்கி பின்னால் நகர்ந்திட, தரை தவழும் கருப்பு வேட்டியை குதித்து ஒற்றைக் காலால் எக்கித் தூக்கிக் கட்டியபடி கையில் துப்பாக்கியுடன் பாய்ந்து வந்தவனை பார்த்து பார்த்தசாரதி திகைத்து நின்ற வேலையில்,

"ரங்கா விட்ரு ரங்கா.. உன் கூட இருந்தே உன்ன போலீஸ்ல காட்டி குடுக்க நினைச்சது பெரிய தப்புதா, எனக்கு பொண்டாட்டி குழந்தை குட்டினு ஏகப்பட்ட பொறுப்பு இருக்கு, என்ன விட்டா அவங்களுக்கு யாருமே இல்ல ப்ளீஸ் ரங்கா எந்த ஒரு தப்பும் பண்ணாத அவங்களுக்காகவாது என்ன மன்னிச்சி விட்ரு, காலத்துக்கும் உன் காலடில விசுவாசியா இருப்பேன்"

அவன் கூட இருந்த ஆட்களில் ஒருவன் உயிர் பிச்சைக் கேட்டு கெஞ்சிக் கொண்டிருக்க, மனம் இறங்கி மன்னிப்பு வழங்கி விட்டு போக அவன் என்ன சாதாரண மனிதனா! மனித உயிரை குடித்து உயிர் வாழும் கொடிய சாத்தானில் ஒருவன்.

தன் கூட்டத்திற்குள்ளே ஒரு கருப்பாடு பீஸ் போட ஆவலாக காத்திருந்திருக்குறது என தெரிந்தால் சும்மா இருப்பானா!

வாய் பேச்சிக்கு இடமே இல்லை பொட் பொட் பொட் என அடுத்தடுத்த தோட்டாக்கள் தொடர்ந்து நெற்றிப் பொட்டை துளைத்துக் கொண்டு மறுபக்கம் சென்றதை கண்டு ராட்சச சிரிப்பை உதிர்த்தவன்,

"விசுவாசியா.. என்னைக்கு என் கூடவே இருந்து என் முதுகையே பதம் பார்க்க துணிஞ்சியோ அன்னைக்கே அந்த தகுதிய நீ இழந்துட்ட, இப்போ போய் நீ அல்பாய்ஸ்ல சேரு உன் பொண்டாட்டியும் புள்ளையும் எப்டியோ நாசமா போகட்டும்" மீண்டும் இறந்தவன் நெஞ்சிக் குழியில் ஒரு தோட்டாவை இறக்கியவனாக, "டேய் மதனு ரொம்ப நாள் ஆச்சி டா இந்த இடத்துல சம்பவம் பண்ணி, போன முறை சம்பவம் பண்ணும் போது விபரம் புரியாம அந்த ஐயர் பொடலங்கா பைய ஓவரா எகிறிட்டு வந்து, கடைசில நல்லா வாங்கிக் கட்டிட்டு உயிர் பயத்துல ஊற விட்டே ஓடிட்டான். இன்னைக்கும் எவனாவது வருவான்னு பாத்தா ஒருத்தனையும் காணோமே, நம்மள பாத்து மிரண்டு போய்ட்டானுங்களா!"

நக்கலாக கேட்டவன் பார்வை, கூட்டத்தில் மத்தியில் அதிர்ச்சியில் நின்றிருந்த பார்த்தசாரதி மீது ஏலனமாய் படிந்தது.

"பாவி பாவி கொலைகாரா.. கிராதகா.. அசால்ட்டா புனித ஸ்தலத்துல வந்து ஒரு கொலைய செஞ்சிட்டு எப்டி நின்னுட்ருக்கான் பாரு. இவன் ஒரு கொலைகாரன்னு தெரியாம ஆத்துக்குள்ள வேற அழைசிண்டடு வந்துட்டாளே பரிமளம். பெருமாளே நீதான் இந்த கொடும்பாவிய தண்டிக்கணும்" அவர் நடுக்கமாக மனதில் நினைத்திருக்கும் போதே,

"அண்ணையா இதோ இந்த போலீஸ்க்காரன்தா இவனை விலைபேசி உன்ன பத்தி எல்லா ஆதாரத்தையும் கைப்பற்ற பாத்தது" உயிர் பயத்தில் முகம் செத்த நிலையில் இருந்த போலீஸ்காரன் ஒருவரை தரதரவென இழுத்து வந்து ருத்ரனின் காலடியில் விட்டெறிந்தான் மதன்.

அவனை பார்த்ததும் ருத்ரனின் முகம் மேலும் கடுமையில் சிவக்க, சுற்றியும் உள்ள மக்கள் கூட்டத்தைப் பார்வையால் அளந்தவன், முதுகின் பின்னிருந்த அருவாளை உருவி சதக் சதக்.. என அவன் கை காலை வெட்டி கூருப் போட்டுக் கொண்டே, "இங்க நடந்த சம்பவத்த பாத்தோமா போனோமானு இருந்தா யாருக்கும் எந்த பாதகமும் இல்ல. இவன்தா செஞ்சான்னு பெரிய ஹீரோ மாறி எவனாவது பொங்கிட்டு போய் சாட்சி சொன்னா, நாளைக்கு இதே நிலைமைதா உங்களுக்கும்"

சிங்கத்தின் கர்ஜனை குரலால் ஒவ்வொருவரின் இதயத்தையும் நடுங்கிட செய்திட, துளசி தீர்தம் கிட்டியதும் உள்ப்பக்கமாய் பூட்டிக் கொண்ட கதவை எப்படியோ அரும்பாடுபட்டு திறந்து கொண்டு வெளியே வந்த குழலி, கூட்டமாக சூழ்ந்திருந்த இடத்தை யோசனையாக பார்த்துக் கொண்டே தந்தையை சுற்றுமுற்றும் தேடியபடி கூட்டத்தை விளக்கிக் கொண்டு வந்த குழலியின் கரத்தைப் பிடித்திழுத்து அங்கு நடக்கும் எதையும் பார்க்காதவாறு அவள் தலையை தன் நெஞ்சில் அழுத்தமாய் புதைத்துக் கொண்ட பார்த்தசாரதியின் கண்கள் கலங்கி நெஞ்சம் படபடப்பாக அடித்துக் கொண்டது.

அவர் படபடப்பை உணர்ந்தே ஏதோ சரியில்லை என நினைத்த குழலி தலையை அசைக்க, "இந்த பாவத்தை உன் கண்ணால நீ பாக்கவேக் கூடாது குழந்த" மனதில் நினைத்தவறாக "குழலிமா வா இங்கிருந்து நம்ம போலாம்" என்றவர் அவள் முகத்தை விட்டுவிடாமல் நெஞ்சில் சாய்த்தபடியே அவளை அழைத்துக் கொண்டு அவசரமாக வெளியேற முயற்ச்சிக்கும் வேலையில், கால்கள் தடுமாறி குழலியை சற்றே விட்டு விடவும்

"அப்பா.." என பதட்டமாக பிடிக்க முயலும் போது ஏதார்த்தமாக பின்னால் திரும்பி பார்த்த குழலியின் கண்கள் பேரதிர்ச்சியில் விரிந்த அதே நேரம் ருத்ரனும் அவளை பார்த்து பச்சக்கென கண்ணடித்தவன் அருவாளை ஓங்கி ஒரே போடு அந்த போலீஸ்க்காரன் நெஞ்சில், உதிரம் ருத்ரன் முகம் முழுக்க தெறித்து அந்த நொடியே அவன் உயிர் பிரிய, ஆக்.. என வாய் பொத்தி அதிர்ந்த குழலி மயங்கி சரிந்தாள்.

** ** **

"யோவ்.. யோவ்.. எங்கைய்யா என்னைய தூக்கிட்டு போற. மரியாதையா எறக்கி உடு எனக்காக அங்கன அவைய (மதன்) காத்திருப்பாக" பைக்கின் பின்னே அடங்காமல் கத்திக் கூச்சலிட்டபடி வந்தவளை சைட் மிர்ரர் வழியே கண்டு பற்களைக் கடித்தான் வெங்கட்.

"ஏய்.. இப்ப மட்டும் நீ அமைதியா வரல அப்டியே ஓடற வண்டில இருந்து தள்ளி விட்டு போயிட்டே இருப்பேன்" அடிக்குரலில் சீறியவனுக்கு மதனை பற்றி அவள் கவலையாக பேசியது ஏனோ கொஞ்சமும் பிடித்தம் இல்லை.

"ரொம்ப சந்தோசோ தாராளமா தள்ளி உட்டு கொல்லுங்க, யாருக்கும் பாரம் இல்லாம நிம்மதியா செத்து தொலைஞ்சி போறேன்" என்றவளின் கண்கள் சட்டென கலங்கிப் போனது.

"ஏய் கட்டச்சி, இப்ப எதுக்கு அழுது சீன் கிரியேட் பண்ற. ஆமா அவன் யாரு? அவங்கூட எங்க பொறப்பட்டு போக வந்த" மதனை பற்றி அறிந்துகொள்ள இந்த கேள்வி.

"நம்பி வந்தவள நடுத்தெருவுல நிறுத்தாம பாதுகாக்க நினைச்சவக, போதுமா.." வெடுக்கென வந்த பதிலில் முகம் கருத்துப் போனான்.

"ஓஹோ.. ஒரே நாள் ராத்திரில சார் உனக்கு அவ்வளவு பாதுகாப்பு கொடுத்துட்டாரா. மேடம் அப்டியே அவனை விட்டுக் கொடுக்காம புகழ்றீங்க" தன்னவளை தான் முன்நின்று பாதுக்க வழி இல்லாமல் போனதே என்ற ஆதங்கம் தாலாது, வார்த்தையில் நக்கல் கூட்டி மீண்டும் அவளை வதைத்தான் தற்போது இருக்கும் சூழ்நிலையை கையாளத் தெரியாது.

இப்போது காவேரியின் முகம் கருத்துப் போக, பதிலேதும் சொல்லாமல் சாலையை வெறித்த வன்னம் இருந்தவளை மீண்டும் சைட் மிர்ரர் வழியே கண்டு, காலியாக இருந்த ஒருவழி சாலையில் வண்டியை ஓரம்க் கட்டினான்.

வண்டியை விட்டு இறங்கியதும் அங்கிருந்து செல்லப் போனவளின் கரம் பிடித்து அவளை போக விடாமல் தடுத்தவனை சீரான பார்வையால் ஏறிட்டுப் பார்த்தவளை பார்க்க முடியாமல் சில கணம் தடுமாறின அவன் விழிகள்.

"என்ன டி கேட்டதுக்கு பதில் சொல்லாம போற" ஒரு மார்க்கமாக அவளை தன்ப்பக்கம் இழுக்க அவன் மீது மோதிடாமல் சுதாகரித்து தள்ளி சென்றவளை கண்டு ஆத்திரம் பொங்கியது.

"எதுக்கு சாரு என்னைய இங்கன இழுத்துட்டு வந்த. என்ன இருந்தாலும் இவ யாரும் இல்லாத அனாத புள்ள தானே நம்ம என்ன செஞ்சாலும் பேசுனாலும் பொறுத்துக்கிட்டு நாய்மாறி நம்ம கால சுத்தி தானே வருவானு இப்டிலாம் பண்றியா." சலனமில்லா வார்த்தையால் கூரு போட்டாள் அவனை.

நேற்று வரை அவன் என்ன சொன்னாலும் எரிந்து விழுந்தாலும் மச்சா மச்சா என ஏலம் விட்டுக் கொண்டு அவன் மீது வந்து விழுந்தவள், அவனது ஒற்றை அவசொல்லால் மனம் மறுத்து அடிப்பட்டுப் போனதில் அவன் செயலை ஏற்றுக்கொள்ள முடியாமல், இனி யார் துணையுமின்றி தனியாக வாழ்ந்தாலும் தன்மானத்தோடு வாழ்ந்துக் கொள்ளலாம் என்ற தீர்மானம் கொண்டு விலகி செல்ல முடிவெடுத்து விட்டாள்.

"அப்டியே ஓங்கி விட்டேன்னு வையி, ஒரே அடிலே சமாதியாகிடுவ. என்ன டி அனாதை அது இதுன்னு பேசிட்ருக்க அதான் உன் தாத்தா உனக்காக இருக்காருல்ல அப்புறம் என்ன இதுக்கு சிம்பத்தியா பேசி இர்ரிடேட் பண்ற" அவன் சொன்ன போது குத்தாத வார்த்தை அவள் சொல்லும் போது இதயம் துடித்து, நான் இருக்கிறேன் உனக்காக என்று சொல்லி அவளை சமாதானம் செய்யத்தெரியாத முட்டாள், அவளின் தாத்தா தவறிய செய்தி அறியாமல் போனான்.

"மச்.. நம்ம ரெண்டு பேத்துக்குள்ள இனிமே ஒன்னியும் இல்ல பொறவு எதுக்கு வீணான பேச்சி. கைய உடு சாரு நானு போவணும். எனக்காக அவைய காத்திருப்பாக" மீண்டும் மதனை பற்றிப் பேசி இவனை உதாசீனம் செய்ததில் கோவம் உச்சி தொட்டது.

"ஏய்.. யாரு டி அவன் உனக்காக காத்திருக்க, ஒரே நைட்ல அப்டி என்னத்தக் காட்டி அவன் பக்கம் உன்ன இந்த அளவுக்கு இழுத்து வச்சிருக்கான், நீயும் அவன் மேல மயங்கி போயிருக்க" ஆடவனின் மதி இழந்த வார்த்தையில் உயிர் வரை துடித்துப் போனாள் காவேரி.

"இதுக்கு மேல ஒரு வார்த்த பேசுனாலும் அம்புட்டுதே சொல்லிப்புட்ட. ஏதோ நானா உம்பின்னாடி வெக்கங்கெட்டு திரிஞ்ச பாவத்துக்கு இதெல்லாத்தையும் அனுபவிக்கணும்னு என் தலையில எழுதி இருக்கு. அதுக்காக தொடர்ச்சியா என் ஒழுக்கத்த கலங்கப்படுத்துற மாறியே பேசிட்டு இருந்த, வாயக் கிழிச்சிப்புடுவ பாத்துக்கோ" கரத்தை உருவிக் கொண்டு விரல் நீட்டி பெண் சிங்கமாக உருமியவளை கண்டு ஆடிப்போன மாக்கான் புத்திக்கு அப்போது தான் உரைத்தது அவன் பேசிய வார்த்தையின் வீரியம் என்ன என்பதைப் பற்றி.

ஷட்.. என தலையில் குத்திக் கொண்டவனாக, "இங்க பாரு ஒழுங்கா ஊரப் பாத்து கிளம்பு. இங்க இருந்து தேவை இல்லாத பிரச்சனைகளை உண்டு பண்ணாத. அதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது" ரோபோவாக பேசியவனை முதல் முறையாக எரிச்சலாக பார்த்த காவேரிக்கு, 'போயும் போயும் இப்படி ஒருவன் மீதா தனக்கு ஆசை வந்தது' என எண்ணி தன்னையே நொந்து போனாள்.

"நீயி உன் நல்லத மட்டு பாரு சாரு. என் நல்லத எனக்கு பாத்துக்க தெரியும். இனிமே என்னால ஒனக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. கவலபடாம போ நீயி சொன்னாலும் சொல்லலைனாலும் நானு இங்கிருந்து போவதே போறேன்" திடமாக உரைத்த காவேரியை அழுத்தமாய் பார்த்தவன்.

"வா நானே உன்ன பஸ் ஏத்தி விடுறேன்" மனதை கல்லாக்கிக் கொண்டு அவள் கரம்ப் பற்றப் போக, சட்டென கரத்தை பின் இழுத்துக் கொண்டவளாக. "இம்புட்டு தூரோ யார் தயவும் இல்லாம தனியா வந்தவளுக்கு, திரும்ப போகவும் தெரியும் சாரு. நீய போயி ஒங்க வேலைய மட்டும் கவனிங்க" அவன் முகத்தை ஏரெடுத்தும் பாராமல் விருவிருவென அங்கிருந்து சென்று விட்டாள்.

போகும் அவள் முதுகையே வெறித்த வெங்கட்டின் மனம் நிலைஇல்லாமல் தவித்துப் போனது.

அவளின் ஆசையான மச்சா என்ற அழைப்பு மாறி வார்த்தைக்கு வார்த்தை அந்நியன் போல் சாரு என்ற அழைப்பு வேறு நெருடலை ஏற்படுத்த, தன் வீட்டின் சூழ்நிலைக்காக தேவை இல்லாமல் இவளை வதைத்து விட்டோமோ என்ற எண்ணமே அவன் நிம்மதியை குலைய செய்தது.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 17
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top