• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

அத்தியாயம் 25

Administrator
Staff member
Messages
309
Reaction score
251
Points
63
அத்தியாயம் - 25

“நேத்ரா.." என பாசத்தோடு அவளை ஒவ்வொரு முறையும் நெருங்கும் குணவதியை அனல் பார்வை வீசி அவளிடம் நெருங்காதவாறு தள்ளி வைக்கும் மகளை கண்டு முகம் தொங்கிய நிலையில் வேதனையாக தனித்து விடப்பட்டவரை அங்கு உள்ள அனைவரும் கண்டும் காணாமலும் இருந்தாலும், ஏனோ அவரின் சோர்ந்த முகம் கண்டு வருத்தமாகிப் போனது.

மருத்துவமனையில் தான் அப்படி என்றால் டிஸ்சார்ஜ் ஆனபோதும் கூட நரேனோடு வந்தவரை ஏதோ புழுவை பார்ப்பது போல் பிடிக்காத முகபாவனை காட்டி அவரை சிறிதும் கண்டுகொள்ளவில்லை அவள். மகளின் உதாசீனத்தில் மனம் ரணமாய் வதை பட்டாலும், இப்போதெல்லாம் பட்டும் படாமலும் மறைமுகமாக காட்டும் மகனின் கரிசனத்தில் உள்ளம் பூரித்துப் போன மனம் மகள் சொன்ன வார்த்தைதனில் மீண்டும் வாடிப் போனது.

“அண்ணா எதுக்கு இவங்கள சும்மா கூட கூட்டிட்டு சுத்திட்டு இருக்க, வீட்ல ஒரு மூலையா இருந்தாங்களே அப்டி இருக்க முடியாதாமா அவங்களால. ஊர் சுத்த சொகுசு கேக்குதா இந்த வயசுல," எரிச்சலோடு அவர் செவியில் கேட்க வேண்டும்” என்றே சத்தமாக சொன்னவளை அர்த்தமாக கண்டவன்.

"எனக்கு கூட தான் நீ ராமை ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கிட்டது சுத்தமா பிடிக்கல, அதை விட நான் கூப்பிட்ட போது நம்ம வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லி பிடிவாதம் பண்ண. இதெல்லாம் நான் சாதாரணமா எடுத்துகிட்ட மாதிரி இவங்கள நான் கூட கூட்டிட்டு வரர்த எல்லாம் சாதாரணமா எடுத்துக்கோ. அனாவசியமா ஏன் எதுக்குனு கேள்வி கேக்குற வேலை வச்சிக்காத, மீறி கேட்டா நீயும் பல கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வரும்." மௌன மொழியாக அவளிடம் மட்டும் சொல்லிட, மூச்சி வாங்க அவனை முறைத்தவள் ராமின் அருகினில் அமர்ந்துக் கொண்டாள்.

வீட்டுக்கு வந்தவர்களை உபசரிக்கும் விதமாக தேநீருடன் சுடசுட நெய் மணக்கும் இனிப்பு பணியாரத்தை பீங்கான் தட்டில் வைத்து கொடுக்கவும், நரேன் வேண்டா வெறுப்பாக எடுத்துக் கொண்டான். தயக்காம அமர்ந்திருந்த குணவதியை புன்னகையுடன் ஏறிட்ட பனி. "எடுத்துக்கோங்க ம்மா" என்றிட. நரேனை பார்த்தவர் அவன் டீயை ருசித்தபடி ராமை முறைப்பதில் குறியாக இருப்பதை கண்டு பனி கொடுத்த பண்டத்தை சிறு மென்னகையோடு எடுத்துக் கொண்டார்.

நேத்ராவும் டீயை எடுக்க வர, "இல்ல நேத்ரா நீ இத குடிக்கக் கூடாது, உனக்கு அத்தை பாதம் போட்டு பால் எடுத்துட்டு வருவாங்க" என்றவளை சலிப்போடு முகம் சுளித்துக் கொண்டாள்.

“வந்ததில் இருந்து நரேன் ராமை முறைப்பதும் ராம் நரேனை முறைப்பதும்” என்று மாறி மாறி இருவரும் முறைத்துக் கொண்டு எதிரெதிரில் அமர்ந்திருந்தனர், ராமுக்கு இந்தபுறம் நேத்ராவும் அந்தபுறம் வர்மனும் என நரேன் பக்கத்தில் குணவதியும். மருத்துவமனை விட்டு வந்ததில் இருந்தே இந்த முறைக்கும் கூத்து தான் அங்கு நடந்துக் கொண்டு இருக்கிறது.

இது போதாதென நேத்ரா வேறு அவனை உரசி உரசியே நெருங்கி மடியில் அமர்ந்துக் கொள்ளாத குறையாக கடுப்படிக்க அதற்கு மேலும் பொருக்க முடியாத ராம், “இந்தா வர்மா இவன புடி நான் ரூம்க்கு போறேன்” என்று மடியில் வைத்திருந்த யுவதேவை அவன் கையில் கொடுத்து விட்டு எழுந்தவனை தடுத்திருந்தான் நரேன். "ஹெலோ.. மச்சான் சார் எழுந்து போறேனா என்ன அர்த்தம், நாங்க இங்க வந்திருக்குறது பிடிக்காம உதாசீன படுத்துறீங்களா என்ன?" நக்கல் தொனியில் வேண்டுமென்றே வெறுப்பேற்றினான்.

குணவதியின் கலக்கமான முகத்திற்காக தான் ஒவ்வொரு முறையும் நரேன் அவனை வெறுப்பேற்றும் போதெல்லாம் அமைதியாக பொறுத்துக் கொண்டு இருப்பது, ஆனபின்னும் மேலும் மேலும் இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டு இருப்பது சரியல்ல என்று தான் செல்ல நினைத்தான் அதற்கும் விடாமல் அவனை வம்புக்கு இழுக்கும் நரேனை முறைத்தவன் "இங்க தான் இத்தனை பேர் இருக்காங்கலே, அதிலும் உங்க பாசமலர் கூட பிறந்த தங்கச்சி இருக்கா இதுக்கு மேல என்ன சார் வேணும். எனக்கு பர்சனல் வர்க் இருக்கு முடிச்சிட்டு வரேன்" அவ்வளவு தான் என்பது போல் அங்கு நிற்காமல் தனதறைக்கு சென்றவன் பின்னாலே நேத்ராவும் வால் பிடித்து சென்று விட்டாள் அவன் பிபியை எகிற வைப்பதற்காகவே.

ராம் சென்றதும் சட்டென எழுந்து கொண்ட நரேன். கூர்மையாக அவனையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்த வர்மனை ஒரு பார்வை பார்த்து விட்டு விருவிருவென வெளியேறியவனை பின் தொடரும் முன், "தம்பி நேத்ராவ நல்லா பாத்துக்கோங்கபா. இதோட இங்க வருவேனா இல்லையானு தெரியாது அதுக்கு முன்னாடி எம்மனல பட்டத சொல்லிடறேன்." என்றவரை மரியாதையோடு நோக்கினான் வர்மன்.

"பண செழிப்புல அவங்க அப்பாகிட்ட செல்லமா வளந்த புள்ளைக்கு பொறுமையும் மரியாதையும் கத்துக் கொடுக்காம விட்டாச்சு. வாய் துடுப்பா மனசுல பட்டத இடம் பொருள் தெரியாம பேசிடுவாளே தவிர்த்து யாருக்கும் எந்த தீங்கும் பண்ணதில்ல பண்ணவும் மாட்டா. ராம் தம்பிய ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ற அளவுக்கு போயிருக்கானா ஒன்னு அந்த தம்பிய அவ மனசார விரும்பி இருக்கனும், இல்லனா வேற எதுவும் வலுவான காரணம் இருக்கனும். அதை தவிர்த்து அந்த தம்பிக்கோ உங்க குடும்பத்துக்கோ வேற எந்த கெட்டதும் நிச்சயமா பண்ண மாட்டா தம்பி. என் புள்ளைங்க வேணும்னா என்ன புரிஞ்சிக்காம போகலாம், ஆனா எனக்கு அவங்கள பத்தி முழுசா தெரியாதுனாலும் அவங்க மனசப்பத்தி நல்லா தெரியும். நான் சொன்னதை ராம் தம்பிகிட்டயும் எடுத்து சொல்லி நேத்ரா என்ன சொல்ல வரான்னு கேட்டுட்டு அதன்பிறகு ஒரு நல்ல முடிவா எடுக்க சொல்லுங்க. நான் வரேன் தம்பி" என கண்ணீரை முந்தானையால் ஒத்தி எடுத்துக் கொண்டு அவசரமாக திரும்பிட, அங்கு இறுகிய முகபாவனையில் பாக்கெட்டில் கை விட்டபடி நரேன் நின்றிருப்பதை கண்டு தலை குனிந்து கொண்டார்.

கார் சாவியை மறந்து விட்டு சென்றவன் போன வேகத்தில் மீண்டும் உள்ளே வருகையில் குணவதி வர்மனிடம் பேசிய அனைத்தையும் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டவனாக அவரை ஆழமாக பார்த்தப்படி சாவியை எடுத்துக் கொண்டு திரும்பி சென்றிடவும், வர்மன், பனி, பத்மா என மூவரை கண்டும் சிறு புன்னகையோடு தலையசைத்தவராக, "இன்னொரு முறை இங்க வர வாய்ப்பு கிடைச்சா பாக்கலாம்மா” என்றவர் விடைபெற்று சென்றார்.

“ஏய்.. அங்க தான் அவ்ளோ இடம் இருக்குதுல்ல எதுக்கு என்ன உரசிக்கிட்டு உக்காந்து சும்மா கடுப்ப கிளப்புற”. குளித்து வந்தவன் தலையை துவட்டியபடி மெத்தையில் அமர்ந்தது தான் தாமதம் இடைவிடாது உரசி அவன் பொறுமையை மிகவும் சோதித்தாள் நேத்ரா.

"என் புருஷன நான் உரசி உக்காராம வேற யார் உக்காருவாங்கலாம். என் மில்கி பாய் எவ்ளோ க்யூட் அண்ட் ஸாஃப்ட் அதுவும் குளிச்சிட்டு பிரெஷா அவ்ளோ அழகு பையனா இருக்கியே ராம், விட்டா உம்மேல அப்டியே பாஞ்சி உன்ன என்னென்னவோ பண்ணனும்னு தோணுதே டா." கிறக்க மொழியில் அவன் மீதிருந்து வந்த சோப்பின் நறுமணத்தை வாசம் பிடித்தவளாக, ஆடவனின் வழுவழுத்து மின்னிய திடகாத்திரமான புஜத்தை தாங்கிய தோள்ப்பட்டையில் சிறு சிறு துளிகளாக நீர் திரண்டு நின்ற இடங்களில் மெல்லிய இதழ்களால் அழுத்தம் கூட்டி உறிஞ்சி குட்டி குட்டி இச்சிகள் வைத்தாள்.

அவளின் திடிர் செயலில் தேகத்தில் பலவிதமான அதிர்வுகள் ஏற்பட்டு சட்டென அவளை உதறி விட்டு எழுந்தவன் அக்னி பார்வையால் பொசிக்கி, "உனக்கு அவ்ளோ தான் மரியாதை உடம்பு சரிஇல்லையேனு நீ பண்றதை எல்லாம் பொறுத்துகிட்டு ரொம்ப அமைதியா போறேன். என் பொறுமைய சோதிக்காத நேத்ரா எனக்கு வர ஆத்திரத்துக்குஊ.. பொண்ணாடி நீயெல்லாம்" என பற்களை கடித்தவனை ரசனை கொஞ்சும் விழிகளால் கண்டாள் அவள்.

"இந்த ஆத்திரத்துக்கு பதிலா எம்மேல ஆசை வருதுனு சொன்னா எவ்ளோ நல்லா இருக்கும்" என ஏக்கப் பெருமூச்சு விட்டவளாக "ப்ளீஸ் ராம் அப்டி ஒரு வார்த்தைய நான் உங்கள விட்டு நிரந்தரமா போறதுகுள்ள ஒருமுறையாவது சொல்லிடுங்க." மனதில் விரக்தியாக நினைத்துக் கொண்டு உடலை ஒரு மார்க்கமாக வளைத்து, "நான் பொண்ணா இல்லையானு இப்டியே நின்னு பாத்தா தெரிஞ்சிடுமா என்ன? ம்..னு ஒரு வார்த்தை சொல்லுங்க நான் பொண்ணு தான்னு உங்களுக்கு தெள்ளத் தெளிவா நிரூபிச்சி காட்டுறேன்," விஷமமாக கண்ணடித்தவள் அவன் முறைத்து தள்ளும் பார்வை புறம் தள்ளி, அவன் எதிர்பாராத நொடி சட்டென அவன் கரம் பிடித்து இழுத்து மெத்தையில் தள்ளி அவனோடு மெத்தையில் சரிந்த ராங்கி பெண்ணின் அட்டகாசத்தில் திகைத்து விழித்தான் மில்கி பாய்.

“ஏய்.. கொஞ்சம் விட்டா என்ன டி பண்ற ஒழுங்கா எம்மேல இருந்து தள்ளி போய்டு, நானா தள்ளி விட்டா சேதாரம் உனக்கு தான்”. சரியாக காயங்கள் ஆறாமல் இருக்கவே அவளை லேசாக தொட்டு தள்ள கூட முடியவில்லை அவனால், “எங்காவது அவனையும் மீறி அழுத்தம் கொடுத்து விட்டால் எங்கே அவளுக்கு வலிக்கப் போகிறதோ” என்ற கழிவிரக்கத்தில்.

"உங்க மூலமா எனக்கு என்ன சேதாரம் ஆனா எனக்கு சந்தோஷம் தானே ராம்." ஈரம் காயாத சிகையில் விரல் நுழைத்து நெஞ்சும் நெஞ்சும் பாரபட்சமின்றி மோதிக் கொள்ள இருவரது மூச்சிக் காற்றும் ஒன்றோடு ஒன்று கலக்கும் தூரம் ஆண்முகமும் பெண்முகமும் நெருங்கி இதழுக்கும் இதழுக்கும் நூலளவு உள்ள இடைவேளையில் துடித்து, சந்தன நிறத்துடைய ஆணழகனை விழுங்கும் பார்வை பார்த்தாள்.

“மச்.. ஒழுங்கா கீழ இறங்கு நேத்ரா நீ பண்றது எதுவும் சரி இல்ல. மரியாதையா உன் அண்ணன வரவழச்சி அவர் கூட உன் வீட்டுக்கு கிளம்பி போயிடு அதுதான் எல்லார்க்கும் நல்லது." எங்கே இதழ் மோதி பிரளயம் ஏற்பட்டு விடுமோ என்ற பதட்டத்தில் திக்கி திணறியவனாக பின்னந்தலையை அழுத்தமாக மெத்தையில் புதைத்துக் கொண்டே சென்றான் அவன்.

'எப்பவும் டெரரா என்கிட்ட பேசுற கோவக்கார மில்கி ஒரு அழகன்னா, எனக்கு பயந்து வார்த்தை வராம தடுமாறுற இந்த மில்கி அதை விட பேரழகன். வர வர உன்ன எனக்கு ரொம்ப பிடிக்க தொடங்குதே டா ஏன்? செல்லக் கொஞ்சலோடு சிகையில் நுழைந்த கரம் இதமாக அலைமோத கண் சொக்க அவன் இதழ் பற்றி தடித்த சிவந்த இதழ்களை சுவைத்தவளின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்து போயின.

“ஹஹஹா..ஹா... நெஞ்சை பதற வைக்கும் கொடிய சிரிப்பு சத்தம் அறையெங்கும் எதிரொலிக்க ராம் தலையில் இருந்து உதிரம் வழிந்து சிகை கோதிய மென்க்கரம் குருதியில் நனைந்துப் போனதில், அடி வயிறு அதிர ராம்ம்ம்..” என்று பெருங்கூச்சலிட்டு இதயம் நின்று போகும் அளவிற்கு கத்தியிருந்தாள் கண்ணில் ஈரம் சொட்ட.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 25
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top