• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
அத்தியாயம் - 29

"ஹலோ சொல்லு ம்மா.. இப்ப அப்பாக்கு உடம்பு எப்டி இருக்கு. டாக்டர் என்ன சொன்னார் ஆத்துக்கு அழைச்சிண்டு போக சொல்லிட்டாளா"

ஸ்டேஷன் சென்றுகொண்டிருந்த போது பாதி வழியில் பரிமளம் போன் செய்து இருக்க, ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினான் வெங்கட்.

"இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையா தான் அப்பாவை பாத்துக்கனுமாம், எண்ணெய் பொருள் எதுவும் கொடுக்கக் கூடாதுனு டாக்டர் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டா. கூடவே நாளைக்கு அப்பாவ டிஸ்சார்ஜ் பண்ணிக்கவும் சொல்லிட்டா. நீ இல்லாத குறைய கூடமாட இருந்து அந்த ஜெய் தம்பி தான் லோல் பட்டுட்டு இருக்கு வெங்கட்டா" என்றவரின் குரல் தோய்ந்து வந்தது.

"அம்மா வருத்தப்படாத அப்பா சீக்கிரத்துல பழைய மாறி குணமாகிடுவா" என்றான் ஆறுதலாக.

"அப்டி குணமானா நேக்கு சந்தோஷம் தான். ஆனா குழலி என்னானானு தெரியாம எப்டிபா நிம்மதியா இருக்க முடியும். வயசு பொண்ணு எதாவது சிக்கக்கூடாத இடத்துல சிக்கி இருந்தா என்ன பண்றது" கலக்கமாக சொல்ல அதே கலக்கம் அவனுக்கும் உண்டே!

"அம்மா அப்டிலாம் எதுவும் தேனுக்கு ஆகி இருக்காது. நானும் அவளை தேடி தான் நிறைய இன்வெஸ்டிகேட் செஞ்சிட்ருக்கேன். தேனுவ தூக்கினவன் மட்டும் யாருனு தெரியட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு" பற்களை கடித்தபடி கோபமாக சொன்னவன், அவருக்கு நம்பிக்கையாக சில வார்த்தைகள் பேசிவிட்டு போனை கட் செய்து ஸ்டேஷன் நோக்கி விரைந்தான்.

குழலியை பற்றிய தேடுதல் ஒருபுறம் சென்றாலும், அப்போது திரட்டிய ருத்ரனின் ஆதாரத்தை மீண்டும் கவனமாக தானே சேகரித்து இங்கு நடக்கும் கொலைகளுக்கு யார் சொந்தக்காரனோ அவனுக்கு தக்க தண்டனை கொடுக்கவேண்டும் என்ற உறுதியோடு தீவிர விசாரணையிலும் இறங்கி இருந்தான் வெங்கட்.

வெங்கட் மீண்டும் தன்னை பற்றிய ஆதாரங்களை தேடத் துவங்கி விட்டதை அறிந்துக்கொண்ட ருத்ரனின் உதட்டில் எள்ளல் சிரிப்பு தோன்றி மறைந்தது.

"அடேய் பவுடர் பையா, நீ எத்தனை முறை எனக்கெதிரா ஆதாரத்தை திரட்டினாலும் அதை அடுத்த நிமிஷமே ஒன்னும் இல்லாம என்னால ஆக்க முடியும். இந்த முறை நானே உனக்கொரு சான்ஸ் தரேன். நான்தான் நடந்த அத்தனை கொலைக்கும் குற்றவாளினு என் ஆளுங்களை மீறி எப்படியாவது நீ கண்டுபிடி, பாப்போம் உனக்கு எவ்ளோ கட்ஸ் இருக்குனு"

ஆங்காரமாய் மனதில் நினைத்து மீசைக்குள் நகைத்த ருத்ரங்கன் தன்னையே குறுகுறுவென பார்க்கும் குழலியை கண்டுகொள்ளாது சம்பவத்திற்கு கிளம்பி சென்றிட, சோர்ந்து போய் அமர்ந்தாள் அவள்.

விருப்பமின்றி தாலிகட்டி தன்னை கடத்தி வந்து வைத்திருப்பவனிடம் இலகி பேச மனம் ஒப்பவில்லை. அவனது கொலைவெறி தாண்டவம் ஆடும் முகத்தை நேரில் பார்த்தவாளாயிற்றே, எங்கே கோபப்பட்டு ஏதாவது ஏடாகூடமாக வார்த்தையை விட்டால் கோபத்தில் ஏதாவது செய்து விடுவானோ என்ற அச்சம் அளவுக்கு அதிகமாக உள்ளது.

இறப்பை பற்றி கூட கவலை இல்லை. எங்கே தன் குடும்பத்தை பாராமல் தனக்கு எதுவும் நடந்துவிடுமோ என்ற கவலை தான்.

ஆனாலும் இவன் ஆடும் கொலையாட்டம் எதற்கு? அப்படி என்ன ஒரு உயிரை கொல்வதன் மூலம் கிடைக்கப் போகிறது, பாவத்தை தவிர.

அவனிடம் பேசவே பிடித்தம் இல்லை இதில் எப்படி இவனிடம் பாவ புண்ணியத்தை பற்றி எல்லாம் எடுத்துக்கூறி இவையெல்லாம் நிறுத்த வைப்பது ஒன்றுமே புரியவில்லை.

அன்று ஒரு வார்த்தை தவறாக சொன்னதில் இருந்தே குழலியிடம் அவன் பேசவோ அவளை நெருங்கவோ துளியும் முனையவில்லை அவன். அவ்வளவு ஏன் சின்னப் பார்வை கூட இல்லை.

எப்போது சம்பவங்களை பிக்ஸ் செய்து வைத்திருக்கிறானோ அந்நேரம் போவான், இதுதான் நேரம் என்றெல்லாம் இல்லை. பலதை காத்திருந்து தான் முடிக்கவேண்டும். எந்நேரம் ஆனாலும் தொட்ட காரியத்தை முடித்துவிட்டு ரத்தவாடையோடு வருபவன் குளித்து முடித்து, அவன் அறையில் குழலி என்ற ஒருவள் இருக்கிறாள் என்பதையே மறந்தவன் போல் மதுபோத்திலுடன் பால்கனியில் கடைப்பரப்பி விடுவான்.

வீட்டிலும் உணவு உண்பதில்லை, சில நாட்களாக குழலி சமைக்கத் தொடங்கி விட்டாள் என்ற காரணத்தால்.

முதலில் எல்லாம் அவன் ஒதுக்கத்தை பெரிதாக எண்ணாதவள், இப்போதெல்லாம் ஒருமாதிரி உள்ளம் சோர்ந்து போகிறாள் காரணம் உணர்ந்தும் உணராமலும்.

ஆரம்பத்தில் தான் எப்படி அழுது முரண்டு பிடித்தாலும், குயிலுஊ.. குயிலுஊ.. என தன் காதில் இருந்து ரத்தம் வரும் அளவிற்கு தன்னை அழைத்துக்கொண்டே தன் மடியில் மயக்கத்தில் கிடைப்பவன், சிறிது நாட்களாக கடைக்கண் பார்வை கூட தன் மீது வீசாமல் ஒதுங்கிப் போவதன் அர்த்தம், தாம் அன்றைக்கு பேசிய வார்த்தை தான் காரணம் என்று புரியாமல் இல்லை.

தான் பேசியது தவறென்றால், கட்டிவயவளை பணத்திற்காக கொல்வேன் என்றதும் தவறு தானே.

"இவா என்கிட்ட நடந்துக்குற விதத்தை எல்லாம் பாத்தா, என்னவோ நானே இந்தாள் தான் வேணும்னு தவமா தவமிருந்து என் குடும்பத்தையே தூக்கி எறிஞ்சிட்டு இங்க வந்து உக்காந்து இருக்க மாதிரில்ல இருக்கு.

சரியான சாடிஸ்ட்.. மத்தவா உணர்வுகளை கொஞ்சம் கூட புரிஞ்சிக்கத் தெரியாத ரத்தவெறி பிடிச்ச மிருகம். இங்கிருந்து எதிர்க்க இருக்க என் ஆத்துக்கு கூட போக முடியலை ஆட்கள் போட்டு சிறை வச்சிருக்கா. இந்த ஆத்துல ஆச்சாரமே இல்லை.

வெட்டு குத்து கொலை எல்லாம் இவா பாட்டுக்கு தனியா செஞ்சி டைம்பாஸ் பண்ண வேண்டியது தானே எதுக்கு சம்மந்தமே இல்லாம என்னை வேற இங்க தூக்கிட்டு வந்து வச்சிருக்கணும்.

தான் இப்டி இருக்க ஏதாவது வேலிட் ரீசன் சொன்னா கூட, அப்டியானு மனசை தேத்திக்கலாம். ஆனா ஜாலிக்காகவும் பணத்துக்காகவும் கொலை பண்றேன்னு சொன்னா யாருக்கு தான் கோவம் வராது. ஒரு மனுஷாலோட உயிர் என்ன இவாக்கு பொழுதுபோக்கு பூங்காவா. போர் அடிக்குதுனு கொன்னு விளையாட.

இதையெல்லாம் தப்புன்னு சொன்னா கோவம். பாவம் சொன்னா உளறல். அப்பப்பா.. இவா கூட ஒரே மெண்டல் டார்ச்சரா இருக்கு"

தனியாக அமர்ந்திருக்கும் வேளையில் அவனை நினைத்து வாய் விட்டே புலம்பிக் கொண்டிருக்கும் மனக்குமுறல் இவையெல்லாம்.

"வரட்டும் இன்னைக்கு முடிவா என்ன தான் சொல்றான்னு கேப்போம். இல்ல நான் இப்டி தான் இருப்பேன் நீ யாரு டி என்ன கேக்கனு எகத்தாளம் பேசினா, பயப்படாம என் ஆத்துக்கு போறேன்னு ஒத்தக்காலுல நிப்போம்"

மனதில் சூலூரைத்துக்கொண்டு அவள் காத்திருக்கும் போதே கதவை திறந்துகொண்டு அசராத நடையுடன் ரத்தம் வேங்கையென உள்ளே வந்தவனை கண்டபின் எடுத்த சபதமெல்லாம் எங்கே ஓடி மறைந்து கொண்டதோ.

தவறு செய்து முழிப்பதை போல முகம் வியர்த்து விக்கித்து நின்றவளை தாண்டி குளியலறையில் அவன் புகுந்துகொள்ள,

"ஐயோ பகவானே.. அசால்ட்டா கொலைகளை செஞ்சிட்டு இப்டி கொஞ்சம் கூட பயமே இல்லாம ஆத்துக்குள்ள ஒவ்வொரு முறையும் வராளே, இவாக்கு போலீஸ் கேஸ் கோர்ட் நினைச்சி எதுவும் பயமில்லையா.

நாளைக்கே இவா பண்ற தப்பையெல்லாம் போலீஸ் கண்டுபிடிச்சி வந்தா.. இவா என்ன பண்ணுவா .."

கலக்கமாக நினைத்திருக்கும் போதே தலையில் ஈரம் சொட்ட சொட்ட இடுப்பில் துண்டுடன் வந்தவன் ஒரு கருப்பு வேஷ்டியை காப்போர்டில் இருந்து சதக்கென உருவி இடுப்பில் கட்டியவனாக, தலையைக் கூட துவட்டாமல் அப்படியே அறையில் இருந்து வெளியே செல்ல எத்தனிக்க,

"ஒரு நிமிஷம் நில்லுங்கோ.." அவசரமாக ஓடிவந்து அவன் முன் நின்றாள் குழலி.

வார்த்தை பேசாது கடும் பார்வையாலே ஏன் அழைத்தாய் என்பது போல் புருவம் நெரித்தவனின் முகத்தில் முன்பு போல் குழலிக்கான கனிவு துளியும் இல்லை.

"உங்ககூட பேசணும்" தெளிவாக பேச எண்ணி சற்றே தடுமாறிய குரலை எப்டியோ மேனேஜ் செய்து கூறி விட்டாள். ஆனால் எதிர்பக்கத்தில் இருந்து தான் பதில் இல்லை.

"உங்ககிட்ட தான் சொன்னேன், காதுல விழுந்துதோனோ. சத்த அப்டி வரேளா உக்காந்து பேசுவோம்"

அவன் நிற்கும் தொனியே சண்டைக்கு நிற்பவன் போல் ஆங்காரமாய் இருக்க, அதே பொசிஷனில் ஒரு அறை விட்டால் மூளை தெறித்து விட்டாலும் ஆச்சிரியம் இல்லை.

"எனக்கு உங்கிட்ட பேச ஒன்னும் இல்ல" அவளிடமாவது ஓரளவு முன்பு கனிந்து வந்த குரல் மீண்டும் குத்திக்கிழிக்கும் முற்ச்செடியாக மாறிவிட்டது.

"ம்க்கும்.. ஆரம்பமே அசத்தலா இருக்கு. இந்த லட்சணத்துல எங்கிருந்து நான் ஒத்தக் காலுல நிக்க" சலிப்பாக நினைத்தாலும் இன்று இவனை விடக்கூடாது என்ற முடிவில் இருந்தாள்.

"நீங்கோ என்கிட்ட எதுவும் பேச வேண்டா நான் பேசுறத காது கொடுத்து கேளுங்கோ அது போதும். என்ன பாக்குறேள் வாங்கோ"

தானும் சலைக்காது அதட்டலாக பேசி சென்று மெத்தையின் ஒரு முனையில் வெடுக்கென அமர, சற்றும் முகம் மாறாது அதே தொனியில் ஈரத்துடன் மேனி அதிர நடந்து வந்து அவளுக்கு மறுமுனையில் அமர்ந்தான் ருத்ரன்.

"முதல்ல தலைய துவட்டுங்கோ" ஆங்கரில் தொங்கிய துண்டை எக்கி எடுத்து அவன் மீது போட, அவன் பார்த்த பார்வையில் நடுநெஞ்சில் உருண்டு விளையாடியது பயப்பந்து.

"இங்க பாருங்கோ.. இன்னைக்கு என் மனசுல உள்ளதை எல்லாம் உங்ககிட்ட நேரடியா தெளிவா பேசி முடிச்சிட்றேன். கோவப்படாம எம்பக்கம் இருக்க நியாயத்தை புரிஞ்சிகிக்கிட்டு அதன்படி நடக்க ட்ரை பண்ணுங்கோ. அதை விட்டு கோபப்பட்டு பாதிலே எழுந்து போற வேலையெல்லாம் வேண்டாம். நான் ஆரம்பத்துலே சொல்லிடறேன்"

மூச்சிவிடாமல் வாய்ப்பாடு போல் ஒப்பித்தவளை, புருவம் ஏற்றி ஒருவித நக்கல் பார்வை பார்த்தவனுக்கு தெரியாதா, மிஞ்சிமிஞ்சி போனால் இவள் என்ன பேசுவாள் என்று.

இருந்தும் அப்படி என்ன புதிதாக பேசப் போகிறாள் என்ற எண்ணத்துடன், கங்குபார்வை மாறாது அவளை தீர்க்கமாய் பார்க்க, எச்சில் விழுங்கினாள் அந்த பழுப்பு விழிகளில் ஓடிய சிகப்பை கண்டு.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 29
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
46
Reaction score
36
Points
18
Yammmaa kuyilu ne onnu pesa poi Avan onnu sevullayevitra poran...oru pakka speaker poachuna avlotha ... Avane semmma kaandula irukan neta volunteer vah poi thalaiya kudukatha.... Sukka poatruvan... Neyum romba over ah pesi vachuruka... So paathu nadandhuka illana avlotha... Agara setharathuku writer ji porupu agamatanga.... Anthamma romance thookalabnaalu ud kuduthutu poiduvanga paathuka...😜😜😜
 
Top