• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் - 3

"அம்மா நான் கோவிலுக்குப் போய்ட்டு வந்துட்றேன்" மரூன் நிற சுடிதாரில் இருபக்கமும் பின் குத்திய துப்பட்டாவை சரி செய்தபடி தோள்ப் பையை மாட்டிக் கொண்டு வந்த குழலியை கண்டு முகம் சுழித்தாள் பரிமளம்.

"ஏன் டி எத்தனை முறை சொல்றது. கண்ணாலம் கட்டிக்கப் போற பொண்ணு லட்சணமா புடவைக் கட்டிப் பழகுனு. ஆத்துல இருக்கும் போது தான் உன் அண்ணன்காரன் சட்டையும் தாவணியும் கட்டிக்கிறேன்னு பாத்தா, கோவிலுக்கு போகும் போதும் இந்த சோல்னா பையை எடுத்து மாட்டிக்கிட்டா நன்னாவா இருக்கு." முகத்தை அஷ்டகோணலாக்க குழலியின் முகமும் அதே போல் தான் கோணலானது.

"ஏம்மா எப்பபாரு புடவை புடவைனு ஏலம் போட்டுட்ருக்கேள். நேக்கு வெளிய போகும் போது இதுதான் கம்ஃபோர்ட்டபிளா இருக்கு. நோக்கு பிடிக்கலைன்னா கண்ண மூடிக்கோ. நான் போய்ட்டு வரேன்" தோள்ப் பையை அழுத்திப் பிடித்துக் கொண்டு வாசல் வந்தவளாக, டைட் லெகின்ஸ்க்கு ஏற்றவாறு மீடியம் சைஸ் ஹீல்ஸ் செருப்பை காலில் மாட்டியவளை முறைத்து நின்றாள் பரிமளம்.

"நன்னா வாய வளத்து வச்சூண்டுருக்க, போற ஆத்துல இப்படியெல்லாம் வாயாடி வச்சுடாத டி. அவா எல்லாம் நம்மள விட பொறுமையும் ஆச்சாரமும் உள்ள குடும்பம்" என்றதும் பெருமூச்சு விட்டாள் தேன்குழலி.

"அம்மா அவாளே இவ்ளோ கண்டிஷன்ஸ் போடலை. அதிலும் நான் கட்டிக்கப் போறவா என்ன பேசவே மாட்டேன்ற இன்னும் ஸ்ட்ரோங்கா பேசுன்றார், ஆனா நீதான் என்ன வாயாடினு சொல்ற. இதெல்லாம் நன்னா இல்லைப் பாத்துக்கோ" என்றாள் அலுப்பாக.

"ம்க்கும்.. உனக்கும் உன் அண்ணனுக்கும் நல்லது சொன்னா புடிக்காதே! ஆகாஷத்த பாரு 6 மணிக்கே வெயில் நன்னா கொளுத்துது இதுல போனா கருத்து போய்டுவ, மயக்கம் வரும். இந்தா டி இந்த குடைய விரிச்சி பிடிஷிண்டு பத்திரமா போய்ட்டு வா.
ஸ்கூட்டிய எப்போ கொண்டு வந்து தருவானோ. அதுவரைக்கும் இந்த அக்னி வெயில்ல கால்க்கடுக்க நடந்து தான் போகணும் போல. இந்தா தண்ணி பாட்டல் தண்ணிய குடிசூண்டே இரு தொண்டைய காயப் போடாதே. புது இடம் புது மனுஷால் யாரோடவும் நம்பி லேசுல பழகாதே குழலி"

மம்மியின் இடைவிடாத அட்வைஸில் சரிம்மா.. சரிம்மா.. என மண்டையாட்டிக் கொண்டே பாவமாக உள்ளே எட்டிப் பார்க்க, அங்கவஸ்திரத்தை (நீண்ட மேல் துண்டு) இருப்பக்கமும் போர்த்தினார் போல் தோளில்ப் போட்டுக் கொண்டு, "என்ன ம்மா கிளிம்பியாச்சா" என்றபடி குடுமி ஆட மெதுவாக நடந்து வந்தார் பார்த்தசாரதி.

"ம்ம்.. சீக்கிரம் வாங்கோப்பா. நான் என்னவோ தனியா போற மாதிரி இந்த அம்மா ஓவர் அட்வைஸ் செஞ்சு காத்தாலையே காதுல ப்ளட்டு வர வச்சுட்டா. இன்னும் சத்த நாழி இங்க நின்னாலும் அவ்வளவு தான்" குனிந்து தந்தையின் காதில் கிசுகிசுக்க தலை சாய்த்து ஒட்டுக் கேக்க முயன்ற பரிமளத்தைக் கண்டு கமுக்கமாக சிரித்துக் கொண்டனர் இருவரும்.

"என்ன ரகசியம் அப்பாவுக்கு மகளுக்கும்" என்றார் இழுவையாக.

"அதான் நீயே ரகசியம்னு சொல்லிட்டியே இதுக்கு மேல வெளிய சொன்னா அது நன்னா இருக்காது. சரி நீ பாத்து இரு பரிமளோ, முதல் நாள் பெருமாளை பாத்து சேவிச்சிட்டு குழந்தைய பத்திரமா கூட்டியாந்துட்றேன்" என்றவராக மகளோடு பேசிக் கொண்டு தெருவில் நடக்க, பர்புல் நிறத்தில் பூப் போட்டக் குடையில் குழலி மறைந்து போனாள்.

அதுவரை அவளின் பின்ப்பக்கமும் குயில் போல் கீச்சிட்ட குயிலின் கீச்சி சத்தமும் கேட்டுக் கொண்டு மொட்டை மாடியில் நின்று புஜங்கள் திமிர தம்புல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த ருத்ரங்கனுக்கு இம்முறையும் கானகுயிலின் முகம் பார்க்க முடியாமல் ஏமாற்றமாக போனாலும் அவளை தேடி சென்று வலுகட்டாயமாக பார்க்கும் அளவிற்கு எல்லாம் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை அவன்.

என்னவோ குயிலின் தித்திக்கும் பேச்சைக் கேட்டதிலிருந்து அந்த குரலில் ஒருவிதமான ஈர்ப்பு. குழலிசை இனிது யாழிசை இனிது என்றதற்கு எடுத்துக்காட்டாய் ராககீதமாய் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றும் அளவுக்கு அத்தனை இனிது தேன்குழலியின் குரல். அதற்காக அந்த குரலுக்கு அடிமை சாசனமா எழுதிக் கொடுக்க முடியும், 'தாமாக ஒரு பெண்ணை பார்க்க அலைந்து கொண்டு ஓடுவதா? நெவர்..' ஈகோ தலைதூக்க, பெரிதாக பெண்கள் மேல் எல்லாம் விருப்பம் இல்லாதவன் குழலியின் நினைவை அப்படியே விட்டுவிட்டு சம்பவத்திற்கு தயாராக சென்றான் ருத்ரங்கன். (அவள் குரலுக்கு மட்டுமல்ல மொத்தமாக தேன்குழலியின் பாதத்தில் அவனே அடிமையாகப் போவது அறியாதவனாக)

ஒரு காலத்தில் பிரபலமான வெங்கடாஜலபதித் திருக்கோவில். கடந்த ஐந்து வருடங்களாக புரோகிதர்கள் யவருமின்றி பக்த்தர்களின் பக்தியால் மட்டுமே பூஜைப்புனஸ்காரமெல்லாம் பெருமாளுக்கு நடைபெற்று வருகிறது அங்கு. அதுவும் நேர்த்தியாக அல்ல, பக்த்தர்களுக்கு தெரிந்ததை செய்து செல்வர். அவ்வூரை சேர்ந்த எந்த குருக்களும் அக்கோவிலின் பொறுப்பை தைரியமாக ஏற்று நடத்த முன் வர மாட்டார்கள். வெளியூரில் இருந்தும் இதுவரை பத்து குருக்களுக்கு மேல் வந்தாயிற்று, வந்த வேகத்தில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விட்டது தான் மிச்சம்.

ஏனெனில் அங்கு அடிக்கடி நடக்கும் கொடூர சம்பவங்கள் அப்படி. அது தெரிந்த உள்ளூர் மக்கள் கூட கோவிலுக்கு வருவது அரிது தான். முக்கால் வாசி எந்த விபரங்களும் அறியாத வெளியூர் ஜனங்கள் மட்டுமே அங்கு வந்து செல்வது வழக்கம். பார்த்தசாரதி இப்போது அக்கோவிலின் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும், அந்த கோவிலின் நிர்வாகிகளின் எண்ணங்களில், இவரும் பத்தோடு பதினொன்றாக தான் ஓடப் போகிறார் என்ற ஏலனம் வந்து போகாமல் இல்லை.

தந்தைக்கு உதவியாகவும் பெருமாளை மனதார பிராத்திக்க வேண்டியும் அவரோடு வந்திருந்தாள் குழலி. மகளோடு கோவில்ப் படியை மிதித்த பார்த்தசாரதியின் உடல் சிலிர்த்துப் கண்களை மூடி ஓர் நிமிடம் அசையாமல் நிலைத்தப் பார்வையோடு உடல் வியர்வையில் குளித்து விறைத்து போய் நின்றவரை கண்டு அச்சம் படர, அப்பாஆ.. என அவர் தோள் உளுக்கி பதட்டமாகினாள் குழலி.

நாராயணா.. தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டு வணங்கியவராக, "இதோ வந்துட்டேன் நாராயணா.. உன்ன சேவிக்கவே எடுத்த பிறவி இதுனு உன் சன்னிதானத்துல கால வச்சதும் உணர்த்திட்டியே.. இது போதும்.. இது போதும் ஸ்சாமி.. என் ஜென்மம் பூரணம் அடைஞ்சிடுத்து.." கடவுளை உணர்ந்த நொடி உணர்ச்சிவசம் கொண்ட தந்தையை பலமுறை இப்படி பார்த்து பழக்கம் இருப்பினும், திடீரென்ற அந்த உடல் விறைப்பு அச்சத்தை உண்டு செய்வது இயல்பு தானே.

முதலில் பெருமாளின் திருவடியில் விழுந்து சரணாகதி அடைந்தவர், நிருவாகிகளை சந்திக்க வேண்டுமென்பதையே மறந்தவறாக, வந்ததும் வராததுமாக திருமாலின் பக்திக் பாடல்களை ஒலிக்க விட்டு, மகளின் துணையோடு கோவிலை கூட்டி சுத்தம் செய்து கழுவி விட்டார். பெரிய பெரிய ரங்கோலிக் கோலங்கள் அச்சில் போட்டது போல் குழலியின் கைவண்ணத்தில் வட்ட வட்டமாக கண்களை பறிக்க, வண்ண பூமாலைகள் ஒவ்வொரு சுவாமிக்கும் நெருக்கமாக தொடுத்து வைத்தாள்.

தந்தையைப் போல் தான் மகளும், பெருமாள் என்றால் அத்தனை பிரியம், பக்தி. பள்ளிப் படிக்கும் காலத்தில் இருந்தே காலை 5 முதல் 6 மணி வரை மாலை பள்ளி வந்ததும் டியூசன் போகும் வரை ரங்கநாதனுக்கு சேவகம் செய்ய எங்கிருந்தாலும் ஓடி வந்து விடுவாள். விடுமுறை நாளானால் கையோடு அவளின் தமையனையும் இழுத்து வந்து விடுவாள். விஷேச நாட்களில் குடும்பம் மொத்தமும் திருமாலின் சன்னதியில் ஆஜர் ஆகி விடுவர்.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், பஞ்சாமிர்தம் பிசைதல், தீர்த்தம் கொடுத்தல், தந்தை இல்லாத போது அண்ணனும் தங்கையும் அர்ச்சகராக மாறி சுவாமிக்கு ஆராதனை காட்டுதல், ஆலயத்தை சுற்றி வந்து அங்கு பக்தர்கள் அழைத்து வரும் பிள்ளைகளோடு விளையாடுதல் என்று குழந்தையில் இருந்து அவள் அதிகம் பார்த்து வளர்ந்த இடம் பெருமாளின் சன்னதியே!!

அதுவே கல்லூரி தொடங்கி, இப்போது 25 வயது பருவ மங்கையாகியும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கணிதவியல் பிரிவை தேர்ந்தெடுத்து படித்து பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் கணக்கு வழக்குகளை சரியாக வழங்கும் ஆடிட்டராக பணிபுரிந்துக் கொண்டிருந்தவள், அண்ணன் வெளியூரில் வேலை மாற்றம் செய்ததில் அப்பாவை போலவே தனது வேலையை தியாகம் செய்து விட்டு அண்ணன் தான் முதலில் என்று அவன் கை பிடித்து வந்த செல்ல தங்கை அவள்.

விருப்பங்கள் நிறைவேற சுத்த நீரால் இறைவனை குளிப்பாட்டி,
சுகம் தர வாசனை எண்ணெய் மற்றும் தேனால் அபிஷேகம் செய்து,
பாவத்தைப் போக்க பஞ்சகவ்யம் அபிஷேகம்.
செழிப்பை அளிக்க பஞ்சாமிர்தம் அபிஷேகம்.
மோஷம் கிட்ட நெய் அபிஷேகம்.
வாழ்நாள் வளர்ச்சிக்கு பால் அபிஷேகம்.
மக்கட் செல்வம் பெற தயிர் அபிஷேகம். பயிர் செழிக்க வாழைப்பழ அபிஷேகம். கடனற்ற ஆரோக்கியம் கிட்ட மாப்பொடி அபிஷேகம்.
மண்ணுக்கு சீர் சேர்க்க, கோபம் போக்க, ஒழுக்கத்திற்கு, மரணப்பயம் நீங்க, மாம்பழம், மாதுளை, நாரத்தை, எலுமிச்சை அபிஷேகம்.
பகை கலைய சக்கரை,
இன்பங்கள் நல்க இளநீர்,
நாடாளும் வாய்ப்புக்கு அன்னாபிஷேகம்.

லஷ்மி காடாசியம் சேர்க்க சந்தனக் குழம்பு அபிஷேகம் என முறையான அபிஷேகங்களால் பெருமாளை குளிர்வித்து,
குங்குமம் மஞ்சள் விபூதி துளசி மாலை, பாதிரிப்பூ, தாமரை மலர்களால் அலங்கரித்து தீபராதனைக் காட்டியபடி வெங்கடாஜலபதியின் நாமங்களை நேர்த்தியாக உச்சரித்து அவர் திருமாலைப் போற்றிய விதத்தைக் கண்டு, அவரை நேரில் சந்திக்க வந்த நிர்வாகிகளே அசந்து மெய்மறந்து கை கூப்பி நின்று விட்டனர்.

"அட.. அட.. அட.. என்ன ஒரு பக்தி என்ன ஒரு நாமம். அர்ச்சகரே இத்தனை நாளா நீங்க எங்கே இருந்தீங்க. தம்பி உங்களை பத்தி சொல்லும் போது கூட நம்பிக்கை இல்லாம தான் சரினு சம்மதிச்சோம். ஆனா நேர்ல வந்து நீங்க பண்ற பூஜை, புனஸ்காரங்களை பாத்த பிறகு தான் தெரிஞ்சிக்க முடிஞ்சிது, உங்கள விட இந்த எம்பெருமானை சேவிக்க யாராலும் முடியாதுனு" என்ற மூத்த நிர்வாகி பூரித்துப் போனார்.

"என் அப்பன் பெருமாளை சேவிக்க நேக்கு என்ன கஷ்டம். என் கடைசி மூச்சி என் உடல்ல இருக்க வரைக்கும் இந்த அடியேனின் அர்ப்பணிப்பு எல்லாம் என் சுவாமிக்கு தான்" என்றார் தங்க விக்கிரகமாக ஜொலிக்கும் கடவுளைக் கண்டு.

"நல்லது சாமி. ஆமா இது யாரு?" என்றார் சிரித்த முகத்தோடு அம்மன் சிலை போல் அவர் அருகில் நின்றிருந்த குழலியைக் கண்டு.

"இது என் பொண்ணு சாமி. பேரு தேன்குழலி" அவர்களிடம் சொன்னவர், 'பெரியவாள கும்புட்டுக்கோ குழலிமா' என்றார் மகளிடம்.

"வணக்கம் ஐயா" தேன் குரலில் பணிவாக வணங்கிய குழலியை மிகவும் பிடித்து போனது அவர்களுக்கு.

"வணக்கம் ம்மா.. நல்லாப் பாட்டு பாடின. ஆமா நீ என்ன வேலை பாக்குற. வீட்ல தான் இருக்கியா" அவர் மனதில் வேறு கணக்குப் போட ஆண்டவன் அவருக்கு முன் போட்டு வைத்தக் கணக்கு ஏலனம் செய்தது.

அவள் பதில் கூறும் முன்பே, "இந்த ஊருக்கு வறதுக்கு முன்னாடி ஒரு தனியார் நிறுவனத்துல ஆடிட்டரா வேலை செஞ்சா, என் புள்ளையாண்டான்க்கு வேலை மாற்றல் வந்ததும் வேலைய விட்டுட்டு வந்துட்டா. பரிசமெல்லாம் போட்டாச்சி வர தை மாசம் குழந்தைக்கு கல்யாணம் முடிவு பண்ணி வச்சிருக்கோம். பத்திரிகை எடுத்துட்டு உங்க ஆத்துக்கு வருவோம் கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடுங்கோ!" அனுபவம் வாய்ந்தவருக்கு தெரியாதா யார் யார் என்னென்ன நோக்கில் பேசுவார்கள் என்று.

அப்டிங்களா சாமி.. என்றவருக்கு ஒரு நொடி முகம் வாடினாலும் "ரொம்ப சந்தோசம். என் பையனுக்குக் கூட வரண் பாத்துட்டு தான் இருக்கேன். எதுவும் சரியா அமையல, உங்க பொண்ண பாத்ததும் ஒரு நிமிஷத்துல கனவு எல்லாம் கண்டுட்டேன். பரவால்ல விடுங்க, உங்க பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா சந்தோஷம் தான்" என்றார் உடனே தன் மனதை மாற்றிக் கொண்டவராக.

சில பல பொதுவான பேச்சி வார்த்தைகளுக்குப் பிறகு அந்த நாள் இனிய நாளாக தந்தை மகளுக்கு அமைந்திட, மதியம் போல் நடையை சாத்திக் கொண்டு இருவரும் வீடு வரும் வழியினில், சர்ர்ரென வழுக்கிக் கொண்டு வந்து வழி மறித்து நின்ற பைக்கைக் கண்டு மிரண்டு போயினர் இருவரும்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 3
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top