Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 68

மனைவியின் வாடி வதங்கிய முகம் கண்டு ஒவ்வொரு நாளும் வேதனை கொண்ட யாதவ், சரியாக உண்ணாமல் உறங்காமல் எந்நேரமும் தோழியின் நினைவில் 'அவள் எங்கே சென்றாளோ..' என்ற தவிப்பில், மனதளவில் சோர்ந்து இருப்பவளை தேத்த வேண்டி அவளுக்காக உணவைக் கொண்டு வந்தவன்,

"ஸ்வாதி கொஞ்சம் சாப்பிடுடா, கவி எங்கே இருந்தாலும் பத்திரமா இருப்பா., கூடிய சீக்கிரம் அவ திரும்ப நம்மகிட்டயே வந்திடுவா அம்மு, நீ அதையே நினைச்சி வருத்தப்படாம எனக்காக சாப்பிடு ப்ளீஸ்.." என கெஞ்சிக் கொஞ்சி ஒரு பக்கம் யாதவ் அவன் மனைவியை உண்ண வைத்துக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் ஆதியிடம் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் மித்ரா.

"என்னங்க உங்களுக்காவது கவி எங்க போனான்ற விபரம் தெரிஞ்சிதா, ஆத்வியும் தெளிவான பதில் சொல்லாம போறான்.. சூதுவாது தெரியாத பிள்ள எங்க போனா, என்ன ஆனான்னு இது வரைக்கும் ஒரு விபரமும் தெரிய வரல..

எதுக்காக கவி இப்படி ஒரு முடிவை எடுத்தா, ஆத்விய மட்டும் விட்டு போகல நம்ம எல்லாரையுமே விட்டுட்டு போய்ட்டாளேங்க, ஒரு வார்த்தை அவளுக்கு என்ன பிரச்சனைனு நம்மகிட்ட சொல்லி இருந்தா, நாம அவ கூட உறுதுணையா நின்னு இருக்க மாட்டோமா.." விடாமல் புலம்பித் தள்ளிய மனைவியை எத்தனை நேரம் தான் ஆறுதல் வார்த்தைகள் கூறி அமைதி படுத்த முனைவது!

"மித்துபேபி.. கொஞ்ச நேரம் அமைதியா இரு டி, கவி ஏன் இப்டி ஒரு முடிவ எடுத்தான்னு ஆத்விக்கு தெரியாமலா இருக்கும்.. அப்டி இருந்தும் அவன் அமைதியா இருக்கான்னா காரணம் இல்லாம இருக்காது, எதுவா இருந்தாலும் அவன் பாத்துப்பான்.. நீ வீணா டென்ஷன் ஆகி பிபிய எகிற விட்றாத டி.." என்றான் பற்களைக் கடித்தபடி.

கவி காணாமல் போனதே மித்ராக்கு பெருங்கவலையை ஏற்ப்படுத்தி இருக்க, மீண்டும் மீண்டும் கணவனின் தோள் சாய்ந்து வருத்தம் கொள்ளவும், ஆதிக்கும் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவனாக,

"உன்ன அமைதியா இருக்க சொன்னேன், இதுக்கு மேல சொன்னதையே சொல்லி புலம்பிட்டு இருந்த, அப்புறம் என் கோவ முகத்தை தான் நீ பார்க்க வேண்டி இருக்கும் மித்துபேபிஇஇ.."

சற்று கடுமையைக் கூட்டி உரைக்கும் அந்த சில மணி நேரங்கள் தான், அவள் வாய் திறக்காது இருக்கும் தருணம். ஆனால் அந்த கடுமைக் காட்டும் நேரத்திலும் மனைவியின் முதுகை ஆதூரமாக வருடி விடும் இதத்தை, அவன் மனைவி உணராது இருப்பாளா என்ன!

கொஞ்சம் இயல்பாக பேசி விட்டாலும் போதும், மீண்டும் பழைய பல்லவியை பாடத் தொடங்கி விடுவாள் என்றே, முகத்தில் கடுமையைக் காட்டுபவன், ஒற்றை இதமான வருடலில் ஆறுதலை தெரிவித்து விடுவான் ஆதி.

வீட்டில் உள்ள அனைவருக்குமே கவி காணாமல் போனது வருத்தையே கொடுத்திருக்க, ஒருவித இருக்கமான சூழ்நிலையை தளர்த்தி அனைவரின் முகத்திலும் புன்னகை தவழ வைப்பது எல்லாம், தன்யாவும் திவ்யாக்கு பிறந்த குட்டியும் தான்.

மனைவி இல்லாத துக்கம் ஆத்வியின் முகத்தில் சிறிதுமின்றி, புது மாப்பிளை போல் வளம் வருகிறான் என்று தான் மற்றவர்கள் பார்வைக்கு தெரியும். ஆனால் அவன் மனம் படும் ரண வேதனையை யார் அறிவர்!

தன் மேல் சிறிதும் நம்பிக்கை இல்லை என்று அவளாக தானே சென்றாள், தாமாக ஒன்றும் அவளை துரத்திவிடவில்லையே! "அவள் எப்படி சென்றாளோ அப்படியே திரும்பி வரட்டும், நாலு அறை விட்டு தன் கோபத்தை போக்கிக் கொள்ளலாம். ஆனால் தாமாக சென்று அவளை தேடக்கூடாது அழைக்கக் கூடாது" என்ற உறுதியான முடிவோடு இருக்கிறான். ஆனால் அது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்!

மனைவி இல்லாத ஒவ்வொரு இரவும் நரகமாக கழிகின்றதை அவன் ஒருவன் தானே அறிவான். எப்படியாவது தன்னவள் தன்னிடம் தன்னை முழுமையாக நம்பி வந்து விடமாட்டாளா? என்ற ஏக்கத்தில் ஒவ்வொரு நொடிகளையும் கழிப்பது, அவன் பிடித்து போடும் சிகரெட் துண்டுகள் யாவும் அறியும்.

ஒவ்வொரு நாளும் பொழுதுவிடியும் போதும், 'அவளாக வருவாள் தன்னை விட்டு பிரிந்து இருக்க முடியாமல்' என்ற முழு நம்பிக்கையில் இருக்க, அவன் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாகவே ஒவ்வொரு நாளும் முடிவை எட்டி, தினம் தினம் ஏமாற்றத்தையே பரிசாக வழங்கியது.

மாதங்கள் கடந்து விட்டது அவளின்றி. "மாமா.. என்ன எப்பவும் கைவிட்டுட மாட்டிங்களே.. என்னால உங்கள பிரிஞ்சி வாழவே முடியாது, நீங்க இல்லாத வாழ்க்கைய நினைச்சி பாக்குறது கூட ரொம்ப கொடுமையா இருக்கு மாமா..
என்ன இப்டியே எப்பவும் உங்க நெஞ்சிக்குள்ள வச்சுக்கணும் சரியா.."

பல இரவுகளில் அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்து சுருள் ரோமங்களில் முத்தமிட்டு இதழ் உரச அவள் பேசுகையில், தன் மனைவியின் காதலை எண்ணி கர்வம் கொண்ட ஆண்மகன் இப்போது அடிபட்டு போனானே!

'இப்படியெல்லாம் தேன் ஒழுக பேசிவிட்டு, எப்படி இருக்கிறாள் அவள் தன்னை விட்டு' என்று நினைத்துப் பார்க்கயில், வசனம் பேசிய வாய்க்கு பலத்த தண்டனை வழங்க வேண்டும் என்ற வெறியேறி, அதற்க்கு மேலும் அவளாக திரும்ப வருவாள் என்ற நம்பிக்கை மொத்தமாக உடைந்து, சூறாவளியாக அவளை தேடிக் கிளம்பி விட்டான் ஆத்வி.

** ** **

"கவி நான் எல்லா வேலையும் முடிச்சிட்டேன், சாதம் மட்டும் தான் குறைச்சி வரும், ஒரு பிடி அரிசி போட்டு சோறு மட்டும் வடிச்சிக்கிறியா.. நானே வடிச்சி விட்ருவேன், அதுக்குள்ள பஸ்ஸ விட்டுட்டா அந்த ஹோட்டல் முதலாளி கத்துவாரு அதான் பாக்குறேன்.." விஷாலின் அன்னை கேட்டிட,

"பரவால்ல ஆண்டி, இப்போ தான் நானே கொஞ்சம் கொஞ்சமா சமைக்க கத்துக்கிட்டு இருக்கேனே, நான் வடிச்சி விடுறேன்.." அவள் திடமாக சொல்லவும் தான் அவர் ஹோட்டல் வேலைக்கு சென்றார்.

விஷால் ஒரு IT கம்பனியில் பணியாற்றி வரும் நிலையில், கவியும் தன் பங்குக்கு மாலை வேலையில் கிளினிக் ஒன்றில் வேலை செய்துக் கொண்டே, தனது செலவுகளை பார்த்துக் கொண்டு வருகிறாள்.

காலையில் இருந்து மாலை வரை தனிமையில் நேரம் கழியும். அந்நேரமெல்லாம் அவள் மனதையும் நினைவையும் அதிகமாக ஆக்கிரமிப்பு செய்வது, கணவனின் நினைவுகள் மட்டுமே வேதனையாக அவளை சூழ்ந்துக் கொள்ளும்.

"மாமா..ஆஆ.." என்ற மந்திர வார்த்தையை ஒரு நாளைக்கு ஆயிரம் முறையேனும் அவள் மனமும் உதடுகளும் உதிர்த்து விடும்.

"என்ன இந்நேரம் நீங்க மறந்து இருப்பீங்களா.. ஐயோ.. அப்டி மட்டும் நடந்து இருக்கக் கூடாது.. என் மாமா என்ன எப்பவும் மறக்க மாட்டாரு.. ஆமா.. என்ன மறக்க மாட்டாரு.." தனக்குத்தானே அடிக்கடிப் புலம்பியபடி, தன்னவனின் நினைவில் வதங்கிப் போகும் முல்லைக் கொடிக்கு இருக்கும் ஒரே ஆதரவு, அவள் வயிற்றில் உள்ள குட்டி சிசு மட்டுமே!

தான் உண்டாகி இருக்கும் விடயத்தைக் கூட தன்னவனிடம் சொல்ல முடியாத பாவியாகி விட்டேனே என்று அவள் குமுறாத நேரம் இல்லை. இப்படி ஒரு அவலநிலைக்கு தன்னை கொண்டு வந்து விட்ட விதியை எண்ணி, கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாள் பாவப்பட்ட மங்கை.

அவன் இறுகிய அணைப்பு இல்லாமல் உறக்கம் கெட்டது. அவன் மூச்சிக்காற்று தீண்டாமல் சுவாசம் விட சிரமமானது. தன்னவனின் சிறு சிறு காதல் முத்தங்கள் இல்லாமல் உடலில் உள்ள ஒவ்வொரு இடங்களும் ஏங்கித் தவிக்கிறது.

தன்னவன் வேண்டும், தன்னவனின் இறுகிய அணைப்பும் அவன் நேசமும் வேண்டும் என்று குழந்தையாக அடம் பிடிக்கும் மனதை அடக்க வழியறியாமல், கதறி அழுகிறாள் ஒவ்வொரு இரவின் கொடுமையான தனிமையிலும்.

"மாமா, இந்நேரம் நீங்க ஆபிஸ் கிளம்பி இருப்பீங்களா..? என்ன கலர் சட்டை பேண்ட் போட்டு இருப்பீங்க..? சாப்ட்டு தானே போனீங்க? இல்ல ஒரே வேலையா மதியம் சாப்பிடலாம்னு கிளம்பிடீங்களா?

உங்களுக்கு ஒன்னு தெரியுமா, நம்ம பாப்பாக்கு நேத்து நான் ஸ்கேன் எடுத்தேன், ஒரு புள்ளியா ரொம்ப ரொம்ப குட்டியா தெரிஞ்சா உங்க புள்ள.. பாக்கவே கண்ணுல இருந்து தண்ணியா வந்திடுச்சு, அதை பாக்குற கொடுப்பனைய கூட உங்களுக்கு கொடுக்க முடியாத பாவியாகிட்டேனே நான்.."

மனம் வெம்பி அழுதவளை தேற்ற தான் அங்கு யாரும் இல்லாமல் போனது. வெறும் தரையில் படுத்து இருந்தவளின் கண்ணீர் தரையை ஈரமாக்கியது.

எத்தனை நேரம் தான் அழுதுகொண்டே இருப்பது. தனி ஆளாக இருந்தாலும் பரவாயில்லை, தன்னவனின் உயிரை சுமந்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அதை பட்டினி போட்டு வைக்க மனம் இல்லாமல் மெதுவாக எழுந்த கவி, சிறிது அரிசியை கழுவி போட்டு வேக வைத்தாள்.

விஷாலின் அன்னையிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சமைக்கக் கற்றுக் கொண்டு தான் இருக்கிறாள். டீ, காப்பி, முட்டைப் பொரியல், தக்காளி தொக்கு, அப்பளம், கிரேவி வைகைகள் என்று எளிமையான உணவுகளை சமைத்து வைக்க, அதை ருசிப் பார்க்க சோதனை எலியாக மாறுவதோ விஷால் தான். பாவம் புருஷனை கொடுமை செய்து விட்டு வந்து, விஷாலின் உயிரில் அடிக்கடி விளையாடிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

"ஐயோ அம்மா.. என்ன காப்பாத்துங்கம்மா.. என்ன விட்டு எங்கம்மா போய்ட்டீங்க.." விஷால் மனதுக்குள்ளே அழுது புலம்புவதை பாவமாக பார்த்து நிற்பார் அவன் அன்னை.

அதை எதுவும் கண்டு கொள்ளாத கவியோ, "விஷு நான் செஞ்சது நல்லா இருக்கா, அப்போ இன்னும் கொஞ்சம் குழம்பு ஊத்திக்கிறியா.." அப்பாவியாக கேட்டு கரண்டியை எடுப்பாளே, கோடி கும்பிட்டு போட்டு அவள் கண்ணில் படாமல் ஓடி விட தோன்றும் அவனுக்கு.

சோறு கொதித்து பொங்கி வரவும் அடுப்பை அவசரமாக அணைத்து விட்டு, சிறு கரித்துணி பிடித்து அதனை வடித்து விட தூக்கியவள், பதட்டத்தில் சூடு தாங்காமல் கை மீதே கொட்டிக்கொண்டு எரிச்சலும் வலியும் தாங்காமல் துடித்துப் போனவளின் இடது கை முழுக்க சிவந்து விட, குழாயை திறந்து விட்டு நீரில் கரத்தைக் காட்டியும் எரிச்சல் குறைவது போல் தெரியவில்லை.

கண்கள் எல்லாம் கலங்கி சிவந்து விட்ட நிலையில், பொங்கி வந்த தீக்காயத்திற்கு மருந்திட்ட கவி, சாப்பாடு கொட்டிய இடத்தை எல்லாம் மெதுவாக சுத்தம் செய்து எடுத்தவளின் நினைவில் மீண்டும் உதயமாகியதோ அவளின் கணவனின் நினைவே!

"மாமா.. இன்னைக்கு நைட்க்கு நானே உங்களுக்காக சமைக்கலாம்னு இருக்கேன், சீக்கிரம் ஆபிஸ் விட்டு வந்துடுங்க" உற்சாகம் பொங்க சொன்னவளை மேலும் கீழும் ஒரு பார்வைப் பார்த்தவன், சிவப்பு நிற சுடிதாரில் தக்காளி போல் பளபளத்தவளை கண்கள் மின்னக் கண்டு அவள் இடை வளைத்து இழுத்த ஆத்வி,

"திடீர்னு ஏன் இந்த வளந்தக் குழந்தைக்கு இப்படி ஒரு எண்ணம் வந்துச்சி" மூக்கோடு மூக்குரசி, கொஞ்சலோடு ஒரு முத்தம் வைத்தான் சிவந்த இதழினில்.

கணவனின் சீண்டலில் கூச்சம் கொண்ட நங்கை, "நீங்களும் அன்னைக்கு திட்டினீங்க நான் ஒன்னுத்துக்கும் லாயக்கி இல்லைனு, ஊருக்கு போனப்போ ஸ்வாதியும் என்ன திட்டிட்டா..

உங்கள நான் சரியா கவனிச்சிக்கலையாம்.. பொண்டாட்டியா லட்சணமா சமைச்சி போடலயாம்.. ஆம்பளைங்க எப்பவும் பொண்டாட்டி கையாள சாப்பிட தான் ஆசையா இருப்பாங்களாம்.. உங்களுக்கும் அந்த ஆசை இருக்குமாம், ஆனா நீங்க அதை பெருந்தன்மையா என்கிட்ட சொல்லாம என்ன அன்பா பாத்துக்குறீங்கலாம்.. நீங்க தான் என்ன உள்ளங்கைல வச்சி தாங்குறீங்கலாம், ஆனா நான் அதுல கொஞ்சம் கூட உங்கள சரியா பாத்துக்க மாட்றேனாம்..

இது எல்லாத்தையும் விட. நாளைக்கே நமக்கு குழந்தை பிறந்துட்டா, அந்த குழந்தைக்காகவாது நான் சமைக்க கத்துக்கிட்டே ஆகணுமாம்.. ஒரு குழந்தைக்கு அம்மா சமைச்சி பாசத்தோட ஊட்டி விடுற மாதிரி, வேற யார் கொடுத்தாலும் ஈடாகாதாம்.. இப்டி நிறைய திட்டினா..

அவ சொன்னதை எல்லாம் யோசிச்சி பாத்தேன், அதுவும் சரிதானே.. அதான் இனிமே நானே உங்களுக்காக சமைக்கப் போறேன், உங்கள சரியா கவனிச்சிக்க போறேன்.." தீவிரமாக பேஸும் மனைவியின் அழகை ரசித்து, அசைந்தாடும் செப்பு இதழ்களில் மையலிட்டு, மீண்டும் அந்த இதழுக்கு இச்.. வைத்து வலிக்காமல் அவள் கன்னம் பற்றியவன்,

"நீ எனக்கு சமைச்சி போட்டு தான் உன் அன்பை எனக்கு தெரியப் படுத்தணும்னு எந்த அவசியமும் இல்ல பேபி, எனக்காக செய்யணும்னு நீ இந்த அளவுக்கு நினைக்கிறதே போதும்.. உனக்காக என்ன வேணாலும் செய்ய நான் இருக்கேன், என் பொண்டாட்டிய நான் பாத்துக்கிட்டு இருந்தாலே போதும், உன்ன குழந்தை போல பாத்துக்குறேன் சரியா.."

மென்மையில் கரைந்த ஆத்வி, அவள் கன்னத்தில் முத்தமிட்டவனாக, "என் ஸ்வீட் ஹார்ட்ட இந்த அளவுக்கு யோசிக்க வச்சி டென்ஷன் பண்ண உன் பிரண்ட, இன்னைக்கு நான் ஒரு வழி பண்றேன் இரு.." பொய்யான சினத்துடன் அலைபேசியை எடுக்கவும், பதறிப் போய் அவன் கையிலிருந்து பிடுங்கிய கவி,

"என்ன மாமா இது, ஸ்வாதி எனக்கு நல்லது தானே சொன்னா அதுக்கு போயி அவளை திட்டப் போறீங்களா.. அப்புறம் அவ அதுக்கும் சேத்து வச்சி என்ன தான் உண்டு இல்லைனு பண்ணுவா.." பாவமாக சொல்லவும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன்,

"அப்டிலாம் உன் பிரண்ட சும்மா விட்ற முடியாது, யாதவ்கிட்ட சொல்லி பெரிய தண்டனையா கொடுக்க சொல்றேன், அப்ப தான் உன்ன அவ இனி தொல்லைப் பண்ண மாட்டா..!" சீரியஸாக சொல்வது போல் பாவனை செய்ததும் மொத்தமாக பயந்து போனவள்,

"அச்சோ.. மாமா நான் சமைக்கவே இல்ல, ப்ளீஸ் ஸ்வாதிய அத்தான்கிட்ட மாட்டி விடாதீங்க, பாவம் அவ.." அழ தயாராக உதடு பிதுக்கவும், பிதுங்கிய இதழ் ஆடவன் வாய்க்குள் மொத்தமாக அடங்கி விட்டது.

அன்று அலுவலகம் விட்டு விரைவாக வீடு வந்தவன் நேராக சென்றதோ சமையல்கட்டுக்கு தான். அங்கு இரவு உணவை சமைக்கத் தயாராக இருந்த வள்ளியை அனுப்பி வைத்தவன், மனைவிக்காக தானே சமையல் வேலையில் இறங்கி இருந்தான் ஆத்வி.

அப்போதே குளித்து விட்டு தொலதொலை நைட்டி ஒன்றை அணிந்துக் கொண்டு கணவனின் வருகைக்காக கீழே இறங்கி வந்த கவி, பணியாட்கள் யாருமின்றி வீடே வெறிசோடிக் காணப்படவும் நெஞ்சில் ஒருவித திகில் பரவியது.

"என்ன வீட்ல யாரையும் காணல, இவ்ளோ பெரிய வீட்ல யாரும் இல்லாம பேய் வீடு மாதிரி பாக்கவே ரொம்ப பயமா இருக்கு.."

பதட்டமும் பயமுமாக வள்ளி கிட்சனில் இருப்பார் என நினைத்து அவசரமாக ஓடி வந்தவளோ, கட் பனியனில் வியர்க்க விருவிருக்க மும்புரமாக திரும்பி நின்று சமைத்துக் கொண்டு இருப்பவனை கண்டு வியந்து போன கவி, ஆசையாக ஓடி வந்து அவன் பின்னால் இருந்துக் கட்டிக் கொண்டவள், அவன் வியர்வை படிந்த முதுகு தண்டியில் மென்மையாக முத்தமிட, சிலிர்த்துப் போனான் ஆடவன்.

"என்ன கவிஇ.. ரொம்ப பயந்துட்டியா.." தன் மார்பில் அழுத்தம் கூட்டிய அவள் கரங்களை குனிந்துப் பார்த்து வினவியவன், நண்டு பிரட்டளுக்கு மசாலாக்களை கவனமாக சேர்த்தான்.

"ஹ்ம்.. வீட்ல யாரும் இல்லைன்னதும் கொஞ்சம் பயந்துட்டேன், ஆமா நீங்க ஏன் இந்த வேலைய பாக்குறீங்க, வள்ளி அக்கா எங்க போனாங்க மாமா.." என்றவள் இன்னும் அவனை ஆழமாக கட்டிக் கொள்ள, மனைவியின் மென்மைகள் எக்குதப்பாக மோதி ஆடவன் புத்தியை மழுங்க செய்தது.

"ஏய்.. கவிஇ.. சமைக்க விடு டி.. இப்டி பண்ணா சமையல்ல எப்படி கான்சன்ட்ரேட் வரும், வேற எங்கெங்கோ புத்தி போகுது டி.." கணவனின் கிறங்கும் பேச்சில் தானும் கிறங்கியவள்,

"எங்கெங்க போகுது உங்க புத்தி, தெளிவா சொல்லுங்க மாமா.." தெரிந்தே உசுப்பினாள் அவனை.

"தெளிவா சொல்றதுக்கு என்ன செய்தே காட்டுவேன், ஆனா சமையல் தீஞ்சு போயிடுமேனு பாக்குறேன்.. கொஞ்ச நேரம் அமைதியா இரு டி ஒரு பத்து நிமிஷத்துல முடிச்சிட்டு செய்முறை விளக்கத்துக்கு வரேன்.." என்றவன் கொதித்து முடித்த மீன் குழம்பின் மீது நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளை தூவி, மசாலா தடவிய மீன்களை பிரட்டிப் போட்டான்.

"ம்ஹ்ம்.. மாமா .. நீங்க என்ன செய்றீங்கன்னு என்னால பாக்க முடியலயே.." அவன் முதுகில் மூக்கை உரசி அவள் சிணுங்க,

"அப்போ என் முதுகுல உப்புமூட்டை ஏறிக்கோ டி, நல்லா தெரியும்.." அவன் சொன்ன அடுத்த நொடி நைட்டி தடுக்கக் கூடாதென்று முட்டிவரை ஏற்றி விட்டுக் கொண்டு, தன்னவன் முதுகில் ஏறி இருந்தாள் குரங்குக் குட்டி.

"ஆமா மாமா.. நீங்க எப்ப சமைக்க கத்துக்கிட்டீங்க.." அவன் செவியோரம் பேசி, கையும் காலையும் வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் அட்டகாசம் செய்தாள் அவனை.

மனைவியின் சேட்டை பிடித்த வேலையில் உணர்ச்சிகள் எழும்ப அடக்க முடியாமல் அவதிப் பட்டவன், 'பேசாம சைட்ல வந்து நின்னு பாரு டின்னு சொல்லி இருக்கலாம், இவளை உப்பு மூட்டை ஏத்தி எனக்கு நானே ஆப்பு வச்சிக்கிட்டேன்..' உள்ளுக்குள் நொந்து கொண்ட ஆத்வி,

"யூஎஸ்ல இருக்கும் போது கத்துக்கிட்டேன் டி.." என்றான் அவஸ்த்தையாக.

"ஓஹ்.. என்னென்னலாம் சமைப்பீங்க.." என்றவளின் செழுமைகள் அவன் கழுத்தில் அழுத்தமாக மோதியதில் மூச்சி வாங்கியவன்,

"நான்வெஜ் எல்லாம் ஓரளவு சமைப்பேன், அப்புறம் வெஜ்ல முக்கியமான ஐட்டம்ஸ் அவ்ளோ தான்.." என்றதும் ஆச்சர்யமாக விழி விரித்த கவி,

"அப்ப ஏன் இத்தனை நாளா எனக்கு நீங்க இந்த விஷயத்தை சொல்லாம விட்டீங்க..."

"நீ எங்கே டி கேட்ட நான் சொல்றதுக்கு.."

"சரி சரி கேக்காம விட்டது என் தப்புதான், இனிமே தினமும் ஒரு வேலை நீங்க தான் சமைக்கணும், அப்டியே ஊட்டியும் விடணும்.. உங்களுக்கு தெரிஞ்ச எல்லா டிஷ்ஷையும் நான் டேஸ்ட் பாத்தா தான் எனக்கு தூக்கமே வரும்.." அவன் தலை முடியை பிச்சிப் பிடுங்கி எடுத்தவளை சமாளிக்க முடியாமல் முழி பிதுங்கி நின்றாலும், மனைவியின் இன்பமான சேட்டையை ரசித்து மகிழ்ந்தான் ஆடவன்.

அன்றில் இருந்து தினம் ஒரு வேலை சமைத்து மனைவிக்கு ஊட்டி விட, எந்த குறையும் கூறாமல் அமிர்தமாக ரசித்து ருசித்து உண்டு அவனை பாராட்டி தள்ளி விடுவாள் கவி. அதிலும் அவள் செய்யும் சேட்டைக்காகவே மெதுவாக சமைத்து, ஆடுப்பாங்கரையில் புது புது காதல் லீலைகள் செய்து திணறடிப்பான் அவளை.

பின்புறம் முதுகில் இருப்பவள் அப்படியே ஊர்ந்து வந்து, அவனது முன்புறம் வயிற்றில் உப்புமூட்டை அமர்ந்து, இரண்டு கால்களையும் அவன் பின்னோடுக் கட்டிக் கொள்வாள் பைங்கிளி. அவன் சமையல் செய்ய, இவள் அவன் முகத்தில் இதழ்கள் கொண்டு எச்சில் செய்ய என்று ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத இன்ப நினைவுகள் தான்.

அவையாவும் நினைத்தபடி தன் கை காயத்தை கண்டு கண்ணீர் விட்ட கவி
"உடனே உங்கள பாக்கனும் போல இருக்கு மாமா, தப்பு பண்ணிட்டேன் உங்கள விட்டு வந்து ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.. உங்க மனச உடைச்சி உங்க நம்பிக்கைய உடைச்சிட்டு வந்த இந்த பாவிக்கு மன்னிப்பே இல்ல..

நான் பண்ணிட்டு வந்த காரியத்துக்காக என்ன வெறுத்து ஒதுக்கீடாதீங்க மாமா.. உங்க வெறுப்பை தாங்குற சக்தி எனக்கு துளியும் இல்ல.. ஹாஆஆ.. கை வேற வலிக்குதே.." அழுகையோடு புலம்பிய கவி, எப்போது உறங்கினாளோ!

விஷாலின் அன்னை அவள் சூடு பட்ட கை காயத்தைக் கண்டு தன்னையே நொந்துக் கொண்டவர், அவளை வேறு எந்த வேலையும் செய்ய விடாமல் கவனமாக பார்த்துக் கொண்டார் அடுத்து வந்த நாட்களில்.

வீட்டில் மளிகை சாமான்கள் யாவும் காலியாக இருப்பதை கண்ட கவி, 'வீட்டில் சும்மா தானே இருக்கிறோம் தாமே சென்று வாங்கி வந்துவிட்டால் என்ன' என்ற எண்ணத்தில், ஒரு பையை எடுத்துக் கொண்டு கிளம்பி சென்றாள், அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு.

லிஸ்டில் எழுதி இருந்த பொருட்களை எல்லாம் ஒன்று விடாமல் வாங்கிய கவி, மீண்டும் வீடு செல்ல வேண்டி பேருந்து நிறுத்தம் வந்தாள்.

அப்போது, தனது மூன்று மாதக் கருவோடு மொட்டை வெயிலில் அங்கிருந்த ஒருக் குழந்தையோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்த கவியின் முன்னால், கோவமே உருவாக வந்து நின்றான் ஆத்வி.

தன்னவனை கண்ட அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் கண்கள் விரிய கண்ணீர் வழிய பேச்சற்று நின்றவளின் இதழ்கள்,

"மாமா.. என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாமல், முட்டையில் இருந்து புதிதாக பொறிந்து வெளிவந்த குருவிக்குஞ்சியின் வாயாக திறந்து திறந்து மூடி நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்த கணத்தில்,

சப்.. சப்.. என்று இரு கன்னத்தில் இடியாக விழுந்த அடியை தாங்கிக் கொள்ள முடியாமல், கண்கள் சொருகி மயங்கிப் போனவளை, இறுகிய முகத்தோடு கையில் ஏந்திக் கொண்டவன் காரில் கிடத்திய ஆத்வி, அவள் வாங்கி வைத்த மளிகை சாமான் பையையும் எடுத்து கொண்டு அவள் தங்கி இருக்கும் விஷாலின் வீட்டிற்கு சென்றான்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 68
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top