• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
270
Reaction score
234
Points
43
இதழ் - 19

“ஹ்ம்ம் சொல்லு டி எந்த உரிமைல நீ அக்கறையா குடுக்குற இந்த பாலை நான் குடிக்க” என்று அர்ஜூன் கத்த, கண் இமைக்காமல் அவனை பார்த்த மகி, எதுவும் சொல்லாமல் அங்கிருந்து செல்லப் போக, அழுத்தமாக அவள் கை பிடித்து இழுத்து அவன் முன்பு நிற்க வைத்தான்.

அதில் அதிர்ந்து அவனை பார்க்க “எங்க போற, எனக்கு ஒரு பதில சொல்லிட்டு போ ஏஞ்சல்..?” அவன் குரல் மிகவும் கடுமையாக வந்தது.

“என்ன பதில் சொல்ல சொல்றீய விடுங்க என்னை. இதெல்லாம் சரி இல்ல. நீங்க இங்கன மாமா கல்யாணத்துக்காக வந்து இருக்கீய. அது முடிஞ்சதும் கெளம்பிடுவிய. அப்புறம் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" பட்டென சொல்லி அவன் பிடியில் இருந்து விடுபட போராட, அவள் தன்னை யாரோ போல் உதாசீன படுத்துவது அவனுக்கு கோவத்தை அதிகரிக்கச் செய்தது.

"ஏய்ய் மொதல்ல அத்தான்னு கூப்பிடு டி. சும்மா யாரோ மாதிரி விடுங்க போங்க வாங்கன்னு கடுப்பு மயிரா இருக்கு.
நான் யாரோ தான டி. அப்புறம் எதுக்கு அப்படி துடிச்சு போய் அத்தான்னு கத்திக்கிட்டு என்னை அந்த பாம்பு கிட்டருந்து காப்பாத்துன. அப்படியே பாம்பு கடிச்சி சாகட்டும்னு விட்டு போக வேண்டியது தானே. உடனே சொல்லாத நீங்க இருந்த இடத்துல வேற யாரு இருந்தாலும் காப்பாத்தி இருப்பேன்னு.

அப்படி நீ என்னை காப்பாத்தினியே நீ எந்த நிலைமைல இருந்தேன்னு கொஞ்சம் நெனச்சி பாத்தியா. வேற யாரு இருந்தாலும் உன் உடம்புல தாவணி இல்லாம போய் இருப்பியா” அர்ஜுன் புருவம் உயர்த்தி கேட்க, இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினாள் மகி.

‘இவர் இடத்தில் வேறு யாராவதா, அதுவும் நான் இருந்த நிலையிலா?’ என யோசித்து பார்த்தவளுக்கு, இல்லை என்றே அவள் மனம் வாதாட. திடுக்கிட்டவள் அவன் முகத்தை பார்க்க.

“என்ன முடியாது தான? சரி அத விடு. அன்னைக்கு நான் மதியத்துலிருந்திய சாப்பிடலன்னு தெரிஞ்சி பால் கொண்டு வந்தியே எதுக்கு? இதோ இப்ப கூட நான் எதுவும் சாப்பிடலன்னு தான ஓடி போய் எனக்காக பாலை காய்ச்சி எடுத்துட்டு வந்த ம்.."

அவன் சொல்வது ஒவ்வொன்றும் உண்மை தானே இதற்கு நான் அவரிடம் என்ன சொல்வதென தெரியாமல், குழந்தை போல் திருதிருவென முழித்து கொண்டு இருந்தவளிடம்,

“நான் சுத்தி வளச்சி எல்லாம் உன்கிட்ட பேச நினைக்கல நேரடியாவே சொல்றன். நான் இங்கருந்து போகும் போது நீயும் என்கூட தான் வருவ வரணும்" அவன் அழுத்தமாக சொல்ல,
மகி அவனை புரியாத பார்வை பார்த்து “நா... நான் ஏன் உங்கக் கூட வரணும்" என்றவளின் வார்த்தை தடுமாறியது.

“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு ஏஞ்சல். உன் கழுத்துல தாலி கட்டி உன்னை என் பொண்டாட்டியா ஆக்கிக்கணும்னு ஆசையா இருக்கு. உரிமையா நீ என்னுடையவள்னு உன் மடில தலை வச்சி படுக்க என் மனசு ஏங்கி தவிக்குது டி.

இது வரைக்கும் எனக்கு யாருகிட்டயும் வராத பீல், உன்னை பாத்ததும் உன்கிட்ட வருது ஏஞ்சல். நீ என்கூட இருந்தா இந்த உலகத்துலயே ரொம்பவே ஹாப்பியா இருக்க ஆள் நான் ஒருத்தனா மட்டும் தான் இருப்பேன் ஏஞ்சல். என்கூட நான் சாகர வரைக்கும் நீ எனக்கு வேணும் டி” என்றான் உணர்ச்சிகள் ததும்பும் கண்களுடன்.

அப்பட்டமான அதிர்ச்சி அவள் முகத்தில் தெரிவதை கண்டு அதில் லேசாக சிரித்து, “என்னடா பாத்த கொஞ்ச நாளுல இவன் இப்படி பைத்தியக்காரத்தனமா உளறுறனேன்னு உனக்கு தோணும். உனக்கு அப்படி தோணுறதுல எந்த தப்பும் இல்ல. ஏன்னா எனக்கே அப்படி தான் தோணுது. எனக்கே எல்லாம் புதுசா இருக்கு டி. சரி நீ இப்ப பதில் சொல்லு ஏஞ்சல் என்ன கட்டிக்கிறியா யாழு?” அவள் கைகளை எடுத்து அவன் இடபக்க மார்பின் மேல் வைத்துக் கொண்டு அவள் கண்களை பார்த்து தவிப்பாக கேட்க, இதற்கு என்ன பதில் சொல்வது அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தடுமாறினாள்.

“அ... அது நீங்க நிறைய படிச்சி பெரிய பெரிய ஹோட்டல் எல்லாம் வச்சி இருக்கிய. நான் வெறும் பண்ணண்டாவது தான் முடிச்சிருக்கேன். உங்களுக்கு நான் சரியா வர மாட்டேன். நீங்க என்னைய விட்ருங்க" திணறி போய் சொல்ல, அவளை ஆழ பார்த்தவன்,
“அப்ப உனக்கு நான் படிச்சி இருக்குறது தான் என்னை நீ ஏத்துக்க தடையா இருக்கா ஏஞ்சல். உன்கிட்ட ஒரு உண்மைய சொல்லவா?” என்றவனை மகி படபடப்போடு நிமிர்ந்து பார்த்தாள்.

“நான் இந்த ஊருக்கு வந்த பிறகும் உன்னை பாக்குற முன்னாடி நிமிஷம் வரைக்கும், எனக்கு சுத்தமா கிராமத்து பட்டிக்காட்டு பொண்ணுங்கள பாத்தா கொஞ்சம் கூட பிடிக்காது. ஏன்னா நான் வளந்த விதம் அப்படி. அதெல்லாம் இப்ப வேணாம் ஏஞ்சல். அதை நான் அப்புறமா உனக்கு சொல்றன்.

ஆனா உன்னை பாத்ததுக்கப்புறம் எல்லாம் மாறி போச்சு. நீ எல்லாரையும் எவ்வளோ பாசமா அன்பா அக்கறையா பாத்துக்குற. நீ காட்டுற அந்த பாசம் அன்பு அக்கறை எல்லாம் பாத்து, எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சி போச்சு ஏஞ்சல். உன்னோட அந்த மொத்த அன்புக்கும் சொந்தக்காரனா இருக்க ஒவ்வொரு நாளும் மனசு ஏங்குது யாழு. நீ அதை எனக்கே எனக்குன்னு உன்னையும் சேத்து முழுசா தருவியா யாழு. உன்னக்காக நான் என் படிப்பு அந்தஸ்து எல்லாத்தையும் தூக்கி போட்டு வந்துடுறேன்" ஏக்கமாக அதே சமயம் உண்மையாக கேட்க, அவன் பேசுவதை எல்லாம் கேட்டவள் மேலும் அதிர்ந்து போய் அவனை பார்த்த மகிக்கு வார்த்தை வருவேனா என்றது.

நா மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டு, பேசவே தடுமாறியவள். “அ...த்...தா...ன் இது இது சரி வராது. நான் போகணும்” தட்டு தடுமாறி வார்த்தைகளை கோர்த்து கோர்த்துச் சொல்ல,

அவள் கைகளை விடுதலை செய்தவன் “சரி போ ஏஞ்சல். நான் இவ்வளோ தூரம் சொல்லியும் என்ன நீ புரிஞ்சிக்க மாட்றல்ல. இப்ப சொல்றன் கேட்டுக்கோ நான் ஒன்னு ஆசை பட்டா அதை எப்படியாவது நான் அடைஞ்சே தீருவேன். உன்மேலையும் நான் ஆசை வச்சுட்டேன் ஏஞ்சல். எனக்கு நீ கிடச்சே ஆகணும். அதுவும் உன் சம்மதத்தோட" காட்டமாக அர்ஜூன் சொல்ல, விக்கித்து போய் அவனை பார்த்தாள்.

“என்ன உளர்றீய? இப்படி எல்லாம் பேசுனா என்ன அர்த்தம். நீங்க ஆசை பட்டா உங்களுக்கு கிடைக்க நான் ஒன்னும் பொம்மை இல்ல. உங்க இஷ்டத்துக்கு என்னை ஆட்டிபடைக்க. நீங்க என்ன மிரட்டி உங்க விருப்பதுக்கு என்னைய பணிய வைக்கலாம்னு பாக்குறீயலா?" மகியும் கோவமாக குரல் உயர்த்தினாள்.

இந்நேரம் மகி இடத்தில் வேறு யாராக இருந்து இருந்தாலும், அவனை பேசிய வாய் வெத்தளை பாக்கு போடாமலே சிவந்து இருக்கும். ஆனால் மகி பேசியதை எந்த சலனமும் இல்லாமல் கேட்டவன் “உன் சம்மதம் எனக்கு தானா கிடைக்கும் ஏஞ்சல். அதுவரைக்கும் நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். நீ இருக்க திசைல கூட நான் வர மாட்டேன். ஆனா நீயா என்னை தேடி வருவ. அதுவரைக்கும் நான் உனக்காக காத்திருப்பன்” இறுகிய குரலில் சொன்னவன்,

“இப்ப நீ போலாம், இனிமே நீ என்னை பாக்க போறப்ப ஒன்னு நீ என் காதலியா இருப்ப. இல்ல நான் தாலி கட்டின என் மனைவியா இருப்ப" அர்ஜூன் உறுதியாக சொல்ல, அவனின் உறுதி அவளை அசைத்து தான் பார்த்தது.

சிலையென நின்றவள், கீ கொடுத்த பொம்மை போல அவளறைக்கு சென்று மெத்தையில் அமர்ந்தவளுக்கு தன் நிலையை எண்ணி கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. எதையோ யோசித்து அழுது தீர்த்தவளுக்கு இனிமேல் அர்ஜூனை பார்க்கவே கூடாது, அப்படியே பார்த்தாலும் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது, ஒதுங்கி சென்றிட வேண்டும் அவன் யாரோ நான் யாரோ என்று தீர்மானித்து கொண்டாள்.

பாவம் அவள் எடுத்த தீர்மானம், காற்றில் வரைந்த படங்களை போல விரைவில் காற்றோடு காற்றாக போவதை அறிந்து இருக்கவில்லை பேதை.

“காலைல இருந்து இந்த மாமா எங்க போச்சு" சுற்றி சுற்றி ஒவ்வொரு அறையாக தேடிக்கொண்டே கையில் அவளே செய்த ஆட்டு கால் பாயாவை கிண்ணத்தில் வைத்துக் கொண்டு மறுக்கையால் தன் பாவாடையை தூக்கி பிடித்தவண்ணம் ராதா சுற்றி வந்தாள்.

ராதாவின் மனம் கவர்ந்த கள்வனோ தோட்டத்தில் ஒதுக்குப்புரமாக நின்று புகைத்துக் கொண்டு இருக்க, வீட்டையே சுத்தமாக கார்த்தியை தேடி அலசி ஆராய்ந்தவள் எங்கும் கிடைக்காமல் போகவே, தோட்டத்திற்கு கடைசியாக வந்தாள்.

அங்கு அவன் தனியாக திரும்பி நிற்பதை பார்த்தவள், சத்தம் போடாமல் பூனை நடை இட்டு மெதுவாக அவன் பின்னால் சென்று நின்று “மாமா...” என்று அவன் பின் காதில் கத்த, அதில் திடுக்கிட்டவன் கையில் வைத்திருந்த சிகரெட்டுடன், வாயில் இருந்து புகை வந்தபடி திரும்பிட,
முதலில் கவனிக்காத ராதா, சிகரெட் வாடையில் முகம் சுளித்து அவனை கவனித்தவள் அதிர்ச்சி கலந்த கோவமாக “என்ன மாமா இதெல்லாம்” அவன் வாயில் விட்ட புகையும், கையில் புகைந்து கொண்டு இருக்கும் சிகரெட்டையும் மாறி மாறி பார்த்தாள்.

உடனே கையில் இருந்த சிகரெட் துண்டை கீழே போட்டு அதன் நெருப்பு கங்கை காலால் நசுக்கி, புகையை கைகளால் அசைத்து ஊதி தள்ளி வாயை துடைத்து கொண்டு “ராதுமா அது ஒன்னு இல்லடா சும்மா தான்" வாய்க்கு வந்ததை பதட்டமாக உளறினான்.

“எத்தன நாளா மாமா உனக்கு இந்த பழக்கம்" கண்கள் கலங்கியது ராதாக்கு.

“இப்பதான் ராதுமா, ரொம்ப நாள் பழக்கமெல்லாம் இல்ல. ஒரு நாள் ரொம்ப டென்ஷன்ல இருந்தப்போ பிரண்ட்ஸ் சொன்னதால பிடிச்சேன். அப்புறம்...” என்று அவன் இழுக்க,

“அப்புறம் என்ன மாமா அதுவே பழக்கமாகி இப்படிதான் தினமும் திருட்டுத்தனமா தனியா வந்து பிடிக்கிற. சரிதான..?” அவன் கண்களை பார்த்து தீர்க்கமாக கேட்க, பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து கொண்டான்.

“என்ன மாமா கீழ ஏதாச்சி விழுந்துடுச்சா? நான் இங்க உன் மூஞ்சிய பாத்து தான் கேட்டுட்டு இருக்கேன். நீ கீழ பாத்தா என்ன அர்த்தம் மாமா.. " ராதா கத்த,
“ஏய் ராதா இப்ப ஏன் கத்துற? ஏதோ தெரியாம பண்ணிட்டேன் டி. இனிமே புடிக்க மாட்ட சரியா இந்த பேச்ச இதோட விடு" என்றான் சுற்றி முற்றி யாராவது வருகிறார்களா என பார்த்து.

“என்ன மாமா தெரியாம பிடிச்சிட்டியா? நீ ஒரு கார்டியாலஜிஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டா இருந்துக்கிட்டு இப்டி சொல்ற உனக்கே சிரிப்பு வரல. உனக்கு ஒன்னுமே தெரியாதா மாமா நீ என்ன வாயில விரலை வச்சா கடிக்க தெரியாத பச்ச பிள்ளையா. தெரியாம பண்ணிட்டேன்னு சொல்ற.
உலக புகழ் பெற்ற மருத்துவர்ல நீயும் ஒருத்தரா இருந்துகிட்டு, இப்படி பண்றியே எத்தனை பேருக்கு உன் கையால இதய அறுவை சிகிச்ச செஞ்சு மறு பிறவி குடுத்து இருக்க. அதுல வர முக்கால்வாசி நோயாளி, இந்த கருமம் பிடிச்ச சிகரெட் பிடிச்சி தான் அங்க டிரீட்மென்ட்க்கு வராங்கன்னு, இதய மருத்துவம் பாக்குற உனக்கு தெரியாம இருக்குமா. இல்ல நானே பெரிய டாக்டர் எனக்குலாம் எதுவும் வராதுன்ற மெத்தப்புல இப்டிலாம் திருட்டுத்தனம் பண்றியா?” மேலும் கண்ணீர் சிந்திய நிலையில் ஆத்திரமாக கத்தினாள்.

“இல்ல ராது நான் சொல்...” அவன் வாய் திறக்கும் போதே,

“போதும் மாமா நீ எதுவும் பேசாத. பேச வேண்டிய நேரத்துல எல்லாம் பேசாம இப்ப பேசி என்னாவ போது. சிகரெட் மட்டும் தானா இல்ல...” கோபமாய் அவன் முகம் பார்க்க,

“ஐயோ ராது, அப்படில்லாம் சத்தியமா இல்லடா...” அவள் வாயில் கை வைத்து மூடி “இந்த முறை ஏதோ புத்தி கெட்டு போய் இப்படி பண்ணிட்டேன் ராது. இனிமேல் செத்தாலும் அதை என் கைல எடுக்க மாட்டேன் ராதா. உன் மாமாவை நம்புடா” என்றான் பாவமாக.

“நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைச்சி கூட பாக்கல மாமா. என்கிட்டயும் இத சொல்லாம மறச்சிட்டல்ல. நீயே எத்தன பேருக்கு ஆலோசனை குழு மூலமா, சிகரெட் குடிய பத்தி மக்களுக்கு எவ்வளோ அவார்னஸ் குடுத்துட்டு இருக்க. அப்படி இருக்கும் போது நீயே அத செய்றேன்னா, உனக்கு உன் மேலையும் உன்னை சுத்தி இருக்கவங்க மேலையும் பயம் இல்லன்னு தானே அர்த்தம்...” ஒவ்வொரு கேள்வியும் ராதா சராமரியாக கேட்க, அவள் கேட்கும் எதற்கும் பதில் சொல்ல தெரியாமல் திணறினான்.

இதற்கு மேல் இங்கு இருந்தால், தன் மாமனை வாய்க்கு வந்தபடி பேசிவிடுவோம், அதனால் தன் மாமன் தான் வருத்தப்படுவான் என நினைத்தவள், அவள் அவனுக்காக ஆசையாக செய்து கொண்டு வந்ததை அங்குள்ள கட்டையில் வைத்து விட்டு “அங்க வச்சத மிச்சம் இல்லாம சாப்பிடு. ஆனா நீ இனிமேட்டு என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேச கூடாது. மீறி பேசுன..” அவனை அழுத்தமான ஒரு பார்வை பார்த்து,

“நான் என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியும். உன்னை எதுவும் பண்ணமாட்டேன்" என்றவள் அவளின் உடலில் உள்ள ஒரு இடத்தை அவனிடம் காட்டி “இது நீ ஏற்கனவே பண்ணதுகான தண்டனைய எனக்கு நானே கொடுத்துக்கிட்டது தெரியும்னு நினைக்கிறேன். மறுபடியும் என்னை இதே மாதிரி செய்ய வச்சிடாத” என்றவள் கோவம் குறையாமல் அங்கிருந்து சென்றாள்.

அவள் போனதும், தலையில் கை வைத்து அப்படியே கீழே அமர்ந்தவன் தோள் மீது ஒரு கரம் பதிக்கவும் திரும்பிப் பார்த்தான்.

தொடரும்.
 
Top