• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
270
Reaction score
234
Points
43
இதழ் - 24


வீட்டு வாயிலில் குடும்பமே மகிக்காக காத்திருக்க, காரில் இருந்து இறங்கி வந்த மகி அங்கு எங்கும் அர்ஜூன் இல்லாததால், ஏமாற்றத்துடன் தன் அம்மா அத்தைகளை கட்டி அழ, “ஏ புள்ள உன்னை காணான்னதும் நான் எம்புட்டு பயந்து போயிட்ட தெரியுமா டி" என்ற பூஜா கலங்கிப் போனாள்.

“அழாத புள்ள அதான் நான் திரும்ப வந்துட்டேனே" என்றவளை ராதா ரதி சூர்யா அனைவரும் அழுகையுடன் கட்டிக் கொள்ள,

“ஏய், செத்த தள்ளுங்க டி என் பேத்தி மேல அந்த வீணா போன வெளங்காதவன் கண்ணுப்பட்டு போச்சி. இனிமே என் பேத்தி மேல எந்த ஒரு கொல்லிவாய் பிசாசு கண்ணு படக்கூடாது" வசவிக்கொண்டே வள்ளி பாட்டி ஆரத்தி எடுக்க, அங்கு நின்றிருந்த மூன்று பிசாசுகளுக்கும் முகம் கறுத்து போனது.

உள்ளே வந்த மகி, மீனாட்சி மடியில் தலை வைத்து படுத்துக் கொள்ள, மீனாட்சியும், "ஒன்னு இல்ல மகிமா எல்லாம் சரியாகிடுச்சு. கொஞ்ச நேரம் தூங்கு" அவளின் தலையயை மென்மையாக வருடி விட, மகி கண்ணில் இருந்து நிற்காமல் நீர் வடிந்தது.

கதிரும் குருவும் ஒருவரை ஒருவர் பார்த்து சமிக்கை செய்து கொள்ள. கதிரையே வைத்த கண் வாங்காமல் ரசனையாக பார்த்து கொண்டு இருந்த பைரவி அதை கவனித்து விட்டாள். என்னவாக இருக்கும் என சிறிது யோசித்தவள், எழுந்து சென்று மாமா என உற்சாகமாக அழைத்தபடி கதிரை உரசினார் போல் ஓட்டி அமர, களைப்பாக இருந்த கதிரும், அப்போது தான் பைரவியை கண்டான்.

“ஏய்ய் பைரவி நீயி எப்ப வந்த புள்ள?”

“ம்ம். உனக்கு என்னைக்கு எங்கள எல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சி இருக்கு" என்று மனதில் நினைத்தவள் “காலைல வந்தேன் மாமா" என்றாள் குழைவாக.

“ஹ்ம். சரி பைரவி வேலை எல்லாம் எப்படி போகுது”

“வேலைக்கு என்ன மாமா அதெல்லாம் நல்லா தான் போகுது" என்ற பைரவி கதிர் கையில் அவள் கையை கோர்த்தபடி பதில் கூற, சிறு வயதில் இருந்தே பைரவி இப்படி கதிர் கையை பிடித்து கொண்டு திரிந்ததால், கதிருக்கு அதனால் ஒன்றும் தோன்றவில்லை போலும்.

பொதுவாக பேசிக்கொண்டு அமர்ந்திருக்க, அந்நேரம் சரியாக காயு அவள் பின்னால் கார்த்தி என மகி கிடைத்த செய்தி கேட்டு, அடித்து பிடித்து ஓடி வந்ததை பார்த்த பைரவிக்கு வயித்தெரிச்சலாக இருந்தது. கூடவே கஜா பங்கஜம் பாட்டிக்கும் கூட.

சிறு வயதிலிருந்தே பைரவிக்கு கதிர் என்றால் கொள்ளை பிரியம். அது வளர வளர கதிர் மேல் காதலாக மாறியது. பைரவி கதிரை விரும்பியது வயது கோளாறு என்றாலும், கதிர் காயுவை உயிருக்கு உயிராய் விரும்புவது தெரிந்தே அவனை விரும்பி, இப்போது கதிர் காயு இருவரும் திருமணம் வரை வந்த நிலையிலும், எப்படியாவது கதிரை தனக்கு சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்று நினைப்பது அவளை பொறுத்தவரை தவறும் சரி தான்.

பங்கஜம் பாட்டிக்கும் கஜலஷ்மிக்கும், கதிரின் சொத்துக்கள் மேல் இருக்கும் தீராத ஆசையில், பைரவிக்கு நல்லது எது கெட்டது எது என சொல்லி தராமல், அவள் கதிர் மேல் ஆசை வைத்தது தவறு என்று தெரிந்தே, மேலும் அவளை ஏற்றிவிட்டு, இன்னொரு பெண்ணின் வாழ்வை அழிக்க பல சதி வேலைகளை செய்து வருகின்றனர்.

“மகி புள்ள... நீ காணோம்ன்னு கேள்வி பட்டதும் ரொம்ப பயந்துட்டேன் புள்ள" அவளைக் கட்டிக்கொண்ட காயு கவலையாக சொல்ல,

“ஆஹா, பயந்து போனவதே இம்புட்டு நேரம் கடந்து வந்து கேப்பியலோ..” மகி தன் சொந்தங்களை கண்டதும் கொஞ்சம் தெளிவு பெற்றத்தில், காயுவை கிண்டல் செய்தாள்.

“ஹ்ம்! ஆமாடி யம்மா. நாங்க அப்படியே இடுப்பு மேல கை வச்சி உக்காந்துட்டு இருந்தோம் பாரு. அம்மாக்கு மருந்து எல்லாம் தீர்ந்து போச்சின்னு, கார்த்தி மாமாவ கூட்டிட்டு டௌனுக்கு போயிட்டேன். குரு அண்ணே போன் பண்ணிருக்கு. ஆனா மாமா போன சைலன்ட்ல போட்டுட்டாவ போல.

வர வழிலதே மாமா போன எடுத்து குரு அண்ணே போன் பண்ணி இருக்குறத பாத்துட்டு, போன் போட்டு கேட்டதுல, அண்ணே எல்லாம் சொல்லுச்சு, கடைசியா நீயி கிடைச்சதையும் சொல்லுச்சு, அப்பதே எங்களுக்கு மூச்சே திரும்பி வந்துச்சி தெரியுமா" காயு படபடவென சொன்னதும்,

“காயு பொறு டி, நான் சும்மாதே கேட்டேன். அதுக்கு போயி ஏன் இம்புட்டு விளக்கத்த சொல்றவ. எனக்கு தெரியாதா புள்ள உன்னைய பத்தி. நீயி சொல்லிதே எனக்கு தெரியனுமா" என்ற மகி அவளை அணைத்துக் கொண்டாள்.
காயு வந்ததில் இருந்து கதிர் அவளையே ரசனையாக பார்த்து கொண்டு இருப்பது பைரவிக்கு ஆத்திரமாக வந்தது.

இருந்தும் காயு பார்க்கும்படி கதிர் மடியில் உட்காராத குறையாக இன்னும் நன்றாக ஒட்டி உரசி அமர்ந்து கொள்ள, அவளை பார்த்த கார்த்தி “ஏய் பைரவி, இங்கன எல்லாம் இம்புட்டு இடம் கெடக்கு. நீயி என்ன கதிரண்ணே மடில ஏறி உக்காந்து இருக்கவ. இங்குட்டு வா. என் பக்கத்துல எம்புட்டு இடம் இருக்கு பாரு"

கார்த்தி அழைக்க அதில் பதறியவள், "ஐயோ இந்த கார்த்தி மாமா காரியத்தையே கெடுத்துடும் போல" மனதில் வறுத்து,
"இல்ல மாமா இங்கயே எனக்கு வசதியா தான் இருக்கு, நான் இங்கயே உக்காந்துக்கிறேன்" என்றிட, எதையாவது பண்ணு என கார்த்தி விட்டு விட்டான்.

பைரவியை பார்த்து சிரித்த காயு “பைரவி நல்லா இருக்கியா" என்றதும்,
“ஹ்ம்! நல்லா இருக்க காயத்ரி" என்றாள் வரவைக்கப்பட்ட புன்னகையுடன்.

“பைரவி காயு உன்னை விட மூணு வயசு பெரியவ, நீயி என்ன காயத்ரின்னு பேர சொல்லி கூப்பிட்றவ, ஒழுங்கா அக்கான்னு சொல்லி பழகு” சற்றே அட்டலாக பூஜா சொன்னதும்,

“அதானே பையூ நீயி என்ன அண்ணிய பேர் சொல்ற. ஏண்ணே இதெல்லாம் நீயி கேட்க மாட்டியா” ரதி கதிரிடம் கேட்டாள்.

“ரதி விடு, அவ என்ன இன்னைக்கு நேத்தா என்னைய பேர் சொல்லி கூப்பிடறா, நானே அதை பெருசா எடுத்துக்கல விடுங்க” காயு பெருந்தன்மையாக கூற,

“அது எப்படி ஆத்தா விடறது, முறைன்னு ஒன்னு இருக்குல்ல. இதுநாள் வரைக்கும் சின்ன பிள்ளைன்னு கண்டுக்காம விட்டாச்சு. இன்னும் நாளு நாளுல நீயி ஒருத்தனுக்கு வாக்கப்பட்டு குடும்ப பொறுப்ப கைல எடுத்து நடத்த போறாவ, உனக்கு நியாயமா கிடைக்க வேண்டிய மரியாதைய குடுத்துத் தானே ஆகணும்" வள்ளி பாட்டி சொல்ல, பைரவிக்கு பற்றி எரிந்தது.

“விடு பாட்டி, சின்ன பிள்ளை தானே எல்லாம் போக போக சரியாகிடும்..” கதிர் சொல்ல,

“ஆமா ஆம்பளயானும் பொண்டாட்டியும் ஒரே மாறி சொல்லி சமாளிச்சி புடுவியலே..” வள்ளி பாட்டி சொல்லி சிரிக்க, கதிர் நமட்டு சிரிப்போடு காயுவை பார்த்து அப்டியா என்பது போல் கண்களால் சமிக்கை செய்ய, அதில் வெட்கம் கொண்டு காயு குனிந்து கொள்ள, பைரவி பொறாமையில் வெந்து கொண்டு இருந்தாள்.

அதே நேரம் கதிருக்கு ஒரு மெசேஜ் வர, அதை எடுத்து பார்த்தவன், “அம்மா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் வெளிய கெளம்புறேன்" காயுவை பார்த்துக் கொண்டே சொல்ல,

“அடேய், கதிரு அம்மா நான் இந்த பக்கம் இருக்கேன்டா” கற்பகம் கிண்டல் செய்யவும், அதில் அனைவரும் சிரிக்கும் சத்தத்தில் கற்பகம் புறம் திரும்பி அசடு வழிந்தான் கதிர்.
“ஓ! இங்க இருக்கீயளா ம்மா. நான் கவனிக்கல..” என்றவன் மீண்டும் குருவை ஒரு பார்வை பார்த்து செல்லப் போன சமையம்,
“ஏம்பா கதிரு செத்த நில்லு” கஜா வெளியே செல்லப் போன கதிரை அழைக்க, கதிர் திரும்பி “சொல்லுங்க அத்தை" என்றான்.

“என்னப்பா, கல்யாண மாப்பிளை நீயி. கல்யாணத்தை இவ்ளோ கிட்டத்துல வச்சிக்கிட்டு வெளிய கண்ட மேனிக்கும் அலைஞ்சி திரிஞ்சா நல்லாவா இருக்கும்" மகியை கண்டு பிடித்து கூட்டி வந்த எரிச்சலை மறைத்துக் கொண்டு பதமாக பேசினாள்.

“வேல இருக்கு அத்தை அதே. போய்ட்டு வேல முடிஞ்சதும் பொழுதுக்குள்ள வந்துடுவேன்" என்றான் நிதானமாக.

“இல்ல கதிரு நீயி எப்டி சொன்னாலும், கண்ட நேரமெல்லாம் நீயி வெளிய போறது சரி இல்ல" கஜா ஏதோ சொல்ல வர,

அதற்குள் கதிருக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு வந்து கொண்டே இருக்க “அத்தை முக்கியமான போன் வருது நான் வந்து பேசுறன்” என்றவன், கஜாவின் பதிலை எதிர்பாராமல் அவசரமாக வெளியே வந்தான். சரியாக அதே நேரம் அர்ஜூன் விசில் அடித்தபடி ஸ்டைலாக காரை விட்டு இறங்கி நடந்து வந்தான்.

அவனை பார்த்த கதிர் "அர்ஜூன் நில்லு" என அழுத்தமாக அதே சமயம் அதிகாரமாக அழைத்தான். அர்ஜூன் அன்றொரு நாள், கதிரை முகத்தில் அடித்தார் போன்று பேசிய பிறகு, இன்று தான் கதிர் அர்ஜூனை அழைக்கிறான்.

கதிரை என்ன என்பது போல் பார்த்து, அர்ஜூன் நிற்க, அவன் தோளில் கை வைத்து அழுத்தம் கூட்டி, அவன் கண்களை நேருக்கு நேர் கூர்மையாக பார்த்து, அர்ஜூன் காதருகில் சென்ற கதிர் "ஆல் த பெஸ்ட் பிரதர்..." என்றவன் ஒரு புன்னகையை உதிர்த்து அவனை விட்டு பிரிந்து, விருவிருவென அவன் பைக்கில் சென்றுவிட்டான்.

போகும் கதிரை பார்த்து மெலிதாக சிரித்த அர்ஜூன், வீட்டினுள் வர, அதுவரை மகி எல்லாரிடமும் சிரித்து பேசி கலகலத்து இருந்தவள், அர்ஜூனை கண்டதும் அவள் மனதுக்குள் சூறாவளி சுழற்றி அடிக்க, கண்கள் படபடக்க ஏதேதோ உணர்வுகளில் சிக்கி தவித்தவள் "அத்தான்" என அவள் அடி மனது கூக்குரல் இட்டு கத்தியது.

அர்ஜூன் நின்று மகியை பார்த்து, யாரும் அறியா வன்னம் கண்ணடித்து உதடு குவித்து பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்து, மஞ்சள் வண்ண பட்டு லேசாக நலுங்கி, அவளின் இடை சங்கிலி தழுவி இருந்த வெண் இடையில் தன் கண்களை ரசனையாக பதிக்க, ஏற்கனவே அவன் செய்த லீலைகளில் அவள் முகம் செவ்வானமாய் சிவந்து காட்சியளிக்க, ஆடவனின் கண் போன திசை கண்டு திட்டுக்கிட்டவள், அவனை முறைத்துக் கொண்டே தன் சேலையை வைத்து இடையை மறைக்க, அதில் முகம் சுணங்கி அவளை கண்டு இதழ் வளைத்து அர்ஜூன் சிரித்தான்.

“க்கும்...” என செருமிய குரு “மாப்ள எல்லாரும் இருக்காவ, செத்த உன் மன்மதலீலைய ஓரம் தள்ளி வையி. ஆனா நீயி என் தங்கச்சிய பாத்து கண்ணடிச்சி, பறக்குற முத்தம் குடுத்ததை மட்டும் நான் பாக்கல. அவளை குறுகுறுன்னு பாத்த எதையும் நான் சத்தியமா பாக்கவே இல்ல மாப்ள...” பின்னால் கைகளை கட்டியபடி எங்கோ பார்த்து குரு சொல்ல,

குருவை தோளோடு அணைத்த அர்ஜூன் அவன் காதில் கிசுகிசுப்பாக, “இப்படி பாக்கல பாக்கலனு சொல்லிட்டு, எல்லாத்தையும் பாத்துருக்கியே மாமா. உன்னை என்ன செய்யலாம்" என்ற அர்ஜூன் பல்லை கடித்து குரு தோளில் அழுத்தம் கூட்டும் போது,

“எலேய் தம்பிக்காரா, நானும் எதையும் பாக்கலடா” கார்த்தியும் நக்கலாக சொல்ல,

“ஆமா மாமா, நானும் கூட எதையும் பாக்கல" சூர்யா நமட்டு சிரிப்போடு சொல்ல, அப்போது தான் எங்கோ சென்று வீட்டுக்கு வந்த ரிஷி, இவர்கள் பேசியதை பின்னால் நின்று கேட்டு "என்னத்தடா நீங்க பாக்கல..?" என்று கேட்டான்.

இதை கேட்ட அர்ஜூன் முழிக்க “பண்றதையும் பண்ணிட்டு முழிக்கிறத பாரு..” என்ற கார்த்தி, அர்ஜூன் குமட்டியிலே குத்த

"ஐயோ யப்பா டேய் ஆள விடுங்கடா. உங்க முன்னாடி ஏதோ தெரியாம பண்ணிட்டேன். இனிமே எல்லாம் தனியா பண்ணிக்கிறேன்...” என்றவன் விட்டால் போதுமென ஓடி விட்டான்.

அர்ஜூன் ஓடிய திசையை பார்த்து "டேய் அர்ஜூன், அப்படி என்னத்த டா நீ பண்ணத இவனுங்க பாக்கல. சொல்லிட்டு போடா...” என்று ரிஷி கத்த,

ரிஷி தோளில் கை போட்ட கார்த்தி “அவன் என்ன பண்ணான்னு அவசியம் தெரிஞ்சிக்கணுமா...” என்றான் கேள்வியாக..

ரிஷி ஆம் என அவசரமாக தலையசைக்க, சரி சொல்றன் கேளு "அவன் என்னத்த பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு போனானோ, அதத்தே பண்ணான். அதத்தே நாங்க யாரும் பாக்கலன்னு சொன்னோம்" கார்த்தி தெளிவாக ரிஷியை குழப்பி விட,

தலைக்கு மேல் கும்பிட்டு போட்டவன் “போதும் ராசா, எனக்கு இந்த தெளிவே போதும். இதுக்கு மேல உன் தெளிவான பேச்ச கேட்டேன்னு வையி, அப்புறம் விபரிதமா ஏதாவது எனக்கு ஆகிடும். வழிய விடு...” என்றவன் மகியிடம் சிறிது நேரம் பேசி விட்டு, அவன் அறைக்கு சென்றான்.

கஜா பங்கஜம் இருவரும், அர்ஜூன் வந்ததில் இருந்து அவனையே பார்த்து கொண்டு இருந்தவர்களின் எண்ணம் மட்டும் நல்லதாக இல்லை. பைரவி அர்ஜூனை கண்டு வாயை பிளந்து விட்டாள். இனி வரும் நாட்களில் இவர்களின் தீய எண்ணங்கள் நிறைவேறுமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

அர்ஜூன் போன திசையை பார்த்த மகி, கீழ் உதட்டை கடித்து தனக்குள் வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டவளாக அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல், தனதறைக்கு ஓடி விட, குரு கார்த்தி சூர்யா மூவரம் சிரித்து கொண்டனர்.

தொடரும்.
 
Top