Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
275
Reaction score
297
Points
63
அத்தியாயம் - 19

"காவ்யா யாரு உங்க பொண்ணு தானே.." குருவின் கேள்வியில் தந்தை மகன் இருவரும் ஒரு நிமிடம் இதயம் திடுக்கிட்டு நிற்க, மது மனம் படபடக்க குரு முன்னே ஓடி வந்தவளாக,

"தம்பி காவ்யா என் மக தான், அவள உனக்கு தெரியுமா.." அத்தனை ஆவலாக தாய் மனம் உருக கேட்ட விதத்தில் யாதவியின் உள்ளம் திக்கென்றது.

"என்னது காவ்யா இவங்க பொண்ணா.." அதிர்ந்த விழிகள் மீளாது அப்படியே அவள் குருவை பார்க்க, தீ விழி சிவக்க நின்றது அவன் மட்டுமல்ல ரகுவும் கூடத்தான்.

"என் மக இப்ப எங்கே இருக்கா தம்பி..? அவ நல்லா தானே இருக்கா..? சொல்லுப்பா" மது விடாமல் கேட்டிட,

"அவங்க இப்ப.." குரு ஏதோ சொல்ல வரும் போதே,

"மதூஉஉ.. பொறவு பேசிக்கலாம் உள்ள போஓஓஓஓ.." வீரின் வீரியம் வாய்ந்த குரல் அவ்வீட்டையே உளுக்கியதில், நெஞ்சி பதறி போயினர் அனைவரும்.

கணவனின் திடீர் கோவம் புரியாமல் தவித்தவளாக, "இ.இல்ல மாமா.. ந்.நம்ப காவ்யா.." என்றவளை கத்தி பார்வையால் துளைத்த வீர்,

"போறியா இல்லையாஆஆ.." இரும்பு குரல் செவிகளுக்குள் உடைந்தது.

"ஏன் மாமா, நம்ம பொண்ணு எங்க இருக்கா எப்டி இருக்கானு உங்களுக்கு தெரிஞ்சிக்க ஆசை இல்லையா.." பல வருடங்களுக்கு பிறகு மகளை பற்றி அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்க, எப்படி சாதாரணமாக ஒரு தாயால் கடந்து செல்ல முடியும்!

முதல் முறையாக கணவன் சொல்வதை கேளாது, அவனையே எதிர் கேள்வி கேட்டு நின்ற மனைவியை வெளியே திடமாக பார்த்தாலும், உள்ளுக்குள் நொறுங்கிய வலி அவன் தானே அறிவான்.

"ஒனக்கு முன்னாடியே காவ்யா எனக்கு மக.. என்னைய விடவா அவமேல ஒனக்கு பாசம் பொத்துட்டு வருது.. மறுவாதையா உள்ள போ இல்ல அறைஞ்சிபுடுவேன் பாத்துக்க.." எதையோ மறைக்க வேண்டி மனைவி மீது எரிந்து விழ, விழிகளில் நீர் கோர்க்க கணவனை பார்த்தாள் மது.

"எங்கிட்டருந்து எதை மறைக்க இந்த கோவம் மாமா.." மதுவின் குரல் நடுங்கி ஒலிக்க, அடி மேல் அடி வைத்து வீரை நெருங்கிய விதமே ஒருமாதிரி கைகால் வெலவெலத்து வந்தது அவனுக்கு.

"ந்.ந்நா என்னத்த டி மறைக்க போறேன்.. புதுசா நீதேன் என்னைய எதிர்த்து பேச ஆரம்பிச்சி இருக்க, பசங்க முன்னாடி கை நீட்ட வச்சிடாத பேசாம போய்டு.." மனைவியிடம் கடுமையை காட்டிய வீர், அவளின் சந்தேக விழிகளை சந்திக்க முடியாதவனாக,

"இங்க பாருங்க எம் எல் ஏ தம்பி.. நீங்க என் மருமக புள்ளைக்கு சொந்தம், அம்புட்டு தூரத்துல இருந்து வந்ததுக்கு காப்பி தண்ணி வேணும்னா குடிச்சிட்டு போங்க, எங்க குடும்ப விசயத்த நாங்க பாத்துக்குறோம்.." குருவிடம் அழுத்தம் திருத்தமாக சொல்லி மதுவை உள்ளே இழுத்து செல்ல முனைய, அவள் அசைந்தாள் இல்லை.

"என்ன டி துளிர் உட்டு போச்சா ஒனக்கு.." பற்களை கடித்தான் வீர்.

"இத்தனை வருசத்துல எம்புட்டு தரம் காவ்யா பத்தி உங்ககிட்ட கேட்டிருப்பேன்.. அப்போல்லாம் எங்கேயோ நல்லா இருப்பானு சொல்லி என்னைய சமாதானம் பண்ணுனீங்க, நானும் அரை மனசோட என் மக எங்கிருந்தாலும் நல்லா இருந்தா போதும்னு நினைச்சி பேசாம இருந்துட்டேன்..

ஆனா இப்ப யோசிக்கிறேன், உங்கள கண்மூடித்தனமா நம்பி ஏமாந்துட்டேனோனு.." மனைவியின் உடைந்த வார்த்தையில் நெஞ்சம் சுக்குநூறாகி தடுமாறி நின்றான் வீர்.

"எப்பவும் உங்க கோவத்துல ஒரு நியாயம் இருக்குமே தவிர பயம் இருக்காது மாமா.. இன்னைக்கு உங்க கண்ணுல ந்நா பாக்குற பயம் புதுசு.. இந்த தடுமாற்றம் புதுசு.. ஏதோ ஒன்னுத்த மறைக்க பதறி அடிச்சி ஓடி ஒளிய நினைக்கிற என் புருசன் ரொம்ப ரொம்ப புதுசு..

இதுவரைக்கும் உங்கள மீறி ந்நா எதுவுமே வாய் திறந்தது இல்ல மாமா.. இன்னைக்கு கேக்குறேன் தயவுசெய்து மறைக்காம நெசத்த மட்டும் சொல்லுங்க, நம்ம பொண்ணுக்கு என்னாச்சி.. அவ நல்லா தானே இருக்கா" கண்ணீரில் கரைந்த மது கணவனின் கரத்தை பற்றி பரிதவித்து கெஞ்சிட, வீர் முகம் குப்பென வியர்த்து மகனை பார்த்தான்.

ரகு கூட கிட்டதட்ட வீரின் நிலையில் தான் மனமும் உடலும் இறுகி செந்தனலாக நின்றிருந்தான். மிதுக்கு அங்கு நடப்பது எதுவும் புரியாமல் மலங்க மலங்க விழித்தவளாக ரகு கையை பிடிக்க, குனிந்து தன் மனைவியை பார்த்தவன் ஆழ மூச்செடுத்து அவள் கரத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டவனின் மனதில் புயல் வீசியது.

"ஆக இந்த ரகுவும் அவன் அப்பாவும், வீட்ல உள்ளவங்களுக்கு காவ்யாவ பத்தின உண்மைகளை எதுவும் சொல்லாம மறச்சி வச்சி இருக்காங்களா?" யோசனையான குரு, மது அழுது ஆர்ப்பாட்டம் செய்வதை கலக்கமாக பார்த்திருந்த யாதவியை பெருமூச்சு விட்டு பார்த்தான்.

"இவ்வளவு தூரம் ஆன பிறகும் அத்தனை பெரிய உண்மைய மறச்சி வைக்க என்ன அவசியம் இருக்கு..? சொல்ல வேண்டியது தானே உங்க பொண்ணு காவ்யா செத்துட்டான்ற உண்மைய.. அப்பனும் மகனும் தனியா நின்னு அவ காரியத்த முடிச்சிட்டு வந்தத" மனதை கல்லாக்கிக்கொண்டு சட்டென உண்மையை போட்டுடைக்க, அதிர்ச்சியில் நெஞ்சடைத்து போனாள் மதுபாலா.

"எ..என்ன.. எ..எ.ன்.. ப்.பொண்ணு.. இல்ல
இல்ல.. என்ன மாமா இந்த தம்பி ஏதேதோ உளறுது நீங்க அமைதியா நிக்கிறீங்க..

என் நெஞ்சே வெடிச்சிடும் போல, வாய தொறந்து பேசுங்க.."

"டேய்.. டேய்.. ரகு.. நீயாவது சொல்லு டா என் பொண்ணு உசுரோட இருக்கான்னு சொல்லு டா.. ஐய்யோஓஓ.. யாராவது என் பொண்ணு உசுரோட இருக்கானு சொல்லுங்களேன்ன்ன்.."

கணவனையும் மகனையும் மாறி மாறி உளுக்கி எடுத்து அமைதிக்கு பெயர் போனவள், பைத்தியக்காரி போல நெஞ்சிலும் தலையிலும் அடித்துக்கொண்டு கதறுவதை கண்டு அனைவருக்குமே கண்ணில் நீர் அரும்பியது.

"அம்மா அமைதியா இரும்மா.. நிதானமாக நம்ம என்னனு கேக்கலாம்" நிலா ஓடி வந்து அவளை தாங்கி பிடிக்க, அப்போதும் மது அடங்குவதாக இல்லை.

"என் புள்ளைய என் கண்ணுல கூட காட்டாம என்ன டா பண்ணீங்க அவள.." தரையில் விழுந்து கத்தி அழுத மதுவை வெறிக்க கண்ட வீரின் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.

"அப்பாஆ.." ரகு அவன் தோளை தொட்டவனாக,
"டேய்.. எல்லாம் ஒன்னால தான் டா நாயே.." வெறியாக கத்தி சிவகுரு சட்டையை பாய்ந்து பிடித்த வேகத்தில் ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டிருக்க, அக்கா தங்கை இருவரும் வாய் பொத்தி அதிர்ந்தனர்.

"உண்மை என்னைக்காவது ஒருநாள் வெளிய வந்தே தீரும் டா.. நியாயமா பாத்தா இந்த உண்மையெல்லாம் நீ தான் உன் அம்மாகிட்ட எடுத்து சொல்லி இருக்கணும்.. ஆனா என்ன எம்மூலமா வெளிய வர வேண்டியதா போச்சி..

இதை நினைச்சி நீ சந்தோஷம் தான் டா படனும் தடிமாட்டு பயலே.." குருவும் தன் பங்குக்கு ரகு முகத்தில் குத்தியவனாக இருவரும் சண்டை பிடிக்க,

"மாமா அவரை விடுங்க" ஒருபக்கம் யாதவியும்,

"வீரா மாமாவ விடுங்க ப்ளீஸ்.." மற்றொரு பக்கம் மிதுவும் அவர்களை பிரிக்க போராடி எப்படியோ தங்கள் பக்கம் நிறுத்திக்கொள்ள, புறங்கையால் முகத்தை துடைத்தபடி தர்க்கம் தீராது இருவரும் முறைத்துக்கொண்டனர்.

"தயவுசெய்து யாரும் சண்டை போட்டுக்காதீங்க ப்ளீஸ்.. உங்க துக்கம் கவலை ஆதங்கம் எல்லாமே தீர்க்க முடியாதது தான், அதுக்காக ஒரு அம்மாகிட்ட தான் பொண்ணு இறந்து போன விஷத்தை எத்தனை நாள் மறச்சி வைக்க முடியும்னு நினைக்கிறீங்க..

என்னைக்காவது நம்ம பொண்ணு நம்மள தேடி வந்திட மாட்டாளான்னு அவங்க ஒவ்வொரு முறையும் ஏங்கும் போது உங்களுக்கு தானே குற்றவுணர்ச்சி உண்டாக்கும்.. நிம்மதிய இழக்க வைக்கும்..

அதுக்கு பதிலா உண்மைய சொல்லிட்டு இருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காதே! இனியும் ஆண்டிய ஏமாத்துறேன்ற பேர்ல உங்கள நீங்களே ஏமாத்திக்காதீங்க.. இவ்வளவு தூரம் ஆன பின்ன தயவுசெய்து அவங்ககிட்ட உண்மைய சொல்லிடுங்க ப்ளீஸ்.. பாவம் ஆண்டி எப்டி அழறாங்க பாருங்க.."

மாமியாரின் வெடித்த அழுகை தாங்காது மிது கண்களிலும் கண்ணீரோடு கணவனிடமும் மாமனாரிடமும் கெஞ்சிட, அப்போதும் ரகு இறுகி நிற்க, கண்ணீரில் சிவந்திருக்கும் மனைவி முகம் பார்க்க முடியாது வேதனையில் தேகம் தளர்ந்து பொத்தென அமர்ந்து விட்டான் வீர்.

"எல்லாரும் தயவுசெய்து என்ன மன்னிச்சிடுங்க.. இன்னைக்கு நீங்க எல்லாரும் ஒரு உயிரை பறிகொடுத்துட்டு இந்த அளவுக்கு துக்கத்தை அனுபவிக்க, என் குடும்பமும் நானும் ஒருவகையில காரணமா அமஞ்சிட்டோம்..

காவ்யா வேற யாரும் இல்ல, என்னோட சொந்த அண்ணி.. என் அண்ணன் நிரஞ்சனோட மனைவி.." யாதவி குரல் நடுங்க சொன்னதை கேட்டு, மிதுக்கும் மதுக்கும் தான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.

நிரஞ்சன், யாதவி, மிதுஷாஸ்ரீ மூவரும் உடன் பிறந்த சகோதர சகோதரிகள். யாதவிக்கும் இவனுக்கும் 10 ஆண்டுகள் வயது இடைவெளி, மிதுவோடு 15 ஆண்டுகள் வயது இடைவெளி. தந்தை நடத்தும் ஜவுளிக்கடை மீது நாட்டம் இல்லாத நிரஞ்சன், சொந்தமாக உணவு உற்பத்தி செய்யும் நிறுவனத்தை சிறிதாக தொடங்கிய காலம் அது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு,

26 வயது இளைஞன், மேல் பார்க்க வசிய தோற்றம் கொண்டவனின் அக தோற்றத்தை யவரும் அறிந்திலர்.

யாதவி பதினோராம் வகுப்பும், மிது ஆறாம் வகுப்பும் படித்துக்கொண்டிருக்க, நிரஞ்சன் மட்டும் குடுப்பத்துடன் சரியான ஒட்டுதலின்றி தனி ட்ராக்கில் சென்றுகொண்டிருந்தான். பெற்றோர்களும் மகன் கடினமாக உழைப்பதால் வேலைபளு அதிகம் இருக்கும் என நினைத்து பெண் பிள்ளைகளின் மீது மட்டும் கவனத்தை செலுத்த தொடங்கி விட்டனர்.

காவ்யா கல்லூரி முடித்து விட்டு இளம் சிட்டு போல துள்ளி மகிழ்ந்த அழகிய தருணங்கள் அஃது.

பிள்ளைகளின் விருப்பமே தன் விருப்பம் என அவர்கள் என்ன சொன்னாலும் தட்டாமல் ஒப்புக்கொள்ளும் வீர்,

"அப்பா படிச்சி முடுச்சிட்டேன், வேலைக்கு போகவா.." கண்கள் சிமிட்டி மூத்த மகள் கேட்ட அழகில் மயங்கி,

"உன் விருப்பம் கண்ணு.." என்றான் மலராத உதடு சிரிக்க.

"என் செல்ல அப்பா.. தங்க அப்பா.. உம்மா.. உம்மா.. உம்மா.." அத்தனை வயதிலும் அவன் மடியில் அமர்ந்து சிறுமியாக தந்தையை கொஞ்சும் மகளை, சிறு முறைப்புடன் கண்டாள் மது.

"இப்ப வேலைக்கு போக என்ன அவசியம் உனக்கு.. கல்யாணம் கட்டிட்டு போற வரைக்கும் அம்மாகூட இருந்தா ஆகாதா.." அவளுக்கு மட்டும் கேட்க கடிந்துகொண்ட தாயை பாவமாக பார்த்தவளாக,

"ப்ளீஸ் ம்மா.. ஒரு எக்ஸ்பீரியன்ஸ்க்காக ஆறு மாசமாவது போய்ட்டு வரேனே.." அவள் தாடை பிடித்து ஆட்டி கெஞ்ச, கணவனை நோக்கினாள் பதிலுக்கு.

"புள்ள ஆச படுது, நானே கூட்டிட்டு போய்ட்டு கூட்டியாறேன் பயப்படாம சரி சொல்லு டி.." மனைவியை சமாதானம் செய்ய, சரி என்றாள் பூரண மனதுடன்.

கிராம எல்லையில் மற்றுமொரு புதிய கிளையாக தொடங்கி இருக்கும் நிரஞ்சனின் புட் ஃபேக்டரியில், உணவு பொருளின் தரத்தை சரிபார்க்கும் மேனேஜர் பணியில் அமர்வானாள் காவ்யா.

பிடித்த வேலை, நல்ல சம்பளம், அன்பான குடும்பம் என நன்றாக சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில் புயலாக இடையில் வீசினான் நிரஞ்சன்.

அன்று ஃபேக்டரியை மேற்பார்வையிட வந்தவன் கண்ணில் அழகு பதுமை சிக்கிக்கொண்டது. முதலில் சகஜமாக அவளை கடந்தவன், நாளாக நாளாக காவ்யா மீது வந்த அதீத ஈர்ப்பினால் கவனம் சிதைந்து காதலில் விழுந்தான் பைத்தியமாக.

முதலில் அவன் காதலை ஏற்க மறுத்த காவ்யா, என்ன காரணத்தால் தானும் நிரஞ்சன் மீது காதல் வயப்பட்டாளோ!?

தானும் காதலித்தாள் தந்தை அறியாது.

அதுவே அவள் வாழ்க்கையை தடம்புரட்டி இடரி விழ வைக்கும் என தெரிந்திருந்தால் அப்போதே அக்காதலை தூக்கி வீசி இருப்பாளோ என்னவோ! இன்று அவள் காதலும் இல்லை அவளும் இல்லை.

உயிர் போகும் அளவிற்கு அப்படி காவ்யா வாழ்வில் என்ன நடந்தது, அறிய வேண்டுமா? கமெண்ட் பண்ணுங்க அறியலாம் 😅

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 19
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top