• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
270
Reaction score
234
Points
43
இதழ் 21


ரதி முகத்தை மூடி அழுது கொண்டு இருக்க “இப்ப அழுது என்ன பிரயோஜனம். அறிவிருக்கா ரதி உனக்கு இப்படியா பண்ணி வைப்ப, கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா. இன்னும் என்ன சின்ன குழந்தையா ரதி நீயி. நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு உனக்கு பிரிச்சி பாக்க தெரியாதா.

எல்லாத்துக்கும் என்னைய கூட கூட்டிட்டு போவியே ரதி. அன்னைக்கு நான் வரதுக்குள்ள எதுக்கு டி தனியா போன. என்ன பண்றதுன்னே தெரியலையே ரதி. இப்ப நீ எம்புட்டு பெரிய பிரச்சனைல மாட்டிட்டு இருக்கன்னு தெரியுமா. இதை பத்தி யாருகிட்ட என்ன டி சொல்றது”அவளை கோவமாக திட்டிய ராதாக்கும் கடைசியில் இயலாமையில் அழுயாக வந்தது.

அந்நேரம் சத்தம் கேட்டு அங்கு வந்த ரிஷி, ராதா திட்டுவதும், ரதி அழுவதையும் பார்த்தவன், ராதா திட்டுவதிலேயே ஏதோ ரதிக்கு பிரச்சனை என்று புரிய அழும் ரதியை பார்த்து கொண்டே “ராதா ஏன் உன் பிரண்ட் அழுதுட்டு இருக்கா? நீயும் வேற கோவமா பேசுற என்ன பிரச்னை” என்றான் நிதானமாக.

ரிஷியை அங்கு எதிர்ப்பார்க்காத இருவரும். பயத்தில் மிரண்டு போய் பார்க்க “பயப்படாதீங்க என்னால உங்களுக்கு எந்த ப்ராப்லமும் வராது. எந்த பிரச்சனையா இருந்தாலும் என்னை நம்பி சொல்லுங்க. என்னால முடிஞ்ச உதவிய நான் பண்றன்” என்று ரிஷி சொல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, ரதி, ராதாவிடம் கண்ணீருடன் சொல்ல வேண்டாம் என தலையசைத்தாள்.

அதை பார்த்த ரிஷி “ரதி இங்க பாரு உனக்கு விருப்பம் இல்லன்னா என்கிட்ட சொல்ல வேணாம். ஆனா உன் அண்ணனுங்க கிட்டயாவது சொல்லலாம்ல" என்ற ரிஷிக்கு ரதியின் அழுகை தோய்ந்த முகம் அவனையும் வாட்ட, தன்னிடம் சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை, என்னவென்றே தெரியாத அவளுடைய பிரச்சனையை எப்படியாவது தீர்க்க வழி சொன்னான்.

அவன் சொன்னதை கேட்ட ரதி கண்ணீருடன் தலை குனிந்து கொள்ள, “அண்ணே இப்ப மாமனுங்க கிட்டக்க சொல்றதுதே பயமா இருக்கு" கவலையாக சொன்ன ராதாவை புரியாமல் பார்த்தான்.

“சரி என்ன பிரச்சனையா இருந்தாலும் அதுக்கு ஒரு தீர்வு உண்டு, முடிஞ்ச அளவுக்கு பிரச்சனைய பெரிசு படுத்தாம யாருகிட்ட சொன்னா அத சீக்கிரம் சரி பண்ண முடியும்னு உன் மனசுக்கு படுதோ அவங்கக்கிட்ட சொல்லி முடிக்கப் பாரு ரதி. எதையும் வளர விடக் கூடாது முலையிலேயே கிள்ளி எறிஞ்சிடணும்” என்றவன்,

“அப்படி யாருகிட்டயும் சொல்ல முடியலைன்னா எந்த உதவின்னாலும் தயங்காம என்ன கூப்பிடு" அழுத்தமாக சொல்லி ரதியை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றான்.

“அக்கா என்ன பண்ற?” என்றபடி சூர்யா மகி அறைக்கு வர, துணிகளை மடைத்து கப்போர்டில் அடுக்கிக் கொண்டு இருந்த மகி,
“வா சூர்யா, காஞ்ச துணியதே மடிச்சு வச்சிட்டு இருக்கேன். உனக்கு எதனா வேணுமா சூர்யா” என்றாள்.

“எனக்கு எதுவும் வேணாக்கா. நான் சும்மாதே வந்தேன்" என்று மெத்தையில் சாய்ந்து அமர்ந்தவன், மகி முகத்தையே ஆராய்ந்த படி உற்றுப் பார்த்தான்.

“என்னடா என்னைய புதுசா பாக்குற மாதிரி அப்படி பாக்குற" சிரித்து கொண்டே துணி மடித்தபடி மகி கேட்க,

“ஆமாக்கா இப்பலாம் நீ புதுசா தான் தெரியற. அதே அப்படி என்ன என் அக்காக்கிட்ட புதுசா இருக்குன்னு கண்டு புடிச்சிட்டு இருக்கேன்” சூர்யா தீவிரமான முக பாவனைவுடன் சொல்ல,

“ஹான்! அப்படியா? அதெல்லாம் புதுசாலாம் எதுவும் இல்ல சூர்யா நான் எப்பவும் போலதே இருக்கன்" என்ற மகி திரும்பி நின்று சொன்னாள்.

அவள் கையை பிடித்து அவன் பக்கத்தில் அமரவைத்து அவள் முகத்தை அவன்புறம் திருப்பி “நீயி எதை மறைக்க நினைக்கிறன்னு எனக்கு தெரியலக்கா. ஆனா உன் முகம் இப்பலாம் எதையோ நெனச்சி கவலைல இருக்குறத நானும் கொஞ்ச நாளா பாத்துட்டுதே இருக்கேன்.

அது ஏன் எதுக்குன்னுலாம் நான் கேக்கல. உனக்கு எது சரின்னு படுதோ அத பண்ணுக்கா. நீ சிரிச்ச முகமா சந்தோஷமா இருந்தாலே எனக்கு போதும்.” என்ற சூர்யாவை பார்த்த மகி,

“என்னடா எனக்கு அறிவுரை எல்லாம் கொடுக்குற படிப்பு முடிஞ்சதும் பெரிய மனுஷனா ஆகிட்ட போலயே” என்றாள் சூர்யா தலையை கலைத்து விட்டு சிரித்த முகமாக.

“பின்ன, என் அக்கா இப்படி சிரிச்சிட்டே இருந்தா, நான் ஏன் அறிவுரை குடுக்க போறன்” என்று அவள் கன்னம் பிடித்து ஆட்டிட,

“என்ன இங்க, என்னை மட்டும் தனியா விட்டுட்டு ரெண்டு பேரும் கொஞ்சிட்டு இருக்கீங்க” கேட்டபடி வந்தாள் ராதா.

“ஆமாடி மூட்டை பூச்சி உன்னை விட்டு அப்படியே கொஞ்சிக்கிட்டாங்க. அதான் நடுவுல நந்தி மாதிரி வந்துட்டியே அப்புறம் என்ன பேச்சி வேண்டி கெடக்கு" சூர்யா பொய்யாய் அலுத்து கொள்ள,

“அக்கா இங்க பாரு இந்த தடியன் என்ன எப்படிலாம் பேசுறான்னு" ராதா சினுங்கவும்,
“டேய் சூர்யா அவளும் உனக்கு அக்கா தானடா. அது என்ன அவளை மட்டும் மரியாதை இல்லாம பேசுற" மகி கண்டிக்க,

“அக்கா உனக்கு இவள பத்தி எதுவும் தெரியாது. அவ என்னென்ன பண்ணி வச்சிருக்கா தெரியுமா. அதை எல்லாம் சொன்னா நீயே அவள திட்டுவ. அவ...” என சூர்யா கோவமாக ஏதோ சொல்ல வர, வேகமாக வந்து அவன் வாயை பொத்திய ராதா,

“ஐயோ சூர்யா நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படியெல்லாம் பேசுற டா. நீயி என்னைய எப்படி வேணாலும் கூப்புடு. உனக்கு இல்லாத உரிமையா. நான் உன்னை எதுவும் சொல்லல சும்மா விளையாட்டுக்குதே அக்காட்ட சொன்னேன்" கட்டாயமாக பல் இளித்தாள்.

இதுபோல் அவர்கள் எப்போதும் போடும் சண்டை தான் என மகி நினைத்து “சரி சரி உங்க சண்டைய கொஞ்சம் நிறுத்துங்க" என்றவள்,
“ராதா இங்க வா” என அவளை தன் அருகில் மகி அமர வைக்க போக,
“அக்கா அதெல்லாம் இல்ல நான்தே உன் பக்கத்துல நடுவுல உக்காருவன்” சூர்யா அடம்பிடித்தான்.

இப்படி இருவரும் மாறி மாறி சண்டையிட “ஐயோ, போதும் நிறுத்துங்க...” என்ற மகி “இப்ப என்ன நான் உங்க ரெண்டு பேரு கூடவும் உக்காரனும் அதேனே" என்றவள் எழுந்து இருவருக்கும் நடுவே அமர்ந்து, இருவர் கைகளையும் எடுத்து மடிமேல் வைத்து பிடித்து கொண்டு போதுமா என்க, இருவரும் அவளின் இருப்பக்க தோள் மேல் சாய்ந்து கொண்டனர்.


“அக்கா...”

“சொல்லு ராதா"

“உன்கிட்ட ஒரு விஷயத்த பத்தி சொல்லனும். ஆனா எப்படின்னுதே தெரியல” ராதா தயங்கி நிறுத்திட,

“என்னாச்சு ராதா எதா இருந்தாலும் சொல்லு. இப்படி உனக்குள்ளயே போட்டு வருத்தினா குழப்பந்தே மிஞ்சும்” மகி அவளை ஆதூரமாக தடவிக்கொடுத்தாள்.

“அது அக்கா மாமாக் கூட சண்டை போட்டுட்டேன்கா. இனிமே என்கிட்ட பேசவே கூடாதுன்னு சொல்லிட்டு வந்துட்டன்” என்றாள் வருத்தமாக.

“ஆமா இவ இப்படி சொல்லலன்னா தானே அதிசயம். பாவம் கல்யாணத்துக்கு முன்னாடியே மாமனப் போட்டு இந்த அலம்பல் பண்றியே, இன்னும் உங்க ரெண்டு பேருக்கு கல்யாணம் ஆகிட்டா மாமாவோட நிலைமை என்ன ஆகும்னு நெனச்சி பாக்கவே பாவமா இருக்கு” சூர்யா வராத கண்ணீரை துடைத்துக் கொள்ள, ராதா அவனை முறைத்தாள்.

“டேய் கொஞ்சம் கம்முனு இருடா, அவளே ஏதோ வருத்தத்துல இருக்கா நீயி வேற அவள வம்பு இழுக்காத" என்று அவனை அதட்டவும்,
“சரிக்கா, நீங்க பேசுங்க நான் பாட்டிக்கிட்ட போறேன்” என்றவன் ராதாவை பார்த்து கொண்டே கொண்டே சென்றுவிட்டான்.

அவன் எதற்காக அப்படி பார்க்கிறான் என்று தெரிந்த ராதா, நல்ல வேல இவன் எதுவும் அக்காட்ட நான் மாமாக்கிட்ட பேசினது எதையும் சொல்லல என நினைத்தாள்.

கார்த்தியிடம் ராதா கோவமாக பேச ஆரம்பிக்கும் போதே தோட்டத்து பக்கம் சுசூ போக வந்த சூர்யா அனைத்தையும் பார்த்தவன், அவள் பேசுவது சரிதான் என நினைக்கும் போதே, அவள் நெஞ்சில் இருந்த ஆரிய சூட்டின் தழும்பை பார்த்ததும், ராதா மேல் அத்தனை கோவம் வந்தது அவனுக்கு. அங்கு சூர்யா இருப்பதை ராதாவும் பார்த்து விட்டாள் தான். இதைத் தான் எங்கு மகியிடம் சொல்லிவிட போகிறான் என்ற பயத்தில் வந்து அவன் வாயை மூடியது.

தன் நெஞ்சில் சூடு வைத்துக் கொண்டதை தவிர, மேலோட்டமாக கார்த்திக்கும் அவளுக்கும் நடந்த ஊடலைப் பற்றி மகியிடம் சொல்ல. அதை பொறுமையாக கேட்ட மகி “இங்க பாரு ராதா, எந்த பிரச்சனையும் ஒருத்தருக்கொருத்தர் பேசாம இருந்தா அதுக்கு முடிவே இருக்காது. மாமா பண்ணது தப்புதே. நான் இல்லங்கள. ஆனா முதல்ல எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் மனச விட்டு பேசுங்க. எல்லாம் சரியாகிடும் சரியா" மென்மையாக எடுத்து சொன்னாள் மகி.

மகி சொல்வதும் சரி என்றே ராதாக்கு பட, அவளிடம் சரி என்றவள் எதையோ யோசித்துவிட்டு, அவள் மடியில் படுத்து உறங்கி போனாள் ராதா.

அனைவரும் வரிசையாக கீழே அமர்ந்து கலகலத்தபடி சாப்பிட்டு கொண்டு இருக்க, பரிமாறிக்கொண்டிருந்த மகி கண்களோ தானாக அர்ஜூனை தேடியது. அவனை பார்த்து இத்துடன் நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது.

இன்னும் ஒரு வாரத்தில் கதிருக்கு கல்யாணம் இருக்க, சொந்தங்கள் அனைவரும் ஒவ்வொருவராக வருகை தந்திருந்தனர். அவர்களை கவனிக்கவே வீட்டினர் அனைவர்க்கும் நேரம் பம்பரமாக சுழன்று கொண்டு ஓடியது.

“சித்திமா எங்க அர்ஜூன் அண்ணாவ கொஞ்ச நாளா பாக்கவே முடியல. சாப்பிடும் போது கூட அண்ணனை காணல” மீனாட்சியிடம் சாப்ட்டு கொண்டே ரதி கேள்வி எழுப்ப, அதுவரை கலகலப்பாக இருந்த மீனாட்சியின் முகம், அர்ஜூனை பற்றி ரதி கேட்டதில் சுருங்கியது.

ரதி, மீனாட்சியிடம் கேட்டது மகி காதிலும் விழ. மீனாட்சி சொல்ல போகும் பதிலுக்கும், அர்ஜூனை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலிலும் காதை கூர்மையாக்கினாள்.

“அவனை நான் பாத்தே நாளாச்சு ரதிமா” வருத்தம் தோய்ந்த குரலில் மீனாட்சி சொல்ல,
“என்ன சொல்ற சித்திமா, நீயே இன்னும் அண்ணனை பாக்கலையா...”

“ஆமா ரதி, அவன் எப்பவும் இப்படிதே தனியாதா இருப்பான். யாரு கூடவும் அதிகமா பேச மாட்டான். அவன் பிரண்ட் ரிஷிய தவிர. அவனுக்கு ஏதாவது கஷ்டம்னா இப்படிதா ரூம்க்குள்ளவே அடஞ்சி கெடப்பான். யாரு என்ன சொன்னாலும் கேக்க மாட்டான். அவனா மனசு மாறி வெளிய வந்தா தான் உண்டு. அவன் பொறந்ததுலிருந்து இதுவரைக்கும் தனிமை மட்டும்தா அவன் வாழ்க்கைல துணையா இருக்கு" எதையோ நினைத்து வருந்தியவராக மீனாட்சி சொன்னதும் மகிக்கும் மனது பாரமாகி, சற்று கண்கள் கூட கலங்கி போனது.

“ஆமா சித்திமா. இப்படி ரூம்லயே இருந்தா அண்ணா சாப்பாட்டுக்குலாம் என்ன பண்ணுவாரு" ரதி சோகமாக கேட்க,

அதான் சொன்னேனேமா அவனா மனசு மாறி வந்தா தான் உண்டு. பிடிவாத குணம் ஜாஸ்தி. சாப்பாடு தண்ணின்னு கூட அவன் அறைய விட்டு வெளிய வரமாட்டான். யாரு என்ன சமாதானம் செஞ்சாலும் அவன் மனச மாத்தவே முடியாது. கல்யாண வீட்ல வந்து இப்படி தனியா இருக்க அளவுக்கு. அவனுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல"
மீனாட்சி அர்ஜூனை நினைத்து கவலையாக சொல்ல சொல்ல மகிக்கும் அர்ஜூனை நினைத்து நெஞ்சம் படப்படவென அடித்துக் கொண்டது.

அவன் இத்தனை நாளும் சாப்பிடாமல் வேறு இருப்பது மகியின் மனது வலிக்க செய்ய, இன்னொருபுறமோ "அப்படி என்ன பிடிவாதம், அவரு என்ன குழந்தையா சாப்பிடாம பிடிவாதம் பிடிச்சா என் மனசு மாறி அவரை விரும்புறேன்னு சொல்லுவேன்னு நினைக்கிறாரா?" கோபமாக நினைத்தாலும் அர்ஜூனை உடனே பார்த்தாக வேண்டும் என்றே அவள் மனதில் தோண்றியது.

‘ஐயோ இப்ப நான் என்ன பண்ணுவேன். ஏன் அத்தான் இப்படி நீங்களே உங்கள வருத்தி, என்னையும் வருத்தப்பட வைக்கிறீங்க? நான் உங்கக்கிட்ட என்ன சொல்லனும் உங்களை விரும்புறேன்னா. அத காலம் முழுக்க உங்களோட வாழப்போறவ தானே அத்தான் சொல்ல முடியும். நா... நான் எப்டி, அப்படியே உங்க வாழ்க்கைக்குள்ள நான் வந்துட்டாலும், என்னால கடைசி வர உங்களோட ஆசை தீர சந்தோஷமா வாழ முடியாதே அத்தான்..’ எதையோ எண்ணி அவள் மனமோ கதறி அழ,

‘இல்ல மகி உனக்கு இந்த காதல் கல்யாணம் இதெல்லாம் வெறும் கனவு மட்டும்தே, நிஜத்துல அதுக்கெல்லாம் ஆசை பட்டு வீணா உன்னோடு சேத்து அத்தானோட வாழ்க்கைய நாசமாக்கீடாத. என்ன நடந்தாலும் சரி நீ போய் அவரை பாக்காத" அவள் உள்மனம் வாதாடியது.

இருந்தும் அவளால் அவள் மனதை என்ன சொல்லியும் சமாதானம் செய்ய முடியாமல் முரண்டு பிடித்தது அர்ஜனை காணச் சொல்லி அன்று அவன் சொன்னது மகி காதில் ரீங்காரமிட்டு ஒளித்தது.

"ஒன்னு நீ என்னை பாக்க வரும் போது, என் காதலியா இருப்ப இல்ல நான் தாலி கட்டின என் மனைவியா இருப்ப..." இந்த ஒரு வாக்கியத்தை நினைத்து மருகியவள் மூளையில், அர்ஜூன் மது அருந்தியதும், புகைப் பிடித்ததும் மின்னல் வெட்டி சென்று எல்லாம் சேர்த்து குழப்பி போய், அடுத்து என்ன செய்வது என்று தெரியாம் தவித்து போய் இருந்தாள்.

அப்போது பெரிய ட்ராலியை இழுத்து கொண்டு, கட் செய்த முடியை விரித்து விட்டபடி, டைட் ஜீன்ஸ், உடலை ஒட்டிய சட்டை விகிதம், முகத்தை மறைக்கும் அளவு கூலிங் கிளாஸ் அணிந்து, உதட்டு சாயம் அப்பிக்கொண்டு ட்ரெண்டிங் யுவதியாக ஸ்டைலாக நடந்தபடி ஒருவள் வர, கூடவே அவளின் பெற்றோரும் வந்து கொண்டு இருந்தனர்.

தொடரும்.
 
Top