Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
275
Reaction score
297
Points
63
அத்தியாயம் - 26

நிவா வந்ததில் இருந்து வீடே ஒருமாதிரி மகிழ்ச்சியாக மாறிய உணர்வு. ஆனாலும் மகள் உயிரோடு இல்லையே என்ற கவலையோடு, அவள் அனுபவித்த கொடுமைகளை எண்ணி தான் தாய் மனம் தாங்காமல் பரிதவிக்க செய்கிறது.

ஆதவன் ஆதிரா இருவரும் நிவாவை அக்கா அக்கா என விடாமல் சுற்றி வருவதை பார்க்க, ரகு நிலா இருவருக்கும் தங்களை பார்ப்பது போலவே தோன்றின. இந்நேரம் காவ்யா மட்டும் இருந்திருந்தால் காரணமே இல்லாமல் அக்கா என அவளை கூவி கூவியே செல்ல முறைப்பை பரிசாக பெற்றிருப்பர்.

"மிது அண்ணன பழி வாங்க முடியலைன்ற வெறில தான் மிதுவ ஊருக்கு முன்னாடி கலங்கபடுத்தி, அவ மானத்தை பறிச்சி, அவ மனச நோகடிச்சி உன் வெறிய தீர்த்துகிட்டியா ரகு.." பிள்ளைகள் மீது பார்வை பதித்திருந்தவன், நிலாவின் கோப குரலில் அவள் பக்கம் திரும்பலானான்.

"இதுதான் காரணம்னா உனக்கும் அந்தாளுக்கும் என்ன டா வித்தியாசம் இருக்கு.. ஆம்பளைங்கன்னா உங்க இஸ்டத்துக்கும் பொண்ணுங்கள போட்டு வாட்டி எடுக்கலாமா.. அவனுக்கு தான் கேடு எண்ணம், உனக்கு எங்க டா போச்சி புத்தி..

மிதுவோட மனநிலைய பத்தி யோசிக்கவே இல்லையா நீ.. காவ்யா பட்ட வேதனைய நீயே உன் பொண்டாட்டிக்கு குடுத்து இருக்கியே, எப்டி ரகு மனசு வந்துது உனக்கு.." ஒரு பெண்ணாக நிலாவின் மனம் தம்பி செய்தவற்றை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆதங்கத்தில் முகத்தை திருப்ப, இரும்பு மனிதனாக நின்றானே தவிர்த்து பதிலேதும் பேசவில்லை அவன்.

"ஒரு ஆறுதலுக்காவது சொல்றானா பாரு, என் மனசுல எந்த கெட்ட புத்தியும் இல்ல அக்கானு.. இவன.." அவன் அமைதி கண்டு பற்களை கடித்த நிலாக்கு, இன்னும் தம்பி மீது நம்பிக்கை இருப்பது மெய்யிலும் மெய்.

ஆனபின்னும் ஏன் மிதுவை மனதளவில் வருத்தி எடுக்கிறான் என்ற காரணத்தை அவன் வாயால் உண்மையை அறிய, கோபம் கொண்டு பேசியது அத்தனையும் வீணாய் போனது தான் மிச்சம்.

"இதுக்கு மேல இவன் பாடு.. மிது தான் தெளிஞ்சி வந்து இவனை ஒரு வழி பண்ணனும்.." பெரிதாக சலித்துக்கொண்ட நிலா, கணவன் ஆதிகேசவனுக்கு போனை போட்டு பேச தொடங்கி விட்டாள்.

இங்கே பேரக்குழந்தைகள் கேட்ட சீஸீ பாஸ்தாவை எப்படி சமைப்பது என புரியாமல் விழித்துக்கொண்டிருந்த மதுவை, ஏக்கவிழிகள் இரண்டு சுற்றி சுற்றி வந்தது.

"மதூஊ.. அம்புட்டு தானா டி.. மாமங்கிட்ட பேச மாட்டியா.. என் மொகரைய நிமிந்து பாத்தா என்னவாம்.." மனைவி புது கோவம் பிடித்து திரிவதை ஏற்கமுடியாத வீர், பிள்ளைகள் அறியாது காட்டுக்குரல் கெஞ்ச வளைய வந்தவனை கண்டுகொள்ளாமல் அவள் தலை திருப்பவும்,

"அடியேய்ய்ய்.. என்னது டி இது பேசிட்டு இருக்கும் போது புதுசா தலையை சிலுப்புறவ.. உன் மருமவகிட்ட கத்துகிட்டியோ..! இப்பலாம் அடிக்கடி எதிர்த்து வேற பேசிற, ஏதோ தப்பு எம்மேல அதேன் உன் பின்னாடியே சுத்துறேன், இல்லைனு வையி.." சட்டென முளைத்த கோபத்தில் வீர் கொதிக்க,

"இல்லைனா என்ன பண்ணுவீங்க, அடிக்க போறீங்களா மாமா.." இன்னும் தொண்டை வரை துக்கம் அடைத்தது போலும். பேச வாயெடுத்தாலே தொண்டைக்குழி தானாக உதறுகிறது.

மனைவியின் நேசத்தை சொட்டு விடாது அனுபவித்து அறிந்தவன், அவளின் கோபத்தின் காரணம் தாயன்பின் உச்சக்கட்டம் என்பதையும் நன்கு உணர்ந்தவன் தானே! மதுவின் துக்கம் படிந்த முகம், வீர் நெஞ்சை பலமாக உளுக்கின.

"ஆமா அடிச்சி இம்புட்டு வயசுக்கு பொறவு உன்னைய கொடுமைபடுத்த போறேன்.. ஏன் டி இருக்க ரோதனயில நீ வேற படுத்துற..

நானே நடந்த எதையும் ஜீரணிக்க முடியாம மனசளவுல ரொம்பவே நொந்து போயி கெடக்கேன்.. நீயும் மொகத்த இப்டி தூக்கி வச்சி என்னைய ஒரேடியா கொன்னுடாத டி மதூஊ.." காட்டுக்குரல் உடைந்து போக,

"மாமாஆஆ.." இருதயம் ரணித்து அழைத்திருந்தாள்.

"நான் ஒருத்தன் துக்கத்தை அனுபவிக்கிறது போதும், நீயும் நிலாவும் நிம்மதியா இருக்கணும்னு நினைச்சி, காவ்யா விசயத்த மறச்சது என்னைய பொறுத்த வரைக்கும் தப்பா தோணல டி.. காவ்யாவ பத்தின ஒவ்வொரு உண்மையையும் கண்டு புடிக்கும் போதுலாம், செத்து பொழச்ச வேதனைய எப்டி உங்கிட்ட சொல்ல சொல்ல முடியாம, ந்நா அனுபவிச்ச கொடுமைய எப்டி உனக்கு வெளக்கி சொல்ல"

60 வயது திடம் வாய்ந்த ஆணுடல் தளர்ந்து தள்ளாடி நின்ற தோற்றம் கண்டு மரிந்தே போனது மது நெஞ்சம்.

"போதும் இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க.. உங்க வாயால எதையும் கேக்குற சக்தி எனக்கு இல்ல மாமாஆஆ.. கெட்டதுலயும் ஒரு நல்லதா நம்ம பேத்தி நமக்கு கிடைச்சிருக்கா.. அதை நினைச்சி மனச தேத்திட்டு போறேன்.." கணவன் கலங்கி நிற்பது தாங்காமல், மனைவியவள் பதறி துடித்தாள்.

"அடிக்கடி என் மடி தேடி நீங்க வரும் போது, ஏதோ மனசு கஸ்டத்துல வரீங்க போலனு நினைச்சது எம்புட்டு பெரிய தப்பா போச்சி.. கடைசில பொண்ண பறிகொடுத்துட்டு வந்த துக்கத்தை மறைக்க தான் என் மடிய நாடினீங்ளா மாமா..

எப்டி தனி மனுசனா ஆறுதலுக்கு கூட ஆளில்லாம் தவிச்சு நின்னீங்களோ.." இப்போது கூட கணவன் பக்கம் இருந்து யோசித்து, தனிமையில் அவன் மனம் அடைந்த வேதனை எண்ணி இதயம் வெம்பி துடிக்கும் தன்னுயிர் ஜீவனை, இழுத்து அணைத்துக்கொண்டான் வீர்.

"ஏன் மாமா நம்ம மகளுக்கு இப்டி ஒரு துயர நிலை வந்துது.. அந்த பச்சை தான் என்ன பாவம் பண்ணுச்சி" கணவன் மார்பில் புதைந்து சத்தமின்றி குலுங்கி அழ, முதுகை வருடி ஆறுதல் படுத்தியவனின் கரத்தின் நடுக்கத்தை உணர்ந்த பிறகு தான் அழுகை கட்டுக்குள் வந்தது.

கணவன் மனைவியின் ஒற்றை அணைப்பில் இருவர் கண்ணீரும் கலந்து, சுவாசம் கலந்து, துக்கங்கள் அனைத்தும் காற்றோடு கலந்து போன அதிசயம் அற்புதமாய் நிகழ்ந்தன அங்கே.

"பாட்டி பசிக்குது பாஸ்தா செஞ்சிடீங்களா.."

"தாத்தா உப்பு மூட்ட தூக்குறேன்னு சொன்னீங்களே, எங்கே போய்ட்டீங்க.." குழந்தைகளின் கீச் கீச் சத்தத்தில் இருவரும் பதறி விலகி, முகத்தை துடைத்துக்கொண்டவர்களாக,

"இதோ தாயார் பண்றேன் குட்டிகளா, ஒரு பத்து நிமிசம்.." மது ஒருப்பக்கம் குரல் கொடுக்க,

"தாத்தா இந்தா வந்துட்டேன், ஒவ்வொருத்தரா உப்பு மூட்ட ஏறிக்கோங்க.. அதுக்குள்ள சாப்பாடு வந்திடும்" என்றவனாக குழந்தைகளிடம் மண்டியிட்டு முதுகில் ஏற்றிக்கொண்டு விளையாட்டு காட்டிய வீர், பாஸ்தா செய்ய தெரியாது நிற்கும் மனைவிக்கும் உதவ, நியாபமாக மிதுவை அழைத்து விட்டான்.

"என்னாச்சி ஆண்டி, அங்கிள் நீங்க கூப்ட்டு விட்டதா சொன்னார்.." ரகு மீதுள்ள வருத்தம் தீராத முகம் சோர்ந்து காணப்பட்டாலும், அதனை வெளியே காட்டாமல் மாமியாரிடம் வந்தாள் மிது.

"ஆமா கண்ணு, மூத்தவ இந்த பாஸ்தாவ தான் விரும்பி திம்பாளாம்.. அவ கேக்க போயி மத்த ரெண்டு பொடிஸும் இதையே புடிச்சிகிடுச்சுங்க.. எனக்கு இதெல்லாம் செஞ்சி பழக்கமில்லைமா, என் பசங்க இதெல்லாம் எங்கிட்ட கேட்டதே கிடையாது..

ஆனா உனக்கு இதெல்லாம் தெரியும் தானே அதான் மாமாவ கூப்ட சொன்னேன்.." என்ற மது மருமகளின் சோர்ந்த முகம் உணர்ந்தாலும், அவளுக்கு பதில் சொல்ல வேண்டியவன் வாய் திறவாமல் இவள் மனம் தெளியாது என்பதை அறிந்தாளோ! அமைதியாக அவள் முகம் பார்த்தாள்.

மிதுவும் மாமியாரின் எண்ணம் உணர்ந்தாளோ! "அது ரொம்பவே ஈஸி தான் ஆண்டி.. இருங்க நானே சீக்கிரம் செஞ்சிடறேன்" என்றவளாக, ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவை வேக வைத்தபடியே, மறுபக்க அடுப்பில் வெள்ளை சாஸ் செய்ய தேவையானவற்றை தாயார் செய்தாள்.

வெண்ணெயை உருக்கி அதில் சிறிது மைதா மற்றும் பால் சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி எடுத்த மிது, அதனோடு உப்பும் மிளகு தூளும் சேர்த்த கையோடு துருவிய சீஸ் சேர்த்து நன்றாக கலந்து உருகியதும், வேகவைத்த பாஸ்தாவை கலந்து அருமையாக செய்து முடித்து விட்டாள்.

"ஹை.. பாக்கவே நல்லா இருக்கு மிதுமா.. காரம் அளவு கூட சரியா இருக்கு.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க" மருமகளை பாராட்டி தள்ளிய மது,

"உங்க அத்தை செஞ்சா டா நல்லா இருக்குதுல்ல" பிள்ளைகளை அழைத்து பரிமாறி கேட்க,

"சூப்பரா இருக்கு பாட்டி, யாது அத்தை பண்ணி தர்ற டேஸ்ட் அப்டியே இருக்கு" நிவா சொல்லவும், மற்ற இரண்டு வாண்டும் புதிதாக கிடைத்த உணவு பொருளை ஒரே குஷியாக உண்ண, குழந்தைகளின் மழலை சிரிப்பினை கண்டே தன்னை மறந்து போனாள் மது.

இரண்டு நாட்கள் கடந்து போயின, ரகு மனைவியை நேருக்கு நேர் பார்த்தே! பகலில் எங்கோ வெளியே சென்று வந்ததும் குழந்தைகளை சுற்றி வருபவன், இரவானால் அவள் உறங்கிய பின்னே எப்போது வருவானோ! வருவான், குட்டியாக உடல் குறுக்கி உறங்கும் மனைவியை பின்னிருந்து கட்டியணைத்து சுக நித்திரை காண்பான். மிது விழிப்பதற்கு முன்னவே எழுந்து சென்று விடுவான்.

அவன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் அறியாதவளா மிது! அவனது ஸ்பரிசம் பட்டதுமே உடலில் சிறு அதிர்வு தோன்றி, ரகுவின் முரட்டு கை வளையில் விழித்தே தான் கிடப்பாள்.

அத்தனை கோபம் அவன் மீது உண்டு, வருத்தம் உண்டு. அதை விட அதிகம் அவன் சட்டையை பிடித்து கேட்க வேண்டிய கேள்விகள் ஒவொன்றும் தொண்டை குழியில் சிக்கிய மீன் முள்ளாக குத்திகிழித்த போதும், அவன் அருகாமையில் கட்டுடுண்டு கிடக்கும் பெண்மையின் அம்சத்தை எண்ணி அவளுக்கே வியப்பு தோன்றுகிறது.

மேலும் இரண்டு நாட்களில் செமஸ்டர் தொடங்க இருக்க, படிக்கும் ஒன்றுமே மூளைக்குள் சென்றடையவில்லை. இதுவும் நம்மள சதி பண்ணுதே கடுப்பாக நினைத்த மிது, அன்றைய இரவே வீரிடம் வந்தாள்.

"என்ன கண்ணு, எங்கிட்ட பேசணுமா.." மருமகளின் எண்ணம் அறிந்து கேட்டிட,

"செமஸ்டர் ஸ்டார்ட் ஆகுது, நான் மார்னிங் பெங்களூரு கிளம்பனும் அங்கிள்.. உங்க மகன் கிட்ட சொல்லிடுங்க" பட்டும் படாமலும் பதில் தந்தாள்.

"சரிமா, ரகுவையும் பொறப்பட சொல்றேன், நீ தேவையானத எல்லாத்தையும் பொட்டில அடுக்கி தாயார் பண்ணு.."

"இல்ல அங்கிள் நான் தனியா போறேன், அவர் வேண்டாம்.." என்றாள் சட்டென இடைவெட்டி.

"தோ பாரு கண்ணு, உன் புருசனோட பேசுறதும் பேசாததும் உன் தனிப்பட்ட விருப்பம்.. ஆனா என் மன திருப்திக்காக ரகுவ தொணைக்கு அழைச்சிட்டு பத்திரமா போயி பரிட்சைய எழுதிட்டு, நல்லபடியா திரும்ப வா.." அழுத்தமாக வீர் உரைத்த வார்த்தைக்கு மறுபேச்சி பேசாது உள்ளே வந்தவளுக்கு, கண்ணீர் கட்டியது கணவனை நினைத்து.

"யாரையோ பழி தீர்க்க எப்டி என் கர்ப்பை கலங்க படுத்தலாம்.." என்ற ஆதங்கம் ஆறாத வடுவாக இதயத்தில் பதிந்து போக, வீட்டில் அனைவரிடமும் சொல்லிவிட்டு கையில் பையோடு காத்திருந்தவளை, நிமிர்ந்து கூட பாராமல் அழைத்து சென்றான் ரகு.

பாட பரிட்சை எழுத சென்ற இடத்தில், அவர்களுக்கான காதல் பரிட்சை வைத்து இளக்காரமாக காத்திருந்ததோ விதி!

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் - 26
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top