Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
306
Reaction score
217
Points
63
அத்தியாயம் - 6

பல மாதங்கள் ஆகி விட்டது இவ்வூருக்கு வந்து. பேருந்தை விட்டு இறங்கியதில் இருந்து சுற்றிலும் பல கடை வீதிகளை பார்த்தவாறே திலீப் வீடு நோக்கி நடந்தாள் யமுனா.

இங்கு வரும் வரைக்கும் திடமாக இருந்த மனம் அவள் வீட்டை நெருங்க நெருங்க ஏதோ ஒரு படபடப்பு அவளை ஆட்கொள்ள, நெஞ்சை நீவி விட்டுக் கொண்டவளாக திலீப் வீட்டை அடைந்தவளுக்கு பூட்டி இருந்த கதவை கண்டு பெருங்குழப்பம் சூழ்ந்தது.

"அச்சோ என்ன இது வீடு பூட்டி இருக்கு. திலீபும் ஃபோனை எடுக்கலையே! ஒருவேளை ஆண்டி அங்கிள்க்கு உடம்புக்கு ஏதாவது முடியாம போயிருக்குமா! என்கிட்ட சொன்னா நான் வருத்தப்படுவேன்னு தனியா ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போய் கஷ்டப்படுறானா!" இப்படியாக பல யோசனையில் உழன்ற யமுனா கையில் பேகோடு அங்கிருந்த திண்ணையில் அமர்ந்து மீண்டும் திலீப் எண்ணுக்கு முயற்சிக்க அவன் எடுத்தான் இல்லை.

இம்முறை அவன் தந்தைக்கும் அழைத்துப் பார்க்க, "இந்த எண் உபயோகத்தில் இல்லை..." என்று வரவே ஒன்றும் புரியாத நிலையில் பைத்தியம் பிடிப்பதை போல் தலையை பிடித்துக் கொண்டவளுக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது.

"ஏம்மா பொண்ணு இங்க எதுக்கு உக்காந்து இருக்க. யார் வேணும்" எதிர்த்த வீட்டு அம்மையார் கண்ணாடியை சரி செய்தபடி அவளை உற்று நோக்கினார்.

"பாட்டி நீங்களா, என்ன நியாபகம் இருக்கா நான் திலீப் லவ்வர். கொஞ்ச நாளுக்கு முன்னாடி கூட இங்க தங்கி இருந்தேனே!"
தன்னை ஆவலாக அறிமுகப் படுத்திக் கொண்டதும் நியாபகம் வந்தவறாக,
"ஓஹ்.. ஆமா ஆமா நீதானா அது" என்றார் அவளருகில் வந்து நின்றபடி.

"ஆமா பாட்டி. என்ன திலீப் வீட்ல யாரையும் காணோம், எங்க போயிருக்காங்க பாட்டி. ஆண்டியும் அங்கிளும் நல்லா தானே இருக்காங்க..." பதட்டமாக கேட்டவளை புரியாமல் பார்த்தார் அந்த அம்மையார்.

"என்னம்மா எதுவும் தெரியாத மாதிரி கேக்குற. இங்கிருந்து நீ போன கொஞ்ச நாட்கள்ல், இங்கஉள்ள யார்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லாம கொள்ளாம இந்த வீட்ட விட்டு எல்லாரும் காலி பண்ணிட்டு போய்ட்டாங்களே" என்றதும் அதிர்ச்சியாக அவரை பார்த்தவள், "என்ன பாட்டி சொல்றீங்க வீட்ட காலி பண்ணிட்டாங்களா?" நம்ப முடியாமல் மீண்டும் அவரையே கேட்டாள் யமுனா.

"அட என்னம்மா நீ. இந்நேரம் உனக்கும் திலீப்க்கும் கல்யாணமே முடிஞ்சிருக்கும்னு நினைச்சிட்டு இருந்தா, உனக்கு இந்த வீட்டை காலி பண்ண விஷயமே தெரியலனு சொல்ற" அலுத்துக் கொண்டார் அவர்.

"இல்ல பாட்டி எனக்கு நிஜமாவே தெரியாது. திலீப் கூட இதுவரைக்கும் என்கிட்ட இதைபத்தி சொல்லல. சரி இப்ப அவங்க எங்க இருக்காங்க பாட்டி" கண்ணில் பொங்கிய கண்ணீரை கடினப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டவளாக, அவர் முன்பு தன்னை இயல்பாக காட்ட முயற்சித்தாள்.

"எனக்கு எதுவும் தெரியாதுமா, ஆனா என் பையன் அவங்கள குடும்பமா கிளிஞ்சல்மேடு பக்கம் பாத்ததா சொன்னான். ஏதோ ஒரு பெரிய வீட்டுக்குள்ள கார்ல இருந்து இறங்கி போனாங்கலாம். ஓருவேள அந்த பெரிய வீட்டுக்கு தான் குடிபோய்ட்டாங்களோ என்னவோ!" அவருக்கே சரியாக விபரம் புரியாமல் சொல்லிட,

யமுனாவின் நினைவெல்லாம் "பெரிய வீடு காரா.. ஒருவேளை உடம்பு சரி இல்லாம போனதால சொந்தக்காரங்க வீட்டுக்கு போய்ட்டாங்களா!" அப்போதும் தவறாக எண்ணாமல் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற எண்ணம் மட்டும் தான் அவளுள் ஓடியது.

"பாட்டி எனக்கொரு ஹெல்ப், கிளிஞ்சல்மேடுல அவங்கள பாத்ததா சொன்ன அந்த அட்ரஸ் என்னனு கொஞ்சம் உங்க பையங்கிட்ட கேட்டு சொல்ல முடியுமா!" கெஞ்சலாக அவள் கேட்ட விதத்தை பார்த்து மறுப்பு சொல்ல முடியாமல் அவர் மகனை அழைத்து விலாசத்தை பெற்றுத் தந்தார்.

"ரொம்ப தாங்க்ஸ் பாட்டி நான் போயிட்டு வரேன்" என செல்லப் போனவளை தடுத்தார் பாட்டி.

"20, 25 வருஷமா அவங்க இந்த தெருவுக்கு வந்து பழக்கம். திடீர்னு உடம்புக்கு முடியாம போனது எல்லாம் சரிதான் அதுக்காக அக்கம் பக்கம் இருக்கவங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம வீட்டை காலி பண்ணிட்டு குடும்பத்தோட போய்ட்டாங்களேன்னு இங்க உள்ள எல்லார்க்கும் வருத்தம் இருக்கு.

அதுகூட ஒரு பெரிய விஷயம் இல்ல நாங்க எல்லாரும் அவங்களுக்கு யாரோ தான், ஆனா நீ அந்த பையன் காதலிக்கிற பொண்ணு உன்னைதா கட்டிக்க போறான்னு அந்த அம்மா ஊரெல்லாம் தப்பட்டம் அடிச்சிட்டு சுத்துச்சே, உன்கிட்ட கூடவா ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாது."

தன் மனதில் உள்ள ஆதங்கத்தை அப்படியே கேட்டிட, அவளுக்கே அதற்கு பதில் தெரியாத போது எப்படி சொல்வாள்! சங்கடமான சூழ்நிலையை சமாளிக்க சிறிய சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு பாட்டியின் மகன் சொன்ன அட்ரஸ் நோக்கி விரைந்தாள் யமுனா.

மாளிகை வீட்டை ஒத்திய வீடு. பெரிய கேட் போட்டு பார்க்கவே கண்களை கொள்ளையிடும் அளவிற்கு வண்ணம் தீட்டி புதுமையாக இருந்த வீட்டை சுற்றிலும்ப் பார்த்துக் கொண்டே கேட்டை திறக்கப் போக, "யார்மா நீ" பெரிய மீசை வைத்த வாட்ச்மேன் அதட்டலாக கேட்டதும் திடுக்கிட்டுப் பார்த்தாள்.

"தி.திலீப்ப பாக்கணும்" கரத்தை பின் நீட்டி திக்கியவளை புருவம் இடுங்க கண்டு,
"திலீப் சாரை நீ எதுக்கு பாக்கணும்" மீண்டும் அதட்டும் தொனி.

"நான் திலீப் லவ்வர். எனக்கும் அவனுக்கும் கொஞ்ச நாளுல கல்யாணம்" இம்முறை தெளிவாக பதில் சொல்லிட, குழம்பிப் போனார் வாட்ச்மேன்.

"பொய் சொல்லாதமா, இப்பதான் திலீப் சார் அவர் கட்டிக்கப் போற பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு. நீ என்னடான்னா புதுசா வந்து கதை விடற" ஏளனமாக பார்த்து அவளை வெளியே துரத்தப் பார்க்க, அவர் சொன்னதை கேட்ட நொடி மூளை யோசிக்கும் திறன் இழந்து உறைந்து போன உணர்வில் அசையாது நின்று விட்டாள்.
"அண்ணா.. நீங்க வேற யாரையோ பாத்து தப்பா புரிஞ்சிட்டு இருப்பீங்க. என் திலீப் என்ன மட்டும்தா லவ் பண்றான், என்ன தான் அவன் கல்யாணமும் பண்ணிப்பான். நீங்க கேட்ட திறங்க நானே உள்ள போய் அவங்கிட்ட பேசுக்கிறேன்" சிறு கோபத்துடன் எகிறியதும் அவளின் உறுதியான பேச்சை கேட்டு குழம்பியவராக கேட்டை திறந்து விட்டார்.

பாலீஷ் போட்டதை போன்று தரையில் இருந்து சுவர் வரை ஒவ்வொரு பொருளும் பளபளவென அந்த வீட்டில் மின்னுவது எல்லாம் அவள் கண்களுக்கு தெரியவே இல்லை. மாறாக வெளியே வாட்ச்மேன் சொன்ன திலீப் அழைத்து வந்ததாக சொன்ன "கட்டிக்கப் போற பெண்..." என்ற சொல் மட்டுமே திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருக்க,


"இல்ல இல்ல அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே இல்ல திலீப் மனசார கூட எனக்கு துரோகம் நினைக்க மாட்டான்" திடமாக நினைத்துக் கொண்டு "திலீப்.." என பெரிய ஹாலில் நின்று அழைத்தாள்.

வீட்டை சுற்றிலும் அமைந்திருந்த நான்கு பக்கமும் உள்ள நான்கு பெரிய வளைவு படிக்கட்டுகளில் இருந்து ஆளுக்கு ஒருப்பக்கம் ஒவ்வொரு ஆளாக இறங்கி வரும் தோற்றம் கண்டு வியப்பாக கண்களை அகல விரித்த யமுனாவின் மனமோ மேலும் அதிர்ச்சியானாது.

உடல்நிலை சரியில்லாத, திலீப்பின் அம்மா அப்பாவும் ஏதோ ஹனிமூன் வந்த இளவட்ட கணவன் மனைவி போல் விலைஉயர்ந்த ஆடையில் கைகோர்த்தவாறு நடந்து வர, இந்த பக்கம் திலீப்பின் அக்கா மாமா இருவரும் ஆடம்பர உடையில் எங்கோ கிளம்பி செல்ல தயாராகி ஒருவர் இடுப்பில் மற்றொருவர் மாறி மாறி கைப் போட்டபடி வந்திருக்க, இன்னொரு பக்கம் அவர்களின் பிள்ளைகள் என அவளுக்கு நேரெதிரில் உள்ள படியில் இருந்து ஸ்டைலான துள்ளல் நடையில் இறங்கி வந்த திலீப், யமுனாவைக் கண்டு ஓர் நொடி அதிர்ந்து நின்றான்.

"இ... இதழி.. நீ எப்படி இங்க?" என்றபடி அவசரமாக படிகளுக்கு மேலே பார்த்தவன் வேகமாக அவளை நெருங்கி வந்தான்.
"இது யார் வீடு திலீப். நீங்க எல்லாரும் ஏன் உங்க வீட்டை விட்டுட்டு வந்து இங்க இருக்கீங்க?" அவனது சொந்தங்களை பார்வையால் அளந்தபடியே நேர்கொண்டு கேள்வி எழுப்பவும், அனைவரின் முகத்திலும் அளவுக்கு மீறியப் பணத்திமிர் தாண்டவம் ஆட, அஷ்டகோணலானது அவளை இங்கு கண்டதும்.

"மச்.. அதெல்லாம் உனக்கு எதுக்கு, நான் தான் உன்னை வந்து கூட்டிட்டு வரேன்னு சொன்னேன்ல அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு. எதுக்காக இங்க வந்த இதழி" இத்தனை நாளும் போனில் குழைந்த பேச்சுக்கும் கடைசியாக அவளை பார்க்க வந்தபோது இருந்த பேச்சுக்கும் துளிகூட சம்மந்தமின்றி அத்தனை கடுப்பு கடுகாய் பொரிந்தது அவன் வார்த்தைகளில்.

"கூட்டிட்டு வரேன்னு சொன்ன ஆளு ஒரு போன் பண்ணிருப்பியா டா, நான் பண்ணாலும் எடுக்கல. உனக்கு என்னாச்சோ ஏதாச்சோனு பதறிப் போய் ஓடி வந்தா உன் வீடு பூட்டி இருக்கு. அப்புறம் தான் தெரிஞ்சிது நீங்க வீடு மாறின விஷயம். சரி ஓகே அந்த வீடு ஏற்கனவே கம்ஃபோர்ட் இல்ல அதனால கூட மாறி இருக்கலாம்னு நினைச்சி இந்த அட்ரஸ் கண்டு பிடிச்சி வந்தா, ஏன் வந்தேன்னு கேக்குற. ஏன் திலீப் நான் உன்னைத் தேடி வரக்கூடாதா?"

வந்ததில் இருந்து அவனது நடவடிக்கை எல்லாம் வித்தியாசமாய் பட்டாலும், ஏன் வந்தாய் என்ற வார்த்தையில் உடைந்து நம்பிக்கையாக அவனை ஏறிட்டாள்.
"நான் அப்படி சொல்ல வரல நீயா கண்டத புரிஞ்சிகிட்டு டென்ஷன் பண்ணாத இதழ். நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு எதுவா இருந்தாலும் நான் ரெசார்ட் வந்ததும் தெளிவா உனக்கு சொல்றேன்..." முடிந்த அளவுக்கு அவளை இங்கிருந்து விரட்டுவதிலேயே குறியாக இருக்க அவள் போவதாக தெரியவில்லை.

"நோ திலீப். இதுநாள் வரைக்கும் எப்படியோ இனிமே முடியாது. அதான் எல்லா கடனும் முடிஞ்சிடுச்சே இனிமே எதுக்காக வெயிட் பண்ணனும். ஏற்கனவே பேசி வச்சத மாதிரி நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம். எல்லாரும் ஒன்னா இருக்கலாம், நீயும் துபாய்ல இருந்து வந்துட்ட இனியும் எதுக்கு நான் தனியா இருக்கணும் உன்கூடவே இருக்கேன்" தீர்க்கமாக சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,

"ஏய்ய்.. யாரை யாரு டி கல்யாணம் பண்ணிக்கிறது. அது அதுக்கும் ஒரு தகுதி தராதாரம் இல்ல ச்சீ.. தூஉஉஉ..." ஆக்ரோஷமாக பேசி அவள் முகத்தில் எச்சிலை உமிழ்ந்தது சாக்ஷாத் திலீப்பின் அன்னை ஈஸ்வரியே.

இதுவரை அமைதிக்கு பெயர் போன சாதுவாக மட்டுமே அன்பொழுக பார்த்த ஈஸ்வரியை புது அவதாரம் எடுத்த, திமிர் பட வில்லி ஈஸ்வரி போல் மாறி முந்தானையை வாரி சுருட்டி பின்னால் போட்டு கத்தியவரை கண்டு மேலும் அதிர்ச்சியில் உறைந்து நின்றவளின் முகத்தில் வழிந்த உமிழ்நீரை துடைக்கக் கூட தோன்றவில்லை.

"அம்மா நான் தான் ஏற்கனவே சொன்னேனே இவ ஒரு வெக்கங்கெட்ட ஜென்மம்னு. யார் நல்லா வாட்டசாட்டமா வசதியா கிடைப்பானோனு நாக்கை தொங்க போட்டு அலையிறவ. அதுனால தான் இவ வீட்ல கூட இவளை மதிக்காம எக்கேடும்கெட்டு ஒழியட்டும்னு நினைச்சி இருக்காங்க. வீடுதா பூட்டி இருக்கே திரும்ப போவோம்னு இல்லாம நம்ம வசதியா இருக்குறத தெரிஞ்சிக்கிட்டு பாரு நம்ம தம்பிய தேடி கண்டுபிடிச்சி எப்படி வந்து நிக்கிறான்னு"

அக்கா கமலியின் வார்த்தையில் நெஞ்சில் நெருப்பள்ளிக் கொட்ட, அவளின் தெறித்தப் பார்வை எல்லாம் நடப்பதை வேடிக்கைப் பார்த்து நின்ற திலீப் மீது தான்.

"என்ன திலீப் இங்க நடக்குது. இவங்க எல்லாரும் ஏன் இப்படி தப்பு தப்பா பேசி கேவலமா பிஹேவ் பண்றாங்க" கேட்கும் போதே யமுனாவின் குரல் நடுங்கிப் போக கண்ணீர் அருவியாக கொட்டியது.
"மச்.. நான் தான் சொன்னேன்ல வந்ததும் கிளம்புனு, இப்ப பாரு தேவை இல்லாம பேசி உனக்கு தான் அசிங்கம்" என்றவனின் அலட்சிய வார்த்தையில் இதயம் செத்துப் போனாள்.

"ஏய்.. திரும்பத் திரும்ப அசிங்கப்படாம ஒழுங்கா இங்கிருந்து போய்டு. நாங்க முன்னாடி மாதிரி எல்லாம் இல்ல இப்ப ரொம்பவே ரிச் இதோ இது எங்க சொந்த வீடு, வெளிய நிக்குதே மூணு கார் அதுவும் எங்களோடது தான். அப்படி இருக்க உன்னை மாதிரி ஒரு அன்றாடம்காட்சிய போய் எங்க புள்ளைக்கு கட்டி வைக்க நினைப்போமா.

எங்க தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏத்த மாதிரி நல்ல வசதியான வீட்டுப் பொண்ணா எங்க பையனுக்கு பாத்து பேசி முடிச்சிட்டோம். நேத்துதான் நிச்சயதார்த்தம் முடிஞ்சது. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்னு முடிவு பண்ணிருக்கோம். அதுனால இனிமே என் புள்ளைய தொந்தரவு பண்ணாம இங்கிருந்து போடி"

குறுகியக்கால வளர்ச்சி அளவுக்கு அதிகமாக பணத்திமிரை கொடுத்ததால் பழயதை மறந்து, அப்பாவி பெண்ணின் காதலை பணயம் வைத்து நாயை விரட்டி அடிப்பதை போல் அவள் கழுத்தைப் பிடித்து தள்ளி இருந்தார் ஈஸ்வரி.

நடப்பதை எதையுமே ஜீரணிக்க முடியாத நிலையில் தேகம் தளர்ந்து இருந்தவள், ஈஸ்வரி தள்ளியதும் பொத்தென தரையில் விழுந்தவளுக்கு கை முட்டி இரண்டிலும் பயங்கர வலி, அதை அனைத்தையும் விட காதலில் தோற்ற வலி ரணமாய் கொல்ல, கண்கள் இருட்டிய நிலையில் தலை தூக்கிப் பார்த்தவள், அங்கு மார்டன் உடையில் இருந்த மங்கை ஒருத்தி ஓடி வந்து திலீப்பை கட்டிஅணைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்த காட்சியைக் கண்டு மொத்தமாக உடைந்து மயங்கிப் போனாள் யமுனா.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 6
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top