Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
226
Reaction score
211
Points
63
அத்தியாயம் -18

காலை ஐந்து மணியில் இருந்தே ஸ்வாதி, கவியிடம் போராடிக் கொண்டிருக்கிறாள் அவளை கிளப்புவதற்காக.

"கவி கெட்டப் டைம் ஆச்சி இதுக்கு மேல நீ பைவ் மினிட்ஸ் சொன்னா, அப்பறம் நான் டென்ஷன் ஆகிடுவேன் சொல்லிட்டேன்.." அவள் போர்வையை பிடித்து உருவியதும்,

"ஐயோ.. ஸ்வாதி ஏன் டி தூங்க விடாம காலங்காத்தால படுத்தி எடுக்குற" புலம்பியபடி, கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள் கவி.

"மேடம் இன்னைல இருந்து வேலைக்கு போகணும் நியாபகம் இருக்கா" ஸ்வாதி இடுப்பில் கை வைத்து நக்கலாக கேட்டதும் தான்,

"அச்சோ ஆமால்ல மறந்துட்டேன் ஸ்வாதி, நல்ல வேலை நேரத்துக்கு எழுப்பி விட்டு நியாபகப் படுத்தின.." என்றபடி அவசரமாக எழுந்து குளியலறை ஓட,

"நல்லா மறப்ப டி, இனிமே காலைல பத்து மணி வரைலாம் இழுத்து போத்திட்டு தூங்க முடியாது, அதை நியாபகம் வச்சிட்டு கிளம்பு" கவிக்கு கேக்க கத்தி சொன்ன ஸ்வாதி,
"இவளை எழுப்பி விட ஒன்பது மணி வேலைக்கு போக வேண்டிய நானும், சீக்கிரமா எழ வேண்டியதா இருக்கு" என நினைத்துக் கொண்டு கவிக்கு தேவையானவற்றை அவள் பையில் எடுத்து வைத்தாள்.

வேகமாக குளித்து முடித்து, பச்சை வண்ண சுடிதாரை அணிந்து வழக்கம் போல் ஸ்வாதியிடம் தலைவாரிக் கொண்டவளாக, அவசர அவரசமாக கிளம்பி பஸில் ஏறி ஆத்வியின் வீட்டிற்கு வந்தாள் கவி.

காலை 6.18, அந்த பெரிய வீட்டு வாசலில் வண்ணக் கோலம் அவளை முதலில் வரவேற்க, கண்ணுக்கு குளிர்ச்சியாக அதை ரசித்தபடி பெரிய கார்டனை தாண்டி உள்ளே செல்லப் போனவளை அழைத்தது பழக்கப்பட்ட குரல் ஒன்று.

யோசனையாக திரும்பிப் பார்க்க, அப்போது தான் ஜாகிங் செய்து விட்டு வியர்த்து விருவிறுத்து வந்த யாதவ், "என்ன மேடம் இங்க என்ன பண்றீங்க" என்றான் நெற்றியில் வழியும் வியர்வையை தோள் பட்டையில் துடைத்து புன்னகைத்தபடி.

ஆச்சிரியமாக அவனை கண்ட கவி "யாதவ் சார் நீங்க எங்க இங்க" என்றாள் அவனை கண்ட உற்சாகத்தில்.

"என் வீட்ல நான் தானே இருக்க முடியும் கவி, அது சரி நீ இங்க என்ன பண்ற" என்றபடி அவள் கை பிடித்து அழைத்து, அருகில் உள்ள கல் பெஞ்சில் அமர்த்தி தானும் அவளருகே அமர்ந்தான்.

"அது சார், நான் இங்க கேர் டேக்கரா நேத்து தான் ஜாயின் பண்ணேன், ஆனா இங்க வந்ததுல இருந்து, எனக்கே ஏகப்பட்ட சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸா இருக்கு சார்.."

"ஏன் கவி அப்டி என்ன சர்ப்ரைஸ் கிடைச்சிது" என்றான் சிரிப்பு மாறாமல்.

"அதுவா சார், நேத்து நான் இங்க வரும்போது, எனக்கு இங்க யாரையுமே தெரியாதே, அதுனால வேலை கிடைக்குமா கிடைக்காதா.. இல்ல இங்கேயும் காது கேக்காத உனக்கு வேலை இல்லைனு அனுப்பு விட்ருவாங்கலோன்னு பல குழப்பத்துல இருந்தேன்..

ஆனா எதிர்பாராத விதமா ஆதி அங்கிள் அப்புறம் அஜய் சார இங்க நான் பாப்பேன்னு நினைக்கவே இல்ல" உற்சாகமாக அவர்கள் செய்த உதவியை சொன்ன கவி, "இப்ப உங்களையும் இங்க பாத்தேன் இல்லயா அதை தான் சர்ப்ரைஸுனு சொன்னே" என்றாள் அழகாக புன்னகையோடு.

"ஓஹ்.. இதான் விஷயமா நான் கூட சர்ப்ரைஸுனு சொன்னதும் ஏதோ பெருசா இருக்கும்னு நினைச்சிட்டேன் கவி" என்றவன் "நல்ல வேலை நான் உன்ன இப்பவே பாத்துட்டேன் இல்லனா ரெண்டு மூணு மாசம் ஆகியிருக்கும் திரும்ப உன்ன பாக்க"

"ஏன் யாதவ் சார் அப்டி சொல்றீங்க, நீங்க இங்க தானே இருக்க போறீங்க, அப்புறம் என்ன" என்றாள் புரியாமல்.

"அதில்ல கவி நான் ஒரு பைலெட், நைட் பிளைட்ல போகனும், அப்டியே நாடு நாடா கடல் கடந்துனு வானத்து மேலயே என் நாட்கள் ஓடிரும்" வானம் பார்த்து கதை சொல்ல,

"அப்டியா" என ஆச்சிரியமாக கேட்ட கவி, மகிழ்ச்சியில் அவன் கரத்தை பற்றிக்கொண்டவளாக, "சார் சார்.. எனக்கும் பிளைட்ல போகணும்னு ரொம்ப நாள் ஆசை, என்னையும் உங்களோட பிளைட்ல கூட்டிட்டு போறிங்களா" என்றாள் கண்கள் மின்ன.

அவளின் வெகுளியான பேச்சில் புன்னகைத்த யாதவ், "கண்டிப்பா கூட்டிட்டு போறேன் கவி"

"ஆனா சார் இதுல ஒரு சின்ன பிரச்சனை இருக்கு"

"என்ன பிரச்சனை" சட்டென முகம் சுணங்கியவளை யோசனையாக பார்த்தான்.

"ஸ்வாதிய விட்டுட்டு நான் மட்டும் எப்டி தனியா வர முடியும், அவளும் என்னோட வருவா எங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போவீங்களா.." பாவமாக கேட்டதும், இவ்வளவு தானா என பெருமூச்சு விட்ட யாதவ்,

"வை நாட் கவி, ரெண்டு பேரையுமே கூட்டிட்டு போறேன்" என்றதும் பளிச்சிட்டு போனது அவள் முகம்.

"ஐயோ.. இப்பவே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட்டா இருக்கு யாதவ் சார்" என்றவள், "சரி சார் நான் போய் என் வேலையப் பாக்குறேன் இப்பவே டைம் ஆச்சி, நல்லபடியா உங்க வேலைய முடிச்சிட்டு வாங்க சார், மீட் பண்ணலாம்" புன்னகைத்தபடி எழுந்த கவி, பாய் என அவனுக்கு கையசைத்து விட்டு வீட்டினுள் செல்ல, போகும் அவளையே மென்சிரிப்புடன் பார்த்து நின்றான் யாதவ்.

உடற்பயிற்சியை முடித்து விட்டு, மித்ரா கொடுத்து சென்ற மாதுளை சாரை பறுகியபடி பால்கனியில் நின்றிருந்த ஆத்விக்கு, அங்கு நடப்பதை கண்டு, கவி யாதவ் மீது அத்தனை வெறுப்பாக இருந்தது.

அவர்கள் பேசியது எதுவும் கேட்கவில்லை என்றாலும், உரிமையாக சிரித்து பேசுவது அறவே பிடிக்கவில்லை அவனுக்கு. அதற்காக கவி மீது விருப்பம் கிருப்பம் வந்து விட்டதா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. இரு பிடிக்காத முகங்களும் ஒன்றாக இணைந்து சிரிப்பது எரிச்சலை கொடுத்தது.

ஆத்வி கீழே வரும் முன், எப்போதும் யாதவ் தன் அலுவலகம் சென்று விடுவான். ஆனால் இன்று ஏனோ அலுவலகத்திற்கு சற்று நேரம் கழித்தபின் செல்லலாம் என்று தோன்றவே, ஆத்வியின் கண்ணில் பட்டால்தானே வம்பு பேசாமல் விக்ரம் அறைக்கு சென்று தந்தையோடு இருப்போம் என சென்றவனுக்கு, அப்போது தான் அங்கு கவியும் இருப்பாள் என்ற நியாபகம் வந்தது.
சரி அவளோடும் சிறிது நேரத்தை கழித்து விட்டு செல்லலாம் என அங்கு சென்றான்.

விக்ரமுக்கு ப்ளட் ப்ரஷர் சரி பார்த்து மூக்கில் ஆக்ஸினை சரியாக பொருத்திக் கொண்டு இருந்த கவியை,
"என்ன கவி மும்புறமா வேலை பாத்துட்டு இருக்க போல" யாதவின் குரல் கேட்டு,

"ம்ம்.. ஆமா சார்" என பதில் கொடுத்த கவியும், ஊசி வழியாக விக்ரமிற்கு உணவை செலுத்துவதில் முனைப்பாக இருந்தாள்.

விக்ரம் பக்கத்தில் அமர்ந்து சிறிது நேரம் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த யாதவ், "ஏன் கவி இந்த முறை என் அப்பா கண்டிப்பா கண் முழிச்சிப்பாரு தானே" என்றபடி படுக்கையில் கண் மூடி படுத்திருக்கும் தந்தையின் கரத்தை எடுத்து, தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.

"ஏன் சார் உங்களுக்கு இந்த டவுட், கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாளுல இவர் கண் முழிச்சிடுவாரு கவலை படாதீங்க சார்" என்று சொல்லும் போதே, கவிக்கு காபி கொண்டு வந்த மித்ரா,

"காலைலயே நல்ல வார்த்தைய சொல்லிருக்க கவி, உன் வாக்குப்படி என் மாமா நல்லபடியா கண் முழிச்சி பழைய மாறி கம்பீரமா எழுந்து நடந்தா, அதை விட வேற பெரிய சந்தோஷமே இல்லமா" என்றாள் கண் கலங்கியவளாக.

"ம்மா.. நீங்க இப்டி காலைலயே கண் கலங்குறத ஆதிப்பா பாத்தா அப்புறம் ஒரு பஞ்சாயத்த கூட்ட வேண்டியதா போய்டும்.. ஆமா கைல என்ன காபியா" என்றபடி கவிக்கு கொண்டு வந்ததை அபேஸ் செய்யப் பார்க்க,

"டேய்.. வேற கொண்டு வரேன் இது கவிக்கு கொண்டு வந்தது" என்றாள் செல்ல அதட்டலுடன்.

"மேடம் பரவால்ல நீங்க சார்க்கு காபி கொடுங்கழ் நான் பொறுமையா குடிச்சிக்கிறேன்" பெரிய மனதாக சொன்ன கவியிடம் வம்படியாக காப்பியை கொடுத்து குடிக்க சொன்ன மித்ரா,

"அவன் சும்மா கேக்குறான் கவி, காலைலயே அவனுக்கு காபி கொடுத்துட்டேன், இப்ப சாப்பிடுற நேரம் அவன் டீ காபிலாம் குடிக்க மாட்டான்மா" சிரிப்பாக சொன்ன மித்ரா,
"யாதவ் வா சாப்பிடலாம்" என்றாள்.

"இல்லம்மா.. நேரம் ஆகட்டும் பொறுமையா சாப்பிடுறேன்" அவன் தயக்கத்தை கண்டு எதனால் என உணர்ந்த மித்ரா,

"நீ எனக்காக கூட வரமாட்டியா கண்ணா, அங்க எல்லாரும் உக்காந்து சாப்பிடும் போது ஒவ்வொரு நாளும் நீ மட்டும் இல்லாம இருக்குறது, எனக்கு தான் டா சாப்பாடே இறங்காது..

இத்தனை நாள் நீ வேளையோட கிளம்பிடுவ சரினு விட்டேன், இப்ப நீ இருக்கும் போது நான் மட்டும் இல்ல உன் ஆதிப்பாவும் சாப்பிட மாட்டாரு உன்ன விட்டு.. இப்ப வரியா இல்லையா.." ஸ்ட்ரிக்ட் அன்னையாக மிரட்டவும், வேறு வழி இல்லாமல் அவளோடு சென்றான்.

யாதவ் இன்று அதிசயமாக இருப்பதை பார்த்த ஆதி, அஜய், ஆருக்கு எல்லாம் சற்று மகிழ்ச்சியாக தான் இருந்தது.

தன்யாவோ மாமா.. மாமா.. என்று அவன் மேல் ஏறி ஒரு வழி செய்துக் கொண்டிருந்தாள்.

"என்னடா இன்னைக்கு காத்து மழைனு போட்டி போட்டு பொளக்க போகுது போல, எல்லாரையும் மிஸ் பண்றியா யாதவ்" அவன் தோள் தட்டி அஜய் கேட்க,

"லைட்டா மாமா.." என்றான் வேதனை மறைத்த சிரிப்புடன். அவன் வேதனையை அனைவராலும் நன்றாகவே உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

"டேய் இந்தா இத சாப்புடு, அத சாப்புடு" என்று கறிக்குழம்பும், நல்லி எலும்பும் அவனுக்கு அள்ளி அள்ளி ஆதி எடுத்து வைக்க,

"பெரியப்பா மார்னிங்கே இவ்ளோ சாப்டா மதியம் சாப்பிட வயித்துல கேப்பே இருக்காது.. போதும்" யாதவ் அழாத குறையாக சொல்ல, அதனை காது கொடுத்து ஆதி கேட்க வேண்டுமே!

வீட்டின் கடைகுட்டி அவன், அவன் மேல் அங்குள்ள அனைவருக்குமே அளவு கடந்த பாசம் உள்ளது. ஆத்வி ஒருவனை தவிர.

அலுவலகம் செல்ல தயாராகி படி இறங்கி வந்தவன் கண்ணில் அக்காட்சி தவறாமல் பட்டுவிட, யாரிடமும் முகம் கொடுத்துப் பேசாமல், உணவுண்ண அமர்ந்தவனுக்கு மித்ரா பரிமாறும் முன், ஆதியே பரிமாறி இருந்தான்.

"இன்னைக்கு என்ன டா ஒரே அதிசயத்துக்கு மேல அதிசயமா இருக்கு" வாயில் கை வைத்து கணவனின் செயலை ரசித்து நின்றாள் மித்ரா.

"டாட் இன்னைக்கு என்ன உங்க பாசம் ஓவர் ப்லோ ஆகுது, மாமா சொன்ன மாதிரி காத்தும் மழையும் பிச்சிக்கப் போகுது" என்றான் யாதவை முறைத்துக் கொண்டு.

"என் கிட்ட பேசும் போது என்ன பாத்து பேசு ஆத்வி, அவனை ஏன் முறைக்கிற" கடினமாக மொழிந்தாலும், மகனுக்கு பிடித்த தேங்காய் பால் சாதத்தை கையில் எடுத்து அவனுக்கு ஊட்டவும், உள்ளுக்குள் மழைசாரல் வீசினாலும், முறைப்பு மாறாமல் வாயில் வாங்கிக் கொண்டான்.

ஆத்வியை கண்டதும் என்ன அலம்பல் இன்று நடக்கப் போகிறதோ என்ற பயத்தில், யாதவ் தலை நிமிராமல் தன்யாக்கு உணவூட்டியபடி தானும் வாயில் வைக்கப் போக, அதற்கு முன்னமே ஆதியின் கரம் உணவோடு நீண்டது.

வெறியேற அதனை கண்ட ஆத்வி, "டாட் எல்லாரும் ரொம்ப ஓவரா போறீங்க, எனக்கு இங்க நடக்குற எதுவும் சுத்தமா பிடிக்கல.. நாளுக்கு நாள் இதுவே தொடர்ந்தா இந்த ஆத்வியோட முடிவு வேற மாறி இருக்கும்" வீடே அதிர கத்தி, உணவை உண்ணாமல் எழுந்தவன் கண்ணில், பட்டுவிட்டாள் கவி.

இவன் கத்திய கத்தில் உள்ளே இருக்க முடியாமல், என்ன பிரச்சனையோ என்றெண்ணியபடி, விக்ரமின் அறை வாயிலில் இருந்து எட்டிப் பார்த்தவளுக்கு, ஆத்வி தான் கோபமாக கத்திக் கொண்டு இருக்கிறான் என்று தெரிந்ததும், "சரியான சைக்கோ, இப்ப ஏன் இவன் சம்மந்தமே இல்லாம லூசுத்தனமா கத்திட்டு இருக்கான்" உதட்டசைவில் முணுமுணுத்தபடி நின்றிருந்தவளின் முன்னால், அனல் பார்வை வீசிக் கொண்டிருந்தான் ஆத்வி.

இத்தனை கிட்டத்தில் அவனை எதிர்பார்த்திடாதவள், நேற்று போல் இன்றும் கை காலை முறித்து வைத்து விடுவானோ என்ற பயத்தில், உள்ளே ஓடப் போன கவியின் கை பிடித்து அழுத்தமாக தன் புறம் இழுத்திருக்க, அவன் திண்ணிய மார்பின் மீதே முட்டி மோதி நின்றாள் பாவை.

இதயம் அதிவேகத்தில் அடித்துக் கொள்ள, அவன் முரட்டு பிடி வலிக்க செய்யவும், "மேடம்ம்.." என்று கத்தப் போனவளின் வாய் பொத்திய ஆத்வி,

"நீ யாரை கூப்ட்டு சொன்னாலும் என்ன யாராலும் ஒன்னும் பண்ண முடியாது" என்று பல்லிடுக்கில் உருமி அவளை கேவலமாக பார்த்தவன், "யாதவ மடக்கி கைகுள்ள போட்டுக்கிட்டு, இந்த பணக்கார வாழ்க்கைய அனுபவிக்கலாம்னு பிளான் போட்டு இங்க வந்துருக்கியா.." அதீத கோபத்தில் கேட்டிட, விழிகள் அதிர்ந்து போயினாள் கவி.

அவள் அதிர்ச்சியை எல்லாம் அலட்சியமாக்கி கண்டு கொள்ளாத ஆத்வி, "நீ இருக்க தகுதிக்கு அப்டி ஒரு வாழ்க்கைய எல்லாம் உன் கனவுல கூட நினைச்சி பாக்க கூடாது.. யாதவ்க்கு யாரோட எப்டி பழகனும்னு சுத்தமா தெரியாது, அவனுக்கு குழந்தை மனசு, எல்லாருக்கும் உதவுற குணம்..

அதனால அவன் யார் கிட்ட வேணும்னா ஈஸியா ஏமாந்து போவான், அப்டி அவன் ஏமாற நான் இருக்க வரைக்கும் விட மாட்டேன்" கண்கள் சிவக்க கர்ஜித்தவனாக, அவள் கரத்தை உதறி விட்டு சென்றான்.

இவன் என்ன பேசி செல்கிறான் என்று ஒன்றும் புரியாமல் முழித்து நின்றவளுக்கு, அவன் பேசிய வார்த்தைகள் மட்டும் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் தைக்க கனத்த மனதோடு உள்ளே வந்தாள்.

அவர்கள் நின்று பேசிய இடம் அனைவரின் கண்ணுக்கும் தெரியாமல் சற்று மறைவிடமாக இருந்ததால், ஆத்வி கவியிடம் பேசியதை யாவரும் கவனிக்கவில்லை. மேலும் அவன் கோவமாக பேசி சென்றதையே நினைத்து யாருக்கும் உணவுண்ண மனம் வராமல், உணவை அளந்துக் கொண்டு இருக்க, ஆதியின் கர்ஜனையில் மடமடவென உண்டு விட்டு சென்று விட்டனர்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 18
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top