Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 69

காரின் பின் சீட்டில் மயங்கி இருந்த கவியை உணர்ச்சி துடைத்த முகத்தோடு சிறிது நேரம் உற்று பார்த்த ஆத்வி, அவளது பர்ஸில் இருந்த வீட்டு சாவியை எடுத்து கதவை திறந்து விட்டு அவளை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றவன்,

அங்கு சுற்றி முற்றி மெத்தையை தேட இரண்டு பிளாஸ்டிக் இருக்கைகள் மட்டுமே இருக்கவும், ஏற்கனவே கீழே விரித்து கிடந்த பாயில் கவியை கிடத்தியவன், அந்த சிறிய வீட்டை சுற்றிலும் பார்த்து விட்டு அமைதியாக அவள் அருகில் அமர்ந்து, தன்னவளின் வீங்கி சிவந்த பொளிவிழந்த முகத்தையே வெறுமையாக பார்த்திருந்தான்.

எத்தனை நாளானது தன்னவள் முகம் பார்த்து. தன்னைப் பார்த்ததும் அவள் முகத்தில் தெரிந்த அந்த பரவசத்தை சரியாக உள்வாங்கிக் கொண்டபின் தான், ஆத்திரம் தாளாமல் அடித்தது. ஐவிரல் பதிந்த அவள் பஞ்சி கன்னம் வருடி அங்கேயே முத்தம் ஒன்றும் வைத்தவனுக்கு, அவளை தேடி அலைய பெரிதாக ஒன்றும் நேரம் எடுக்கவில்லை.

அவள் சென்ற தேதி நேரம் கணக்கிட்டு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் உள்ள cctv யில் பார்த்து அவள் எங்கே சென்று இருக்கிறாள் என்று அறிந்துக் கொண்டவன், கவி எந்த ஸ்டேஷனில் இறங்கினாள், அதன் பின் எங்கு சென்றிருப்பாள் என்றெல்லாம், போலீஸ் உதவியோடு கண்டு பிடித்து சரியாக தன்னவளிடம் வந்து விட்டான்.

மெல்ல மெல்ல மயக்கம் தெளிந்து கண் திறந்து எழுந்த கவி, கணவனை கண்டதும் கலவையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியவளாக,

மாலை மாலையாக கண்ணீர் அரும்ப, "மாமாஆஆ .." என தன்னவனை பாய்ந்து அணைத்துக் கொண்டு கதறி அழ, இறுகிய பாறையாக இருந்தானே தவிர்த்து, திரும்ப அவளை அணைக்கவும் இல்லை விளக்கவும் இல்லை.

"மாமா.. தப்பு பண்ணிட்டேன் மாமா, என்ன மன்னிச்சிடுங்க.. அந்த நேரத்துல எனக்கு என்ன முடிவு எடுக்குறதுன்னே தெரியல மாமா, தயவுசெய்து என்ன மன்னிச்சிடுங்க.. ப்ளீஸ் என்ன வெறுத்து மட்டும் ஒதுக்கீடாதீங்க, உங்கள விட்டு பிரிஞ்சி வந்து ஒருநாள் கூட நான் நிம்மதியா இல்ல மாமா.." கவி அவன் கழுத்தில் புதைந்து கதற, இறுக்கமாக கண்மூடிக் கொண்டு தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டான் ஆத்வி.

"என்கிட்ட பேச மாட்டீங்களா மாமா.." அவன் கழுத்தில் இருந்து முகத்தை எடுத்து தன்னவன் முகம் பார்த்து வெம்பலோடு வினவ, சட்டென கண்களை திறந்தவன் அவளிடம் எதுவும் பேசாமல் வேகமாக அவ்விடம் விட்டு எழுந்து, வெளியே இருந்த திண்ணையில் சென்று அமர்ந்துக் கொண்டான்.

அவன் எழுந்து சென்ற வேகத்தை கண்டு திகைத்துப் போன கவி, தடுமாற்றமாக எழுந்து வெளியே வர, தூணை விடவும் மிக இறுக்கமாக இருந்தான் ஆத்வி.

"மாமா.. ப்ளீஸ்.. எம்மேல கோவம் இருந்தா நாலு அடிக் கூட அடிச்சிடுங்க, ஆனா கோவிச்சிக்கிட்டு பேசாம இருக்காதீங்க மாமா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.." துடைக்கத் துடைக்க கண்ணீர் பெருக்க தேம்பி அழுதாள் பாவை.

தீட்சண்ய விழியால் மௌனமாக அவளை கண்டானே தவிர அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை அவன். கல்நெஞ்சக்காரியாக அவள் எடுத்த முடிவுக்கு அவனும் கல்நெஞ்சக்காரனாக மாறியதில் தவறேதும் இல்லையே!

வெகுநாட்கள் ஆனது தன்னவனின் கோவ முகம் கண்டு. இப்போது மீண்டும் அந்த கோவத்தைக் கண்டு உள்ளுக்குள் கிலி பரவினாலும், 'தான் செய்த வேலைக்கு தன்னை கொல்லாமல் விட்டு வைத்து வேடிக்கைப் பார்ப்பதே பெரிது' என நினைத்தவளுக்கு மேலும் பயத்தை கிளப்பி இருந்தது, அவன் தந்தையாகப் போகும் விடயத்தை எப்படி சொல்வது என்றதில்.

கால்கள் ஆட்டம் கண்டிட செக்கச்செவேலென கோவத்தில் சிவந்திருந்த அவன் முகம் பார்க்கப் பார்க்க, அச்சத்தில் மயக்கம் வருவது போலானது.

"ம்.. மா.. மாமா.." திக்கித் திணறியவளுக்கு அடுத்த வார்த்தை வருவேனா என்றது அவன் கோவ விழியில்.
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். அவன் அகோரப் பார்வையால், இவள் நடுங்கும் பார்வையால்.

'ப்பா.. எவ்ளோ கோவம், விட்டா பார்வையாலே பஸ்ப்பமாக்கிடுவார் போலயே.. இன்னும் குழந்தை விஷயம் தெரிஞ்சா என்னென்ன பண்ணுவாரோ..' பாவமாக நினைத்து தைரியத்தை திரட்டிக்கொண்டவளாக,

"இப்டி கோவமா இருக்க தான் இவ்ளோ தூரம் என்ன தேடி வந்தீங்களா மாமா.. அதான் வந்ததும் உங்க மொத்த கோவத்தையும் பளார் பளார்னு ரெண்டு விட்டு என் கன்னத்துல காட்டிடீங்களே.. பாருங்க இன்னும் வலி வின்வின்னு தெரிக்குது.."

பாவமாக கூறியபடியே சட்டென அவன் மடியில் அமர்ந்துக் கொண்ட கவி, தன்னவன் வலிய கரங்களை எடுத்து தன் வயிற்றோடு கட்டிக்கொண்டவளாக, தனது தாய்மையை அவனுக்கு உணர்த்த நினைக்க, மூன்று மாதங்களே நிறைவடைந்த தட்டை வயிற்றில் எங்கனம் அவன் மகவை உணர்வது!

ப்ச்... என்ற சலிப்போடு அவளை நகர்த்தி விட்டு அவன் எழப் போக,

"இப்ப மட்டும் நீங்க எழுந்தீங்க, அப்புறம் நானும் உங்ககிட்ட பேச மாட்டேன் சொல்லிட்டேன்..." மூக்கை சுருக்கி கவி கோவம் கொள்ள,

"இது என்னடா புதுகதையா இருக்கு, இவ பண்ண வேலைக்கு நான் தானே கோவமா இருக்கணும், இவ ஏன் இப்டி துள்ளுறா.. எல்லாம் என் நேரம் லூச கட்டிக்கிட்டு லோல் படணும்னு.. அந்த அசோக் டாக் எந்த நேரத்துல வாய வச்சானோ, அப்படியே அவன் வாக்கு பளிச்சி ஒவ்வொரு நாளும் இவளோட மல்லுகட்ட வேண்டிய நிலைமையாகிடுச்சு.." அசோக்கை மனதுக்குள் வறுத்துக் கொண்டு கவியை கோவம் குறையாமல் முறைத்த ஆத்வி,

"ஏய்.. முதல்ல எம்மேல இருந்து எழுந்திரி டி, நான் என்ன உன்கூட செல்லம் கொஞ்சி ஜாலியா சிரிச்சி பேசி, உன்ன கையோட கூட்டிட்டு போய் குடும்பம் நடத்த வந்தேன்னு நெனச்சியா..

என்மேல நம்பிக்கை இல்லாம போனவள, திரும்பவும் உருகி நேசிச்சி என் அன்பை நானே கொச்சைப் படுத்திக்க மாட்டேன்.. அதுக்கான தகுதி எல்லாம் உனக்கு துளியும் இல்ல டி, கூட இருந்தே கழுத்தருத்துட்டு போனவளுக்கு பேர் என்ன தெரியுமா?.." நரநரவென அவன் பற்களை கடிக்க,

தன்னவன் பேச்சில் கூனிக் குறுகியவள் அவன் முகம் காணாது மௌனமாக கண்ணீர் விட்ட கவி, அடுத்து அவன் சொன்ன வார்த்தையில் முகத்தை மூடி சத்தம் போட்டு அழுத கவி,

"ஐயோ.. மாமா.. ப்ளீஸ் அப்டி மட்டும் சொல்லாதீங்க, என்னால தாங்கிக்க முடியல.. நான் பண்ணது மிக பெரிய தப்புதான், அதுக்காக இந்த வார்த்தைய மட்டும் சொல்லாதீங்க மாமா.. இதுக்கு நீங்க என்ன கொன்னே போட்டுடலாம்.." நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கதறி அழ, சலனமின்றி அவளை அழுத்தமாக பார்த்தான்.

"இந்த லெட்டர்ல எழுதி இருக்கியே இதுக்கு என்ன டி அர்த்தம், அவ்ளோ சீப்பா என்ன நினைச்சிட்டேல்ல.. எப்டி எப்டி 'உங்கள மாதிரி ஒரு நம்பிக்கை துரோகியோட என்னால வாழ முடியாதா.." வேதனை மறைத்து நக்கலாக சிரித்தவன்,

"நான் துரோகின்னா அப்போ நீ யாரு? கட்டின புருஷன வேண்டாம்னு சொல்லிட்டு ஓடி வந்தவ, நீ மட்டும் எப்டி எவனையும் பாக்காம ஒழுக்கமா இருந்திருப்பேன்னு நான் நம்புறது.." எல்லளாக புருவம் ஏற்றி இறக்கி,
"எங்கே நீ எனக்கு மட்டும் தான் உண்மையா வாழ்ந்தேன்னு நிரூபிச்சி காட்டு பாப்போம்.." என்றதும் தலையில் அடித்துக் கொண்டு கதறிய கவி,

"போதும் மாமா.. இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க, அப்டியே நெஞ்சி வெடிச்சி சாகுற வலிய தருது.. நான் எப்பவும் உங்க ஒருத்தருக்கு மட்டும் தான் உண்மையா வாழ்ந்து இருக்கேன், வாழ்வேன்.. உங்கள தவிர வேற யாரையும் விளையாட்டுக்கு கூட நினைச்சது இல்ல மாமா.. ப்ளீஸ் என் மேல இப்படி ஒரு பழிய போட்டு என் பெண்மைய கலங்கப் படுத்தாதீங்க.." என்றவளை அடிபட்ட பார்வை பார்த்தவன் கண்களும் கலங்கியது.

"உன்ன ஒரு பேச்சிக்கு சொன்னதுக்கே இப்டி துடிச்சி போறியே, ஒவ்வொரு முறையும் நீ என்ன இப்டி தானே டி சந்தேகப்பட்டு அசிங்கப்படுத்துவ, நான் எப்டி உள்ளுக்குள்ள துடிச்சிருப்பேன்னு ஒருமுறையாவது நீ யோசிச்சி இருப்பியா..?

ஆம்பளைங்கன்னா என்ன சொன்னாலும் ஜடம் போல கடந்து போய்டுவாங்கன்னு நெனப்பா என்ன..? எங்களுக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கு டி.. ஒவ்வொரு முறையும் நீ என்ன தப்பா புரிஞ்சிகிட்டு வார்த்தையாள என்ன குத்திக்கிழிப்பியே, அப்போலாம் நான் அடஞ்ச வேதனை என்னனு உனக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல..

கவலை படாதே நீ எனக்கு கொடுத்த வேதனைய என்னைக்கும் நான் உனக்கு திருப்பித்தர மாட்டேன், என் மனைவி பவித்ரமானவன்னு எனக்கு தெரியும்.. அவ குழந்தை மனசப்பத்தியும் எனக்கு தெரியும்.. ஆனா அவளுக்கு தான் என்மேல நம்பிக்கையே இருந்ததில்ல.." இறுகிய குரலில் தனது மொத்த வேதனையும் சொல்லி முடிக்க, இருதயம் இரண்டாக பிளக்கும் ரண வலியோடு தாவி தன்னவன் முகம் முழுக்க கண்ணீர் முத்தம் வைத்த கவி,

"எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா.. உங்கமேல முழு நம்பிக்கை இருக்கு.. ஆரம்பத்துல உங்கள நான் புரிஞ்சிக்காதது நிஜம் தான், ஆனா அன்னைக்கு என்கிட்ட நீங்க கோச்சிக்கிட்டு வெளிய போறதுக்கு முன்னாடி, நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் இருந்த உண்மைய புரிஞ்சிக்கிட்டேன்..

என் புருஷன் என்னைக்கும் எனக்கு துரோகம் பண்ண மாட்டார்னு முழுசா உங்கள நம்ப தொடங்கிட்டேன் மாமா.. அப்புறம் ஒருநாள், நம்ம கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி மண்டபத்துல நடந்த எல்லாத்தையும் ஸ்வாதி என்கிட்ட சொன்ன பிறகு தான், இத்தனை நாளும் உங்கள தப்பா புரிஞ்சிகிட்டு உங்க மனச நோகடிச்சதுக்கு எல்லாம் ரொம்ப வருத்தப் பட்டேன்..

இனிமே எக்காரணம் கொண்டும் உங்கள தப்பா நினைக்கக் கூடாதுனு உறுதியா இருந்தேன்.. எனக்காக தான் ஹரிதாவ வீட்ட விட்டு அனுப்புனீங்ன்னும் எனக்கு தெரியும்.. எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்துது, ஆனா ஆனா.." தடுமாற்றமாக நிறுத்தி அவனை விட்டு பிரியவும்,

"அந்த தீபக் உன்ன மிரட்டினதும், அந்த நாய்க்கு பயந்து என்ன விட்டு பிரிஞ்சி வந்துட்ட அப்டி தானே.." என்றதும் வெடுக்கென அதிர்ந்து பார்த்தாள் கவி.

°°°°°°°

கவி எங்கு சென்றாலும் அவளோடு அவளுக்கு தெரியாமலே ஆத்வியின் பாடிகார்ட்ஸ் செல்வதும் வழக்கம். அன்று மருத்துவமனை சென்றபோதும் அவளோடு பாடிகார்ட்ஸ் சென்றனர். ஆனால் அவள் எதற்காக சென்று இருக்கிறாள் என்றெல்லாம் அவர்களுக்கு ஆராயும் வேலையை ஆத்வி கொடுத்திருக்கவில்லை. பாதுகாப்புக்காக மட்டுமே அவர்கள்.

கோவில் சென்று சுவாமியை மனமகிழ்ச்சியோடு தரிசித்து வந்த கவியை, வீல் சேரில் வந்த தீபக் வழி மறித்து நின்றான். பராக்காக அவ்வழியாக சென்றவன், கவியை எதர்ச்சையாக கண்டதும் சட்டென தோன்றிய திட்டதோடு அவளுக்காக காத்திருந்தான் தீபக்.

கவி அவன் யார் என்பது போல் புரியாமல் விழித்திருக்க, பாடிகார்ஸ் மறைமுகமாக வந்திருப்பதை கண்டு கொண்ட தீபக்கினால் கவியை ஒன்றும் செய்ய முடியாத நிலை. கவியை ஏதாவது செய்ய நினைத்தாலும் அவன் உயிர் கொடூரமாக போவது உறுதி என்றதால்.

"ஹெலோ மேடம் நான் யார்னு தெரியிதா?" கையில் துப்பாக்கியோடு தன்னையே குறுகுறுவென பார்த்திருக்கும் பாடிகார்ட்ஸை ஓரக்கண்ணால் பார்த்தபடி கேட்க, கவியோ விழித்து நின்றாள் புரியாமல்.

"உங்கள தான் மேடம் என்ன யார்னு தெரியிதா.." சற்று குரல் உயர்த்த, அவள் காதில் தான் விழவில்லை போலும்.

சுவாமி தரிசனம் முடித்து விட்டு சன்னதியில் அமர்ந்து இருந்தவள், அங்கு தாய் தந்தையோடு விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தையை தூக்கி ஆசையாக கொஞ்சியதில், குழந்தையின் பிஞ்சி கைப்பட்டு அவள் செவிக்கருவி காதில் இருந்து விழுந்ததை கவனிக்கவில்லை கவி.

"வழி விடுங்க சார் நான் போகணும்.."

"ஹேய்.. உன்கிட்ட தான் கத்திட்டு இருக்கேன் கேக்குதா இல்லையா.." மூன்றாவது முறை அவன் கை நீட்டிக் கத்த,

"சார் கால் உடஞ்சாலும் பாக்க நல்லா படிச்சவர் மாறி டிப்டாப்பா ட்ரெஸ் பண்ணி நல்லா தானே இருக்கீங்க, எதுக்காக இப்டி கோவிலுக்கு வரவங்கள வழி மறிச்சி பிச்ச எடுக்குறீங்க.. இனிமே பிச்ச எடுக்குறத விட்டுட்டு ஏதாவது கிடைக்கிற நல்ல வேலைக்கு போயி சம்பாதிச்சி சாப்பிடற வழியப் பாருங்க.." என்றவளை அவன் வெறியாக முறைக்க, பாடிகார்ட்ஸ் ஒவ்வொருவராக அவனை வட்டம் அடிக்க துவங்கி விட்டனர்.

ஆத்வியை கொல்லாமல் தன் உயிர் போகக் கூடாது என்ற உறுதியில் இருந்தவன்,
"ஹேய் செவிடு.. நான் ஒன்னும் பிச்சைக்காரன் இல்ல, நீதான் செவிடு பேசினதையே திரும்ப திரும்ப பேசுற.. முதல்ல நான் சொல்றத கேளு.." மீண்டும் அவன் கை நீட்டிக்கத்தவும், சலிப்பாக அவனை கண்டவளாக, நீட்டிய கையில் ஐந்து ரூபாய் சில்லறையை போட்ட கவி,

"அதான் காசு போட்டுட்டேனே இப்ப வழி விடு.." என்றதும் கையில் இருந்த சில்லறையோடு இறுக்கமாக கைகளை மூடியவன்,

"இதுக்கெல்லாம் சேத்து வச்சி செய்றேன் டி செவிடு, இருந்தாலும் ஆத்வி உன் நிலைமை ரொம்ப மோசம் டா.." நக்கலாக நினைத்த தீபக்,

"ஏய்.. உன் மெஷின எடுத்து காதுல மாட்டு.." சைகை செய்யவும் புரிந்துக் கொண்டு மெஷினை காதில் மாட்டியது தான் தாமதம்,

"இங்கே பாரு நான் தீபக் உன் புருஷனோட பரம எதிரி, அவனை அழிக்க நேரம் பார்த்து காத்திருக்க எமன்.. அவன் உயிரும் அவன் குடும்பத்து உயிரும் காப்பாத்த நினச்சா, நீ அவனை விட்டு போகணும்.. இல்ல போக மாட்டேன்னு ஓவரா பிகு பண்ணா, உன் மாமியார் வீடு வெடிச்சி சிதறும்..

வேன் வெடிச்சி உன் குடும்பம் எரிஞ்சி போன மாதிரி, இப்போ உன் புருஷனும் புருஷன் குடும்பமும் எரிஞ்சி செத்துப் போவாங்க.." கொடூரமாக சொன்னதை கேட்டு உடல் உதறி நின்றவள்,

"ஏய்.. ந்.நீ என்ன சொல்ற, அப்போ என் குடும்பத்தை கொடூரமா கொன்னது நீயா.. உன்ன நான் சும்மாவே விட மாட்டேன் இப்பவே என் புருஷன்கிட்ட சொல்லி உன்ன உண்டு இல்லைன்னு ஆக்குறேன்.." நடுக்கமாக போனை எடுக்க,

"ஆக்கு ஆக்கு.. அதுக்கு முன்னாடி நல்லா கேட்டுக்கோ, சரியா இன்னைக்கு மதியம் 12 மணிக்கு எல்லாம் உன் மாமியார் வீடு வெடிச்சி சிதறப் போகுது.. அடுத்து 5 நிமிஷத்துல உன் புருஷன் புது பிசினஸ் தொடங்க கட்டிட்டு இருக்க பத்து அடுக்கு பில்டிங் வெடிக்கும்.."என்றதும் மொத்தமாக நடுங்கி போன கவி,

"ப்ளீஸ்.. அப்டி மட்டும் செஞ்சிடாத ந்.நீ சொன்ன மாதிரியே நான் வீட்டை விட்டு போயிட்றேன்.. என் புருஷனையும் குடும்பத்தையும் ஒன்னும் செஞ்சிடாத ப்ளீஸ்.." என்று கைக்கூப்பி கெஞ்சி அழ, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் சொன்னது முழுக்க முழுக்க பொய்கள் தான்.

தந்தையும் மகனும் போட்டிப் போட்டு தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு கொடுத்திருக்க, அதை மீறி தீபக்கால் அவர்களின் நிழலைக் கூட தொட முடியாது என்று கவிக்கு தெரியாமல் போனது தான் பரிதாபம்.

"இன்னைக்கே நீ உன் புருஷன்கிட்ட சொல்லாம கொள்ளாம வீட்ட விட்டே ஓடணும், அப்புறம் அவன் உன்னால பலவீனம் ஆகனும், அந்த அளவுக்கு ஏதாவது செஞ்சி வச்சிட்டு போகணும்.. இல்ல சரியா 12 மணிக்கெல்லாம் பாம் வெடிச்சி உன் குடும்பம் மொத்தமும் க்ளோஸ் ஆகும்.."

அவன் மிரட்டல் விட்டு சென்றிட அதன் பின் ஜடமாக வீடு நோக்கி வந்த கவி, ஹரிதா செய்த நாடகத்தால் மனமுடைந்து போனவளாக, லேசாக திறந்திருந்த கதவின் வழியாக தெரிந்த பின்பத்தை வைத்தே அது தன் கணவன் இல்லை என உணர்ந்துக் கொண்ட கவி, தன்னவனை வைத்து இவர்கள் ஆடும் ஆட்டத்தை நினைத்து, வேதனையாக அழுதாளே தவிர, கணவனை சந்தேகம் கொண்டு அல்ல.

பின் மனதை கல்லாகிக் கொண்டு கடிதம் எழுதி வைத்து சென்றவள் தான்.

அனைத்தையும் நேரில் இருந்து பார்த்ததை போல் ஆத்வி பிட்டு பிட்டு வைக்க, வாய் பிளந்த கவி, அவன் மார்பில் அடித்து "அப்போ எல்லா உண்மையும் தெரிஞ்சி வச்சிக்கிட்டு தான் என்ன அழ வச்சி வேடிக்கை பாத்தீங்களா" மீண்டும் மீண்டும் மார்பில் அடிக்க, அடித்த கரத்தை இறுக்கிக் கொண்ட ஆத்வி,

"தெரியும், தீபக் உன்கிட்ட பேசினதும் தெரியும், ஹரிதா திருட்டுத்தனமா அந்த மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்ட கூட்டிட்டு நம்ம வீட்டுக்குள்ள போனதும் தெரியும்... ஆனா நீ இப்டி ஒரு முடிவ எடுப்பேன்னு தான் எனக்கு தெரியாம போச்சி, அதுவும் இந்த லெட்டர்" என்ற ஆத்விக்கு, ஹரிதா தன் வீட்டை நோட்டம் விட்ட செய்தி காட்ஸ் மூலம் உடனே தகவல் சென்றிருக்க,

'என்ன தான் செய்கிறாள் என்று பார்ப்போம், யாரும் அவளை கண்டுக் கொள்ளாதது போல் கவனமாக கண்காணியுங்கள்' என்று கூறி இருந்ததால் தான், அவளால் எளிதாக வீட்டுக்குள் நுழைந்து நாடகம் ஆட முடிந்தது.

அதற்குள் அவன் கிறுக்கு பிடித்த மனைவி, இப்படி ஒரு வேலை செய்வாள் என்று அவன் என்ன கனவா கண்டான்.

"அச்சோ மாமா.. அப்போ அந்த பிராடு என்கிட்ட பொய் சொல்லி என்ன நல்லா ஏமாத்தி இருக்கானா.." அப்பாவியாய் கேட்டவளை வெறிக் கொண்டு முறைத்தவன்,

"ஆமாடி அவன் உன்ன ஏமாத்தி இருக்கான், நீ என்ன ஏமாத்திட்டு பெட்டிய கட்டிட்ட.. நீயா வருவேன்னு காத்திருந்தா நான் ஆண்டியா தான் போகணும், அதான் நாலு வச்சி கையோட இழுத்துட்டு போக வந்தேன்.." முறைப்பாக சிடுசிடுத்தவனை இறுக்கமாக கட்டிக் கொண்ட கவி,

"முட்டாள்த்தனமா எதையும் தெளிவா யோசிக்காம தப்பு பண்ணிட்டேன் மாமா.. ப்ளீஸ் இப்டி கோவமா இருக்காதீங்க, எத்தனை நாளாச்சு உங்கள பாத்து, எப்டி மாமா இருக்கீங்க.." என்னதான் அவன் முகம் பார்ப்போருக்கு தெளிவாக இருந்தாலும், மனைவியின் கண்களுக்கு அவன் சோகம் அப்பட்டமாக தெரிந்ததே!

"நான் எப்டி இருக்கேன்னு பாத்தா தெரியல, உன்கிட்ட கத்தி கத்தியே தொண்டை தண்ணி வத்திப் போகாம ரொம்ப நல்லா இருக்கேன்.." எங்கோ பார்த்து சட்டையை இழுத்து விட்டு கேஷுவலாக சொல்ல, முகம் சுருங்கிய கவி,

"ஓஹோ.. அப்போ நான் இல்லாம நிம்மதியா இருந்தீங்க அப்டி தானே.."

"அப்டி தான் டி. ரொம்ப ரொம்ப நிம்மதியா இருந்தேன்.." என்றது தான் தாமதம், ஆடவனின் இறுகிய கன்னம், அவள் வெண்பற்களுக்கு இடையில் மாட்டி சிவந்து கன்றிப் போனது.

"ஹாஆஆ.. ஏய்.. ஏய்.. வலிக்குது டி ராட்சசி கடிக்காத.." வலியில் அவன் கத்த,

"இப்ப சொல்லுங்க இந்த அளவுக்கு நிம்மதியா இருந்தீங்களா.." சிறிய இடைவேளையில் மீண்டும் மறு கன்னத்தில் கடி,

"நிச்சயமா இல்ல டி இந்த அளவுக்கு நிம்மதி இல்ல ஸ்ஸ்ஹா.." மீண்டும் கத்தியவனுக்கு எத்தனை சுகமான வலி அது.

நல்லவேலையாக இவர்கள் வீட்டிற்கு வெளியே நின்று செல்ல சண்டைகள் இட்டுக்கொள்ளும் காட்சிகளை, மதிய வேலை என்பதால் வீட்டினுள் இருந்த யாரும் பார்த்திருக்கவில்லை.

அவள் அவனை ரசிக்க, அவன் அவளை ரசிக்க என்று இருவரும் எத்தனை நேரம் தங்களின் இணையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தனரோ! கவி கணவனை கண்ட மகிழ்ச்சியில் கருவை மறந்து விட்டாள் போலும்.

மாலை வந்து விட்டதால் விஷாலும் அவன் அன்னையும் வீடு திரும்பி இருக்க, புதிதாக வீட்டினுள் இருந்த ஆடவனைக் கண்டு யோசனையாக உள்ளே வந்தவர்கள், "கவி.. யாரிது? உனக்கு தெரிஞ்ச தம்பியா?" என்ற விஷாலின் அன்னையோ ஆத்வியை உற்று நோக்கினார்.

"ஆண்டி.. இவர் தான் என் புருஷன்..
மாமா.. இவங்க விஷால் அம்மா, இவன் விஷால்.." என்று அறிமுகம் செய்ய, மூவரும் ஸ்நேகமான புன்னகை சிந்தி,

"வணக்கம் தம்பி உங்கள பத்தி கவி நிறைய சொல்லுவா..." அவர் சொல்லும் போதே,

"ஆமா..ஆமா.. ப்ரோ.. உங்கள பத்தி மட்டும் தான் சொல்லுவா, என் காது ஜவ்வு விட்டு போற அளவுக்கு.. அப்டி என்ன பண்ணி இவள உங்ககிட்ட வசியம் பண்ணி வச்சிருக்கீங்க.. ஷபா.. காது புளிச்சு போச்சி.." அவசரமாக உரைத்த விஷாலை முறைத்த கவி,

"காது புளிச்சா வடை போட்டு தின்னு டா குரங்கு வாயா.." எக்கி அவன் தலையில் ஒரு கொட்டு வைக்க,

"எந்த அம்மே.. மண்டை போச்சே.." என தலையில் கை வைத்து மடிந்து அமர்ந்தவனை கண்டு, அவன் அன்னையும் ஆத்வியும் சிரித்து விட்டனர்.

"டேய்.. அவளை கிண்டல் பண்ணி வம்பு இழுக்கலனா உனக்கு தூக்கமே வராதே.. இவங்க அப்டி தான் தம்பி, நீங்க கண்டுக்காதீங்க.."

"அம்மாடி தம்பிக்கு குடிக்க ஏதாவது கொடுத்தியா.." என்றிட,

"ஸ்ஸ்.. ஆண்டி மறந்துட்டேன்.." என்றாள் நாக்கை கடித்து.

"நல்ல பொண்ணுமா நீ, அவ்ளோ தூரத்துல இருந்து பிரயானம் செஞ்சி வந்த பிள்ளைக்கு ஒண்ணுமே கொடுக்கலையே.." என்றவர்,

"இந்தப்பா இதை குடி, அஞ்சி நிமிஷத்துல டீ போட்டு கொண்டு வரேன்.." என்றவரின் குரலை நன்கு உள்வாங்கியபடி, அவர் கொடுத்த தண்ணீர் சொம்பை வாங்கிக் கொண்டான் ஆத்வி.

"ப்ரோ.. நீங்க ஸ்ப்போட்ஸ் கார் பைக் ஷோரூம்ஸ் வச்சிருக்குறதா கவி சொன்னா உண்மையா.." விஷால் ஆத்வியோடு இயல்பாக பேசிட, அவனின் எளிமையான குணம் பிடித்துப் போன ஆத்வியும் ஓரளவுக்கு அவனிடம் சகஜமாக தான் இருந்தான். கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டு.

நால்வரும் டீயும் பஜ்ஜியும் ருசித்தபடி சற்று நேரம் பேசியவர்கள்,

"டேய்.. விஷால் நைட் சாப்பாட்டுக்கு தேவையானதை எல்லாம் சொல்றேன், நீ போய் அதை வாங்கிட்டு வா.. கவி தம்பிய உள்ள போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க சொல்லுமா, நான் அதுக்குள்ள வாச கூட்டி சுத்தம் செஞ்சிட்டு வரேன்.." என்றவர் எழுந்து சென்று விட்டார். இருவரும் கண்களால் காதல் பாஷை பேசிக் கொள்வதை பார்த்துக் கொண்டு தானே இருந்தார்.

"மாமா, இங்க சின்ன ரூம் தான் இருக்கு அட்ஜஸ்ட் பண்ணிப்பீங்களா.." சங்கடமாக கவி கேட்டிட,

"எந்த ரூமா இருந்தா என்ன டி, கூட நீ இருப்பேல்ல அது போதும்.." என்றவன் ஒருவித யோசனையான குழப்ப நிலையில், மனைவியோடு அந்த தீப்பெட்டி அறைக்கு சென்றான்.

அவன் வந்ததோ, இத்தனை நாளும் தன் மனைவியை அக்கறையாக பார்த்துக் கொண்டவர்களுக்கு நன்றி உரைத்து விட்டு, மனைவியை கையோடு அழைத்து செல்ல. ஆனால் விஷாலின் அன்னையின் அன்பான உபசரிப்புக்கு பிறகு, அவன் மனநிலை முற்றிலுமாக மாறி விட்டது என்றே சொல்லாம்.

பாயை தரையில் விரித்து போட்ட கவி, "என்ன மாமா யோசனையா இருக்கீங்க வேற எதுவும் வேணுமா.." என்றாள்.

"ம்ச்.. ஒன்னும் இல்ல டி, ஆமா நீ என்ன முன்னாடி இருந்ததை விட ஒரு சுத்து அதிகமாகிட்ட மாதிரி இருக்கு, என்ன பிரிஞ்சி வந்த சோகம் உன் முகத்துல தெரிஞ்சாலும், உன் உடம்புல தெரியலயே, அதுவும் இது.."

மனைவியின் பொன்தேகத்தை பார்வையால் அளந்து, அவளை தன்னோடு சுருட்டிக் கொண்டவன் கரங்கள், கொஞ்சமும் அடங்காமல் இருக்கும் மனைவியின் கொள்ளை அழகை கையில் அள்ளி கொண்டாடிக் கொண்டிருந்தது.

அதுவரை சகஜ நிலையில் அனைத்தையும் மறந்து கணவனோடு கொஞ்சி பேசி சிரித்துக் கொண்டிருந்தவளுக்கு, இப்போது வயிற்றில் உள்ள தன்னவனின் உயிரை பற்றி எப்படி சொல்வது என்ற பயத்தில் அவள் தேகம் நடுங்கத் தொடங்கியது.

முரட்டுக்காளையின் கரம் அவள் அங்கம் பிசைந்து, பின்னங்கழுத்தில் மோக முத்தமிட்டு அவள் தேகமெங்கும் தாருமாறாக பயணம் செய்து எல்லை மீறவும், கணவனின் தொடுகையை ரசிக்கவும் முடியாமல், தன்னவனை விளக்கவும் முடியாமல், இருதலைகொல்லி எறும்பாக தவித்துப் போன பாவையோ,

"மாமா.." என்றாள் மெல்லமாக.

ம்ம்.. கொட்டிய ஆத்வி, கிறங்கி இருந்தான் திமிறிய அழகில் நெருடியபடி.

ஆடவன் கரம் செய்யும் ஜாலத்தில் அச்சம் தகர்த்து உணர்ச்சிகள் எழும்பினாலும், கண்கள் மூடி இதழ் கடித்து தன்னவனின் ஸ்பரிசத்தை ஆழ்ந்து அனுபவித்து தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்த கவி,

"உ.உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் மாமா.." தடுமாற்றமாக உரைத்தவளை ரொம்பவே சோதித்துக் கொண்டிருந்தான் ஆத்வி.

கொஞ்சமும் அவன் கரம் அடங்குவேனா என்றிருக்க, அவஸ்தையில் நெளிந்த பாவையோ, செழுமையில் பிரட்டி எடுத்த கரத்தை கடினப்பட்டு பிரித்தெடுத்து, மெலிதாக ஏறி இறங்கிக் கொண்டிருந்த பஞ்சி போன்ற மென்வயிற்றில் துணியை விளக்கி, தன்னவனின் கரத்தை அங்கு அழுத்தமாக பதிய வைத்தவளின் கண்கள் பணித்து உடல் குலுங்கி அழுகையில் கரைய, ஆத்வியின் இதயம் அதிவேகத்தில் துடித்தது, தன்னவள் உணர்த்திய மகிழ்ச்சியான செய்தியில்.

"எத்தனை மாசம் டி.." உணர்ச்சி துடைத்த குரலில் ஆத்வி கேட்ட விதமே, அவன் கோபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்க,

"இ.இப்.இப்ப தான் ந.நாலு மாசம் தொடங்கி இருக்கு ம்.மாமா..." என்றது தான் தாமதம் ஓங்கிய கரம் அவள் ஒற்றைக் கன்னத்தை பதம் பார்த்து, மறுக்கன்னத்திலும் அடிக்க ஓங்கி இருக்க, முகத்தை மூடி நடுங்கி அழுபவளை கண்டு, அப்படியே கரத்தை மடக்கிக் கொண்டவன் கண்களும் கலங்கி போனது.

"என் குழந்தையும் என்கிட்ட இருந்து பிரிக்கப் பாத்து இருக்கல்ல, எவ்ளோ பெரிய அரக்கியா இருப்ப டி நீ.." ஈட்டியாக இறங்கிய வார்த்தையில் துடித்து,

"நான் வேணும்னு பண்ணல மாமா.." அப்படியே அவன் காலின் கீழ் மடங்கி விழுந்தவளோ, வாய் பொத்தி குலுங்கி அழ, அக்னி விழியால் பொசுக்கிக் கொண்டிருந்தான் ஆத்வி.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 69
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top