Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 31

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 31

டெல்லி வந்து இரண்டு நாட்கள் முடிந்தாயிற்று, வெளுத்து வாங்கிய கனமழையின் காரணமாக அவன் புதிதாக லான்ச் செய்ய வேண்டி இருந்த நிகழ்வுக்கு வரவிருந்த முக்கிய விருந்தினர் பாதி வழியில் கனத்த மழையில் மாட்டிக் கொண்டமையால் அவர் மீண்டும் வரும் வரை தற்காலிகமாக அந்நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டது. விஷ்வா விதுரன் இருவரும் நிகழ்ச்சி முடியும் வரை அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாயின.

ஒரு கையில் கண்ணாடிக் குவளையில் மதுபானம் மற்றொரு கையில் வெண்சுருட்டு பாதி எரிந்த நிலையில் உதட்டின் நடுவே வைத்து ஆழப் புகைத்து வட்டவட்டமாக புகையை ஊதியபடி சாளரம் வழியே வெள்ளிக்கம்பிகளாக சடசடத்து ஜில்லென்று கொட்டும் மழைத் துளிகளை பார்த்துக் கொண்டிருந்தவன் மனமோ தீ கங்குகளாக கொதித்தன மோகப்பெண்ணுடன் கழித்த அழகிய நினைவலைகளை எண்ணி.

'விஷ்வா போதும் மார்னிங்கே ரொம்ப ஓவரா போகுது' அவன் கையில் இருந்த இரண்டையும் பிடுங்க கை நீட்டவும் உடனே கை இரண்டையும் விதுரனுக்கு எட்டாத வகையில் பின்னிழுத்துக் கொண்டவனை முறைத்து வைத்தான்.

தாத்தாக்கு சத்தியம் பண்ணி தாடி மீசைய எடுத்துட்டு நல்ல ட்ரெஸ் பண்ணிக்கிட்டா மட்டும் போதுமா, இந்த குடி சிகரெட்டை எல்லாம் விட்டு தொலைச்சா என்ன டா பிரச்சனை உனக்கு. அலுப்பாக கூறிய நண்பனையும் அவன் கையில் இருந்த சரக்கையும் நக்கலாக பார்த்தான் விஷ்வரூபன்.

ம்ச்.. என்னை ஏன் டா அப்டி பாக்குற. நான் என்ன உன்ன மாதிரி எனிடைமும் சரக்கும் கையுமாவா இருக்கேன். எப்பயாவது மைண்ட் சேஞ்ச்க்கு எடுத்துக்க வேண்டியது தான் என்றதும் இதழ் பிரியா புன்னகை பூத்தவன், தனிமையை ஃபீல் பண்ற மச்சி கல்யாணம் பண்ணிக்கோ, உனக்குனு ஒருத்தி வந்துட்டா உன் மைண்ட் சேஞ்சிக்கு இதையெல்லாம் தொட வேண்டிய தேவை இருக்காது என்றான் மதுவை ஒரே மிடராக வாயில் சரித்துக் கொண்டு.

ஆமா மச்சான் நீயும் உனக்கான பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்கோ நானும் கல்யாணம் பண்ணிக்கிறேன் அப்பதான் உனக்கும் இந்த சரக்கு தேவை படாது, நக்கல் தொனியில் விதுரன் சொன்னதும் முகம் இறுகியவனாக கார் சாவியை எடுத்துக் கொண்டு சென்றவனை கண்டு தலையை உளுக்கிக் கொண்டான்.

ஓரளவு மழை விட்டு வாகனங்கள் பயணிக்கும் படி பாதை தெளிவாக இருக்க தாறுமாறாக காரை இயக்கிக் கொண்டிருந்தவன் மனமும் மூளையும் நிம்மதியற்று தவித்துக் கொண்டு இருந்தன. ஏனோ டெல்லியை வந்தடைந்ததில் இருந்தே இத்தனை நாளும் இல்லாமல் மோகித்தா அவனை சுற்றியே வட்டமடிக்கும் உணர்வலைகள் தோற்றுவிப்பதை உளமார உணர முடிகிறதே எப்படி சாத்தியம் என்ற கேள்வியே தொக்கி நிற்க மூளை சூடேறிப் போக கார் எதிரில் ஒரு சிறுவன் சாலையை கடப்பதை கண்டு சடன் பிரேக் போட்டு நிறுத்தியவனின் இதயம் தடத்தடக்க மூச்சி வாங்க Steering Wheel மீது தலையை சாய்த்து கண்மூடிக் கொண்டான்.

ஒரே அடியாக தன்னவளை நினைத்து துடித்து விட்டு செயல் நிறுத்தம் செய்யப் போகிறதோ தன் இதயம், படுத்த வாக்கிலே நெஞ்சை நீவி விட்டுக் கொண்டவனாக மெல்ல தலை தூக்கி எழுந்தவன் கண்கள் பேரதிர்ச்சியில் திகைத்து கண்டது கனவா! போதையில் ஒன்றும் புரியாமல் வேகமாக தலையை உளுக்கிவனாக மின்னலாக கார் கதவை திறந்து மூச்சிறைக்க ஓடியவன் கண்கள் கண்டமேனிக்கு அலைமோத இதயத்துடிப்பு மேலும் அதிகரித்து சேற்று நீரில் தத்தளித்து பதட்டமாக தேடியவன் கண்ணில் மீண்டும் பட்டாள் அவள்.

இருபது வயது பருவப்பெண்ணாய் குழந்தை முகத்துடன் பார்த்து ரசித்த அதே பேரழகு தேவதை தான் தற்போதும் இருபத்தி ஏழு வயதை தொட்ட ஒயிலான மங்கையாய் அவன் கண்முன்னே. இன்னும் அந்த வதனத்தில் குழந்தையின் பரிமானம் மாறாது மேலும் வசீகரம் கூடி பார்பிடாலுக்கு புடவை கட்டியது போல் வானநீலத்தில் பூக்களை தெளித்து விட்டது போல் மடிப்பெடுத்து கட்டிய கருப்பு நிற காட்டன் படவையில் தேவதையின் மறுஉருவமாய் மீண்டும் ஜனனம் எடுத்து பஸ்ஸ்டாண்டின் அருகே நின்றிருந்த மனைவியை கண்டு பலவித உணர்வுகள் தோன்றி நிஜமாகவே அவள் தானா அதிர்ச்சியை தாண்டிய இன்ப பரவசம் மனதை குளிர்வித்து மகிழ்ச்சியில் கண்கள் கரித்து தடித்த இதழ்கள் நடுங்க சிரித்து மோகிஇஇ.. என உதட்டுக்குள் கூக்குரல் இட்டுக்கத்தி அவளை பார்த்து விட்ட இன்பஅதிர்ச்சியில் கால்கள் நிற்க முடியாமல் பூமியில் துவல்வது போல் இருக்க நின்ற இடத்தை விட்டு அசைய மறுத்தது கால்கள்.

பின்னால் பட்டை கலையாது தொங்கிய முந்தானையை பிடித்திழுத்த ஆறு வயது ஆண் குழந்தையை கண்டு பாசிப்பற்கள் தெரிய இதழ் விரித்தவள், ஹேய்.. லிட்டில் பாய் இங்க என்ன தனியா நிக்கிற அம்மா எங்கே குனிந்து அவனது கேசம் கலைத்து மெல்லிய முத்தம் ஒன்றை நெற்றியில் பதித்தாள்.

அப்பா கூட அங்க தான் பேசிட்டு இருக்காங்க, ஆமா நீங்க ஏன் நேத்து ஸ்கூலுக்கு வரல? முகத்தை உர்ரென வைத்து வீல்சேரில் நன்கு சாய்ந்து அமர்ந்துக் கொண்டான் கோவமாக.

மிஸ்ஸுக்கு திடிர் காய்ச்சல் கண்ணா அதான் வரல, ஆமா நீ ஏன் இன்னும் ஸ்கூலுக்கு போகாம இருக்க கிள்ளைமொழியோடு குட்டிப்பையனின் தாடைப் பிடித்து தூக்க அவள் கையை தட்டி விட்டு பாவமாக அவன் பெற்றோரைக் கண்டான். வந்த ஆட்டோவை கைக் காட்டி நிறுத்தி விட்டு அவனை அழைக்க திரும்ப மோகியை கண்டதும் புது உற்சாகத்துடன் பெருமூச்சு விட்டபடி அவளிடம் வந்தனர்.

அக்கா.. ஏன் ஷியாம் முகம் வாடி இருக்கு. நேரம் ஒன்பதை தாண்டிடுச்சி ஸ்கூலுக்கும் போகலையே என்னாச்சி என்றாள் அக்கறையாக.

அதை ஏன் மோகி கேக்குற. இன்னும் ஒரு வாரத்துல இவன் காலுக்கு ஆப்ரேஷன் இருக்கு அதுக்கு இன்னைக்கே அட்மிட் பண்ண சொன்னாங்க. நானும் அவங்க அப்பாவும் இவன் தூங்கிட்டானு நெனச்சி அதை பத்தி பேசிகிட்டத பூனைமாதிரி முழிச்சிருந்து கேட்டுட்டு ஹாஸ்பிடல் வர மாட்டேன்னு ஒரே அடம். அலுப்போடு சொன்னாலும் பிறந்ததில் இருந்து நடக்காமல் இருக்கும் மகனின் கால்கள் இனிமேல் நடக்கப் போகும் மகிழ்ச்சியும் நடக்கவிருக்கும் அறுவை சிகிச்சையையும் எண்ணி பெற்றோரின் முகம் கவலை கலந்த பயத்தின் உணர்ச்சிகளை காட்டியது.

அட இது நல்ல விஷயம் தானே. இதுக்கு எதுக்கு ஷியாம் முகத்தை உர்ருனு வச்சிருக்க. நீயும் இன்னும் கொஞ்ச நாளுல எங்கள மாதிரி நடந்து ஆடி ஓடப் போற தெரியுமா. அதுக்கு பிறகு இந்த வீல்சேர் எதுவும் இந்த குட்டி பையனுக்கு தேவைபடாது தூக்கி ஓரம் போட்டுட்டு சைக்கிள் பைக் எல்லாம் ஓட்டலாம். இப்ப பயப்படாம அம்மா அப்பா கூட போகணும் சரியா. குழந்தைக்கு புரியும்படி எடுத்து சொல்லியும் அவன் முகம் சோகத்தை மட்டுமே காட்டியது.

என்ன ஷியாம் ஏன் இன்னும் நீ சோகமா இருக்க.

அது இல்ல மிஸ். எனக்கு ஆப்ரேஷன் முடிஞ்சு நான் நல்லா நடக்க தொடங்கிடுவேன் ஆனா என் பிரண்ட் வேதியால நடக்க முடியாதே. பிஞ்சி மனம் அவனை போல் உள்ள மற்றொரு பிஞ்சி பூவின் கால்களை எண்ணி கவலை கொள்ள, மோகியின் உள்ளம் படபடத்துப் போனது.

உடனே தன்னை நிதானித்துக் கொண்டவளாக, அதுல என்ன இருக்கு கண்ணா, நீ நல்லா நடக்கத் தொடங்கின பிறகு அவளுக்கு தேவையான ஹெல்ப் எல்லாம் நீதானே செஞ்சி தரணும் உன் பிரண்ட நீ பத்திரமா பாத்துக்க மாட்டியா என்ன? என்றதும் நான் பத்திரமா பாத்துப்பேன் மிஸ் உற்சாகமாக சிறுவனிடமிருந்து வந்த பதிலில் புன்னகைத்தவளாக, ம்ம்..குட் பாய்.. முதல்ல உன் கால் குணமானா தான் உன் பிரண்ட உன்னால பாத்துக்க முடியும். அதுனால சமத்து பையனா அம்மா அப்பா கூட ஹாஸ்பிடல் போயி பயப்படாம காலை சரி செஞ்சிகிட்டு வரணும். கிள்ளைமொழியால் பிஞ்சி மனதை மாற்றி ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டவள் மற்றொரு ஆட்டோவில் ஏறி தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றாள்.

அதுவரை அவளை கண்டதும் ஓடி சென்று மூச்சிமுட்ட கட்டி அணைத்து தனது இத்தனை வருடகால தவிப்பை மொத்தமும் முத்தத்தால் நிறைத்து அவள் காலடியில் விழுந்து கண்ணீர் விட்டு கதறி அழ தோன்றிய மனதை சட்டென வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டான் விஷ்வரூபன். இத்தனை வருடமும் அவள் உயிருடன் இருக்கிறாள் என்றால் ஏன் தன்னை அவள் வந்து பார்க்கவில்லை? ஏன் அவள் இறந்து விட்டாள் என்ற மாயத்திரையை உருவாக்கினாள்? ஊர் விட்டு ஊர் வந்து தன்னிடமிருந்து மறைந்து வாழும் அளவிற்கு கொடுமைக்காரனாகவா அவள் கண்களுக்கு தெரிந்திருக்கிறேன், இத்தனை வருடங்களில் துளியளவிற்கு கூட தன்னையும் தன் காதலையும் பற்றியும் அவள் நினைத்து பார்க்கவே இல்லையா? என்று நினைக்கும் போதே தொண்டை அடைத்திட, அட மடையா அவள் அப்படி உன்னை பார்த்து நடுங்கி ஓட காரணமே நீ கொட்டிய தேள்க்கொடுக்கு வார்த்தைகள் தானே என்று புத்தியில் உரைத்தாலும் மோகியை நினைத்து உருகும் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே. அத்தனை பெரிய இக்கட்டான சூழ்நிலைகளை எப்படி தனியாக சமாளித்து கஷ்டங்களை அனுபவித்து இருப்பாள், நானும் தானே அவளை நினைத்து உருகுலைந்து போனேன் என்னிடம் ஓடி வந்திருந்தால் எந்த ஒரு துயரமும் என்னவளை நெருங்க விட்டிருக்க மாட்டேனே! நெஞ்சம் தவித்துப் போனவன்.

தற்போது அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று தெரியாமல் அவசரப்பட்டு அவள் முன்பு செல்ல வேண்டாம் என எண்ணி ஓரமாக நின்று இனிமேல் பார்க்கவே முடியாதா அவளின் தேன் குரலை கேட்கவே முடியாதா என பல வருடங்கள் தவித்திருந்த தன்னவளின் முத்துமணி சிதறும் அன்பொழுகும் வார்த்தைகளை ரசித்து கேட்டுக் கொண்டு இருந்தவன், கண்கள் கலங்கி கண்ணீர் கன்னம் தாண்டி சட்டையை நனைப்பது கூட அறியாமல் அவள் ஆட்டோவில் ஏறி செல்லவும் அவளை பின் தொடந்தான் விஷ்வரூபன்.

ப்ரீகேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சிறிய கிண்டர் கார்டன் பள்ளி. பிறப்பிலேயே குறைகள் கொண்ட நிறைய குழந்தைகள் அங்கு பைற்றுவிக்க மோகி அங்கு தான் ஆசிரியராக பணியாற்றுகிறாள். நல்ல நல்ல சம்பாத்தியங்கள் கொடுக்கும் கம்பனிகளில் வேலை செய்வதை விட இங்கு தான் தனக்கு மனநிம்மதி கிடைக்கும் என எண்ணினாளோ அல்லது வேறு ஏதேனும் காரணமோ அவளுக்கே வெளிச்சம்.

அவள் உள்ளே வந்ததும் ஹையாஆ.. மிஸ்ஸு இன்னைக்கு வந்துட்டாங்க.. பல குழந்தைகள் இருந்த இடத்திலேயே அமர்ந்து ஆரவாரம் செய்ய இது போதாதா அவளின் மலையளவு மனபார கவலைகளை ஒதுக்கி எறிய. என் தங்கங்களே எல்லாரும் எப்டி இருக்கீங்க. நேத்து மிஸ்ஸு வராம ஜாலியா இருந்தீங்களா என்ன. ஒவ்வொரு பிள்ளையின் கன்னம் கிள்ளி முத்தம் வைப்பது தான் வந்ததும் முதல் வேலை அவளுக்கு.

வெறி சேட் மிஸ் நீங்க இல்லாம, ஒரு குழந்தை உதட்டை பிதுக்கியது சோகமாய்.

அச்சோ செல்லமே, நானும் தான் உங்கள எல்லாரையும் பாக்காம சேடா இருந்தேன் மோகியும் சோக கீதம் வாசிக்க, அப்டியாஆ.. மிஸ் எங்கள எல்லாம் நீங்க நினைச்சி ஃபீல் பண்ணீங்களா? என்ற பிஞ்சி குழந்தைகள், நம்மையும் நம்ம மிஸ்ஸு தேடி வருத்தம் கொண்டு இருக்கிறார்களே என்று மிகுந்த உற்சாகம் அவர்களுக்கு.

பின்னே உங்க எல்லாரையும் நினைக்காம இருக்க முடியுமா என்ன, அவளின் அந்த ஒற்றை சிரிப்பினில் உலகம் மறந்தவன் 'என்னையும் எப்பாவது நினைச்சியா மோகிமா' மறைவாக நின்றிருந்தவன் மனம் ஏங்கி தன்னவளின் மனநிலையை எண்ணி அவளை நெருங்க முடியாமல் கலங்கி தவித்தது.

பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, விளையாட்டு காட்டுவது, உணவு கொடுப்பது என அன்று நாள் முழுக்க அவள் செய்வதை எல்லாம் உண்ண கூட மறந்தவனாய் பூமியில் புதிதாய் பூத்த அதிசய பெண்ணை கண்டு ரசித்தவன், மாலை மூன்று முப்பதுக்கெல்லாம் பள்ளி முடிந்ததும் ஆட்டோவில் ஏறி அவள் தங்கி இருக்கும் சிறிய அபார்ட்மெண்ட் நோக்கிப் புறப்பட தானும் அவளோடு சுற்று பயணம் மேற்கண்டான்.

அவள் வீட்டின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள், அவன் தான் வீட்டின் வெளியே கழட்டி விடும் செருப்பாகிப் போனான். மீண்டும் எப்போது அவள் வெளியே வருவாள் என அலுக்காமல் தாயின் வருகைக்கு ஏங்கும் மகனாக ஆர்வமாக காத்திருக்க, அடுத்த ஒருமணி நேரத்தில் மீண்டும் கதவு திறக்கப்பட்டது.

வீட்டிற்கு வந்ததும் குளித்திருப்பாள் போலும் பண்ணீர் ரோஜா நிறத்தில் மினுமினுப்பாக மின்னியவள் எதிர்வீட்டின் காலிங்பெல்லை அழுத்திய சில நொடியில் கதவு திறந்த பெண்மணியை தாண்டி ஆவலாக உள்ளே சென்ற அவளின் பார்வையை புரிந்துக் கொண்டவராக, 'வெளியே நின்னே பாத்தா எப்டிமா தெரியும், உள்ள வந்து மணிக்கணக்குல நீபாட்டுக்கு பாரு' என்று படக்கென அவளை உள்ளே இழுத்துக் கொண்டு கதவை அடைத்து விடவும் விஷ்வாவின் நிலையோ மோசமாகி போனது.

கண்ணெதிரே அவன் உயிரானவள் தோன்றியும் அவளை நெருங்க முடியாத தன் அவல நிலையை எண்ணி நொந்துப் போனவன், இரவு நேரம் ஆகியும் மோகக்காரிகையின் தரிசனத்திற்காக காத்திருந்தவன் காலையில் இருந்து உண்ணாமல் உறங்காமல் நின்றபடியே இருந்த கால்கடுப்பு என ஒன்று சேர்ந்து படிக்கூண்டில் அமர்ந்த வாக்கிலே உறங்கிப் போனவன் காலையில் மீண்டும் கண் விழிக்கையில் கண்ட காட்சியில் இதயம் உறைந்து போனான் விஷ்வரூபன்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 31
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top