Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
238
Reaction score
213
Points
63
அத்தியாயம் - 34

இரண்டு நாட்கள் கடந்து விட்ட வேளையில், மாலை அலுவலகம் விட்டு சோர்ந்துப் போய் வந்த ஆத்வியின் கண்ணில் பட்டாள் அவன் சிவந்த மூக்கி. வெளியே கார்டனில் நின்று யாருடனோ போனில் சிரித்து, சிணுங்கிப் பேசிக் கொண்டு இருந்தாள்.

அதை கண்டு வெறியாகிப் போனவன், "இங்க என்ன பாக்காம வேணும்னே ஓடி ஒளிஞ்சி கண்ணாம்பூச்சி ஆடுறா, ஆனா போன்ல யார் கூட இப்டி சிரிச்சி சிரிச்சிப் பேசிட்டு இருக்கா.." உள்ளே கொதித்தபடி அவளருகே சென்றான்.

இப்படி ஒரு அபாயமணி தன் பின்னே நிற்பது தெரியாமல் திரும்பி நின்று இலைகளை விரல்கள் கொண்டு வருடியபடி "சீக்கிரம் கல்யாணத்துக்கு ரெடி பண்ணுங்க, நானும் கல்யாண நாளுக்காக தான் ஆர்வமா காத்திருக்கேன்..

கல்யாணத்தை பத்தி எவ்ளோ கனவு கண்டு வச்சிருக்கேன் தெரியுமா, அதை எல்லாத்தையும் உங்க மூலமா நிறைவேத்திக்கனும்.. சீக்கிரம் வந்துடுங்க யாதவ் சார்.. மனசலவுல ஒண்ணா இணஞ்சிட்டு, இப்டி ஆளுக்கு ஒரு இடத்துல ஒருத்தரை ஒருத்தர் நெனச்சி வாழ்றது ரொம்ப கொடுமை தெரியுமா..

ரொம்ப நாள் காக்க வைக்காதீங்க சார்" இந்த பக்கம் காதலனை பிரிந்த துக்கத்தில், ஏக்கமாக பேசுவதை போல கவி பேசியதெல்லாம், அவள் பின்னே இருந்து கேட்டவனுக்கு ரத்தம் கொதித்துப் போனது.

"கண்டிப்பா வரேன் கவி, எனக்கு நல்லா தெரியும் ஸ்வாதிக்கும் என்மேல இன்ட்ரெஸ்ட் இருக்கு.. ஆனா ஸ்வாதி, தன்னை விட உன் ஃபியூச்சர நினைச்சி தான் அதிக கவலை படுவா..

நீ கவலை படாத, ஸ்வாதி எனக்கு சொந்தமாகிட்டாலும் நானும் அவளோட சேந்து உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க உறுதுணையா இருப்பேன்..

இத அவளுக்காக மட்டும் சொல்லல, ஏன்னு தெரியல எனக்கு ஸ்வாதிய விட நீ ரொம்ப ஸ்பெஷல் கவி.. ஏதோ நம்ம ரெண்டு பேரும் ரொம்ப நாள் ஒன்னா பழகின ஃபீல்.. எனக்கு உன்ன ஒரு குட் சோலா ரொம்ப பிடிக்கும் கவி..

சரி நேரமாச்சு பிளைட்க்கு போகணும் வச்சிடுறேன், நீ பாத்து ஹாஸ்டல் போ.." என்ற யாதவ் அழைப்பை துண்டித்தான்.

அவனுடன் பேசி விட்டு மலர்ந்த முகமாக திரும்பியவளுக்கு, தன் முன்னே ருத்ர முகத்துடன் நின்றவனைக் கண்டதும், பேய் அறைந்ததை போன்ற நிலையில் கைக்கால்கள் உதறல் எடுக்க நின்று விட்டாள்.

"என்ன மேடம் போன் பேசி முடிச்சாச்சா.." கைக்கட்டி நின்று, உக்கிறப் பார்வையால் மொழிந்த விதமே உள்ளுக்குள் புயலடித்தது.

"ந்.நான் போறேன்.." பதில் கூறாமல் தப்பிக்கப் நினைத்தவளின் இடை, அவன் வலியக்கரத்தினுள் அகப்பட்டு, எலும்புகள் உடைந்து விழுவது போன்ற வலியில் முகம் சுளித்தவள்,

"விடுங்க என்ன, எதுக்கு என்கிட்ட இப்டி ரக்கடா பிஹேவ் பண்றீங்க.." ஆத்வியின் கை வளைவில் கவி நெளிந்துக் கொண்டிருக்க,

"ஏய்.. வாய மூடு, இல்ல வர ஆத்திரத்துக்கு உடம்ப ரெண்டா முறிச்சி போட்ருவேன்.." என்றவன் விட்டால் அவளை ரெண்டாக முறிக்கும் நிலையில் தான் இருந்தான். அத்தனை கோவம் தெறித்தது அவனது வார்த்தையிலும் செயலிலும்.

"ஆஆ.. வலிக்குது, ப்ளீஸ் விடுங்க.." வலியில் கண்கள் கலங்கிப் போனது அவளுக்கு.

"முடியாது டி, எவ்ளோ தைரியம் இருந்தா யாதவ் கூட திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு போயிருப்ப.. உன்ன மாதிரி ஒருத்தி யாதவ்க்கு ஜோடியா ச்சீ.." அவளை கேவலமாக கண்டு முகம் சுளிக்கவும், கவிக்கு தனது தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கி அழுகை முட்டியது.

"ந்.நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க, அது நான்.." அவள் தன்னிலை விளக்கம் கொடுக்க முற்படும் போதே,

"ஏய் போதும் நிறுத்து டி உன் ட்ராமாவ.. எத்தன முறை சொன்னேன், யாதவ வளைச்சி போடுற என்னத்த கை விட்டுடுனு.. ஆனா நீ.." அதீத கோபம் பொங்கி, வேகமாக அவளை உதறி தள்ள, அவன் தள்ளி விட்ட வேகத்தில் கீழே விழுந்தவளுக்கு, அருகில் உள்ள கல்லில் பட்டு முழங்கையில் ரத்தம் வந்தது.

வலியில் கையைப் பிடித்துக் கொண்ட கவி, வேதனை தாளாதவளாக அவனை நிமிர்ந்து பார்க்க, ஆத்வியோ அதை எதையும் கருத்தில் கொள்ளாமல், கோவமே உருவாக செங்கதிரோனின் மறு உருவமாக, அவளை பார்வையாலே எரித்துக் கொண்டிருந்தான்.

"எப்ப நீ இந்த அளவுக்கு வந்துட்டியோ, இனிமே என் வீட்ல உன் காலடி கூட படக் கூடாது.. வேலை அது இதுனு இந்த வீட்டு பக்கம் இனி வந்த, திருட்டு கேஸ்ல போலீஸ்ல பிடிச்சி கொடுத்து வெளிய தலைக்காட்ட முடியாதபடி, உன் வாழ்க்கையே நாசம் பண்ணிடுவேன்..

மரியாதையா என் வீட்ட விட்டு வெளியப் போடி.." கர்ஜனையாக வெளிவந்த அவன் குரலில் மிரண்டு விழித்தவளை அற்ப்பமாக கண்ட ஆத்வி, மறுபுறம் விழுந்து கிடந்த அவள் ஃபோனை கோவம் குறையாமல் எடுத்து, சுவற்றில் தூக்கி எறிந்து, தேங்காய் சிதறலாக சிதற வைத்தான்.

"என் ஃபோன்.." கவி கத்துவதை பார்த்து மேலும் கோவம் கொண்டவன்,

"இன்னும் போகாம என்ன டி அழுது சீன் போட்டுட்டு இருக்க.. நீ இருக்க தகுதிக்கு, காதலிக்க ஒருத்தன், கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுக்க ஒருத்தன், கல்யாணம் பண்ணிக்க ஒருத்தன் கேக்குதா..

அப்புறம் பிள்ளையெல்லாம் யாருக்கு பெத்துக்குவ, அதுக்குனு தனியாள தேடிக் கண்டு பிடிக்கணுமா, இல்ல ஏற்கனவே ரெடி பண்ணி வச்சிருக்கியா.." வேண்டுமென்றே ஆத்வி பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும், மரண வேதனை கண்டு துடித்துப் போன கவி,

"நான் சொல்ல வர்றத புரிஞ்சிக்காம நீங்களா ஒன்னு நெனச்சி பேசி, என்னையும் என் கேரக்ட்டரயும் அசிங்கப்படுத்தாதீங்க.. அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்.." சட்டென எழுந்து நின்றவளாக, விரைப்பாக பேசியதை கண்டு, மேலும் ஆத்திரம் மூண்டது ஆத்விக்கு.

"எத்தனை தடவை சொல்றது என்கிட்ட இவ்ளோ திமிரா பேசி குரல ஒசத்தாதேன்னு.. என் முன்னாடி நின்னு பேசக் கூட ஒரு தகுதி வேணும் டி, அது உன்ன மாதிரி ஒரு கேவலமானவளுக்கு இல்லவே இல்ல..

மரியாதையா நீயா இப்ப போறியா இல்ல, கழுத்த பிடிச்சி வெளிய தள்ளவா.." ஆக்ரோஷமாக பற்களை கடித்தவனுக்கு சிறிதும் பொறுமையின்றி, அவனே அவள் கழுத்தை பிடித்து, கேட்டுக்கு வெளியே தாறுமாறாக தள்ளி விட்டான்.

நடுவீதியில் விழுந்த கவி, கண்ணீர் பெருக்கெடுத்த நிலையில், உதடுகள் துடிக்க அவனை வெறித்து பார்க்கும் போதே, இதயத்தின் கொதிப்பு அதிகரித்து, அவள் மேல் சீறிக் கொண்டு எழும் கோவத்தை அடக்க வழி தெரியாமல், பெரும் சத்தமெழுப்பி கேட்டை அடித்து சாத்த, கவியின் நெஞ்சில் இருந்த அவன் மீதான துளிர் விட்ட துளி நேசமும், அதோடே சேர்த்து மூடிக் கொண்டது.

கையில் ரத்தம் சொட்டுவதையும் உணராது, கால் போன போக்கில் நடந்தாள் கன்னம் தாண்டி வழியும் கண்ணீரைக் கூட துடைக்க மனம் இல்லாமல். எப்படி ஹாஸ்டல் அறைக்கு வந்தாளோ! கடவுளுக்கே வெளிச்சம்.

எப்போதும் போல கவிக்காக காத்திருந்த ஸ்வாதி, ஹாஸ்டல் தொகையை அதிகப்படுத்தியதற்காக, ஹாஸ்டல் பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வார்டனிடம் வாதிட்டுக் கொண்டு இருக்கவே, இவளையும் சில பெண்கள் இழுத்து சென்று விட்ட அந்த நேரத்தில் அறைக்கு வந்த கவி, போர்வையில் மொத்தமாக தன்னை மூடி படுத்து விட்டாள்.

மீண்டும் அறைக்கு வந்த ஸ்வாதி, கவி உறங்கி விட்டாள் போலும் என நினைத்து தானும் அமைதியாக படுத்துக் கொண்டவள், இப்போதெல்லாம் காலையில் அவள் எழுப்புவதற்க்கு பதிலாக, அலாரத்தை சத்தமாக வைத்து எழுப்புவது வழக்கமாகிவிட, அன்றும் அதே போல் வைத்து, கவி எழுவாள் என்று காத்திருக்க, அவள் அசைவதாக கூட இல்லை.

"என்னாச்சி இவளுக்கு இன்னும் எழாம இருக்கா, ஒருவேளை இயர் பட்ஸ் காதுல இல்லையோ.." தனக்கு தானே பேசியபடி, அவள் தலையில் இருந்து போர்வையை விளக்கப் போக,

"நான் வேலைக்கு போகல நீ ஆபிஸ் கிளம்பி போ.." என்றாள் திடமான குரலில்.

ஆனால் ஸ்வாதிக்கு தான் மனம் கேட்கவில்லை. அவளிடம் பேசாமல் இருப்பதும் மிகவும் கஷ்டமாக இருக்க, 'சரி இன்னும் எத்தனை நாளுக்கு இவளிடம் பேசாமல் இருந்து தானும் கவலை கொள்வது!' என வருத்தமாக எண்ணி,

"கவி, என்னாச்சி ஏன் திடீர்னு வேலைக்கு போகலைனு சொல்ற, ஏதாவது பிரச்சனையா.." என ஸ்வாதி அக்கறையாக கேட்டது தான் தாமதம். போர்வையில் காளி அவதாரம் கொண்டு எழுந்த கவி,

"போகலலைன்னு சொன்னா விட்டுத் தொலையேன்.. எதுக்கு சும்மா கேள்வி மேல கேட்டு நச்சரிக்கிற, என்ன நிம்மதியாவே இருக்க விட மாட்டியா.. நீ ஒன்னும் எனக்கு அம்மா இல்ல ஜஸ்ட் பிரண்ட் அந்த லிமிட்டோட இரு..

எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லணும்னு கட்டாயம் இல்ல ஸ்வாதி, எனக்குனு ஒரு ப்ரைவசி வேணும்.. இத்தன நாளா பேசாம தானே இருந்த அதுபோல இருந்துட்டு போயேன்..

உனக்கென்ன நான் வேலைக்கு போகணும்z சம்பாதிக்கனும் அவ்ளோ தானே.. கவலை படாதே பிச்ச எடுத்தாவது உன்கிட்ட பணத்த கொண்டு வந்து கொட்றேன்" ஆக்ரோஷமாக கவி கத்திய அதே நேரம், பளார் என அவள் கன்னத்தில் பெரும் சத்தம்.

மூச்சிவாங்க கண்கள் துடிக்க அவளை கோவமாக கண்ட ஸ்வாதி, "ஒரு வார்த்தை.. இன்னும் ஒரு வார்த்தை நீ பேசின, அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது சொல்லிட்டேன்..

இவ்ளோ நாளும் என்ன பத்தி நீ இப்டி தான் கேவலமா நெனச்சிட்டு இருந்தியா டி.." கோவத்தை தாண்டிய இயலாமையில் அழுகை வெடிக்க தயாராகி, தன்னையும் மீறி கண்ணில் நீர்க் கொட்டியது.

காலம் கடந்து அவசரப்பட்டு செய்த தவறு மூளையில் உரைக்க, "ஸ்வாதி.." என தவிப்பாக வாயெடுக்கும் போதே கை நீட்டி தடுத்தவளாக,

"இப்படி ஒருநாள் உனக்கும் எனக்கும் நடுவுல வரும்னு நான் நெனச்சிக் கூட பாத்ததில்ல, இப்ப தான் தெளிவா புரிஞ்சிக்கிட்டேன் என் லிமிட் என்னனு.. எனும் போதே வார்த்தைகள் தடுமாறி நடுங்கியது.

"ஐயோ ஸ்வாதி ஏன் இப்டிலாம் பேசுற, நான் ஏதோ டென்ஷன்ல லூசுத்தனமா பேசிட்டேன் அதெல்லாம் மனசுல வசிக்காதே டி.." தான் பேசிய வார்த்தைகளின் வீரியம் உணர்ந்த கவிக்கு அழுகை முட்டி, வேகமாக அவளை நெருங்கப் போக, அதே வேகத்தில் பின்னால் நகர்ந்துக் கொண்ட ஸ்வாதி,

"ப்ளீஸ் ஸ்டே அவே கவி, ப்ளீஸ் என்கிட்ட வராதே.. பேச வேண்டியது எல்லாமே ரொம்ப தெளிவா பேசி, இந்த மரமண்டைக்கு எப்டி சொன்னா புரியுமோ அப்டி விளக்கமா சொல்லி புரிய வச்சிட்ட.. இனியும் பேச நமக்குள்ள அப்படி ஒன்னும் பெருசா எந்த உறவும் இல்ல, ஜஸ்ட் பிரண்டை தாண்டி..

இனி நீ உன் இஷ்டம் போல தாராளமா இரு, உன் ப்ரைவசிகுள்ளயோ உன் வாழ்க்கைக்குள்ளயோ நான் செத்தாலும் தலையிட மாட்டேன்.. அதே போல நீயும் இருந்துகிட்டா நல்லது.." கண்ணீரை துடைத்தபடி அழுத்தமாக உரைத்த ஸ்வாதி, கவியின் முகத்தை கூட பாராமல் அங்கிருந்து சென்று விட்டாள்.

கவியின் நிலையோ படுமோசம். யார் மீதோ இருந்த கோவத்தை தோழியிடம் காட்டி விட்டு,
"ஸ்வாதி ப்ளீஸ் என்கிட்ட பேசாம போகதே டி, நான் பேசினது தப்பு தான் ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு.." தரயில் மடிந்து விழுந்து வாய் விட்டே கதறி அழுதுக் கொண்டிருக்க, அவள் அழுகையை நிறுத்த தான் அங்கு யாரும் இல்லையே!

கவி அன்று முழுதும் ஹாஸ்டல் விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை. கையில் போனும் இல்லை ஸ்வாதிக்கு அழைத்து சமாதானம் பேச. உண்ண மறந்து, தூக்கம் தொலைத்தவளாக தெரித்த விழிகளை எங்கோ நிலைகுத்தி படர விட்டு, முட்டிக் காலில் கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

இரவு ஆனது ஸ்வாதி இன்னும் ஹாஸ்டல் வரவில்லை. எப்போதும் மாலை 6 மணிக்கெல்லாம் அலுவலகம் முடிந்து விடும். அதையெல்லாம் கவி உணரும் நிலையிலும் இல்லை. சிலையே தோற்றும் விடும் அளவுக்கு உணர்வற்ற பொம்மை போல அசையாமல் அமர்ந்திருந்தாள்.

இரவு பண்ணிரண்டை தாண்டியது. ஹாஸ்டல் வாடர்ன் அறைக்கதவை தட்டியபின், பொம்மைக்கு பேட்டரி பொருத்தி இயக்குவதை போல, மெதுவாக நடந்து சென்று கவி கதவை திறக்க,

"மணி என்னாச்சி இன்னும் ஏன் ஸ்வாதி ஹாஸ்டல் வரல" என்றதும் அதிர்ந்து போனாள் கவி.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் - 34
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top