Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
238
Reaction score
213
Points
63
அத்தியாயம் - 37

கவியை ஒரு உயர்தர ஹோட்டலுக்கு தூக்கி வந்திருந்தான் ஆத்வி. நாள் முழுக்க உண்ணாமல் இருந்தது, இரவு முழுக்க கால்கடுக்க அலைந்தது, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி என்று உடலும் மனமும் சோர்ந்து போன கவி, அவன் கைகளிலே மயக்கமாகி இருந்தாள்.

அவளை அங்கிருந்த மெத்தையில் மெதுவாக படுக்க வைத்து விட்டு, தானும் அவளருகில் அமர்ந்த ஆத்வி, முகத்தை மறைத்த கற்றைக் கூந்தலை அவள் காதருகில் ஒதுக்கி விட்டபடி, சிறிது நேரம்வரை கவியின் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்தான்.

அழுது சிவந்த முகம், கலைந்து வறண்டு போன தலைமுடி, ஈரப்பதமின்றி உளர்ந்து போன உதடுகள் என, முந்தன நாள் பொழுது அவன் தள்ளிவிட்டதால், கைமுட்டியில் உண்டான காயத்தில் இருந்து வடிந்த குருதி காய்ந்து இருந்ததை கூட சுத்தம் செய்யவில்லை போலும்.

எப்போதும் பார்க்க புதுமலராக இருப்பவள், இந்த இரண்டு பொழுதில் வாடி வதங்கிய மலராக மாறி இருந்தாள். கவியை இப்படிப் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது.

சிறிது நேரம் நன்றாக தூங்கி ஓய்வெடுக்கட்டும் என நினைத்து வெளியே வந்த ஆத்வி, அசோக் எண்ணுக்கு அழைத்தான்.

"சொல்லு மச்சி ஏன் இன்னும் ஆபிஸ் வரல, ரெண்டு காலேஜ் ஸ்டூடென்ஸ் உன்ன பாக்க வந்திருக்காங்க, நீதான் இன்னைக்கு வர சொன்னியாமே.. அவங்க உருவாக்கின பேட்டரி பைக் பத்தின பிராஜெக்ட்ட உன்கிட்ட காட்டி, எல்லாம் சரியா இருக்கானு டவுட் கேக்கனுமாம்.." அந்த பக்கம் அசோக் சொல்ல,

"இன்னைக்கு அவங்கள மீட் பண்ண முடியாது, திரும்ப அனுப்பி விடு, பிரீயாகிட்டு சொல்றேன் வீட்டுக்கே வர சொல்லு அசோக், எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.." என்றவனாக, "அர்ஜென்ட்டா ஒரு சுடிதார் செட் வேனும், சீக்கிரம் வாங்கிட்டு GM ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்க கிறீன் ஹோட்டல்க்கு வா" என்றிட,

"டேய் என்ன டா சுடிதார் ஹோட்டல்னு என்னென்னவோ சொல்ற, என்ன டா மச்சி வந்த வரைக்கும் லாபம்னு அந்த ஹரிதா பொண்ணையே பிக்கப் பண்ணி ரூம் கூப்ட்டு போய்ட்டியா.." அசோக் நக்கலாக கேட்டிட, இந்த பக்கம் இருந்தவனுக்கு கொலைவெறியானது.

"டேய்.. டேய்.. அறிவுக்கெட்டவனே வந்தேன்னு வையி ஜாமா ஜேமாகிடும் சொல்லிட்டேன்.. கண்டதையும் நினைச்சி புத்திய அலைய விடாம சொன்னத செய் டா பக்கி.." என அழைப்பை துண்டித்தவன், கையில் இருந்த போனைக் கொண்டு ரெண்டு தட்டு தலையில் தட்டிக் கொண்டவன்,

"இவனை எல்லாம் எதுக்கு இன்னும் கூட வச்சிட்டு இருக்கேன்னு எனக்கும் புரியல, ஏன் என்கூட இருக்கானு அவனுக்கு தெரியல.." சலிப்பாக மூச்செடுத்த ஆத்வி, கவிக்கு தேவையான உணவை ஆர்டர் கொடுத்து விட்டு அறைக்கு வந்தான்.

******

"என்னங்க வாங்க நம்ம கவிய பாக்க போலாம், பாவம் சின்ன பொண்ணு தனியா என்ன பண்ணுவா.. ஸ்வாதி வேற இப்ப எப்டி இருக்கானு தெரியல, அந்த பொண்ண இதுவரைக்கு நான் பாத்தது இல்லனாலும், கவி சொன்னதை எல்லாம் வச்சி பாத்தா அவளும் ரொம்ப நல்ல பொண்ணா தான் இருப்பா.. ஏன் இப்டி அமைதியா இருக்கீங்க, வாங்க போலாம்.." மித்ரா இடைவிடாது ஆதியை உளுக்கி எடுத்தாள்.

ஆத்வி சென்றதிலிருந்தே இதே அலப்பறை தான். "மச்.. அமைதியா இரு மித்துபேபி.. ஆத்வி கால் பண்ணதும் மதியத்துக்கு மேல கூட்டிட்டு போறேன், அதுவரைக்கும் கொஞ்சம் டென்ஷன் பண்ணாம இரு.." ஆதி அதட்டவும் முகத்தை தூக்கி வைத்து அமைதி காத்தாள் மித்ரா.

*****

கவியின் கையில் உள்ள காயத்தை சுத்தம் செய்து மருந்திட்ட ஆத்வி, அவளின் தலை முதல் கால் வரை பார்வையாலே அளந்தவனுக்கு, அவளின் வலது கால் நன்றாக வீங்கி இருப்பதை புருவம் சுருக்கிப் பார்த்தவன், "என்ன இப்டி வீங்கி இருக்கு.." தயங்காமல் அவள் கால் பாதத்தை தூக்கி மடியில் வைத்தான்.

முழுங்கால் வரை லெகின்ஸை தூக்கிப் பார்க்க, அதுவோ தக்காளி நிறத்தில் தளதளவென இருப்பதை கண்டு மேலும் முட்டி வரை தூக்கிப் பார்க்க, அங்கு சிறுவயதில் அறுவை சிகிச்சை செய்ததர்க்கான தடயம் இருப்பதைப் பார்த்து கண்களை விரித்தவன், சற்றும் யோசிக்காமல் அவளின் மொத்த கீழாடையும் அகற்றி, இரு கால்களின் வித்தியாசத்தையும் பார்த்தவனது நெஞ்சம் கனத்துப் போனது.

ஒற்றை கால் வழுவழுவென பனிக்கட்டிப் போல பளப்பளப்பாக இருக்க, மற்றொரு காலோ சிவந்த மிளகாய் பழம் போல தளதளவென வீங்கி ஆங்காங்கு காயம் ஆறிய தழும்புகள் இருந்தது.

"இங்க மட்டும் தான் இத்தன காயத்தோட தழும்புகள் இருக்கா, இல்ல உடம்புல வேற எங்கேயும், இதே போல இருக்கா.." தனியாக என்னென்ன வேதனைகளை தாங்கினாளோ என்ற தவிப்போடு, கீழாடை இல்லாமல் வெறும் மேல் சட்டையோடு படுத்திருந்தவளை பார்த்தும் கூட, அவனுக்கு தவறான வேறெந்த நினைவுகளும் தோன்றவில்லை.

வருத்தமாக அவள் உடலைப் பார்த்தவன், "சரி இப்போதைக்கு இந்த அளவுக்கு உரிமை போதும், அப்புறம் எல்லாம் சேத்து வச்சி பாத்துக்கலாம்.." என்றெண்ணி அவளின் காலுக்கு மென்மையாக மருந்தை தேய்த்து இதமாக அழுத்தி விட்டுக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் அறைக்கதவு தட்டும் சத்தத்தில் கதவை திறக்க, உணவு ட்ரேயோடு வெயிட்டரும், புது துணியோடு அசோக்கும் இருந்தனர். இருவரையுமே உள்ளே அழைக்காமல் வேண்டியவகளை வாங்கிக் கொண்டு கதவடைக்க போக,

"டேய்.. உள்ள யாருடா இருக்கா, யாருக்காக இந்த ட்ரெஸ கேட்ட.." என்ற அசோக்குக்கு உள்ளிருக்கும் பெண்களின் முகத்தைப் பார்க்க அவ்வளவு ஆர்வம்.

"ஹ்ம்ம்.. உங்க ஆயாவ தான் கடத்திட்டு வந்து வச்சிருக்கேன், போவியா.." கடுப்பாக மீண்டும் கதவை சாத்தப் போக,

"டேய் எங்க ஆயா மேல போய் பல வருஷம் ஆச்சி, உள்ள இருக்குறது யாருனு சொல்லு.." அவனும் விடுவதாய் இல்லை.

பெருவிரல் கொண்டு நெற்றியை தேய்த்தபடி, கீழுதட்டை கோணலாக கடித்தபடி ஆத்வி விட்ட ஒரு லுக்கில், அடிவயிறு கலங்கிப் போன அசோக், "யப்பா சாமி உள்ள யார் இருந்தா எனக்கென்ன, நீ போ ராசா.." என பதமாக உள்ளே அனுப்பி விட்டான்.

போன வேகத்தில் மீண்டும் கதவு வேகமாக திறக்கவும், பயந்து ரெண்டடி தள்ளி நின்று நிமிர்ந்து பார்த்தான்.

"அசோக் நீ உடனே GM ஹாஸ்பிடல் போ.." என்று நடந்ததை சுருக்கமாக சொன்ன ஆத்வி, "டாக்டர்ஸ் ஏதாவது சொன்னா உடனே எனக்கு இன்ஃபார்ம் பண்ணு, நானும் கவி எழுந்ததும் அவளை கூட்டிட்டு வரேன்.." என்றிட,

"சரி ஆத்வி அந்த பொண்ண பத்திரமா பாத்துக்கோ.." என்றவன் அங்கிருந்து சென்றான், ஆத்வியின் மனதில் ஒருத்தி நுழைந்து விட்டாள் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட திருப்தியில்.

மயக்கத்தில் கூட தோழியின் நினைவு தான் போலும். மூடிய கண்ணில் இருந்து வழிந்துக் கொண்டே இருக்கும் கண்ணீரை சலிப்பில்லாமல் துடைத்துக் கொண்டிருந்தான் ஆத்வி.

மெல்ல மெல்ல இமைகளை உருட்டி கண் திறந்த கவி, தான் இருந்த நிலைக் கண்டு ஓவென கதறி அழ தொடங்கி விட்டாள்.

"ஏய்.. ஏய்.. கவி ஷ்.. இப்ப ஏன் அழற.. என்ன பாரு டி" என அவள் முகத்தை நிமிர்த்த,

"ச்சீ.. கைய எடு.." அவன் கரத்தை தட்டி விட்டவளாக, "இந்த நிலமைல கூட என்ன நிம்மதியா விடமாட்டியா.. இப்டி ஒரு இக்கட்டான சூழ்நிலைல கூட உன் புத்தி மாறவே இல்லைல..

என் பிரண்ட் அங்க சாகக் கிடக்குறா.. ஆனா நீ, என்ன இங்க கடத்திட்டு வந்து உன் கேவலமான இச்சைய தீர்த்துக்க நினைச்சிருக்க, நீயெல்லாம் என்ன ஜென்மம்" அவள் பேசிய வார்த்தைகளை உணர்ந்துகொள்ளவே நேரம் பிடித்தது ஆத்விக்கு.

மருந்தை தேயித்தவன் அவளின் கீழாடையை போடாமல் விட்டுவிட்டான், சிறிது நேரம் காற்றோட்டாமாக இருக்கட்டும் என்று தான். இப்போது அதை பார்த்து தான் தவறாக புரிந்து கொண்டிருப்பாள் என்பது புரிந்தாலும், வந்த ஆத்திரத்தை கட்டுப்படுத்தவே பெரும் சிரமமாகி போனது.

கண்கள் சிவக்க கை முஷ்ட்டியை இறுக்கமாக மூடிக் கொண்ட ஆத்வி, மீண்டும் முகத்தை மூடி சத்தம் போட்டு அழும் கவியை அமைதியாக வெறித்திருக்க,

"உன்ன மாதிரி ஒரு கேடு கெட்டவனால தான் இன்னைக்கு என் ஸ்வாதி உயிருக்கு போராடிட்டு படுத்திருக்கா.. ஒரு பொண்ணோட சம்மதம் இல்லாம அவ பெண்மைய பறிக்க நினைக்கிற நீயெல்லாம் ஒரு நல்ல அப்பா அம்மாக்கு தான் பிறந்தியா.. " ஆவேசமாக அவள் கேட்டது தான் தாமதம், கவியின் உயிர் துடிப்பு ஆத்வியின் கைப் பிடியில் இருந்தது.

இத்தனை நேரமும் அவளின் இக்கட்டான மனநிலை உணர்ந்து, ஸ்வாதியின் நினைப்பில் நிலமை உணராமல் பேசுவதையெல்லாம், கோவம் வந்தாலும் அடக்கிக் கொண்டு அமைதியாக நின்ற ஆத்வி, கடைசி வரியை அவள் உச்சரிக்கும் போதே அடக்கமுடியாமல் உச்சம் பெற்ற கோவத்தில், அவள் கழுத்தெலும்பே உடைத்து விடுவது போல, வெறியாக கழுத்தை நெரித்தவன்,

"கோவத்துல வேற நீ என்ன பேசி இருந்தாலும், சரி போனா போகுதுனு பொறுத்துக்கிட்டு அமைதியா இருந்திருப்பேன் டி.. ஆனா நீ யாரை நடுவுல இழுத்து பேசியிருக்க தெரியுமா.." என்றவனின் உக்கிர பார்வையில் உடல் உதறி, பயந்து போனாள் பார்கவி.

அவன் பிடி இறுகிக் கொண்டே போக, கவி மூச்சிக்கு சிரமப்படுவதையும் தாண்டி அவளின் மிரலும் பார்வையில் என்ன கண்டானோ! பிடியை தளர்த்தி எடுத்து அழுத்தமாக தலைக் கோதிக் கொண்டவன், "இதுவரைக்கும் நீ என்ன பேசினதுக்கு அடிச்சி அவமானப் படுத்தினதுக்கு எல்லாம், உன் மேல கோவம் வந்தாலும் ஏதோ ஒன்னு அந்த கோவத்தை முழுசா உன்மேல காட்ட விடாம தடுத்து நிறுத்துச்சி..

ஆனா எப்ப என் பிறப்பை பத்தி கேவலமா பேசினியோ, இனிமே உன்ன அந்த கடவுளால கூட என்கிட்டருந்து காப்பாத்த முடியாது டி.." என்றவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் அத்தனை வெறுப்பும் உறுதியும் கண்டு, கவிக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.

அசோக் வாங்கி வந்த உடையை அவள் முகத்தில் தூக்கி வீசிய ஆத்வி, "இதை போட்டுட்டு இந்த சாப்பாட்டை சாப்ட்டு ரெடியா இரு.. நான் திரும்ப வரும் போது மிச்சம் மீதி ஒரு பருக்கை இருந்தாலும் அவ்ளோ தான் சொல்லிட்டேன்.." எங்கே இங்கேயே இருந்தால் அவளை ஏதாவது கோவத்தில் செய்து விடுவோமோ என்ற எண்ணத்தில், அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.

அவன் சென்ற திசையினை கண்ணீரோடு வெறித்தவளுக்கு, இன்னுமும் கூட அவன் செய்த எதையும் உணரும் நிலையில் இல்லை. அவள் எண்ணம் எல்லாம் ஸ்வாதியே நிறைந்திருக்க, இப்படி ஒரு நிலையில் கூட தன்னை விடாமல் ஆத்வி தனது கால்சட்டையை கழட்டியது மட்டும் தான், அவள் நினைவில் ஆழமாக பதிந்திருந்தது.

தனது காலில் இருந்த வலிகள் எல்லாம் குறைந்திருப்பது கூட அறியாதவளாக, முகத்தை கழுவி வந்து அவன் தூக்கி வீசிய உடையை அணிந்துக் கொண்ட கவி, ஆத்வி மிரட்டி விட்டு போனதால் அவனுக்கு பயந்து, அந்த உணவை உண்டவளுக்கு சிறிதும் வயிறு பசிக்கவில்லை. துக்கம் மட்டுமே தொண்டையை அடைத்தது.

போன அரைமணி நேரத்தில் திரும்பி வந்தவன், அவளை ஏரெடுத்தும் பாராமல் "போலாம் வா.." என்றான் கோவம் அடங்காத காளையாக. பதில் பேசாமல் அவன் பின்னே நடந்தாள் கவி.

இருவரும் மருத்துவமனைக்கு வந்த நேரம் அசோக் மட்டுமில்லாமல், மித்ரா ஆதி என்று அனைவரும் அங்கு குழுமி இருந்தனர். ஆனால் அவர்கள் முகத்திலோ குடிக்கொண்டு இருந்தது கலவரம்.

அவர்களை கண்டதும் ஏதோ சரிஇல்லை என உணர்ந்துக் கொண்ட ஆத்வி, கவியை திரும்பிப் பார்க்க, அவளோ அங்கு யார் வந்திருப்பது என்றெல்லாம் கவனிக்கும் உணர்வு இல்லாமல், தரையை தான் சோகமாக பார்த்திருந்தாள்.

அசோக்கிடம் 'தனியாக வா' என கண்ணைக் காட்ட, இருவரும் சென்றதும், அவளிடம் ஓடி வந்த மித்ரா,

"கவலை படாதே கவிமா, ஸ்வாதிக்கு ஒன்னும் ஆகாது, அவ நல்லபடியா பிழச்சி வந்திடுவா.." அரவணைத்து ஆதூரமாக அவள் தலைக்கோத, அதுவரை கொஞ்சம் கட்டுப்பாடாக இருந்த கண்ணீர், மித்ராவை கண்டதும் பெருக்கெடுத்து விட்டது.

"ஸ்வாதிய விட்டா எனக்கு யாருமே இல்ல ஆண்டி, அவளும் என்ன அனாதையா விட்டு போனா நான் என்ன பண்ணுவேன்.." சிறுபிள்ளையாக தன்னை கட்டியனைத்து தேம்பி அழும் கவியின் கண்ணீரை துடைத்து விட்ட மித்ரா, ஆறுதல் கூறி தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள்.

ஆத்வி அசோக் பின்னே ஆதியும் சென்றயிருக்க, "என்ன சொல்றீங்க எல்லாம் நாங்க பாத்துக்குறோம் பணத்தை மட்டும் கட்டுங்கனு என்கிட்ட அப்டி பேசிட்டு, இப்ப வந்து இதயம் ஸ்டாக் இல்லைனு சொன்னா எப்டி டாட்.. அந்த டாக்டர நான் சும்மாவே விடமாட்டேன்.." கோவமாக துள்ளியவனை அடக்கிப் பிடித்த அசோக்,

"டேய் இது வேற விஷயமா இருந்தா நாம கோவப்படறதுல நியாபகம் இருக்கு, ஆனா இது உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் நாம தான் கொஞ்சம் புத்தியோட யோசிக்கணும்.. ஸ்டாக் இருந்த ஹார்ட்ட இன்னொரு கிரிட்டிக்கலான பேஷண்ட்க்கு எடுத்து வச்சத, இந்த டாக்டர்கிட்ட முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணாம விட்டதால வந்த குழப்பம்.." நிதானமாக கூறி புரிய வைக்க முயல, ஆத்வி அடங்குவதாய் இல்லை.

"இல்ல அசோக் இதை எல்லாம் அப்பவே அவங்க கிளியரா செக் பண்ணி சொல்றது இல்லையா.. இல்லைனு சொல்லிருந்தா வேற நல்ல ஹாஸ்பிடல்லையாவது சேத்திருக்கலாமே, இப்ப என்ன பண்றது.. கோவமாக கத்தியவன் குரல், கடைசியாக சோர்ந்து ஒளித்தது.

ஓரமாக கை கட்டி நின்று மகனின் இத்தகைய புதுவிதமான தவிப்பை அமைதியாக உள்வாங்கிக் கொண்டான் ஆதி.

ஃபோனை எடுத்த மூவரும், தங்களுக்கு தெரிந்த மருத்துவமனைகளுக்கு எல்லாம் இதயம் ஸ்டாக் இருக்கிறதா என்று கேட்டு விட்டனர், ஆனால் பதில் என்னவோ இல்லை என்று தான் வந்தது.

அந்நேரம் அவசரமாக வந்த மருத்துவர் "என்ன சார் ஹார்ட்க்கு அரேஞ் பண்ணிடீங்களா.." என பதட்டமாக கேட்கவும், ஆத்விக்கு வந்ததே ஆத்திரம். விட்டால் அந்த மருத்துவரின் இதயத்தை பதம் பார்த்து விடுவான் போலும்.

அவனை கண்டதும் பம்பிய மருத்துவர், "சாரி சார், இட்ஸ் மை மிஸ்ட்டேக்.. முதல்லே கவனிச்சி சொல்லி இருக்கனும், பட் இப்ப நிலைமை சரியில்ல.. பேஷண்ட்க்கு செயற்கை முறையா நாங்க கொடுக்குற ஆக்ஸிஜென் கூட கொஞ்ச கொஞ்சமா அவங்க உடல் ஏத்துக்க மறுக்குது..

உடனடியாக B நெகடிட்டிவ் பிளட் உள்ளவங்க இதயம் வேணும்.." மருத்துவர் அவசரத் தன்மையுடன் உரைத்துக் கொண்டிருக்க, அவர் பின்னால் இருந்து வந்த உறுதியான குரலில் மொத்த பேரும் அதிர்ந்து போயினர்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 37
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top